பேயும் பிடித்துக் கொண்டதா.... குடிசைக்குள் பாம்புடன் சகவாசம்
|
|
|
அமெரிக்காவின் நரசிம்ம அவதாரம்
அடிபட்ட புலியை விட ஆபத்தான விலங்கு ஏதுமில்லை என்றார் ரட்யார்டு கிப்ளிங். விலங்குகளை வேட்டையாடி உண்ணும் புலிகள், தங்கள் பகுதியில் மனிதர்கள் நடமாடத் தொடங்கும்போது சிலநேரங்களில் ஆட்கொல்லிகளாகி விடுகின்றன. அன்று அந்த ஆட்கொல்லிகளைக் கண்டு நடுங்கிய ஊர் மக்களின் மிரட்சிக்கு, இன்று அமெரிக்காவின் ஒவ்வொரு நடவடிக்கையையும் எச்சரிக்கை யாகப் பார்த்துக் கவலை கொண்டிருக்கும் உலக நாடுகளின் மிரட்சி எள்ளளவும் குறைந்ததல்ல.
ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலைமை வேறு. செப்டம்பர் 11, 2001 அன்று அமெரிக்காவின் மேல் விழுந்த அடி உலகத்துக்கே வலித்தது. அமெரிக்காவின் அரசியல், படை, பணத் தலைமைப் பீடங்களின் மீதான தாக்குதல் என்று நினைத்த சிலர்மட்டுமே அமெரிக்காவின் துன்பத்தில் இன்பம் கண்டார்கள். ஆனால், ஏனையோர் மக்களாட்சி ஓங்கியிருக்கும் திறந்த நாடுகளின் சுதந்திரத் தன்மையைத் தீவிரவாதிகள் மக்களுக்கு எதிராகவே பயன்படுத்தியதைக் கண்டு அதிர்ந்தார்கள். மக்கள் நிறைந்திருந்த கட்டிடங்களை மக்கள் நிறைந்த விமானங் களையே ஆயுதமாகக் கொண்டு தாக்கிய கயமை கண்டு துடித்தார்கள். இது பண்பட்ட நாடுகளின் வாழ்க்கை முறைக்கும், கற்காலக் காட்டு மிராண்டிகளின் புண்படுத்தும் வாழ்க்கை முறைக்குமான போர் என்பதை உணர்ந்தார்கள். இந்தப் போரில் நடுநிலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை. பண்பட்ட நாடுகள் அமெரிக்காவின் தலைமையின் கீழ் அணிவகுத்தன.
இன்றோ வெகுண்டெழுந்த அமெரிக்கா, கம்பன் வர்ணித்தது போல், வாக்கினாலும், மனத்தாலும், அறிவாலும் அளக்க முடியாத நரசிம்மத் தோற்றம் கொண்டு அண்டம் கிழியச் சிரித்து நிற்கிறது. தேவர்களுக்காக அசுரர்களை அழித்த அந்த நரசிம்மத் தோற்றத்தைக் கண்டு, தேவர்களே அஞ்சி நடுங்கியது போல் இன்று பண்பட்ட நாடுகளும், அமெரிக்காவின் பெருஞ்சீற்றத் தோற்றத்தைக் கண்டு நடுங்கியே நிற்கிறார்கள். ஏன் இந்த அச்சம்?
கடல்களை அரணாகவும், பெருநில எல்லைகளில் நட்பு நாடுகளையும், உலகையே பல முறை பூண்டோடு அழிக்க வல்ல ஆயுதங்களையும் கொண்ட அமெரிக்கா முற்றுகை மனப்பான்மைக்கு (seige mindset) இரையானது. நெருக்கடி நிலைமையிலும் தனிமனித உரிமைகளைப் பேண வேண்டும் என்று உலகுக்கே பாடம் நடத்திக் கொண்டிருந்த அமெரிக்கா தானே 'பேட்ரியட் சட்டம்' என்ற பெயரில் தம் குடிமக்களின் உரிமைகளுக்கு வரம்பு வகுக்கத் தொடங்கியிருக்கிறது. அரசின் வரம்பு மீறலை எதிர்ப்பதுதான் தம் கடமை என்றிருந்த ஊடகங்களும், எதிர்க்கட்சிகளும்கூட தேசத் தலைவர்களை எதிர்ப்பது தேசபக்திக்கு உகந்ததல்ல என்று ஒத்தூதும் பரிதாப நிலைக்குத் தாழ்ந்திருக்கின்றன.
செப்டம்பர் 11 தாக்குதல் வெறும் கட்டிடங்களை மட்டும் தகர்க்கவில்லை. அமெரிக்காவின் அடிப்படை விழுமியங்களையே ஆட்டங்காண வைத்திருக்கிறது. உலகமே பொறாமை கொண்டிருந்த பொருளாதார வலிமையும், பகைவரும் அஞ்சும் பெரும் படைகளும், மலை அசைந்தாலும் அசையாத அரசியல் அமைப்புகளும் இந்த முற்றுகையால் தளர்ந்திருக்கின்றன. இது அமெரிக்கச் சமுதாயத்தின் தன்னம்பிக்கையையே தள்ளாட வைத்திருக்கிறது. ஏனென்றால், இது அமெரிக்க வரலாறு காணாத தாக்குதல். தனக்கு நிகரில்லாத வல்லரசாக இருந்தும், உலகம் கண்டிராத மாபெரும் அழிவாற்றல் கொண்டிருந்தும், ஒரு சில தீவிரவாதிகளின் கயமைத்தனமான தாக்குதல்களிலிருந்து தம் குடிமக்களைக் காப்பாற்ற முடியவில்லை என்பதுதான் அமெரிக்காவை அதிர வைத்திருக்கிறது. |
|
இருந்தாலும், இந்த மாபெரும் தாக்குதலுக்குப் பின்னும் சாதாரண அமெரிக்கன் காட்டும் பொறுமை பாராட்டத் தக்கது. இப்படி வேறெங்கு நடந்திருந்தாலும், அந்நாடே கொலைவெறி பிடித்து ஆடியிருக்கும். முஸ்லிம் எதிர்ப்புப் பேரணிகள், ஒசாமா கொடும்பாவி கொளுத்தல், வழிபாட்டுத் தலங்கள் இடிப்பு என்று நாடே குலுங்கியிருக்கும். தம்மைத் தாக்கிய எதிரிகளைக் கொண்டாடும் நாடுகளையும் மக்களையும் அணுவாயுதங்களைக் கொண்டு பூண்டோடு அழிக்க வேண்டும் என்று போர் முரசு கொட்டியிருக்கும். தம்மிடையே வாழும் சிறுபான்மையினத்தினரை வெறிக் கும்பல்கள் வேட்டையாடக் கிளம்பியிருக்கும். ஆனால், அமெரிக்காவிலோ ஆங்காங்கே ஒரு சில விஷமிகள் சிறுபான்மையினரைத் தாக்கிய போதும், உடனுக்குடன் சாதாரண மக்களும் அரசு அமைப்புகளும் சிறுபான்மையினரைப் பாதுகாக்க ஓடி வந்திருக்கிறார்கள். “வந்தாரை வாழவைக்கும்” பண்பாடு மீண்டும் மேலோங்கத் தொடங்கியிருக்கிறது. “கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே” என்பதற்கு இலக்கணமாய்த் திகழ்கிறார்கள் அமெரிக்கர்கள்.
முற்றுகை மனப்பான்மையில் உள்ள ஜனநாயக நாடுகள் தம் பாதுகாப்புக்காகத் தம் உரிமைகளைச் சற்று விட்டுக் கொடுப்பது வழக்கம்தான். அதனால்தான், 9/11 தீவிரவாதிகளோடு ஈராக்கின் சத்தாம் ஹ¤சைனுக்குத் தொடர்பு கற்பித்து அரசியல் தலைவர்கள் போர் முழக்கம் எழுப்பியபோது, மக்களும், எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும், தலைமையை எதிர்க்கவில்லை. சொல்லப் போனால், எதிர்ப்புக்குரல் கொடுத்தவர்களையும் தேசத் துரோகிகள் என்று பலர் தூற்றினார்கள். சி-ஸ்பேன் போன்ற அரசுத் தொலைக் காட்சிகளைத் தவிர ஏனைய ஊடகங்களில் ஜனநாயக ஆட்சிக்கு மிக முக்கியமான விமரிசனக் குரல்கள் வாயடைக்கப்பட்டன. போர் முடிந்த பின்னர் விமரிசனக் குரல்கள் மீண்டும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இரண்டு ஆண்டுகள் கழித்தும், இத்தனை உரிமைகளைக் கொடுத்த பின்னாலும், தீவிரவாதிகளைக் கட்டுக்குக் கொண்டுவருவதில் வெற்றி காணாமல், இராக்கில் எலி வேட்டையாடும் ஆட்சியைத் துணிந்து தட்டிக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர்கள் சிலர் இருக்கிறார்கள். அடக்கு முறைச் சட்டங்களைக் கொண்டு வரம்பு மீறிக்கொண்டிருந்த பாய்ண்டெக்ஸ்டர் பதவி விலக நேரிட்டிருக்கிறது. பேட்ரியட் சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் நகராட்சிகளும், நூலகங்களும் குரல் கொடுக்கத் தொடங்கியிருக்கின்றன.
ஒரு திறந்த சமூகத்தின் உரிமைகளை ஓட்டைகளாய்க் கருதித் தாக்க வருபவர்களைத் தடுக்க வேண்டிய அதே நேரத்தில் தம் அடிப்படை விழுமியங்களையும், மரபுகளையும் கட்டிக்காக்க வேண்டிய கடமையும் அமெரிக்காவிற்கு இருக்கிறது. திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளின் ஊழிக்கூத்திலும் சமநிலை இருக்கிறது. அந்தச் சமநிலையை அமெரிக்கச் சமுதாயமும் எட்டத் தொடங்கிவிட்டது. அமெரிக்கா தன்னை ஆட்கொல்லிப் புலியாகக் கருதவில்லை. மாறாக, அப்படிப்பட்ட கொலை வெறிபிடித்தவர்களை வேட்டையாடித் தன்னையும், உலகையும் காப்பாற்றும் பொறுப்புள்ள நாடாகவே தன்னைக் கருதுகிறது. இந்த வேட்டையில் அமெரிக்கா ஏனைய பண்பட்ட நாடுகளோடு சேர்ந்து செயலாற்றினால் தான் உலகை அமைதிப் பூங்காவாக்கும் முயற்சியில் வெற்றி காணமுடியும்.
மணி மு. மணிவண்ணன் |
|
|
More
பேயும் பிடித்துக் கொண்டதா.... குடிசைக்குள் பாம்புடன் சகவாசம்
|
|
|
|
|
|
|