|
|
|
|
தமிழ் எழுத்தாளர்களில் பத்திரிகையாளராகவும் எழுத்தாளராகவும் கோலோச்சி வெற்றி பெற்றவர்கள் பலர். கல்கி, சி.சு.செல்லப்பா, கு.அழகிரிசாமி, சாவி, சாண்டில்யன், மணியன், விக்கிரமன் என்ற அவ்வரிசையில், வித்தியாசமான பல படைப்புகளைத் தந்து வாசகர் மனதில் தனியிடம் பெற்றவர் ராயம்பேட்டை கிருஷ்ணமாச்சாரி ரங்கராஜன் எனும் ரா.கி. ரங்கராஜன்.
கும்பகோணத்தை அடுத்த ராயம்பேட்டை என்னும் சிற்றூரில் அக்டோபர் 05, 1927 அன்று பிறந்தார் ரங்கராஜன். தந்தையார் சமஸ்கிருத பண்டிதர். பல உபநிடதங்களுக்கு உரை எழுதியவர். ரங்கராஜனின் பள்ளிப் படிப்பு கும்பகோணத்தில் கழிந்தது. இளவயது முதலே இலக்கிய ஆர்வமுடையவராக இருந்தார். எழுத்தும் வசமாகி இருந்தது. பள்ளியிறுதி வகுப்புப் பயிலும் போது கையெழுத்துப் பத்திரிக்கை ஒன்றைத் தயாரித்து நடத்தினார். அதுவே அவரது பிற்கால பத்திரிகை வெற்றிகளுக்கு அடித்தளமிட்டது. பள்ளிப் படிப்பை முடித்த பின் கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் படிப்பைத் தொடர இயலவில்லை. 1946ல் சக்தி. வை. கோவிந்தன் நடத்தி வந்த 'கால பைரவன்' இதழில் வேலைக்குச் சேர்ந்தார். அது பல கதவுகளை இவருக்குத் திறந்துவிட்டது. அக்காலகட்டத்தில் இவரது அறை நண்பர் கண்ணதாசன். கு. அழகிரிசாமி, சிதம்பர ரகுநாதன், தமிழ்வாணன் எனப் பலரது நட்பு ரங்கராஜனுக்குக் கிடைத்தது. கண்ணதாசன் மாடர்ன் தியேட்டர்ஸில் பணிபுரியச் செல்ல, ரங்கராஜன் பெ. தூரன் நடத்திவந்த 'காலச்சக்கரம்' இதழில் உதவியாசிரியர் பொறுப்பேற்றார். 'குமுதம்' நிறுவனம் சிறிது காலம் நடத்திய 'ஜிங்லி' சிறுவர் இதழில் சேர்ந்து பணியாற்றிய பின் குமுதம் இதழிலேயே துணையாசிரியராகச் சேர்ந்தார். அதுமுதல் அவரது சாதனைப் பயணம் தொடர்ந்தது. பின்னர் ஜ.ரா.சு.வும் இணைய, எஸ்.ஏ.பி., ரங்கராஜன், ஜ.ரா.சு. என்ற மூவர் கூட்டணி தமிழ்ப் பத்திரிகையுலகின் பல புதுமைகளுக்கு வித்திட்டது.
குமுதத்துக்கு எழுதும் பிற எழுத்தாளர்களை ஊக்குவித்ததிலும் ரங்கராஜனுக்கு மிகமிக முக்கியப் பங்குண்டு. குறிப்பாக சுஜாதா மற்றும் ராஜேஷ்குமாரை இவர் தொடர்ந்து எழுத ஊக்குவித்தார். ஆரம்பத்தில் ஸ்ரீரங்கம் ரங்கராஜன், ஸ்ரீரங்கம் எஸ்.ஆர்., சுஜாதா ரங்கராஜன் போன்ற பெயர்களில் எழுதிக் கொண்டிருந்த சுஜாதா, ரா.கி. ரங்கராஜனின் ஆலோசனையின் பெயரிலேயே 'சுஜாதா' என்ற பெயரில் எழுதி வெற்றிபெற்றார். சுஜாதாவின் எழுத்துலக வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த 'சசி காத்திருக்கிறாள்' என்னும் சிறுகதையைத் தேர்ந்தெடுத்து வெளியிட்டது ரங்கராஜன்தான். அதுபோல ராஜேஷ்குமாரின் பல கதைகள் ஆரம்ப காலகட்டங்களில் திரும்பி வர, அதற்கான காரணம் என்ன, எப்படி எழுதினால் கதைகளுக்கு வரவேற்பு இருக்கும் என்று ரங்கராஜன் ஆலோசனை கூற, அதை அப்படியே பின்பற்றி வெற்றி பெற்றார் ராஜேஷ்குமார்.
வெகுஜன வாசகர்களிடையே வாசிப்பார்வத்தைத் தூண்டிய குமுதம் இதழின் வெற்றிக்குப் பக்கபலமாக ரங்கராஜன் இருந்தார். பத்திரிகையாளராக மட்டுமல்லாமல் சிறந்த எழுத்தாளராகவும் பரிணமித்தார். கதை, கட்டுரை, சினிமா விமர்சனம், நூல் விமர்சனம், மொழிபெயர்ப்பு என பத்திரிகையின் பரந்துபட்ட களங்கள் அனைத்திலும் ரங்கராஜனின் கைவண்ணம் மிளிர்ந்தது. சிறுகதைகள், தொடர்கதைகள், பேட்டிகள், திரை விமர்சனம், தொலைக்காட்சி விமர்சனம், கேள்வி-பதில் என இவர் கைபடாத விஷயமே குமுதத்தில் இல்லை. அதற்காக வெவ்வேறு புனைபெயர்களில், வெவ்வேறு வகை நடைகளில், வித்தியாசமான தலைப்புகளில் எழுதினார் ரங்கராஜன். "லைட்ஸ் ஆன்" வினோத் என்ற பெயரில் இவர் எழுதிய சினிமாத் தகவல்கள் மிகச் சுவாரஸ்யமானவை. பரபரப்பான சினிமாச் செய்திகளினூடே மிக அழகாக, பொருத்தமாக ஆங்கிலச் சொலவடைகளைக் கலந்து அவர் எழுதிய பாணி வாசகர்களைக் கட்டிப் போட்டது. பின்னால் பலர் அதே பாணியில் எழுத முயற்சி செய்தாலும் அதில் முழுமையான வெற்றி பெற்றவர், ரங்கராஜன் ஒருவர் மட்டுமே!
'ஹம்ஸா' என்ற பெயரில் நகைச்சுவைக் கட்டுரைகள் எழுதியதும், துரைசாமி என்ற பெயரில் துப்பறியும் கதைகள் எழுதியதும் ரங்கராஜன்தான். அது தவிர, சூர்யா, 'மாலதி', 'முள்றி', 'அவிட்டம்' போன்ற பல புனைபெயர்களில் அவர் நிறைய எழுதியிருக்கிறார். கிருஷ்ணகுமார் என்ற புனைபெயரில் "கோஸ்ட்", "எனக்குள் ஒரு ஆவி" போன்ற தலைப்புகளில் இவர் எழுதிய அமானுஷ்யத் திகில் தொடர்கள் அக்கால வாசகர்களால் மறக்க இயலாதவை. மொழிபெயர்ப்பிலும் சாதனை படைத்திருக்கிறார். புகழ்பெற்ற பாப்பியோன் நாவலை பட்டாம்பூச்சி என்றும், இன்விசிபிள் மேனை கண்ணுக்குத் தெரியாதவன் காதலிக்கிறான் என்றும் தொடர்களாக எழுதியிருக்கிறார். காதல் மேல் ஆணை (டேனியல் ஸ்டீல்), லாரா (ஷிட்னி ஷெல்டன்), ஜெனிஃபர் போன்றவை வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றவை. ஷிட்னி ஷெல்டன் தமிழகத்தில் பலருக்குத் தெரியக் காரணம் ரா.கி. ரங்கராஜன்தான் என்று சொன்னால் மிகையல்ல.
தனது மொழிபெயர்ப்பு நாவல்களின் வெற்றி குறித்து ரங்கராஜன், "ஆங்கில நாவலில் உள்ளதை அப்படியே மொழிபெயர்த்தால் அது நன்றாக இருக்காது. அந்தக் கதையம்சத்தை, அதன் போக்கை உள்வாங்கிக் கொண்டு எழுதினால் நிச்சயம் யாராலும் சிறப்பாக எழுத முடியும்" என்கிறார்.
எ.க.எ. (எப்படிக் கதை எழுதுவது) என்ற தலைப்பில் அவர் எழுதிய தொடரைப் படித்தும் தபால்மூலம் அவர் அளித்த எ.க.எ. கல்விப் பயிற்சியில் சேர்ந்து பயின்றும் எழுத்தாளர்களானவர் பலர். பத்மா ரவிசங்கர், சந்திரஜெயன் என பலர் எ.க.எ.வில் படித்து எழுத்தாளர்கள் ஆனவர்களே. அது பின்னர் "எப்படிக் கதை எழுதுவது?" என்ற தலைப்பில் நூலாக வெளியாகியும் சாதனை படைத்தது. |
|
காதல், சமூகம், அமானுஷ்யம், நகைச்சுவை, திகில், வரலாறு எனப் பல களங்களில் பல நாவல்களை, சிறுகதைகளை ரங்கராஜன் எழுதியிருக்கிறார். 'அடிமையின் காதல்' என்பதுதான் ரங்கராஜன் எழுதிய முதல் சரித்திர நாவல். கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவிற்கு வந்த காலகட்டத்தில் சென்னையில் நடைபெற்ற அடிமை வாணிகத்தை மையமாக வைத்து அந்த நாவலை அவர் எழுதியிருந்தார். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. தொடர்ந்து பல நாவல், சிறுகதை, தொடர்கதைகளை, குமுதம், மாலைமதி போன்ற இதழ்களில் எழுதினார். படகுவீடு, வாளின் முத்தம், புரொபசர் மித்ரா, மறுபடியும் தேவகி, வயது பதினேழு, ஊஞ்சல், ஒருதாய், ஒருமகள், உள்ளேன் அம்மா, தாரகை, பல்லக்கு, சின்னக் கமலா, இது சத்தியம், முதல் மொட்டு, மேடம், அபாய நோயாளி, அழைப்பிதழ், க்ரைம், கையில்லாத பொம்மை, ஒரு தற்கொலை நடக்கப் போகிறது, ஹவுஸ்ஃபுல், புரட்சித் துறவி, ஹேமா ஹேமா ஹேமா என அவரது நூல்களின் பட்டியல் வெகு நீளமானது. ஆண்கள் செவ்வாய் பெண்கள் வெள்ளி, நீங்களும் முதல்வராகலாம், தூரன் என்ற களஞ்சியம், எங்கிருந்து வருகுவதோ, அங்குமிங்குமெங்கும், அவன் போன்ற கட்டுரைத் தொடர்களும் மிகவும் புகழ்பெற்றவை. பல படைப்புகள் தொலைக்காட்சித் தொடராக, நாடகமாக வெளியாகியுள்ளன. இவருடைய தேர்ந்தெடுத்த சிறுகதைகளைப் பிரபல அல்லயன்ஸ் பதிப்பகம் காதல் கதைகள், திக்-திக் கதைகள், ட்விஸ்ட் கதைகள், கன்னா பின்னா கதைகள் என்ற பெயர்களில் வெளியிட்டுள்ளது.
இவரது பன்முக ஆற்றல்காரணமாக இவரை "தசாவதானி எழுத்தாளர்" என்று அன்போடு அழைத்தனர். இது குறித்து ரங்கராஜன், "என்னுடைய ஆதர்ச குரு கல்கி. அவர் நாவல், சிறுகதை, கட்டுரை, ஹாஸ்யக் கதைகள், விமர்சனம் என்று எல்லாமும் செய்வார். அவரைப்போல வரணும்னு ஆசைப்பட்டேன். எஸ்.ஏ.பி.யும் அப்படிப்பட்ட ஒரு ரசனை மிக்கவர். எஸ்.ஏ.பி.யும் நானும் குயவனும் பானையுமாக இருந்தோம்" என்கிறார் அடக்கத்துடன்.
பத்திரிகையுலகில் மட்டுமல்லாமல் திரையுலகிலும் குறிப்பிடத்தக்க முத்திரை பதித்திருக்கிறார் ரா.கி. ரங்கராஜன். இவரது கதை 'சுமைதாங்கி' என்ற பெயரில் திரைப்படமாகியிருக்கிறது. கமல்ஹாசன் நடித்த 'மகாநதி' படத்திலும் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. இவருடைய மூன்று நாவல்கள் திரைப்படங்களாக வெளிவந்துள்ளன. தனது குருவான கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை, கமல்ஹாஸன் கேட்டுக் கொண்டதிற்கிணங்க சென்னைத் தொலைக்காட்சிக்காக திரைக்கதை அமைத்து எழுதிக் கொடுத்திருக்கிறார். சில காரணங்களால் அது படமாக்கப்படவில்லை. அது குறித்து ரங்கராஜன், "பொன்னியின் செல்வனை சீரியலாகவோ, திரைப்படமாகவோ எடுப்பது இயலாத காரியம். எப்படி முயற்சித்தாலும் முக்கியமான ஒன்று விடுபட்டுப் போய் விடும். அந்த முயற்சியை நிறைவேற்றுவது என்பது அத்தனை எளிதான காரியமல்ல" என்கிறார்.
குமுதம் இதழில் பணியாற்றிய அனுபவம் குறித்து, "அது ஒரு அற்புதமான காலம். நல்ல ஒரு எடிட்டோரியல் டீம். ஒரே ஆபீசில் நண்பர்களைப் போல் வேலை பார்த்தோம். அதனால்தான் 16,000 காப்பிகள் போய்க் கொண்டிருந்த குமுதத்தை நல்லவிதமாக வளர்த்து, 6 லட்சம் வரை போகச் செய்தோம். எதை வேண்டுமானாலும் சுதந்திரமாக எழுதலாம் என்கிறபோது, வெளியில் வரவேண்டும் என்ற எண்ணமே எங்களுக்குத் தோன்றவில்லை" என்கிறார். 42 ஆண்டுகாலம் குமுதத்தில் பணியாற்றிய பின் ஓய்வுபெற்ற ரங்கராஜன், அதன் பின்னரும் தனது எழுத்துப் பணியைத் தொடர்ந்தார். அதன் பின்னர்தான் அவரது சாதனைப் படைப்பான "நான் கிருஷ்ணதேவராயன்" தொடர்நாவல் விகடனில் வெளியானது. கிருஷ்ணதேவராயர், தானே, தன் வாழ்க்கை வரலாற்றைக் கூறுவது போன்ற உத்தியில் அவர் அதை எழுதியிருந்தார். அது வாசகர்களால் மட்டுமல்லாது, பிரபலங்களாலும் பாராட்டப் பெற்றது. 'ஜூனியர் போஸ்ட்' இதழில் ராயம்பேட்டை என்ற பெயரில் அவர் எழுதிய தொலைக்காட்சி நிகழ்ச்சி விமர்சனங்கள், சுஜாதா, மதன் உட்படப் பலரால் பாராட்டப் பெற்றவை. அதுபோல துக்ளக் இதழில் அவர் அவ்வப்போது எழுதிவரும் தொலைக்காட்சி நிகழ்ச்சி விமர்சனத்திலும் அவரது கைவண்ணம் மிளிர்வதைக் காணலாம். தற்போதும் அண்ணாநகர் டைம்ஸில் "நாலு மூலை" என்ற தலைப்பில் தனக்கேயுரிய கேலி, கிண்டல், நகைச்சுவை, சமூகப் பார்வையுடன் பல கட்டுரைகளை எழுதி வருகிறார்.
ரங்கராஜன் பத்திரிகை, எழுத்து மட்டுமல்லாமல் இசையிலும் தேர்ந்தவர். தீவிர கர்நாடக இசை ரசிகர். இரண்டாயிரத்துக்கும் மேலான சிறுகதைகள், ஐம்பதுக்கும் மேற்பட்ட புதினங்கள், நாடகங்கள், வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரைகள், பேட்டிகள், மொழிபெயர்ப்புகள் என்று சாதனை செய்திருக்கும் ரா.கி. ரங்கராஜனை எழுத்துலகப் பிதாமகர் என்றும் பத்திரிகையுலக பீஷ்மர் என்றும் அழைப்பது மிகவும் பொருத்தமானது.
அரவிந்த் |
|
|
|
|
|
|
|
|