Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | அஞ்சலி | நலம் வாழ | சினிமா சினிமா
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சாதனையாளர் | வாசகர் கடிதம் | பொது | நூல் அறிமுகம் | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
நேர்காணல்
பாரதி மணி
பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட்
- சிவா சேஷப்பன், சி.கே. வெங்கட்ராமன்|ஆகஸ்டு 2012|
Share:
"சுமார் 18, 19 வருடங்களுக்கு முன் கவிக்கோ அப்துல் ரஹ்மான் இங்கு வந்தபோது பெர்க்கலி பல்கலைக் கழகத்தில் தமிழுக்கு ஒரு அறக்கட்டளை அமைக்கலாமே என்ற யோசனையைச் சொன்னார். அப்போது கூட்டத்தில் இருந்த தமிழன்பர் ஆயீ கவுண்டன் ஆயிரம் டாலர் காசோலையை அங்கேயே கொடுத்தார். அப்படித் துவங்கியதுதான் பெர்க்கலி தமிழ்ப் பீடம்" என்ற சுவையான செய்தியுடன் பேசத் தொடங்கினார் பேரா. ஜார்ஜ் ஹார்ட். தமிழ்ப் பீடத்தையும், ஜார்ஜ் ஹார்ட் (பார்க்க: தென்றல், மார்ச் 2002) அவர்களையும் அறிமுகம் செய்யத் தேவையில்லை. வரும் கல்வி ஆண்டில் பேரா. பிளேக் வென்ட்வர்த் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பொறுப்பேற்கிறார். தமிழ்ப் பீடத்தில் அதனால் வரவிருக்கும் மாற்றங்களை அறிந்துகொள்ள பேரா. ஹார்ட் அவர்களைச் சந்தித்து உரையாடினோம். அதன் தொகுப்பு:

தமிழ்ப் பீடம்
அந்த முதல் நன்கொடை தமிழ்ப் பீடம் ஒன்றை ஏற்படுத்த ஆர்வத்தைத் தூண்டியது. பல்கலைக்கழகத்தோடு பேச்சு வார்த்தை தொடங்கினோம். பல்கலைக்கழகம் தயங்கியது. அடுத்த வருடம் தமிழ் கற்பிப்போமா என்பதே சந்தேகம் என்று கூறினர். அப்போது ஸ்டீவன் போலோஸ் தென்னாசியக் கல்வி மையத்தின் தலைவராக இருந்தார். அவர் பல்கலை நிர்வாகிகளுடன் தொடர்ந்து பேசினார். இறுதியில் பல்கலைக்கழகம் ஒப்புக் கொண்டது.

குமார் குமரப்பன் தலைமையில் நிதி திரட்டும் குழு ஒன்று உருவாயிற்று. பலர் இரவு பகலாக உழைத்தனர். பல உத்திகளைக் கையாண்டோம். சேஃப் வே கூப்பான்கள் மூலம் மளிகைச் செலவில் ஒரு சதவிகிதம் சேமித்தோம். அக்காலத்தில் தமிழ்ப் பீடத்துக்குத் திரட்ட வேண்டிய தொகை 400,000 டாலர் மட்டுமே. 300,000 டாலருக்கும் அதிகமாக திரட்டி விட்டோம். மீதித் தொகையை துக்காராம் பெருங்கொடையாகக் கொடுத்தார். மொத்த நிதியைத் திரட்ட மூன்று வருடங்களுக்கு மேலாயிற்று.

ஒப்பந்தத்தின்படி தமிழ்ப் பீடத் தலைவராக ஒருவர் நியமிக்கப்படுவார். அவர் பல்கலைக் கழகத்தில் நிரந்தர முழுநேரப் பேராசிரியராக இருக்க வேண்டும். அப்படி ஒருவர் கிடைக்காவிட்டால் தமிழ்ப் பீடம் ஒரு அறக்கட்டளையாகச் செயல்படும்.

தமிழ்ப் பீடம் 18 வருடங்களாக இயங்கி வருகிறது. அதன் வருமானம் பல்கலைக் கழகத்தில் தமிழ்க் கல்வியும், தமிழ்த் துறையும் வளரப் பெரிய ஊக்குவிப்பாக இருக்கிறது. தமிழ்த் துறையைப் பற்றி அறியச் செய்யவும், உயர்நிலைத் தமிழ் கற்கும் மாணவர்களுக்கு நிதி உதவவும், வருடாந்திரத் தமிழ் மாநாடு நடத்தவும், தமிழறிஞர்களை வரவழைக்கவும், தமிழ் பற்றியும், தென்னிந்தியா பற்றியும் ஆராய்ச்சி செய்யவும் உதவுகிறது. மறைமலை இலக்குவனார், எழுத்தாளர் திலீப் குமார் போன்றோரை அழைத்து வந்தோம். 18 வருடங்களுக்கு முன் செய்த முதலீடு இன்று 900,000 டாலருக்கும் அதிகமாக வளர்ந்து விட்டது.

இன்றைய நிலை
நான் பணி ஓய்வு பெற்று மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. மூன்று வருடங்களாக தமிழ்ப் பீட நிர்வாகப் பொறுப்பு என்னிடம்தான் இருக்கிறது. நான் ஒரு செமினார் கோர்ஸ் நடத்தி வருகிறேன். முனைவர் பிளேக் வென்ட்வர்த் (Prof. Blake Wentworth) இளநிலைத் தமிழ்ப் பேராசிரியராக வரவிருக்கிறார். அவர் நிரந்தரப் பேராசிரியராக இன்னும் 5, 6 வருடங்கள் ஆகலாம். அதுவரை தமிழ்ப் பீடப் பதவியில் தொடரும்படி பல்கலைக் கழகம் என்னைக் கேட்டுக் கொண்டுள்ளது. ஆனாலும், நிதி நிர்வாகத்துக்கென ஒரு குழு நியமனம் செய்யப்படும். அந்தக் குழுவில் தென்னாசியக் கல்வி மையத் தலைவர் முதலியோர் இருப்பார்கள்.

தமிழ்ப் பீடம் அமைத்ததின் குறிக்கோள்களில் தமிழ்ப் பேராசிரியர் பதவி நிரந்தரமாக வேண்டும் என்பது ஒன்று. இன்றைய பொருளாதார நிலையில் பல்கலைக் கழகம் எங்கு செலவைக் குறைக்கலாம் என்று தேடி வருகிறது. தமிழ் போன்ற துறைகளில் வெட்டு விழ வாய்ப்பு அதிகம். வாழ்வியல் புலங்களின் தலைவர் (Dean of Humanities) தமிழ்த் துறையின்மேல் ஆர்வம் கொண்டவர். அவர் இருக்கும்போதே தமிழ்த் துறைக்குப் புதிய பேராசிரியரை நியமித்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில்தான் நான் மூன்று வருடங்களுக்கு முன்னரே ஓய்வு பெற்றேன். அதற்குப் பலன் கிடைத்து விட்டது. பிளேக் நிரந்தர முழு நேரப் பேராசிரியராகிப் பலவருடங்கள் தமிழ்ப் பீடப் பதவி வகிப்பார் என்று நம்புகிறேன். தமிழ்த்துறைப் பேராசிரியர் என்ற பதவி நிரந்தரமாகி விட்டது. ஒருவேளை பிளேக் விட்டுச் சென்றாலும் வேறு ஒருவர் நிச்சயமாக அந்தப் பதவியில் நியமிக்கப்படுவார்.

இங்கே சில தலைசிறந்த மாணவர்கள் உயர்கல்வியைத் தொடர வந்தார்கள். அவர்கள் தற்கால இலக்கியம், மரபிலக்கியம், அரசியல் (Political Science), கலை வரலாறு என்று பல பரிமாணங்களில் ஆராய்ச்சி செய்தார்கள். எங்கள் தமிழ் மாநாட்டில் தமிழ் மொழி பற்றிப் பேச 8, 9 மாணவர்கள் தயாராக இருப்பார்கள். தமிழ் போன்ற துறையில் இது மிகவும் அரிது. அவர்களில் பலர் பல்வேறு பல்கலைக் கழகங்களில் பேராசிரியராக வேலை செய்கிறார்கள். தமிழ்ப் பேராசிரியர்களாக மட்டும் இல்லாமல் மொழி ஆராய்ச்சி, மரபு ஆராய்ச்சி போன்ற துறைகளிலும் தமிழைச் சார்ந்து கற்பிக்கிறார்கள். அவ்வகையில் தமிழ்ப் பீடம் மிக நன்கு செயல்பட்டுள்ளது.

பல பல்கலைக் கழகங்களில் பீடம் நிறுவ 4, 5 மில்லியன் டாலர் தேவை. அது முழுநேரப் பேராசிரியருக்கு சம்பளம் கொடுக்கும் அளவிற்கு வருமானம் தரும் அறக்கட்டளையாக இருக்கும். ஆனால் இங்கு முழுநேரப் பேராசிரியர் பதவி (Full-time Equivalent or FTE) கலிஃபோர்னியா மாநிலத்தின் பொறுப்பு. தமிழ்ப் பீடம் பெர்க்கலி பல்கலையோடு செய்துகொண்ட ஒப்பந்தப்படி தமிழ்த் துறை சம்பந்தப் பட்டவற்றுக்கு இந்த வருமானத்தை உபயோகிக்கலாம்.

என் ஓய்வு ஊதியம் கலிஃபோர்னியா மாநிலத்தின் பொறுப்பு. நான் இன்னும் பெர்க்கலிப் பல்கலைக் கழகப் பேராசிரியர்தான். ஆராய்ச்சி மாணவர்களை நான் வழிநடத்தலாம். ஆனால் பல்கலைக் கழகத்திலிருந்து எனக்கு சம்பளம் கிடையாது.

பெர்க்கலியில் தமிழ்ப் பீடம் வேரூன்றி விட்டது. பங்குக் குறியீடு வளர்ந்தால் தமிழ்ப் பீடத்தின் முதலீடும் வளர்ந்துகொண்டே போகும். அதில் வரும் அதிக வருமானத்தை மேலும் பல பணிகளுக்குப் பயன்படுத்த முடியும். தமிழ் நாட்டிலிருந்து தமிழறிஞர்களைக் குடும்பத்தோடு வரவழைக்கலாம். தனியே வந்தால் சிரமப்படுகிறார்கள். ஆனால், இதற்குச் செலவு அதிகம். தமிழ்ப் பீடத்தின் வருமானம் அதிகரித்தால் இதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.

மற்ற இடங்களில் இருக்கும் தமிழர்கள் பெர்க்கலி பல்கலைக்கழக தமிழ்ப் பீடத்தை முன்னோடியாக வைத்து மற்றப் பல்கலைக் கழகங்களிலும் தமிழ்ப் பீடம் நிறுவ வேண்டும். முக்கியமாக டொராண்டோவில் தமிழார்வம் மிகுந்த தமிழ்ச் சமூகம் இருக்கிறது. அவர்கள் மனது வைத்தால் பணம் திரட்டி தமிழ்ப் பேராசிரியர் பதவியை உருவாக்க முடியும்.

தற்போது இதற்குப் பல மில்லியன் டாலர் தேவைப்படும் என்றாலும் தமிழ்ச் சமூகமும் வளர்ந்து விட்டது. தமிழ்ப் பீடம் அமைப்பதன் பலன்களைச் சமூகத்தினர் உணரவேண்டும். நிதி திரட்டச் சிலர் முன்வந்தால் சாத்தியமாகும். தம் கருத்துக்களோடு ஒட்டிச் செல்லும் ஒருவரைத்தான் பீடத்துக்குத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பைத் தென்னாசிய சமூகங்களில் பார்க்கிறேன். அதை பல்கலைக் கழகங்கள் விரும்புவதில்லை. பெர்க்கலியில் இம்மாதிரி கருத்து வேறுபாடு எதுவும் வரவில்லை. மற்ற இடங்களில் தொடங்க விரும்புபவர்கள் இதை மனதில் கொள்ள வேண்டும்.

தொடக்கத்தில் அடிக்கடி கேட்கப்பட்ட கேள்வி தமிழ்ப் பீடத்தால் எனக்கு என்ன லாபம் என்பதுதான். தமிழ் மொழியை, கலாசாரத்தை அடுத்த தலைமுறைகளுக்கு விட்டுச் செல்ல வேண்டியது நம் பொறுப்பு. தமிழின் பெருமை பற்றிய விழிப்புணர்வை இந்நாட்டில் பரப்பப் பல்கலைக் கழகங்களில் தமிழ் கற்பிப்பது உதவும். அமெரிக்காவில் வாழும் குழந்தைகளுக்கு மேற்கத்திய கலாசாரத்தின் தாக்கம் அதிகம். அவர்கள் ஷேக்ஸ்பியரைப் படிக்கிறார்கள். அதே சமயம் தாம் எங்கிருந்து வந்தோம், தமது கலாசாரத்தின் அடிப்படை என்ன என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

பல நகரங்களில் தமிழ்ப் பள்ளிகளும், அவற்றின் மாணவர்களும் அதிகரித்து வருவதைப் பார்க்கிறோம். இங்கு வாழும் பெற்றோர்களுக்குத் தம் குழந்தைகள் தமிழ் படிக்கவேண்டும் என்பதில் இருக்கும் ஆர்வம் புரிகிறது. இந்த ஆர்வத்தைத் தமிழ்ப் பீடங்கள் நிறுவத் தூண்டுகோலாக உபயோகிக்க வேண்டும்.

பெர்க்கலி தமிழ்த் துறை
தமிழ் கற்க அதிக மாணவர்கள் வருவதில்லை. தமிழர்கள் தொழில்துறைக் கல்விகளில் ஆர்வம் செலுத்துவதும் ஒரு காரணம். உதாரணத்திற்கு மூலக்கூற்று உயிரியலா (molecular biology), தமிழா என்று கேள்வி எழுந்தால் முன்னதுதான் வெல்லும். இங்கே மேல்நிலைக் கல்வியின் வெற்றிக்குத் தமிழ்ப் பீடம் தரும் உதவித் தொகையும் ஒரு காரணம். அதே அளவு கீழ்நிலைக் கல்வியில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க முடியவில்லை.

பெர்க்கலி தமிழ்த் துறைக்கு அமெரிக்கர்கள், அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள், இந்தியாவில் இருந்து வருபவர்கள் என்று பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அமெரிக்கப் பல்கலைக் கழகங்களிலும், சிலர் இந்தியப் பல்கலைக் கழகங்களிலும் பேராசிரியர்களாகப் பணிபுரிகிறார்கள்.

தமிழ் படிக்க வரும் மாணவர்களில் சிலருக்கு சமூகவியலிலும், சிலருக்கு இலக்கியத்திலும் ஆர்வமிருக்கும். தமிழ் இலக்கியத்தில் ஆர்வமுள்ள மாணவர்களையே நாங்கள் ஆதரித்து வருகிறோம். பிற துறைகளிலும் சமூகவியல் கற்க வாய்ப்பு உள்ளதே!

பாண்டிச்சேரியில் உள்ள ஃப்ரென்ச் இன்ஸ்டிடூட் (French Institute) நடத்திய ஒரு மாநாட்டில் கலந்துகொண்ட பெர்க்கலி மாணவர்கள் சமர்ப்பித்த ஆராய்ச்சிக் கட்டுரைகளை பெர்க்கலி தமிழ்ப் பீடம் அச்சிட்டு வெளியிட்டிருக்கிறது. மற்ற பல்கலைக் கழகங்களோடு கருத்துப் பரிமாற, பீடத்தின் வருடாந்திர மாநாடு உதவுகிறது. பங்கேற்பவர்களுக்கு பயணம் மற்றும் தங்கும் செலவுகளை ஏற்றுக் கொள்கிறோம். பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம். இதுவரை நடந்த மாநாடுகளில் படைத்த கட்டுரைகளை புத்தகமாக வெளியிடும் முயற்சி ஆரம்பித்திருக்கிறது.
மேற்கத்திய அறிஞர்கள்
இந்திய கலாசாரத் தொடர்பில்லாத மேற்கத்திய அறிஞர்கள் இந்திய இலக்கியங்களைத் தவறாகப் புரிந்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. இந்தியக் கோவில்களுக்கும், திருமணங்களுக்கும் சென்று நேரடியான அனுபவத்தைப் பெறவேண்டும். என்னுடைய அனுபவத்தில் தமிழை ஆர்வமாகப் படிக்கும் தமிழரல்லாதவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் தமிழ்க் கலாசாரத் தொடர்பு இருக்கிறது. சம்ஸ்க்ருதம் படிக்கும் மேற்கத்தியர்களுக்கு அந்தவிதத் தொடர்பு இருப்பதில்லை. வேறு விதமான தாக்கம் தற்கால இந்தியர்களுக்கும் இருக்கிறது. இந்தியாவில் எல்லாவற்றிலும் அரசியல் புகுந்து விடுகிறது.

கருத்து தவறாக இருந்தாலும் அதை வெளிப்படுத்துவதில் தவறில்லை. ஹாலந்தைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் சங்க இலக்கியம் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று எழுதி வருகிறார். இது நூறு சதவிகிதம் தவறென்றாலும், இந்தக் கருத்து சிலரை பாதிக்கும் அல்லது சில ஆய்வுகளைத் தவறான வழியில் திருப்பி விடக்கூடும். இதில் சில நன்மைகளும் உண்டு. அதைப் பற்றி புதிய விவாதத்தை ஏற்படுத்தி, அதனை ஆழமாகப் படிக்கவும் ஆராயவும் தூண்டும். தற்கால இந்தியாவிலும் இதே அபாயம் நிலவுகிறது. மதத்தைச் சார்ந்தோ எதிர்த்தோ செய்யும் அரசியல் நடுநிலையற்ற கருத்துக்களைப் பரப்பலாம்.

மாற்றுக் கலாசாரத்தை மேலோட்டமாகப் புரிந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போது பிரச்சனைகள் உருவாகின்றன. தமிழ்ப் பேராசிரியராக இருப்பவர் இம்மாதிரி அரசியலில் இருந்து விலகியிருக்க வேண்டும். அது அவ்வளவு எளிதல்ல.

அடுத்த தலைமுறை
அமெரிக்காவில் இருக்கும் தமிழ்ப் பள்ளிகள், பெற்றோர்கள் சொல்வதால் மாணவர்கள் தமிழ் பயில வருகிறார்கள் என்ற நிலை அல்லாமல், தமிழில் ஆர்வத்தை உருவாக்க வேண்டும். 13, 14 வயது ஆகிவிட்டால் அவர்களைக் கட்டாயப்படுத்த முடியாது.

பரதநாட்டியம் கற்கும் பெண்கள் தங்கள் கலாசாரத்தைப் பற்றி அதிகம் அறிகிறார்கள். அந்த பாதிப்பு தமிழ் சினிமாவோ, தொலைக்காட்சித் தொடரோ பார்ப்பதில் வராது. நான் பரதநாட்டிய மாணவர்களிடம் பேசியிருக்கிறேன். அது அடிப்படையான மாற்றத்தை அவர்களிடம் ஏற்படுத்தியிருப்பதை கவனிக்கிறேன். அதே போன்ற ஈடுபாட்டைத் தமிழ் கற்பதிலும் கொண்டுவர வேண்டும். பரதநாட்டிய வகுப்புகள் பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் நடத்தப் படுகிறது. தமிழ் வகுப்புகள் பெற்றோர்களால் நடத்தப் படுகின்றன. குழந்தைகள், பெரியவர்கள் ஆனதும் பெற்றோர்கள் தமிழ்ப் பள்ளிகளில் இருந்து விலகிவிடுகிறார்கள். அடுத்த தலைமுறைப் பெற்றோர் ஆசிரியர்கள் ஆகிறார்கள். விலகிவிடும் பெற்றோர்களின் அனுபவ அறிவு புதிதாக வரும் பெற்றோர்களுக்குக் கிடைப்பதில்லை.

13, 14 வயதில் ஆர்வம் குறையாமல் தமிழ் கற்க ஒரே வழி மாணவர்களை நேரடியாகப் பங்கேற்க வைப்பதுதான். உதாரணமாக, அவர்களை ஒரு தமிழ்ப் புத்தகத்தைப் படித்து விவாதிக்கச் சொல்லலாம். விவாதத்தில் பெற்றோர் பங்கேற்கக் கூடாது. விவாதம் ஆங்கிலத்தில் கூட இருக்கலாம். விவாதத்தில் தவறான முடிவுகள் எடுத்தாலும் தவறில்லை. தமிழைப் படிப்பதில் ஆர்வத்தைத் தூண்டுவதுதான் குறிக்கோள். இதில் வெற்றி பெற்றால் கல்லூரியில் அவர்கள் தமிழை விரும்பிப் படிக்க வாய்ப்புண்டு.

சந்திப்பு: சிவா சேஷப்பன், சி.கே. வெங்கட்ராமன்

*****


கௌசல்யா ஹார்ட்
திருமதி. கௌசல்யா ஹார்ட் பெர்க்கலி பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறையில் பகுதிநேரப் பேராசிரியராகப் பணி புரிகிறார். முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்குத் தமிழ் கற்பிக்கிறார். தமிழ் இலக்கணம் கற்பிப்பதோடு, அமெரிக்க மாணவர்களுக்கு இலக்கியங்களைப் படித்துப் புரிந்துகொள்ள உதவுகிறார். மூன்றாம் ஆண்டு மாணவர்கள் ஆராய்ச்சிக் கட்டுரை எழுத உதவுகிறார். பெர்க்கலி மாணவர்களுக்கு உதவுவதற்கு தமிழ் இலக்கியங்களை நன்கு படித்து ஆழ்ந்த அறிவு மட்டுமின்றி, தான் தமிழராக இருப்பதால் இலக்கியங்களை தமிழ்க் கலாசாரப் பின்னணியோடு சரியாகப் புரியவைக்க முடிகிறது என்கிறார். தமிழ்ப் பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப் புத்தகங்கள் எழுதி இருக்கிறார். அதில் இரண்டு புத்தகங்கள் அமெரிக்கப் பொதுப் பள்ளிகளில் (public schools) அங்கீகரிக்கப் பட்டுள்ளன. 14ம் நூற்றாண்டைச் சேர்ந்த அந்தாதி, பரணி போன்ற சிற்றிலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வருகிறார். அவற்றில் சில தமிழ் இலக்கிய மின்தொகுப்பான ‘மதுரைத் திட்ட’த்தில் (projectmadurai.org) கிடைக்கும்.

*****


பெர்க்கலி மாணவர்களில் சிலர்
Vijaya Nagarajan (1998), Associate Professor, University of San Francisco, Dept. of Religion.
Elaine Craddock (1994) Professor of Religion, Southwestern University.
Ginni Ishimatsu (1994) Associate Professor, Religious Studies, University of Denver.
Richard Frasca (1984) Lecturer in Tamil, Harvard University.
Stuart Blackburn (1980) Professor of Tamil, SOAS
Gita Pai (2010) Professor, Dept. of History, University of Wisconsin, La Crosse.
Layne Little (2006) Lecturer in Religion and SSEAS, Univ. of California, Berkeley.
Archana Venkatesan (2004) Associate Professor, Dept. of Religion, Dept. of Comparative Literature, University of California, Davis.
Jennifer Clare (2011) Fellow, Colorado College.
Hank Heifetz (1983) Author and Poet.
Srinivas Reddy (2011) Assistant Professor, IIT, Gandhinagar, Gujarat, India.
James Ryan (1985) Professor, Institute of Integral Studies, San Francisco.

Year in brackets indicate the year of study at Berkeley Tamil Department. It is followed by the position they occupy at present.
மேலும் படங்களுக்கு
More

பாரதி மணி
Share: 




© Copyright 2020 Tamilonline