Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2003 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நூல் அறிமுகம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
Tamil Unicode / English Search
சிறப்புப் பார்வை
வளமான நாடாக்குவோம்
- |ஆகஸ்டு 2003|
Share:
இந்தியக் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்

(குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பேரவையின் (FeTNA) ஆண்டு விழாவைத் துவக்கிவைத்து ஜூலை 5, 2003 அன்று ஆற்றிய உரை)

சுதந்திர தின வாழ்த்துக்கள்!

வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் ஆண்டுவிழாவில் தமிழர்கள் மட்டுமின்றி எல்லா இந்தியர்களுடனும் தொடர்புகொள்வதில் அளவிலா மகிழ்ச்சியடைகிறேன்.

அதுவும் தமிழ்நாட்டுப் பள்ளிப் பிள்ளைகளுக்காக உலகப் புகழ்பெற்ற பேராசிரியர் டேவிட் கோல்ட்ஸ்டீனுடைய 'எந்திர உலகமும் அதற்கப்பாலும்' (Mechanical Universe and Beyond) என்ற அறிவியல் சொற்பொழிவைத் தமிழாக்கம் செய்யும் முயற்சியை இந்தத் தருணத்தில் துவக்கிவைப்பதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

இன்று நீங்கள் வாழ்ந்துவரும் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சுதந்திர தினம். இந்தச் சுதந்திர தினத்தில் உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

நாளும் கோளும்

ஏறக்குறைய 2000 தமிழர்கள் இங்கு குழுமியுள்ளீர்கள். உங்களிடம் இந்தத் தருணத்தில் சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நீங்கள் எல்லாரும் அமெரிக்காவில் பணியாற்றி வருகிறீர்கள். அதைப்போல நான் விஞ்ஞானியாக இந்தியாவில் பணியாற்றிவந்தேன். பிறகு அண்ணா பல்கலைக்கழத்தில் பேராசிரியராகப் பணியாற்றினேன். அங்கு ஏராளமான மாணவர்களைச் சந்தித்து உரையாற்றுவேன். ஒரு வாரத்தில் பத்து வகுப்புகள் எடுத்துவந்தேன். பிறகு என்னைக் குடியரசுத்தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். இந்த ஜனாதிபதி ஆகும் வைபவத்தை ஒருங்கிணைக்க ஒரு மந்திரியை நியமித்தார்கள். நான் சென்னையில் இருக்கும்போது அவர் டெல்லியிலிருந்து போன் செய்து சொன்னார் "கலாம்ஜி உங்கள் விருப்பம் என்ன? எந்த நல்ல நேரத்தில் இந்த நல்ல காரியத்தை செய்ய உத்தேசித்துள்ளீர்கள். உங்கள் astrologer யாருடனாவது தொடர்புகொண்டீர்களா?" என்று கேட்டார்.

நான் சொன்னேன் "பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 மணிநேரம் பிடிக்கிறது. அவ்வாறு சுற்றிக்கொண்டே சூரியனைச் சுற்றுகிறது. அவ்வாறு சூரியனைச் சுற்றிவர அதற்கு 365 நாள் பிடிக்கிறது. அதுபோல சூரியன் கேலக்ஸியைச் சுற்றுகிறது. ஆகவே 'time' என்பது இந்த நடைமுறையைக் குறிக்கும் ஒரு நிகழ்ச்சி. அவ்வாறு இந்த இரணடு நிகழ்ச்சியும் நடைபெறும்வரை எனக்கு எல்லா நேரமும் நல்ல நேரமே. டைம் ஒரு astronomical நிகழ்ச்சியே தவிர astrological நிகழ்ச்சி இல்லை என்றேன்." அந்த அமைச்சருக்கு ரொம்ப சந்தோஷம். இதைப் பத்திரிக்கைச் செய்தியாகக்கூடக் கொடுத்துவிட்டார். இவ்வாறாக நான் ஜூலை 25ம் தேதி 2002ம் ஆண்டு ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொண்டேன்.

ஆகவே பூமி சூரியனைச் சுற்றுவதுபோல சூரியன் கேலக்ஸியை சுற்றிவருகிறது. அதற்கு 250 மில்லியன் வருடம் ஆகிறது. இது போன்ற இயற்கை நிகழ்வுகளை எல்லாம் அறிய முயற்சிகள் தொடர்ந்து வருகின்றன. முதலில் நியூட்டன் புவியீர்ப்பு சக்தி மற்றும் இயக்க விதிகள் (Laws of motion) தத்துவங்களைச் சொன்னார். பிறகு வந்த மாக்ஸ்வெல் மின்காந்தத் தத்துவம் (electro magnetic theory) கொடுத்தார். அதன் பிறகு வந்த சுப்ரமணியம் சந்திரசேகர், 'சந்திரசேகர் வரம்பு' என்று சொல்லப்படுகிற தனது தத்துவத்தை உப்யோகப்படுத்தி நட்சத்திரங்களின் வாழ்நாள் என்ன என்று கண்டுபிடித்தார். அவர் கருத்துப்படி நமது சூரியன் 10 பில்லியன் ஆண்டுகள் ஒளிரும். ஏறக்குறைய சமகாலத்தவரான ஐன்ஸ்டீன் தனது ரிலேடிவிடி தியரி கொடுத்தார். அதன் பிறகு ஸ்டீபன் ஹாக்கிங் அவருடைய 'காலம் - ஒரு சுருக்கமான சரித்திரம்' என்ற தத்துவப் புத்தகத்தின்மூலம் இந்தக் கருத்துகள் அனைத்தையும் ஒன்றிணைத்து கேலக்ஸிகள் இயங்குவதை விளக்கிச் சொல்ல முயன்றார். அவர் கடைசியாகத் தம்முடைய தியரியில் இறைவனுக்கு ஒரு உருவம் கொடுத்து 'யூனி·பைட் தியரி' உருவாக்க முயற்சித்தார். இது ஒரு பெரிய துறை. இதை அறிவதின் மூலம் உலகம் எப்படி உருவானது என்றும், நாம் ஏன் பிறந்தோம்? எப்படிப் பிறந்தோம்? எப்படி வாழ்வோம் என்பதை அறிய வாய்ப்பு உள்ளது.

இந்த நேரத்தில் ஜனக மகாராஜாவின் அவையில் இருந்த அஷ்டவக்ரர் சொன்னது - அவர் ஒரு பெரிய ஞானி - என் நினைவுக்கு வருகிறது. அவர் சொன்னார் "நான் இந்தப் பிரபஞ்சம், பிரபஞ்சம் எனது பிரக்ஞை?" (I am the universe and universe is my conciousness) என்றார். இந்தத் தத்துவத்தைச் சேர்த்து முயற்சி செய்தால் ஒரு நல்ல யூனி·பைட் தியரி உருவாகுமோ என்ற கருத்து என் மனதில் உருவெடுத்துள்ளது.

படைத்தவன்

நான் கடந்த சில ஆண்டுகளில் ஏறக்குறைய 200,000 பள்ளிக் குழந்தைகளைச் சந்தித்தேன். அதுபோல சில மாதங்களுக்குமுன் மேகாலயா சென்றபோது அங்கு ஒரு பத்தாம் வகுப்பு மாணவி நான் கடவுளில் நம்பிக்கை கொண்டிருக்கிறேனா என்று என்னைக் கேட்டாள். நான் மாணவர்களைச் சந்தித்த இடம் ஒரு திறந்தவெளி அரங்கம். நான் மேலே வானத்தைப் பார்த்தேன். ஏராளமான நட்சத்திரங்கள் மின்னிக்கொண்டிருந்தன. நான் சொன்னேன் "பூமி சூரியனைச் சுற்றுகிறது. சூரியன் நட்சத்திர மண்டலத்தைச் (galaxy) சுற்றுகிறது. நாமிருக்கும் இந்த கேலக்ஸி பிரபஞ்சத்தில் ஒரு சின்ன மண்டலம். இதைப்போல ஏராளமான கேலக்ஸிகள் உள்ளன. நம்முடைய தாரகை மண்டலத்திலும் சூரியன் ஒரு சின்ன நட்சத்திரம். இதைவிடப் பெரிய பெரிய ஏராளமான நட்சத்திரங்கள் உள்ளன. நம்முடைய நட்சத்திரமான சூரியனைச் சுற்றியும் ஒன்பது கோள்கள் உள்ளன. அதில் செவ்வாயையும் வியாழனையும் ஒப்பிட்டு பார்த்தால் பூமி ஒரு அற்பமான கிரகம். மேலே ஆயிரமாயிரமாகத் தெரியும் அந்த நட்சத்திரங்களைப் பார் - இதையெல்லாம் ஒரு creator தான் படைக்கமுடியும். எனவே நான் ஆண்டவனை நம்புகிறேன்" என்றேன்.

இவ்வளவு அற்பமாக உள்ள இந்த பூமியிலும் 6 பில்லியன் மக்கள் உள்ளார்கள். நாம் நமக்கு கிடைத்திருக்கும் இந்த வாழ்வை நன்றாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதை எப்படிச் செய்ய முடியும்? இதை நினைக்கும்போது எனக்கு அவ்வையார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கவிதை நினைவுக்கு வருகிறது.

வானகம் திறந்து வழிவிடும்

அந்த அற்புதமான பாடலை எனது நண்பர் செல்வமூர்த்தியுடன் - நண்பர் ஒரு பெரிய விஞ்ஞானி - அவருடன் சேர்ந்து உங்களுக்குப் பாடிக்காட்ட விரும்புகிறேன்.

அரிது அரிது மானிடராதல் அரிது
அதனினும் அரிது கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல்
கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறந்தாலும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயத்த காலையும்
தானமும் தவமும் தான் செய்தல் அரிது
தானமும் தவமும் தான் செய்த காலையில்
வானகம் திறந்து வழிவிடுமே

இந்தப் பாடல் நன்றாக இருந்ததா?

இந்தத் தருணத்தில் என் மனதில் அந்த மகா மனிதர் வள்ளுவர் நினைவுக்கு வருகிறார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அவரது அற்புதமான நூலில் எனக்கு மிகவும் பிடித்தது ஒரு குறள். அந்தக் குறள்:

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய(து) உயர்வு

இதன் பொருள் என்ன? நீங்கள் எவ்வளவு உயர்வாகச் சிந்திக்கிறீர்களோ அவ்வளவு உயர்வை அடைவீர்கள். வெற்றி பெறுவீர்கள். இதுதான் அதன் செய்தி.
இரண்டு ஆசைகள்

நான் சமீபத்தில் சென்னை அருங்காட்சியகத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்டேன். அங்கு என்னுடைய இரண்டு ஆசைகளைச் சொன்னேன். அதை உங்களுக்கும் சொல்கிறேன்.
அந்த ஆசைகளில் ஒன்று திருவள்ளுவர் கைப்பட எழுதிய திருக்குறள் ஓலைச்சுவடியைக் காணவேண்டும் என்பது. அது முடியுமா? என் நண்பர்கள் பலர் அது சாத்தியமே இல்லை என்று சொல்கிறார்கள். அவ்வோலைச் சுவடிகள் கால வெள்ளத்திலே கரைந்து காற்றிலே கலந்திருக்கும் என்கிறார்கள். அது உண்மையா என்று நான் உங்களைக் கேட்கிறேன். எனக்கு என்னவோ தோன்றுகிறது அந்த மூலச்சுவடி இந்தியாவில் எங்காவது கிடைக்கும் என்று. அதைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இரண்டாவதாக, அந்த கவிஞன் திருக்குறளில் எங்குமே தான் யார், என்ன குலம், எந்த நாடு, எந்த மதம், என்று ஒரு இடத்திலும் சொல்லவில்லை. மனிதனைப் பிளவுபடுத்தும் மதத்தையோ, நாட்டையோ அல்லது இனத்தையோ குறித்துப் பாடவில்லை. அவர் எல்லாக் குறளும் எல்லாக் காலத்துக்கும் பொருந்துமாறு பாடினார்.

இந்த மனிதனில் அறிவின் ஒளியைப் பாருங்கள். அவன் எந்தச் சூழ்நிலையில் திருக்குறளை எழுதினான்? எந்தச் சூழ்நிலையில் வாழ்ந்தான்? இந்தக் காலத்தில் மனித சமூகம் பல சச்சரவுகளில், பல பிளவுகளில் வாழ்வதைக் காணும்போது வள்ளுவர் வாழ்ந்த காலத்தைப்பற்றிய ஆராய்ச்சி மிக முக்கியம். இந்த ஆராய்ச்சியால் நம் நாட்டில், ஏன், இந்த உலகில் ஒற்றுமையைக் கொண்டுவர முடியும் என்று நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இது பெரும்பணிதானே? இந்தியாவில் உள்ள சிந்தனையாளர்களும், அமெரிக்காவில் உள்ள உங்களைப் போன்ற தமிழ்ச் சங்கத்தினரும் சேர்ந்து இந்த முயற்சியைச் செய்ய வேண்டும்.

PURA

நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்? உங்களில் பலர் சிறுசிறு கிராமங்களில் இருந்து வந்திருப்பீர்கள். சிலர் நகரத்தின் அருகிலுள்ள கிராமங்களைப்பற்றி அறிந்திருப்பீர்கள். நம் நாடு முன்னேற்றமடைந்து வளமான நாடாக மாறவேண்டும் என்றால் கிராமங்கள் செழிப்படைய வேண்டும். அதற்கு ஒரு முயற்சியாக PURA (Providing Urban facilities in Rural Areas) என்ற திட்டம் உருவாகியுள்ளது. பேராசிரியர் இந்திரேசன் - அவர் ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியர் - ஐஐடி, சென்னையின் இயக்குநராக இருந்தவர். அவருடன் சேர்ந்து உருவாக்கியுள்ள இந்த திட்டத்தைப்பற்றி உங்களுக்குச் சொல்லவிரும்புகிறேன். அத்திட்டத்தின்படி கிராமங்களைச் செழிப்படையச் செய்ய அங்கு நல்ல connecitivity கொடுக்க வேண்டும். முதலில் நல்ல சாலைகள் அமைக்க வேண்டும். போக்குவரத்துக்கென பஸ்களும், கல்விக்கென பள்ளிக்கூடங்களும், வைத்தியத்திற்கென மருத்துவமனைகளும் அமைத்து physical connectivity கொடுக்க வேண்டும். அதன்பிறகு electronic connectivity, அதாவது தொலைபேசி, இணையம் போன்ற வசதிகள் கொடுக்கவேண்டும். இதன் மூலம் தொலை மருத்துவம், தொலைக்கல்வி, இ-கவர்னென்ஸ் போன்ற வசதிகள் ஏற்படும். நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் knowledge connectivity (அறிவுத் தொடர்பு) அளிக்க வேண்டும். அதாவது தொழிற்கல்வி வசதிகள் மற்றும் virtual classroom வசதிகள் செய்யவேண்டும். இவை அனைத்தும் கொடுத்தால் கிராமங்கள் செழிப்படையும். கிராமங்கள் செழிப்படைந்தால் மாநிலங்கள் செழிப்படையும். மாநிலங்கள் செழிப்படைந்தால் நம் நாடு வளமான நாடாகும். நாடுகள் செழிப்படைந்தால் உலகம் செழிப்படையும்.

இந்த முயற்சியில் நீங்களும் பங்காற்றலாம். ஒரு வளமான வலிமையான பாரதத்தை நாமெல்லாம் ஒன்றுசேர்ந்து உருவாக்க வேண்டும்.

இளம் உள்ளங்களில் பொறி ஏற்றுவோம்

இந்த நேரத்தில் எனக்கு நான் எழுதிய ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது. அதை நண்பர் செல்வமூர்த்தி இங்கு உங்களுக்கு பாடிக் காட்டுவார்.

வளமான நாடாக்குவோம் - இள
உள்ளங்கள் பொறி ஏற்றியே
வளமான நாடாக்குவோம் - இள
உள்ளங்கள் பொறி ஏற்றியே

அறிவாற்றலும் தொழில் மாட்சியும்
எங்கள் லட்சியம் ஈட்டிடும் ஆயுதமே
சிறு லட்சியந்தனில் சிந்தனை
வீணாவதை மாபெரும் குற்றமென்போம் (வளமான)

பொருள் வளமோடு நன்னெறியோடு
நம் பாரதம் உயர்ந்திட உழைத்திடுவோம்
கோடிகள் நூறாகிலும் இந்த
லட்சியச் சுடரினைப் பரப்பிடுவோம் (வளமான)

எனக்கு உங்களை எல்லாம் பார்த்துப் பேசியதில் மிக்க மகிழ்ச்சி பிறக்கிறது. நீங்கள் எல்லோரும் நன்றாக உழைத்து வாழ்வில் வெற்றியடைய இறைவன் உங்களுக்கெல்லாம் அருள் கொடுப்பானாக. இப்போது உங்களில் ஒருசிலர் தமிழிலேயே கேள்வி கேட்டால் நான் பதில் தரத் தயாராக இருக்கிறேன்.உங்கள் எல்லோருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
Share: 
© Copyright 2020 Tamilonline