ஜெனி சந்திரசேகரின் பரதநாட்டியம் சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப்பகுதித் தமிழ்மன்றம் - விமரிசையான முத்தமிழ் விழா
|
|
|
கலாலயா என்ற நிறுவனம் பல தரமான நிகழ்ச்சிகளை விரிகுடாப் பகுதிக்கு அளித்து வருகிறது. போனமாதம் 27ம் தேதி ஸ்பேங்கன் பார்க் அரங்கத்தில் நடைபெற்ற SP பாலசுப்ரமணியம் குழுவினரின் மெல்லிசை விருந்தைக் கேட்ட அனைவரும் சுமார் 4 மணி நேரம் சென்னையில் இருப்பதைப்போல் உணர்ந்து, மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர். 'பாடும் நிலா' பத்மஸ்ரீ எஸ்பிபி முன்பே இங்கு நிகழ்ச்சி கொடுத்துள்ளார். ஆனால் இந்த முறை அவருடன் இணைந்து பாடுவதற்கு மனோ, மால்குடி சுபா, மாலதி, மது மற்றும் 'லஷ்மண் ஸ்ருதி' குழுவினரும் வந்ததிருந்தனர். ஆகவே நிகழ்ச்சி பாலு(வு)டன் கலந்த தேன் போல் இனித்தது.
மனோவும், மாலதியும் பாடிய கடவுள் வணக்கத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. அதைத் தொடர்ந்து அவர்கள் தனித்தனியாகவும், இணைந்தும் பல பாடல்களை பாடினார்கள். சில பாடல்கள் இளைய தலைமுறைக்கு ஏற்ப துரித கதியில் அமைந்திருந்தது. குறிப்பாக 'வாடி நாட்டுகட்டை', 'தையா, தையா' முதலானவை. AR ரெஹ்மானுக்குப் புகழ் தேடித்தந்த 'வீர பாண்டி கோட்டையிலே' ரசிகர்களைத் தாளமிட வைத்தது.
SPB சங்கராபரணம் (தெலுங்கு) படத்தின் 'சங்கரா' பாடலைப் பாடியபோதும், 'சலங்கை ஒலி' யிலிருந்து 'தகிட ததிமி' என்ற பாடலை பாதி தமிழிலும் பாதி தெலுங்கிலும் பாடியபோதும் ரசிகர்கள் கைதட்டி ஆரவாரித்ததை பார்த்த பொழுது இசைக்கு மொழி ஒரு தடையில்லை என்பது மீண்டும் நிரூபணமானது. மால்குடி சுபாவும், மனோவும் இணைந்து பாடிய 'சுப்பம்மா' பாட்டிற்கு இளைஞர்கள் மட்டுமல்லாது வயது முதிர்ந்தவர்களும் நடனமாடினார்கள். ஆகவே இசைக்கு வயதும் ஒரு தடையில்லை என்று புரிந்தது. |
|
இதன் நடுவே லஷ்மண் அவர்கள் பலகுரல் நிகழ்ச்சி நடத்தி, இசை நிகழ்ச்சிக்கு மேலும் மெருகூட்டினார். அவர் MGR குரலில் தண்ணீர் கேட்டபொழுது ரசிகர்கள் மக்கள் திலகத்தை அரங்கத்தில் தேடத் தொடங்கினார்கள். சுமார் 20 விதவிதமான குரல்களில் பேசி அசத்திய லஷ்மண் இந்த இசைக் குழுவின் தலைவராவர். மாலதி இவரது துணைவியார். கலைஞர்கள் பாடும் பொழுது, அப்பாடல்கள் நடித்திருந்த நடிக நடிகையருடைய படங்களை Project செய்தது புதுமையாகவும் வரவேற்கத் தக்கதாகவும் இருந்தது.
திருமதி கலா ஐயர் (கலாலயாவின் நிர்வாகி) கலைஞர்கள் அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி கெளரவித்தார். அக்குழுவின் தலைவரான லஷ்மணும், SPB யும் தங்களுக்கு இந்தக் கலா நிகழ்ச்சியை தயாரித்து வழங்க சந்தர்ப்பம் அளித்த ஐயருக்குப் பொன்னாடை போர்த்தினர்.
Dr. கல்பகம் கெளசிக் |
|
|
More
ஜெனி சந்திரசேகரின் பரதநாட்டியம் சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப்பகுதித் தமிழ்மன்றம் - விமரிசையான முத்தமிழ் விழா
|
|
|
|
|
|
|