|
|
|
|
பதினாறு வயதிலிருந்தே தமிழ் நூல்களைத் தேடித்தேடிச் சேமித்து வருங்காலத் தலைமுறையினருக்காகப் பத்திரப்படுத்துவதற்காகவே 'தமிழ்நூல் காப்பகம்' என்ற ஒன்றை நிறுவி நடத்தி வருபவர் திரு. பல்லடம் மாணிக்கம். விருத்தாசலத்தில் சுமார் எட்டாயிரம் சதுரஅடிப் பரப்பில், வெகு அமைதியான சூழ்நிலையில், அழகான தோட்டத்தில் அமைந்துள்ள தமிழ்நூல் காப்பகத்தில் ஒரு லட்சம் நூல்களுக்கு இது சரணாலயம். அவரைச் சந்தித்து உரையாடினோம். அந்த உரையாடலில் இருந்து....
*****
கே: நூல்களைச் சேகரிக்கும் ஆர்வம் எப்போது, எப்படித் தோன்றியது? ப: மூணாம் வகுப்பு படிக்கும் போதே ஆர்வத்துடன் நாலாம் வகுப்புப் பாடங்களை விரும்பிப் படிப்பேன். நல்லதங்காள் கதை, பெரிய எழுத்து மகாபாரதம் போன்றவற்றை வீட்டில் படித்தேன். பலர் ஆர்வத்தோடு அமர்ந்து அதனைக் கேட்பார்கள். பள்ளி நூலகத்தில் ஒரு புத்தகத்தை விடமாட்டேன். பிறகு சொந்தமாகப் புத்தகங்களை வாங்கும் ஆசை ஏற்பட்டது. இப்படி மாணவப் பருவத்திலேயே நூல் சேகரிப்பு ஆர்வம் வந்துவிட்டது. எனக்குப் பிடித்த புத்தகங்களை மட்டுமல்லாமல் மற்றவர்களுக்காகவும் புத்தகங்களை வாங்கிச் சேகரிக்க ஆரம்பித்தேன். அப்படி ஆரம்பித்ததுதான் 'தமிழ்நூல் காப்பகம்' ஆக வளர்ந்து நிற்கிறது.
கே: நீங்கள் இருப்பது விருத்தாசலம். பல்லடம் மாணிக்கம் என்பது உங்கள் பெயர். எப்படி? ப: கோவை பல்லடம் அருகே உள்ள ஒரு சிற்றூரில் நான் பிறந்தேன். பல்லடத்தில் உயர்நிலைக் கல்வியை முடித்த பின் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் பயின்றேன். முனைவர் பொற்கோ, முனைவர் சுந்தரமூர்த்தி, முனைவர் க.ப.அறவாணன் போன்றோர் என் வகுப்புத் தோழர்கள். அந்த நட்பு இன்னமும் தொடர்கிறது. அண்ணாமலையில் பயின்றது என் வாழ்வின் ஒரு திருப்புமுனை. எங்கோ ஒரு கிராமத்தில் ஒரு சாதாரண மொட்டாக இருந்த நான் மலர, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயின்றதும், அங்கு கிடைத்த தொடர்புகளும் முக்கியக் காரணங்கள். வேறெங்காவது நான் படித்திருந்தால் நிச்சயம் இந்த ஆர்வங்களோடு இருந்திருப்பேனா என்று சொல்ல இயலாது. அதுபோல எனது தமிழார்வம் அதிகரிக்க திராவிட இயக்கமும் ஒரு காரணம். இயக்கத்தவர்களின் பேச்சு எனது தமிழார்வத்தை வளர்த்தது.
பல்கலையில் படித்த காலத்திலேயே 'ஆயிரம் பூ' என்னும் கவிதை நூலை எழுதி வெளியிட்டேன். கா. அப்பாதுரை, பாரதிதாசன் போன்றோர் அதற்கு முன்னுரை அளித்திருந்தனர். அந்த நூலை அச்சிடுவதற்காகச் சென்னை சென்றேன். அங்கே திரைத் துறையினரின் நட்புக் கிடைத்தது. பலர் அந்தக் கவிதைகளை திரைப்படத்தில் பயன்படுத்துமாறு ஆலோசனை கூறினர். ஆனால் நான் அதில் ஆர்வம் காட்டவில்லை. கல்லூரிப் படிப்பை முடித்த பின்பு தமிழ்வாணனைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவர் என்னிடம், "சென்னைக்கு வந்தால் உங்கள் திறமைகளை மேலும் வளர்த்துக் கொள்ளலாம்" என்று சொன்னார். என் கவிதை ஒன்றை வாங்கி தீபாவளி மலரில் என் புகைப்படத்துடன் பிரசுரித்தார். அதற்கு முன்பே தமிழ்நாடு இதழிலும், வேறு சில இதழ்களிலும் என் கவிதைகள் வெளியாகி இருந்தன. என்றாலும், தமிழ்வாணன் மூலம் ஒரு நல்ல அறிமுகம் கிடைத்தது. பின்னர் ஆழ்வார்பேட்டை அரசு மாநகராட்சிப் பள்ளியில் ஆசிரியர் பொறுப்பேற்றேன். அந்தப் பகுதியில் திரைப்படத் துறையினர் அதிகம். அதனால் எனது நட்பு வட்டம் விரிவடைந்தது. எனது கவிதைகளைப் படித்த ஏ.கே. வேலன் 'தேவி' திரைப்படத்திற்குப் பாடல் எழுதும் வாய்ப்பைத் தந்தார். இசை : தட்சிணாமூர்த்தி. இணை இசையமைப்பாளராக .சேகர் (ஏ.ஆர். ரஹ்மானின் தந்தை) இருந்தார். டி.எம்.எஸ். பாடல்களைப் பாடியிருந்தார். சேகர் என் மீது நல்ல அன்பு கொண்டவர். எனது பாடல்களை, கவிதைகளை அவரே பல இயக்குநர்களிடம் சென்று காட்டி அதனை திரைப்படங்களுக்குப் பயன்படுத்த ஒப்புதல் பெற்றிருந்தார். ஆனால் என்னைத் தொடர்பு கொள்ள முடியாததால் அந்த முயற்சி வெற்றிபெறவில்லை. இயக்குநர் ஸ்ரீதர் என் நெருக்கமான நண்பர். அதுபோல எம்ஜியார், சிவாஜி ஆகியோர் என்மீது தனிப்பட்ட அன்பு கொண்டவர்களாக இருந்தனர். ஒருவகையில் சொல்லப்போனால் திரைப்படச் சூழல் எனக்கு ஒத்துவரவில்லை. திரைத்துறையிலும் எனக்கு அதிக ஆர்வமில்லை. திருமணத்திற்குப் பின் நான் வேலையை விட்டுவிட்டு விருத்தாசலம் வந்துவிட்டேன்.
கே: விருத்தாசலத்தில் தமிழ்நூல் காப்பகம் தொடங்கிய கதையைச் சொல்லுங்கள்.... ப: நான் விருத்தாசலத்தில் சில தொழில்களை மேற்கொண்டு கடினமாக உழைத்தேன். போதிய வருவாய் ஈட்டினேன். தொடர்ந்து பணத்தைத் துரத்திக் கொண்டிருப்பதில் எனக்கு விருப்பமில்லை. ஒருகால கட்டத்தில் நல்ல லாபம் வந்து கொண்டிருந்த தொழிலை நிறுத்தி விட்டேன். பணத்தைத் துரத்த ஆரம்பித்தோமானால் அது இறுதிவரை நம்மை அந்தச் சிந்தனையிலேயே இருத்திவிடும். ஆகவே தொழிலை நிறுத்திவிட்டுத் தமிழ்நூல் காப்பகப் பணிகளில் ஈடுபட்டேன். அதற்காக ஓர் இடத்தை வாங்கி அதில் கட்டடம் எழுப்பினேன். அதற்காகச் சற்று சிரமப்பட்டேன் என்றாலும் அதனை முயன்று முடித்தேன். மகள்களுக்குத் திருமணம் செய்தேன். அப்போதே எனக்கு 60 வயது. இன்றும் காப்பக வளர்ச்சி பற்றியே தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.
கே: காப்பகத்தின் வளர்ச்சியை விவரித்துச் சொல்லுங்கள்.... ப: நான் சேகரித்த நூல்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. முதலில் என் வீட்டின் மாடியறைகளில், என் தனி அறையில் சேகரித்து வைத்திருந்தேன். அவை ஆயிரம் பல்லாயிரமாகப் பெருகப் பெருக அவற்றைப் பாதுகாப்பதும், பராமரிப்பதும் கடினமாகிவிட்டது. எல்லாவற்றையும் ஒரே இடத்தில், அனைவருக்கும் எளிதில் பயன்படும் வகையில் பாதுகாக்க வேண்டுமென்று நினைத்தேன். அதன்படி உருவானதுதான் தமிழ்நூல் காப்பகம். தமிழில் எத்தனையோ அரிய நூல்கள் தக்க பராமரிப்பும் பாதுகாப்பும் இல்லாமல் அழிந்து போய்விட்டன. உ.வே.சா.கூட இதைப்பற்றி மிகவும் மனம் வருந்திக் குறிப்பிட்டுள்ளார். அந்த இழப்பு ஈடு செய்ய முடியாதது. அந்த நிலைமை மீண்டும் தமிழ் நூல்களுக்கு ஏற்படக்கூடாது என்பதுதான் இந்தக் காப்பகத்தின் நோக்கம். 1980 முதலே காப்பகத்தை எனது இல்லத்தில் நடத்தி வந்தாலும், அதற்கென்று ஓர் இடத்தில் செயல்படத் துவங்கியது 2000 முதல்தான். அதற்காக எனது வருவாயில் சுமார் அரை ஏக்கர் இடத்தை வாங்கிக் காப்பகத்தை நிறுவினேன்.
கே: தமிழ்நூல் காப்பகத்தின் சிறப்பம்சங்களாக எவற்றைக் கூறுவீர்கள்? ப: இங்கு பாதுகாக்கப்பட்டிருக்கும் நூல்களைத்தான் சொல்ல வேண்டும். மிகவும் அரிதான, பழைய நூல் என்றால் அது அரிய பெப்ரிசியஸ் தமிழ் அகராதிதான். பெப்ரிசியஸ் பாதிரியாரால் 1786ம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்டது. அத்தகைய மிகப் பழமையான பலப்பல நூல்கள் இங்கே பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. 1894ல் அச்சான உ.வே.சா. பதிப்பித்த புறநானூற்றின் முதல் பதிப்பு உள்ளது. அதன் பிற பதிப்புகளும் உள்ளன. சங்க இலக்கியம் முதல் சிற்றிலக்கியங்கள்வரை பல நூல்களின் முதல் பதிப்புகள், தொல்காப்பியம் முதல் பதிப்பு, கம்பராமாயணத்தின் பத்துக்கு மேற்பட்ட பதிப்புகள், கம்பன், இளங்கோ, பாரதி, பாரதிதாசன் ஆகியோரது படைப்புகளின் பல்வேறு பதிப்புகளும் அவை பற்றிய அனைத்து ஆய்வு நூல்களின் தொகுப்பும் உள்ளன. தவிர நான்கு வேதங்கள், உபநிடதங்கள்,ஆங்கில, தமிழ்க் கலைக்களஞ்சியங்கள், பல்கலைக் கழகங்களின் வெளியீடுகள், பன்னிரு திருமுறைகள், பிரபந்தங்கள் உள்ளன. மறைமலையடிகள், தெ.பொ.மீ, வையாபுரிப்பிள்ளை, டாக்டர் மு.வ., பாவாணர், ந.சி. கந்தையா பிள்ளை போன்றோரது நூல்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. திருக்குறள் மொழிபெயர்ப்புகள், பதிப்புகள், ஆய்வு நூல்கள் 1500க்கு மேல் உள்ளன. இத்தாலி, பிரெஞ்சு, சீனம், ஜப்பான், அஸ்ஸாமியம், ஹிந்தி, ஆங்கிலம், சம்ஸ்கிருதம், உருது, மலையாளம், மலாய் எனப் பல மொழிகளில் குறள் பெயர்ப்புகள் உள்ளன. காந்தி, அரவிந்தர், கார்ல் மார்க்ஸ், அம்பேத்கர் போன்ற சமூகச் சிந்தனையாளர்களின் அரிய நூல் தொகுதிகளும், ஐநூறுக்கு மேற்பட்ட முனைவர் பட்ட ஆய்வேடுகளும் உள்ளன. தமிழ்-ஆங்கிலம், ஆங்கிலம்-தமிழ் அகராதிகள், வரலாற்றகராதி, சோதிட அகராதி, கல்வெட்டு அகராதி, அரிய அகராதியான மதுரை தமிழ்ப் பேரகராதி எனப் பல அகராதிகள் உள்ளன. தொல்காப்பியத்திற்கு வெளிவந்திருக்கும் அத்தனை உரைகளும் பாதுகாக்கப்பட்டுள்ளன. அதுபோல கம்பராமாயணத்திற்கு வந்திருக்கும் அத்தனை உரைகள், பதிப்புகள், கோவை கம்பன் கழக வெளியீடு, வை.மு.கோ. உரை, உ.வே.சா. உரை எனப் பல ஆய்வுரைகள் உள்ளன. ராமாயணம், மகாபாரதம், கீதை, குரான், பைபிள் உட்படப் பல மதநூல்கள் உள்ளன. இவற்றுடன் வரலாற்று நூல்கள், தன் வரலாற்று நூல்கள், வாழ்க்கை வரலாறுகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. காந்திபற்றி எழுதப்பட்ட நூல்கள் நூறு வால்யூம்களுக்கு மேல் உள்ளன. பெரியார், ஓஷோ, விவேகானந்தர் பற்றிய நூல் தொகுப்புகள் பல உள்ளன. இலக்கிய இதழ்கள், மலர்கள், வார, மாத இதழ்கள் எனப் பலவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இப்படி இங்கு சுமார் 1 லட்சம் வரையிலான நூல்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. |
|
|
கே: நூல் சேகரிப்பில் கிடைத்த மறக்க முடியாத அனுபவங்கள் குறித்து... ப: நன்னூலுக்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றுள் கூழங்கைத் தம்பிரான் எழுதிய உரை ஒன்று. அது மிகவும் அரிதானது. அது இப்போது அச்சில் இல்லை. தாமோதரன் என்னும் எனது நண்பர் ஜெர்மனியில் ஒரு பல்கலையில் பேராசிரியராக வேலை பார்த்தார். அவர் ஒருமுறை லண்டன் சென்றபோது அங்கிருந்த ஒரு நூலகத்தில் இந்த உரைநூலின் ஏட்டுப் பிரதியைப் பார்த்துள்ளார். அதைத் தன் கைப்பட அடித்தல் திருத்தல் இல்லாது முழுமையாக எழுதி, கையெழுத்துப் பிரதியாக எனக்கு அனுப்பி வைத்தார். தமிழின்மீது கொண்ட ஆர்வத்தால் தனது பணிகளுக்கிடையே முயன்று அவர் அனுப்பி வைத்ததை நான் பாதுகாத்து வைத்திருக்கிறேன். பின்னர் அந்த நூல் அச்சிலும் வெளிவந்தது. அவர் இப்போது பணி ஓய்வு பெற்று காட்டு மன்னார்குடியில் வசித்து வருகிறார். அது ஒரு மறக்க முடியாத அனுபவம்.
அதுபோல, வேதங்களை ஜம்புநாதன் தமிழில் மொழி பெயர்த்திருப்பதை அறிந்தேன். அது ஒரு அரிய முயற்சி. அந்த நூல்கள் கிடைப்பதும் கடினமாக இருந்தது. முயன்று அதன் முதல் இரண்டு தொகுதிகளை வாங்கி விட்டேன். மற்ற தொகுதிகளைத் தேடிக் கொண்டிருந்தேன். ஒருநாள் சென்னை ஹிக்கின்பாதம்ஸ் சென்றிருந்தேன். அங்கே அதன் மிகுதித் தொகுதிகளைப் பார்த்தேன். அதை வாங்க என் கையில் அப்போது பணமில்லை. அங்கிருந்த பொறுப்பாளரிடம் அந்த நூல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் படியும், மறுநாள் வந்து வாங்கிக் கொள்வதாகவும் சொன்னேன். மறுநாள் பணத்துடன் அங்கு சென்றபோது அந்த நூல்களை யாரோ வாங்கிச் சென்று விட்டிருந்தனர். மீண்டும் முயன்று தேடியதில் ஒரு பிரதி கிடைத்தது. சில மாதங்களுக்குப் பிறகு பாரி நிலைய அதிபருடன் அதுபற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். உடனே அவர் தனது பிரதியை எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். அதை எதிர்பாராமல் கிடைத்த புதையல் என்றுதான் சொல்ல வேண்டும். இதுவும் ஒரு மறக்க முடியாத அனுபவம்தான். கே: நீங்கள் 'வள்ளுவம்' என்ற இதழ் ஒன்றை நடத்தினீர்கள் அல்லவா? ப: வள்ளுவர் நெறி தமிழர்களிடையே பரவ வேண்டுமென்ற எண்ணத்தால் நண்பர்களுடன் இணைந்து 'வள்ளுவம்' என்ற இதழைத் தொடங்கினேன். சுமார் 24 இதழ்கள் வரை அது வெளியாகின. பல நல்ல கட்டுரைகள் அதில் வெளியாகின. சுந்தரமூர்த்தி, க.ப. அறவாணன், சிற்பி பாலசுப்ரமணியம், தமிழண்ணல், ச.வே.சு., இளங்குமரன், இன்குலாப், நாச்சிமுத்து, சண்முகசுந்தரம், தமிழன்பன், வளன் அரசு, குன்றக்குடி அடிகளார், மு.கு. ஜகந்நாதராஜா, வா.செ. குழந்தைசாமி, ச, அகத்தியலிங்கம் போன்ற பல தமிழறிஞர்களும், ஜெயகாந்தன், ஜெயமோகன் போன்ற எழுத்தாளர்களும் அதில் எழுதியிருக்கின்றனர்.
கே: உங்கள் காப்பக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்கள் குறித்து... ப: நூலைக் கொடையாகத் தந்தவர்களிலிருந்து புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள், இதழாளர்கள், எழுத்தாளர்கள், பழைய புத்தகக் கடைக்காரர்கள் என்று பலரைச் சொல்லலாம். எனது நண்பர்கள் உறுதுணையாக இருந்ததை, இன்னமும் இருந்து வருவதை மறக்க முடியாது. கோவை ஞானி தன்னிடமிருந்த மிகப்பெரிய நூல்தொகுப்பை காப்பகத்திற்கு அளித்தார். பொள்ளாச்சி மகாலிங்கம், ச. மெய்யப்பன், பொற்கோ, முனைவர் சுந்தரமூர்த்தி, க.ப.அறவாணன், க்ரியா ராமகிருஷ்ணன் எனப் பலர் அரிய நூல் சேமிப்புகளை அளித்துள்ளனர். குடும்பத்தினரின் உறுதுணையும் முக்கியமானது. இதனால் பொருட்செலவு ஏற்பட்டாலும் மரியாதைக்குரிய செலவு என்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள். பல பிரபல நபர்கள், அறிஞர்கள், எழுத்தாளர்கள் இந்தக் காப்பகத்திற்கு வந்து பார்வையிட்டு பாராட்டிவிட்டுச் செல்லும் போது, "எல்லா செல்வத்தையும்விட இந்த அறிவுச் செல்வம்தாங்க உயர்ந்தது" என்பார் என் மனைவி. பொதுவாக, குடும்பத்தின் தேவைகளைப் புரிந்துகொண்டு நாம் சரிவர அவற்றை நிறைவேற்றி விடும்போது அவர்களால் நமது நற்செயலுக்கு இடையூறு ஏற்படாது. மேலும் நீங்கள் உண்மையான நோக்கத்தோடும், ஆர்வத்தோடும் நேர்மையாக உழைக்கும் போது அந்த எண்ணமே உங்களது நற்பணிகளுக்கு உறுதுணையாக இருக்கும். நீங்கள் நினைக்க முடியாத, அபூர்வமான செயல்கள் எல்லாம் நடக்கும் என்பதும் உண்மை.
கே: உங்களது எதிர்காலத் திட்டங்கள் என்ன? ப: தற்போது எனக்கு 70 வயது கடந்துவிட்டது. அடிக்கடி சிகிச்சை எடுக்கும் நிலையில் உடல்நலம் உள்ளது. இங்குள்ள நூல்கள் விலை மதிப்பற்றவை. மிக அரியவை. இவை தமிழரின் சொத்து. இது அனைத்துத் தமிழர்களுக்கும் பயன்பட வேண்டும் என்பது என் எண்ணம். அதற்காக இங்குள்ள நூல்களை கணினியில் மின்வடிவில் சேமிக்கும் முயற்சியை மேற்கொண்டேன். ஒரு அறக்கட்டளை அமைத்து அதன்மூலம் இதனை நிர்வகிக்கலாம் என்றும் முயற்சி செய்தேன். ஆனால் திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் அந்தப் பணியை நிறைவேற்ற முடியவில்லை. இதற்காக அர்ப்பணிப்பு உணர்வோடு பணிபுரிபவர்கள் கிடைப்பது அரிதாக இருக்கிறது. இந்நிலையில் ஆசியாவின் மிகப்பெரிய நூலகமான அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் சார்பாகத் தமிழறிஞர் குழு ஒன்று வந்து இந்நூலகத்தைப் பார்வையிட்டு, திட்டமதிப்பீடு செய்துவிட்டுச் சென்றுள்ளது. இந்தக் காப்பகத்தை அரசின் சார்பாக அண்ணா நூலகமே ஏற்று, நடத்துவதாகத் திட்டம். விருத்தாசலத்தில் இருப்பதைவிட சென்னை போன்ற பெருநகரப் பகுதிகளில் இதுபோன்ற காப்பகங்கள் அமைந்தால் அது பலருக்கும் பயன் தருவதாய் இருக்கும் என்று சிலர் கருதுகிறார்கள். ஆனால் தேர்தல், ஆட்சி மாற்றம் போன்ற காரணங்களால் அந்தத் திட்டம் முழுமை பெறவில்லை. அது நடந்தாலும் சரி, வேறேதேனும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களோ, தமிழ் வளர்ச்சி அமைப்புகளோ காப்பகத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டாலும் சரி. இந்தக் காப்பகம் தமிழ்ச் சமுதாயத்திற்குப் பயன்பட வேண்டும் என்ற எனது நோக்கம் எப்படியாவது நிறைவேற வேண்டும். அவ்வளவுதான்.
கண்கள் நிறைய நம்பிக்கைகளோடு பேசும் பல்லடம் மாணிக்கம், தனது இந்தப் பணியை ஒரு கடமையாகவே செய்து வருவதாகக் கூறுகிறார். இதற்காக விருதுகள் வழங்கப்படுவதையோ, பாராட்டுக்களையோ எதிர்பார்க்கவில்லை என்கிறார். தன்னை அதிகம் வெளிக்காட்டிக்கொள்ள விரும்பாத பல்லடம் மாணிக்கம், "இந்தக் காப்பகத்தில் இருக்கும் பெரும்பாலான நூல்கள் நான் என் இரு கைகளிலும் தூக்கிச் சுமந்தவை. புத்தகக் காட்சிகளுக்குச் சென்று இரு கைகளிலும் தூக்க முடியாமல் தூக்கிச் சுமந்து சேகரித்தவை. உடல்நலக் குறைவு ஏற்பட்டு அறுவை சிகிச்சைகூடச் செய்யப்பட்டது. இருந்தாலும் தமிழின் மீது கொண்ட ஆர்வத்தாலேயே இதனைச் செய்தேன். தற்போது வயது காரணமாகப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது வருத்தத்தைத் தருகிறது" என்கிறார். ச.வெ. சுப்ரமணியனுடன் இணைந்து சிறந்த தமிழ் நூல், சிறந்த எழுத்தாளர், சிறந்த, பதிப்பகத்தாருக்குப் பரிசுகள் வழங்கி வருகிறார். க.ப. அறவாணன் தனது அறக்கட்டளை மூலம் இவருக்கு விருது வழங்கியுள்ளார். விளம்பரத்தில் நாட்டம் இல்லாத பல்லடம் மாணிக்கம் அவர்களது நோக்கங்கள் விரைவில் நிறைவேற வாழ்த்தி விடைபெற்றோம்.
முகவரி: திரு. பல்லடம் மாணிக்கம் தமிழ்நூல் காப்பகம், சேலம் நெடுஞ்சாலை, தமிழ்நகர், விருத்தாசலம்-606 001 செல்பேசி: + 91 9443042344 தொலைபேசி - 91 4143 231611, 91 4143 230411
*****
காணக்கிடைக்காத பொக்கிஷம் நேஷனல் ஜியாகிரஃபிக்கின் 60 ஆண்டுத் தொகுப்புகள் தமிழ்நூல் காப்பகத்தில் உள்ளன. The Sacred Book of the East - இது மேக்ஸ் முல்லர் எழுதிய, வேதங்கள், உபநிஷதங்கள், இந்தியத் தத்துவங்கள் பற்றிய ஆய்வுநூல். 50 பகுதிகளுக்கு மேல் கொண்ட நூல். வடமொழி இலக்கணமான பாணினி வியாகரணம், மர்ரே ராஜம் வெளியிட்ட நூல்கள் எனப் பல நூல்கள் உள்ளன. அதுபோல Collectors Editions எனப்படும் புத்தகச் சேகரிப்பாளர்களுக்கென்றே தனியாக உருவாக்கப்படும் நூல் தொகுப்புகள் உள்ளன. மற்றவர்களுக்கு அவை கிடைக்காது.
*****
செவிக்கும் விருந்து அந்தக் கால கர்நாடக இசை, திரைப்பட இசை எல்.பி. ரெகார்டு முதல் இன்றைய சி.டி. டி.வி.டி., ப்ளூரே சிடி வரை பலவும் இங்கு பாதுகாக்கப்படுகின்றன. மதுரை மணி, அரியக்குடி, ஜி.என்.பி., எம்.எல்.வி., எம்.எஸ். என்று பலருடைய இசைத்தொகுப்புகள் உள்ளன. தவிர பழைய திரையிசைப் பாடல் கிராமஃபோன் ரிகார்டுகள், குறுந்தகடுகள், கேசட்டுகள் உள்ளன. முக்கியமாக விருது பெற்ற ஆஸ்கர் அவார்ட் படங்களின் பெரும்பாலான குறுந்தகடுகள் உள்ளன. தவிர ஹிந்துஸ்தானி, கஜல், மேற்கத்திய இசை, செவ்விசை, கருவியிசை என ஒலிப்பேழைகள் உள்ளன. பீத்தோவன், மொஸார்ட், ஜிம் ரீவ்ஸ் போன்றோரது இசைத்தொகுப்புகளும் உள்ளன. இவற்றிலெல்லாம் எனக்கு ஆர்வம் வர ரஹ்மானின் தந்தை சேகர் மற்றும் க்ரியா ராமகிருஷ்ணன் ஆகியோர் முக்கியக் காரணம். சேகர் மிக நல்ல மனிதர். நல்ல இசைஞானம் உள்ளவர். என்மீது மிகுந்த அன்பு கொண்டவர். குலாம் அலியை, வி. குமாரை எல்லாம் எனக்கு அறிமுகம் செய்துவைத்தவர் அவர்தான். அவர் மூலம்தான் எனக்கு நூர்ஜஹான், பிஸ்மில்லா கான் போன்றோரது இசை அறிமுகம் கிடைத்தது. இளவயதிலேயே அவர் காலமானது துரதிர்ஷ்டவசமானது.
*****
ஆய்வுக்கும் அலசலுக்கும் தமிழ்நூல் காப்பகம் விருத்தாசலம் ரயில் நிலையத்துக்கு வெகு அருகே அமைந்துள்ளது. சுமார் அரை ஏக்கர் பரப்பில், அழகிய பசுமைச் சூழலில் உள்ளது. தரைத்தளத்தில் நூலகம் மேல்தளத்தில் கூட்டம் நடத்துவதற்கான அரங்கு, ஆய்வாளர்கள் தங்கி ஆய்வு செய்வதற்கான அறைகள் என்று வடிவமைக்கப்பட்டுள்ளது. மேல்தள அரங்கில் பல கூட்டங்கள், இலக்கியச் சந்திப்புகள், கலந்துரையாடல்கள் நடைபெறுகின்றன.
*****
சந்திப்பு, படங்கள்: அரவிந்த் சுவாமிநாதன் |
மேலும் படங்களுக்கு |
|
|
|
|
|
|
|