செப்டம்பர் 11 - ஒரு மீள்பார்வை குடிசைக்குள் பாம்புடன் சகவாசம்
|
|
பேயும் பிடித்துக் கொண்டதா.... |
|
- அசோகன் பி.|செப்டம்பர் 2003| |
|
|
|
இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன - எதிர்பாராத, கொடூரமான மற்றும் மிகவும் திட்டமிட்ட தாக்குதல்கள் நடந்து. காரண, காரியங்கள் எதுவாயினும் அந்த அழிவுச் செயலையோ, அதற்குக் காரணமானவர்களையோ நாகரீக உலகில் எவரும் மன்னிக்க இயலாது; கூடாது.
இன்றைய உலக நிலைமை இந்தக் கொடு நிகழ்ச்சியால் வனையப் பட்டிருக்கிறது என்பது தெளிவான முடிவு. ஆனால் இந்த செப். 11 அழிவு வேலையின் அதிபயங்கர விளைவுகளில் முக்கியமானதாக நான் கருதுவது, அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மனப்போக்கில் நேர்ந்துள்ள மாற்றங்களையே.
சோவியத் யூனியன் சிதறிய பிறகு தனிப்பெரும் வல்லரசாக அமெரிக்கா மாறியபோதிலிருந்து நான் அச்சப்பட்டதுண்டு. காரணம், சாதாரண அமெரிக்கர்கள் வெளியுலகைப் பற்றி அதிகம் கவலைப் படுவதில்லை. இப்படியான நாட்டின் அதிபர் தேர்தல் அவரது உலக ஞானத்தின் அடிப்படையில் என்றைக்கும் இருந்ததில்லை.
இப்போது தட்டிக் கேட்க ஆளில்லாத நிலையில் உலகத்தின் பொருளாதாரம், தொழில் நுட்பம் மற்றும் போர்க் கருவிகள் தயாரிப்பதில் முதன்மை நிலையில் உள்ள இந்நாடு, மற்ற நாடுகளைப் பற்றிக் கவலையில்லாமல் ஆனால் அதே நாடு களின் தலைவிதியை மாற்றக்கூடிய வலிமை யுடன் இருப்பது என்னைப் பொறுத்த வரையில் மிகவும் கவலை தரும் ஒன்று.
செப். 11க்குப் பிறகோ, இத்தகைய நாடு ஒரு முற்றுகை மனப்பான்மையில் வீழ்ந்தது; நல்லவனோ, கெட்டவனோ எனக்கு உதவுபவன் எனக்கு நண்பன் - நான் தவறு செய்தால் அதைச் சுட்டிக் காட்டுபவன் எனது விரோதி என்ற (ஏற்கனவே இருந்த) மனப்பான்மை பெரிதும் வளர்ந்தது - உதாரணம் பாகிஸ்தானின் துணையுடன் பயங்கர வாதத்தை எதிர்க்கும் கோட்பாடு! |
|
கள் குடித்த குரங்கைத் தேள் கொட்டிப் பித்தம் தலைக்கேற, அதைப் பேயும் பிடித்துக் கொண்டதாம் என்ற வசனம் நினைவுக்கு வருகிறது. இது மிகவும் கடுமையான விமர்சனம் என்று நினைப்போர், ஐ.நா இன்றைக்குத் தள்ளப்பட்டுள்ள நிலையையும், இராக்கின் 'அழிவாயுதங்கள்' பற்றிய உண்மை நிலைமையினையும் எண்ணிப் பாருங்கள்.
பிற நாடுகளைப்பற்றி அறியாமை எல்லா இடங்களிலும் உண்டு - நான் பள்ளியில் படித்த போது, "அமெரிக்காவில் பிச்சை எடுப்பவர்கூடக் காரில் வந்துதான் பிச்சை எடுப்பார், தெரியுமா உனக்கு" என்று ஆரம்பித்துப் பல 'உண்மைகளை' அறிந்திருந்தோம்! சாதாரண ஒரு அமெரிக்கர், இந்தியாவில் இன்னும் யானையில்தான் பள்ளிக்குச் செல்கிறார்கள் என்ற அளவுக்கு அறியாதவராக இருப்பது - அவரது உரிமை. இத்தகைய அறியாமையின் அடிப்படையில், தலைப்பாகை கட்டி தாடி வைத்திருப்பதால், சீக்கியர்களை ஒசாமா-பின்-லேடனின் ஆட்கள் என்று நினைத்து அவர்களை அடிக்கச் செல்வது கொடுமை (குறிப்பாக சீக்கியர்களின் வரலாறு தெரிந்தவர்களுக்குத் தெரியும்: இத்தகைய கோலத்தை அவர்கள் மேற்கொண்டதே அவர்களது அன்றைய எதிரிகளான முகம்மதியர்களுக்குத் தங்களை அடையாளம் காட்டும் வீரச் செய்கையாகத் தான்!).
தனி மனிதர்கள் அறியாமையினால் செய்யும் தவறுகள் கண்டிக்கத்தக்கவை; வருந்தத் தக்கவை. அவ்வளவே. ஆனால், அவர்களது வாக்குக்களை நம்பியிருக்கும் அரசியல்வாதிகள், அவ்வாறு நடப்பதும், அப்படிப்பட்ட ஆட்சியாளர்கள் கையில் உலக நாடுகளின் தலைவிதி இருப்பதும்தான் பிரச்சினை.
கடும் சோதனைகளுக்கும் துயரத்திற்கும் அமெரிக்கா உள்ளாகி இருக்கிறது என்பது உண்மை. அதே அளவு உண்மை, உலகின் பல நாடுகளையும், பன்னாட்டு அமைப்புகளையும் அதேபோல் சோதனைக்கு ஆளாக்கும் வலிமையும், அப்படிச் செய்யவேண்டும் என்ற எண்ணமும் அமெரிக்காவுக்கு இருக்கிறது என்பதே. இனிவரும் நாட்களிலாவது, தலைவர்கள் நெடுநோக்கும், பெருநோக்கும் கொண்டோராய் இருக்க வேண்டும். நம்புவோம்...
பி. அசோகன் |
|
|
More
செப்டம்பர் 11 - ஒரு மீள்பார்வை குடிசைக்குள் பாம்புடன் சகவாசம்
|
|
|
|
|
|
|