Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சாதனையாளர் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | குறுநாவல் | ஜோக்ஸ் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர்
வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்
- அரவிந்த்|ஜூன் 2011|
Share:
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தமிழின் முதல் நாவலான பிராதப முதலியார் சரித்திரம், (1876) பி.ஆர். ராஜம் அய்யரின் கமலாம்பாள் சரித்திரம், (1896) அ. மாதவையாவின் பத்மாவதி சரித்திரம் (1898) போன்றவை வெளியாகிவிட்டிருந்தன என்றாலும் அதனை அடுத்து ஓர் தேக்கநிலை ஏற்பட்டது. தமிழ் உரைநடை நாவல் இலக்கிய வளர்ச்சியில் இருண்ட காலமாகக் கருதப்பட்ட அக்காலகட்டத்தில்தான் (1900-1940) தமிழில் வெகுஜன வாசிப்பு பரவலானது. பலரும் அச்சுக்கூடங்களை நிறுவி நூல்களை அச்சிட ஆரம்பித்தனர். பல்வேறு தலைப்புகளில் சிறுசிறு நூல்கள் வெளிவரத் துவங்கின. அந்தச் சமயத்தில் எழுத்துலகில் நுழைந்து, தனக்கென ஒரு தனிப் பாணியைக் கையாண்டு எழுத்துலகிலும், பதிப்புலகிலும் சாதனை படைத்தவர் வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்.

1880ம் ஆண்டில் தஞ்சை மாவட்டத்தை அடுத்துள்ள வடுவூரில் இவர் பிறந்தார். தந்தை கிருஷ்ணசாமி ஐயங்கார் ஒரு மிராசுதார். அப்பகுதியில் செல்வாக்கு மிகுந்தவர். வசதியான குடும்பத்தில் பிறந்த துரைசாமி ஐயங்கார், செல்வச் செழிப்புடனே வளர்ந்தார். தமிழில் பட்டப் படிப்பை முடித்த கையோடு, ஆங்கிலத்திலும் பி.ஏ. பட்டம் பெற்றார். பின்னர் ரெவென்யூ இன்ஸ்பெக்டர் பணியில் சேர்ந்தார். இவர் சேலம், ராசிபுரம் பகுதிகளில் பணிபுரிந்தபோது காளன்-கூளன் என்னும் சேர்வராயன் மலைக்கள்ளர்கள் பற்றிய செய்திகள் கிடைத்தன. மக்களும் காவல் துறையினரும் அத்திருடர்களது வீர சாகசச் செயல்களைப் பற்றி வியப்புடன் பேசிக்கொண்டனர். ஏற்கனவே விக்டர் ஹ்யூகோ, ஷேக்ஸ்பியர், ஆர்த்தர் கானன் டாயில் போன்றோரது படைப்புகளைப் படித்துத் தாமும் அதுபோல் ஒரு படைப்பை உருவாக்க வேண்டுமென்ற ஆவல் கொண்டிருந்த வடுவூராருக்கு, இந்த நிகழ்ச்சிகள் உந்து சக்தியாகின. அக்கள்வர்களின் சாகச நிகழ்ச்சிகளை மையமாக வைத்து உண்மை நிகழ்ச்சிகளோடு தமது கற்பனைகளையும் கலந்து 'பாலாமணி' என்னும் நாவலைப் படைத்தார். அதுதான் அவரது முதல் நாவல். அதற்கு நல்ல வரவேற்பு இருக்கவே தொடர்ந்து எழுத ஆரம்பித்தார். ஷேக்ஸ்பியரின் 'சிம்பலின்' என்ற நாடகத்தைத் தழுவி 'சுந்தராங்கி' என்ற நாடகத்தை 1914ம் ஆண்டில் வெளியிட்டார். பரவலான வரவேற்பைப் பெற்ற அது பின்னர் பள்ளி இறுதி வகுப்பின் பாட நூலாக வைக்கப்பட்டது. தொடர்ந்து வடமொழி மிருச்சகடிகத்தை, 'வசந்த கோகிலம்' ஆகவும், ஷேக்ஸ்பியரின் கிங் லியரை, மங்கையர் பகட்டாகவும் உருமாற்றி அளித்தார். மொழிமாற்று நாடகங்கள் மட்டுமல்லாது, மாணிக்கவாசகர், திலோத்தமை, ராஜேந்திர மோகனா போன்ற நேரடி நாடகங்களையும் எழுதினார். தொடர்ந்து துப்பறியும், சமூக நாவல்களை எழுதத் தொடங்கினார்.

அக்காலகட்டம் தமிழ் துப்பறியும் நாவல்கள் வரலாற்றின் ஆரம்ப காலமாக இருந்தது. தழுவல் நூல்களும், மேல்நாட்டுப் பொழுதுபோக்கு இலக்கியங்களை அடியொற்றிய துப்பறியும் நாவல்களும் வெளிவந்து கொண்டிருந்தன. ஆரணி குப்புசாமி முதலியார், ஜே.ஆர். ரெங்கராஜு, டி.எஸ். துரைசாமி போன்றோர் இவ்வகையில் பிரபலமாக இருந்தனர். அவர்களோடு வடுவூராரும் இணைந்து கொண்டார். தனது எழுத்துப் பணிக்கு இடையூறாக இருந்த, உயர் வருவாயையும், அந்தஸ்தையும் தந்த வேலையை உதறிவிட்டு தீவிரமாக எழுதத் தொடங்கினார். 1919ல் தனது படைப்புகளை வெளியிடுவதற்காக 'மனோரஞ்சனி' என்ற மாத இதழைத் தொடங்கியதுடன், கேசரி என்ற சொந்த அச்சகத்தையும் நிறுவினார். மனோரஞ்சனி இதழில் தான் எழுதியதுடன், வை.மு.கோதைநாயகி போன்றோரையும் எழுதச் சொல்லி ஊக்குவித்தார். கும்பகோணம் வக்கீல், மதன கல்யாணி போன்றவை முதலில் மனோரஞ்சனி இதழில் தொடராக வெளியாகி, பின்னர் நூலாக்கம் பெற்றன. மனோரஞ்சனி சிறந்த பொழுதுபோக்கு இதழாக விளங்கியது. பிற்காலத்தில் வந்த மாத நாவல்கள், பாக்கெட் நாவல்கள், க்ரைம் நாவல்களின் முன்னோடி மனோரஞ்சனிதான்.

பல மர்மங்களும் திடுக்கிடும் சம்பவங்களும் நிறைந்தனவாக இவரது நாவல்கள் அமைந்து வாசகர்களை ஈர்த்தன. மேனகா, கும்பகோணம் வக்கீல் அல்லது திகம்பர சாமியார், மாய சுந்தரி, மருங்காபுரி மாயக் கொலை, மரணபுரத்தின் மர்மம், முத்துலக்ஷ்மி அல்லது வெடிகுண்டு மர்மம், திரிபுரசுந்தரி அல்லது திகம்பரசாமியார் திடும் பிரவேசம், நீலலோசனி அல்லது கனவில் மணந்த கட்டழகி, மாயாவினோதப் பரதேசி போன்ற நாவல்களின் தலைப்புகளே வாசகர்களைப் படிக்கத் தூண்டின. விறுவிறுப்பான நடைக்கும், சொல்லாற்றலுடன் கூடிய மொழிநடைக்கும், அங்கதங்களுடன் கூடிய வர்ணனைக்கும் சொந்தக்காரராக வடுவூரார் இருந்தார். இவர் தனது பாத்திரங்களுக்குச் சூட்டிய பெயர்களே இவரது நகைச்சுவைத் திறனுக்கும், கிண்டலுக்கும், கேலிக்கும் சான்று. நரி, பரி: பரி, நரி. நம்பெருமாள் செட்டியார், வக்கீல் மிருதங்கம் ஐயர், டாக்டர் மூஞ்சி, மகாஜாலப் பரதேசியார், திவான் லொடபடசிங் பகதூர், மிஸ் ப்ளிஸ், மிஸ் இன்னோசென்ட் தேவி, பன்னியூர் படாடோப சர்மா, பாவாடைச் சாமியார், சவுடாலப்பர், அன்னக் காவடியர் பிள்ளை, கண்ட பேரண்ட சண்டப் பிரசண்ட வெண்ணைவெட்டி வீரசிங்கம் சர்தார் பகதூர், ஜாம்புக் கிழவி, ஜடாயுக் கிழவி, ருத்ராக்‌ஷ பூனையார், அடுக்கிளை வெட்டிக் கோனார், சவுண்டியப்ப முதலியார், சாப்பாட்டு ராமையங்கார், அழுமூஞ்சி ஆனந்தராயர், ஜபர்தஸ்து மரைக்காயர், தோலிருக்கச் சுளை முழுங்கியா பிள்ளை, கூழையன், குஞ்சுண்ணி நாயர் என இவரது பாத்திரங்களின் பெயர்கள் படிக்கும் போதே நகைப்பை ஏற்படுத்துவதாய் அமைந்துள்ளன.

வாசகரைக் கதையோடு ஒன்றச் செய்யும் எழுத்து வல்லமை அவருக்கிருந்தது. நாவல் தலைப்புகளிலும், அத்தியாயத் தலைப்புகளிலும் வாசகர்களைக் கவர்ந்திழுக்கும் உத்தியை அவர் கையாண்டார். மிஸ்டர் பூச்சாண்டி எம்மே! அல்லது நீக்கு பெப்பே! நீ தாத்தாக்குப் பெப்பே!, சிங்கார சூரியோதயம் அல்லது திருட்டில் நவமணிகள், சமய சஞ்சீவி அல்லது பகையாளி குடியை உறவாடிக் கெடு, திடும்பிரவேச மகாஜாலப் பரதேசியார் அல்லது புஷ்பாங்கி, கலியாணசுந்தரம் அல்லது வேலியே பயிரை மேய்ந்த விந்தை, மரணபுரத்தின் மர்மம் அல்லது லீலாவதியின் மூடுமந்திரம் போன்ற நாவல்களின் தலைப்புகள் வாசகர்களை ஈர்த்தன. அதுபோல அத்தியாயத் தலைப்புகளை அவர், அகட விகட அற்புத நாடகம், அட்டகாசக் கோனாருக்கு கட்டை விரல் சன்மானம், அந்தரத்தில் மனிதன்; அறையில் சூரியன், நரியைப் பரியாக்கிய நம்பெருமாள் செட்டியார், செத்தவனைப் பிழைக்க வைக்கும் எத்தன், மந்திரத்தில் மாங்காய்; தந்திரத்தில் தேங்காய் என்றெல்லாம் நகைச்சுவையாகவும், ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் அமைத்தார்.

தனது நாவல்கள்மூலம் வெகுஜன மக்களிடையே வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டினார். சமூகத்தின் அனைத்துப் படிநிலைகளைச் சார்ந்த மக்களும் வாசிப்பை நோக்கி முன் நகர்வதற்கான சூழல் வடுவூரார், ஆரணி குப்புசாமி முதலியார் போன்றோர் மூலம் அமைந்தது. இன்றைய நவீன இலக்கியங்களுக்கு முன்னோடியாக அன்றைய அத்தகைய வணிக எழுத்துக்கள் விளங்கின. அதுபோலப் பிற்காலத்தில் க்ரைம் மற்றும் துப்பறியும் கதைகளினால் புகழ்பெற்ற ராஜேஷ்குமார், ராஜேந்திரகுமார், பட்டுக்கோட்டை பிரபாகர், புஷ்பா தங்கதுரை, சுபா என அனைவருக்கும் முன்னோடி வடுவூர் துரைசாமி ஐயங்கார்தான் என்றால் மிகையல்ல. சமகால துப்பறியும் கதை எழுத்தாளர்களான டி.எஸ். துரைசாமி, ஜே.ஆர். ரங்கராஜு, ஆரணி குப்புசாமி முதலியார் போன்றோரை விட வடுவூராரே அதிகப் புகழ்பெற்றவராக இருந்தார்.
ஆர்தர் கானன் டாயிலின் ஷெர்லாக் ஹோம்ஸ் பாதிப்பில் இவர் உருவாக்கிய 'திகம்பர சாமியார்' கதாபாத்திரம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. ரெய்னால்ட்ஸ் போன்ற நாவலாசிரியர்களைத் தழுவி எழுதியவர் என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் இவர்மீது இருந்தாலும் சொந்தமாகவும் பல நாவல்களை எழுதியிருக்கிறார். காங்கிரஸ் கமலம், வித்தியாசாகரம், நவநீதம், வசந்த மல்லிகா, மதன கல்யாணி, பூர்ண சந்திரோதயம் போன்றவை இவரது குறிப்பிடத்தக்க சமூக நாவல்களாகும். அத்துடன் அரசியல் தத்துவம், இங்கிலாந்து தேச சரித்திரம், தேக ஆரோக்கியம் போன்ற பல தலைப்புகளிலும் நூல்கள் எழுதியிருக்கிறார். பள்ளி மாணவர்களுக்காக எளிய தமிழில் வரலாறு, புவியியல் நூல்களையும், துவக்கக் கல்வி நூல்களையும் எழுதியுள்ளார். சைவம், வைணவம், ஜோதிடம் பற்றியும், எகிப்து தேசம், சமயம், தத்துவங்கள் பற்றியும் இவர் பல ஆண்டுகாலம் ஆராய்ந்து எழுதிய சமய விளக்கம் மற்றும் சமய ஆராய்ச்சி நூல் மிக முக்கியமானது. ஆனாலும் தமிழ் வெகுஜன இலக்கியத்தில் வடுவூரார் துப்பறியும் கதை எழுத்தாளராகவே பரவலாக அறியப்படுகிறார்.

அவரது எழுத்திற்கு வரவேற்பு இருந்தது போலவே சம அளவில் எதிர்ப்பும் இருந்தது. தமது நாவல்கள் மூலம் மேல்நாட்டுப் பழக்கவழக்கங்களையும், அவர்களது மனோபாவங்களையும் தமிழ்நாட்டில் பரப்பி அதன்மூலம் தமிழ்மக்களின் பண்பாடு, கலாசாரத்தைச் சீர்குலைக்கிறார் என்று மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். வடூவூராரின் எழுத்துக்களை வெறும் பொழுதுபோக்கு எழுத்து என்று தள்ளிவிட முடியாது. 1900-1930 கால கட்டங்களைப் பற்றி, அக்கால மக்கள் ஒருசிலரது வாழ்க்கை முறை, சூழல்கள், மேட்டுக்குடி மனோபாவ சிந்தனைகள் போன்றவற்றைப் பற்றி அறிய வடுவூராரின் எழுத்துக்கள் துணை நிற்கின்றன. அவரது நாவல்களின் மூலம் அக்காலத்துச் சமூக நிலையை, பழக்க வழக்கங்களை, மக்களின் நம்பிக்கைகளை அறிய முடிகிறது. வடுவூராரின் பாத்திரப் படைப்பும் மனிதர்களின் குண நலன்களைத் தெளிவாகச் சித்திரிக்கும் யுக்திகளும் பிரமிக்க வைக்கின்றன. அக்காலச் சமுதாயத்தின் சிறப்புக்களையும், ஜமீந்தார் போன்றோருக்கு ஏற்பட்ட சீரழிவுகளையும் தனது நாவல்களில் மிகச் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார். அதேசமயம் இவரது நாவல்கள் அனைத்துமே விறுவிறுப்பானைவை; மிகச் சிறப்பானவை என்று கூற இயலாது. காட்சி வர்ணனைகளும், தேவையற்ற விவரிப்புகளும் வாசகனைச் சோர்வுறச் செய்பவை என்றாலும் அந்தக் கால வணிக, பொழுதுபோக்கு எழுத்துக்களில் தன்னால் முடிந்த அளவுக்கு தரத்தைத் தர அவர் முயன்றார் என்பதை மறுப்பதற்கில்லை. இவரது எழுத்து பற்றி அக்காலப் பிரபல விமர்சகர் க.நா.சுப்ரமண்யன், “தமிழுக்கு அவர் சேவை சரியானபடி கணிக்கப்படவில்லை அல்லது புரிந்துகொள்ளப் படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்” என்கிறார், தனது இலக்கியச் சாதனையாளர்கள் என்ற நூலில்.

நாவல், நாடகம் ஆகியவற்றைத் தொடர்ந்து திரைப்படக் கதாசிரியராகவும் முத்திரை பதித்தார் வடுவூரார். 1935ல் இவரது கதையான மேனகா திரைப்படமாகி பெருவெற்றி பெற்றது. முதன்முதலாக நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் மேனகாதான். இதில்தான் டி.கே.எஸ். சகோதரர்கள் திரையுலகுக்கு அறிமுகமாகினர். என்.எஸ்.கிருஷ்ணன், கே.ஆர்.ராமசாமி ஆகியோருக்கும் அதுதான் முதல் படம். பாரதியாரின் பாடல் ஒலித்த படம் என்ற பெருமையும் இப்படத்திற்கு உண்டு. தொடர்ந்து வித்யாபதி என்ற திரைப்படம் வெளியானது. தவிர, மைனர் ராஜாமணி, பாலாமணி, இருமன மோகினிகள் போன்ற நாவல்களும் திரைப்படமாகின. வித்யாபதியில் சிறு வேடத்தில் தோன்றிய எம்.என்.நம்பியார், வடுவூராரின் கதையான திகம்பர சாமியார் திரைப்படத்தில் பத்துக்கும் மேற்பட்ட வேடங்களில் தோன்றிப் புகழ்பெற்றார். நம்பியாரின் திரையுலக வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது அப்படம்.

எழுத்தின்மூலம் தான் சம்பாதித்த பணத்தைக் கொண்டு சென்னை திருவல்லிக்கேணியில் பைகிராஃப்ட்ஸ் சாலையில் (இன்றைய பாரதி சாலை) வீடு ஒன்றினை வாங்கி, அதற்கு வடுவூர் ஹவுஸ் என்று பெயரிட்டு வசதியாக வாழ்க்கை நடத்தினார். தனது சமகால எழுத்தாளர்கள் யாரும் பெற முடியாத புகழையும், செல்வத்தையும் பெற்று வளமாக வாழ்ந்தார். தமிழில் வணிக எழுத்துக்களைப் பிரபலமாக்கி, அச்சகங்களை, நூல் பதிப்பை ஒரு தொழிலாக நடத்தி வெற்றி பெற்ற முன்னோடி வடுவூரார்தான்.

பிற்காலத்தே திரைப்படமான வடுவூராரின் நாவல் ஒன்றிற்கு சாதீய ரீதியாக எதிர்ப்புக் கிளம்பியது. வழக்கும் தொடரப்பட்டது. அதுவரை புகழின் உச்சியில் வாழ்ந்த வடுவூராரால் அந்த எதிர்ப்பையும், அதனால் எழுந்த சர்ச்சைகளையும் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பெரிதும் மனம் புண்பட்டார். ஏற்கனவே பல்லாண்டுக்கால ஆராய்ச்சியின் விளைவாக Long missing Links என்ற ஒரு 900 பக்க ஆய்வு நூலை அவர் உருவாக்கியிருந்தார். அதற்காகத் தனது சொத்துக்களை எல்லாம் விற்றுப் பெரும் பணம் செலவழித்திருந்தார். ஆனால் ஆங்கிலேய அரசு அந்த நூலை வெளியிடத் தடை விதித்தது. அதனால் ஏற்பட்ட நஷ்டமும் மன அழுத்தமும் அவரது உடலைப் பாதித்தன. நோய் தீவிரமாகி, சிகிச்சை அளித்தும் பலனின்றி 1942ல் வடுவூரார் காலமானார்.

வடுவூராரின் மனைவி பெயர் நாமகிரி அம்மாள். இவர்களுக்கு இரண்டு ஆண் மகவுகளும், ஒரு பெண் மகவும் இருந்தனர். ஆனால் எழுத்துத் துறையில் அவர் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்து கோலோச்சியிருந்தாலும் அவரது வாரிசுகள் அத்துறையில் ஈடுபடவில்லை. வடுவூராரின் நாவல்களை அல்லயன்ஸ் பதிப்பகம் மீண்டும் வெளியிட்டுள்ளது. தமிழக அரசும் அவரது நூல்களை நாட்டுடைமையாக்கி அவருக்கு கௌரவம் சேர்த்துள்ளது. தமிழில் வெகுஜன நாவல்களின் முன்னோடி எழுத்தாளர் என்ற வகையில் மிக முக்கிய இடம் பெறுகிறார் வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்.

அரவிந்த்
Share: 
© Copyright 2020 Tamilonline