பாரதி கலாலயா நிகழ்ச்சிகள் கடல் கடந்தும் காக்கப்படும் நம் கலாசாரம் அக்கினிக் குஞ்சு - மகாகவி பாரதி பற்றிய வரலாற்று நாடகம் சான்·பிரான்சிஸ்கோ விரிகுடாப்பகுதி தமிழ்மன்றம், கலி·போர்னியா தமிழ் கழகம் - மத்திய அமைச்சர் கண்ணப்பன் ஹூஸ்டன் பெருநகரின் முன்னாள், நிதியமைச்சர் ப. சிதம்பரம்! கலி·போர்னியா தமிழ்க்கழகம் மூன்றாவது ஆண்டு விழா SIFA நடத்திய ஸ்ரீதுக்காராம் கச்சேரி!
|
|
தனிமை - தமிழ்நாடகம் ஒரு பார்வை |
|
- மனுபாரதி|ஜூலை 2003| |
|
|
|
கடந்த மே மாதம் 11ஆம் தேதி, வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம் நடத்திய 'தனிமை' தமிழ் நாடகம், அந்தப் பகுதித் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பையும் கற்பனையைமு மீறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி விட்டது. அரங்கம் நிறைந்திருந்த அத்தனைபேருக்குமே அந்த நாடகம் தன்னிறைவைத் தந்தது என்றால் அது மிகையில்லை. ''வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம் வருடத்திற்கு ஒரு முறை இது மாதிரி தரமான தமிழ் நாடகங்களுக்கு ஏற்பாடு செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்'' என்ற எதிர்பார்ப்பை எல்லார் மனதிலும் இந்த நாடகம் வித்திட்டது.
தற்காலத்திய கருவை எடுத்துக் கொண்டு கதையை உருவாக்கி, உணர்ச்சிப் பூர்வமான வசனங்களால் நாடகத்தை உருவாக்கியிருப்பவர் பாங்காக் ஆனந்த் ராகவ். கதையும், அக்கதையை சொல்லியிருக்கும் விதமும் பார்வையாளர்களைச் சட்டென்று தங்கள் வாழ்க்கையோடு தொடர்புபடுத்தச் செய்கிறது. அமெரிக்காவில் வாழும் ஒவ்வொரு இளம் தலைமுறையினரின் பெற்றோரும் அங்கே இந்தியாவில் 'தனிமையில்' கிடந்து தவிக்கும் தவிப்பை, இந்த நாடகத்தில் பெரியவர் பாத்திரத்தில் நடித்த திரு. ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசா நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார். பார்த்தவர்கள் எல்லோருக்குமே அவர்களது பெற்றோரின் நினைவு அந்த சமயத்தில் உண்டானது என்பதை யாருமே மறுக்க முடியாது.
அமெரிக்காவில் வளர்கிற குழந்தை என்ற நம்ப முடியாத அளவுக்குத் தெளிவாகவும், அருமையாகவும் வசனம் பேசி எல்லாரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினாள் பேத்தியாக நடித்திருந்த கீர்த்தனா, சுப்பிரமணி கதாபாத்திரத்திற்கு அம்மாவாக நடித்த திருமதி. கனகா குருபிரசாத்தும் கடைசிக் காட்சி வசனத்தில் அசத்திவிட்டார்கள். இவர்களைப் போலவே நாடகத்தில் நடித்த அத்தனை பேருமே அவரவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரதத்தை மிகவும் சிரத்தையெடுத்து செய்திருந்தார்கள்.
நாடகத்திற்கு மிகப் பெரிய பலமாக அமைந்திருந்த இன்னுமொரு விஷயம் மேடை அலங்காரம். இதைச் செய்த KC தமிழ் தெரியாத மராத்தியர் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அரங்க அமைப்பும் மேடை அலங்காரமும் ஒரு குறிப்பிட்ட காட்சியின் போது அந்தந்த இடத்துக்கே நம்மை அழைத்துப் போகும் வகையில் மிகவும் தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்தன.
திரு. அசோக் சுப்பிரமணியம், திருமதி வசந்தி வெங்கட்ராமன், நல்லப்பன் குழுனிர் அமைத்திருந்த நாடகத்தின் ஒளி அமைப்பு மிகக் கச்சிதமாகக் கையாளப்பட்டிருந்தது. மணி ராம், நிர்மல் குமார் போன்றோரின் பொறுபூபில் நாடகத்தின் இசை, ஒலியமைப்பு போன்றவை சிறப்பாகச் செய்யப்பட்டிருந்தன. இசைப் பாடல்களின் தேர்வு ''பேஷ்! பேஷ்!'' என்று பாராட்டும் வகையில் இருந்தது. இந்தத் ''தனிமை''யை மிக அற்புதமாக இயக்கி எல்லோருடைய பாராட்டுகளையும் ஒட்டு மொத்தமாகத் தட்டிச் செல்கிறார் தீபா ராமானுஜம்.
மொத்தத்தில் ஒரு நல்ல பொழுதுபோக்கான அதே நேரம் நல்ல கருத்துள்ள நாடகம் பார்த்த திருப்தி வளைகுடாப் பகுதி தமிழ் மக்களிடத்தில் ஏற்பட்டதென்பது நூற்றுக்குநூறு உண்மை.
நாடகத்தை பார்க்க வந்திருந்த சில வளைகுடாப் பகுதி வாசிகள் இந்த நாடகத்தைப் பற்றி என்ன சொல்கிறார்கள் தெரியுமா?
''இந்த நாடகம் ஒரு தீவிரமான நாடகமாக இருக்கப்போகிறது என்ற ஒரு தயக்கம் முதலில் எனக்கு இருந்தது. ஆனால் எதிர்பார்த்தபடி இல்லாமல் அங்கங்கே ஹாஸ்யத்துடன் மிக அழகாக செய்திருந்தார்கள். நாடகத்திற்கு உழைத்தவர்கள் எல்லாருக்கும் சிறப்பாகச் செய்ததற்கான என்னுடைய பாராட்டுகள்! வாழ்த்துகள்''.
பாலாஜி ரங்கராஜன், ஸான்·பரான்ஸிஸ்கோ
''நாடகத்தில் நடித்தவர்கள் எல்லோருமே மிக நன்றாக செய்திருந்தார்கள். எதுவுமே இவர்கள் இந்தக் கலைக்குப் புதியவர்கள் என்று காட்டவில்லை. இயக்குநரின் உழைப்பு அபரிதமானது. நாடகத்தில் நடித்திருந்த எல்லாருக்கும் பாராட்டுகள்''.
பிரசன்னா, ஸன்னிவேல்
''இந்த அருமையான நாடகத்தை வழங்கியதற்கு நான் தமிழ்மன்றத்தைப் பாராட்ட விரும்புகிறேன். திருமதி. தீபா ராமானுஜம் அவர்கள் மிக மிக நல்ல நாடகத்தை அளித்திருக்கிறார். திரு. ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாஸாவின் நடிப்பு எனக்கு பிடித்திருந்தது. திருமதி. கனகா குருபிரசாத் கலக்கிவிட்டார்கள். ராஜீவும் கூட. குழுவிலிருக்கும் எல்லாருக்கும் வாழ்த்துகள். '' |
|
மல்லேஷ், பே ஏரியா
''ஒரு அமெச்சூர் குழு என்று நாடகத்திற்கு வரும் முன் யோசித்திருந்தேன். ஆனால் அந்த எண்ணம் தவறென்று நாடகத்தைப் பார்த்ததும் உணர்ந்து விட்டேன். காட்சியமைப்பு நன்றாக செய்யப்பட்டிருந்தது. நடிக-நடிகையர் தேர்வு மிகப் பொருத்தம். தீபா ராமானுஜத்தின் திறமை போற்றக்கூடியது.''
சரவண் அஸ்தி, ஸான் ஹோஸே.
''குழுவினரின் உழைப்பும் அற்புதம். சிலர் குடும்பக் கதை அலுப்புத்தட்டக் கூடியது என்று யோசித்து வராமல் இருந்திருப்பார்கள். அவர்கள் எல்லாரும் ஒரு நல்ல நாடகத்தைப் பார்க்கும் வாய்ப்பை இழந்துவிட்டார்கள் என்று தான் சொல்லுவேன். கதை, வசனம், நடிப்பு, மேடை அமைப்பு, ஒளி, ஒலி, நடிகர்களின் முழு ஈடுபாடு - இப்படி ஒவ்வொரு விஷயமும் அருமை. குழுவுக்குப் பாராட்டுகள்.''
ராதா கிருஷ்ணன், ஸான் ஹோஸே.
''ஒருவரின் மகிழ்ச்சிக்கு அவரின் மனது தான் முக்கியம் என்ற நாடகத்தின் கருத்து நன்கு விளக்கப்பட்டிருந்தது. கடந்த காலக் காட்சிகள் மிகவும் தத்ரூபமாக இருந்தது. எங்களை அந்தக் காலத்திற்கே கூட்டிச் சென்றுவிட்டன. மொத்தத்தில் ரசிக்கத்தக்க நாடகம்.''
ஸ்ரீனிவாசன், சன்னிவேல்.
மனுபாரதி |
|
|
More
பாரதி கலாலயா நிகழ்ச்சிகள் கடல் கடந்தும் காக்கப்படும் நம் கலாசாரம் அக்கினிக் குஞ்சு - மகாகவி பாரதி பற்றிய வரலாற்று நாடகம் சான்·பிரான்சிஸ்கோ விரிகுடாப்பகுதி தமிழ்மன்றம், கலி·போர்னியா தமிழ் கழகம் - மத்திய அமைச்சர் கண்ணப்பன் ஹூஸ்டன் பெருநகரின் முன்னாள், நிதியமைச்சர் ப. சிதம்பரம்! கலி·போர்னியா தமிழ்க்கழகம் மூன்றாவது ஆண்டு விழா SIFA நடத்திய ஸ்ரீதுக்காராம் கச்சேரி!
|
|
|
|
|
|
|