தமிழ் நாடு அறக்கட்டளை: தமிழர் விழா ராம பக்தி சாம்ராஜ்ய... அன்பால் அரவணைக்கும் மாதா அமிர்தானந்தமயி! தில்லானா இசையால் முடியும் தமிழ் மன்றம்: மானுவல் ஆரோன் சதுரங்க நிகழ்ச்சி வடஅமெரிக்கத் தமிழ்சங்கப் பேரவையின் தமிழர் விழா 2003
|
|
பன்னாட்டு இசைவிழா |
|
- |ஆகஸ்டு 2003| |
|
|
|
சான் ·பிரான்சிஸ்கோவில் உள்ள யெர்பா போனா கார்டன்ஸில் பல வருடங்களாக ஜூன் மாதத்தில் பன்னாட்டு இசைவிழா நடந்து வருகிறது. அந்தந்த நாடுகளின் தூதரகங்கள் சிபாரிசு செய்யும் கலைஞர்கள் இந்த விழாவில் பங்கெடுத்துக் கொள்வர்.
இந்த வருடம் ஜூன் 16 முதல் 28 வரை இரண்டு வாரங்கள் எஸ்பிளனேட் கார்டன்ஸில் மதியவேளைகளில் நடந்த இசைவிழாவில் கனடா, கொலம்பியா, இத்தாலி, பிரேசில், ஸ்வீடன், ஸ்விட்சர்லாண்ட், ஜப்பான், ஜெர்மனி, பெரு, இந்தோனேசியா, இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் கலைஞர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் இந்தியா கலந்து கொள்வது இதுவே முதன் முறை.
இசைக் கச்சேரிகளின் நடுவே கம்போடிய மற்றும் இந்திய நடனங்கள் இடம் பெற்றது இந்த வருடத்தின் சிறப்பு அம்சம். பொதுவாக வாரநாட்களில் மட்டுமே நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். இந்தியாவின் பிரதிநிதிகளாக ராகமாலிகா இசைப் பள்ளியும், நிருத்யோல்லாசா நடனப் பள்ளியும் பங்கேற்றன. ராகமாலிகாவை 10 ஆண்டுகளாக விரிகுடாப் பகுதியில் நடத்தி வரும் ஆஷா ரமேஷ் சங்கீத கலாநிதி D.K. ஜெயராமனின் சிஷ்யை.
இந்துமதி கணேஷ் பத்மஸ்ரீ கலைமாமணி சித்ரா விஸ்வேஸ்வரன் அவர்களின் பிரதம சிஷ்யை. விரிகுடாப் பகுதியில் கடந்த 15 வருடங்களாக நிருத்யோல்லாசா டான்ஸ் அகாடமியை நடத்தி வருகிறார்.
ஜூன் 28, சனிக்கிழமையன்று சுட்டெரிக்கும் வெய்யிலில், அவ்வப்போது காற்று காதைப் பிளக்க, செயற்கை நீர் ஊற்றுகளின் நடுவில், திறந்தவெளியில், மக்கள் தரையில் உட்கார்ந்து ரசிக்க ஆஷா ரமேஷின் இசைக் கச்சேரி ஆரம்பித்தது. நாட்டை ராகத்தில் அமைந்த 'மஹா கணபதிம்' நிகழ்ச்சிக்கு நல்ல ஆரம்பமாக அமைந்தது.
அடுத்து ஆஷா ரமேஷ், அவரது மாணவிகள் ரூபா மஹாதேவன், மாளவிகா குமார், அனுராதா சிவராம் மற்றும் நிலா பாலாவுடன் பாடிய கதம்பமும், கதன குதூகல ராகத்தில் அமைந்த மைசூர் வாசுதேவாசாரியாரின் 'நீ கேல தய ராது'வும் மிக அருமை.
அடுத்ததாக வாத்திய விருந்தத்தில், 5 வாத்திய இசைக் கலைஞர்களுடன் ஆஷாவே இயற்றிப் பாடிய பாடல் அற்புதம். ஸ்ரீராம் பிரம்மானந்தம் மிருதங்கம், ரவி குடாலா தபலா, மஹாதேவன் மோர்சிங், அனுராதா ஸ்ரீதர் வயலின், வேணு கோலவேணு வீணை என்று அமர்க்களப் படுத்திவிட்டனர். மராத்தி அபங் மனதை உருக்குவதாக இருந்தது. தமிழ், ஆங்கிலம், மற்றும், ஹிந்தியில் தானே இயற்றிப் பாடிய 'The Thillana' நிகழ்ச்சிக்குச் சிகரம் வைத்தாற்போல் இருந்தது. எல்லோரும் ரசிக்கும் பொருட்டு எவ்வளவு கவனமாக பல மொழிகள், பல ராகங்கள், தாளங்கள் இவற்றைத் தேர்ந்தெடுத் திருந்தார் என்பது நிகழ்ச்சி முடிந்தபின் ஆஷாவிடம் பேசும்போது புரிந்தது. |
|
இந்துமதி கணேஷ் தனது மாணவிகள் வித்யா சந்தர், சுமனா ராவ், தீபா சுப்ரமணியம், மற்றும் அக்ஷயா கணேஷ¤டன் ஊத்துக்காடு வெங்கட சுப்பய்யரின் கிருதியான விநாயகரைத் தொழும் பிரணவாகாரத்துடன் நிகழ்ச்சியை ஆரம்பித்தார்.
அடுத்து பாரதியாரின் 'திக்குத் தெரியாத காட்டில்' பாடலில், காட்டுக்குள் வழிதவறிய பெண்மணியை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார். பயம், தவிப்பு, சோர்வு, வேடனின் காமம், வியப்பு, என்று அத்தனை உணர்ச்சிகளையும் அவரது முகபாவங்கள் தெளிவாக உணர்த்தின. "கால்கை சோர்ந்து விழலானேன்" என்ற அடிக்கு இவரது அபிநயம் சிலிர்க்க வைத்தது. இந்துமதி கணேஷ் அபிநயத்துக்குப் பெயர் போனவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசியாக இவர் தனது மாணவிகளுடன் சேர்ந்து ஆடிய தில்லானா டாக்டர் எம். பாலமுரளிகிருஷ்ணா இயற்றியது. கடினமான ஜதிக் கோர்வைகள் நிறைந்த இந்த தில்லானா விற்கு நன்கு ஒருங்கிணைந்து கச்சிதமாக ஆடியது கண்ணுக்கு விருந்து. பின்னணியில் ஆஷா ரமேஷ் பாட, மஹாதேவன் மிருதங்கம் வாசிக்க, வேணு கோலவேணு வீணை வாசிக்க, மாணவி ரூபா மஹாதேவன் நட்டுவாங்கம் செய்தார்.
நிகழ்ச்சியின் முடிவில் இந்துமதி கணேஷிடம், "இசை விழாவில் எப்படி பரத நாட்டியம்?" என்று கேட்டதற்கு, "பரத நாட்டியத்தில் பாட்டுக்குப் பெரும் பங்கு உண்டு. அபிநயம், கை அசைவுகள் (hand gestures), உடல் அசைவுகள் (body language) மூலமாக அந்தப் பாட்டின் அர்த்தத்தை மட்டுமில்லாமல் உணர்ச்சியையும் மக்களுக்கு கொண்டுசெல்வது பரதநாட்டியம்" என்று கூறினார். இந்துமதி கணேஷ் மற்றும் அவரது மாணவிகளின் நாட்டியத்தைப் பார்த்த போது, நிருத்தம், அடவு என்ற இரண்டுக்குமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது தெரிந்தது. |
|
|
More
தமிழ் நாடு அறக்கட்டளை: தமிழர் விழா ராம பக்தி சாம்ராஜ்ய... அன்பால் அரவணைக்கும் மாதா அமிர்தானந்தமயி! தில்லானா இசையால் முடியும் தமிழ் மன்றம்: மானுவல் ஆரோன் சதுரங்க நிகழ்ச்சி வடஅமெரிக்கத் தமிழ்சங்கப் பேரவையின் தமிழர் விழா 2003
|
|
|
|
|
|
|