Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | நூல் அறிமுகம் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சாதனையாளர் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல்
Tamil Unicode / English Search
சிறப்புப் பார்வை
புதிய பாரதப் பிரதமர்: டாக்டர் மன்மோகன் சிங்
- மதுரபாரதி|ஜூன் 2004|
Share:
அரசியலில் கால் நனைக்காத அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருக்கும் பாரதத்தில் அரசியலில் அழுக்குப் படாத கைகொண்ட மன்மோகன் சிங் புதிய பிரதமராக வருவது மிகப் பொருத்தமே. மேற்குப் பஞ்சாபின் காஹ் (Gah) என்ற இடத்தில் 71 ஆண்டுகளுக்குமுன் பிறந்த மன்மோகன் சிங்கின் பெற்றோர் குர்முக் சிங், அம்ரித் கவுர். மிகச் சாதாரணக் குடும்பம். ஆனால் மன்மோகன் சாதாரணமானவரல்ல. எப்போதுமே வகுப்பில் முதல் நிலைதான். பொருளாதார முதுகலைப் பட்டவகுப்பில் முதலாவதாக வந்த மன்மோகனைப் பஞ்சாப் பல்கலைக் கழகம் நிதியுதவி செய்து லண்டனுக்கு மேற் படிப்புக்கு அனுப்பியது.

அதற்குக் காரணம் அந்நாளில் புகழ் பெற்றிருந்த பொருளாதார வல்லுநர் எஸ்.பி. ரங்கநேகரின் வற்புறுத்தல்தான். ஒரு பகுதி நிதியைப் பஞ்சாப் பல்கலைக்கழகம் தர, மீதியைக் கடனாகப் பெற்று கேம்பிரிட்ஜ் சென்ற மன்மோகன் பொருளாதார ஆனர்ஸ் படிப்புக்கு இணையான Economics Tripos என்ற தகுதிக்கான கல்வியை இரண்டே ஆண்டுகளில் முடித்தார். 1955-இலும் மீண்டும் 1957-இலும் செயிண்ட் ஜான் கல்லூரியின் 'Wright's Prize for distinguished performance' இவருடையதே! DPhil (Oxford), DLitt (Honoris Casusa) ஆகியவற்றையும் பெற்றார்.

அப்போதைய நிதி அமைச்சராக இருந்த டி.டி. கிருஷ்ணமாச்சாரி இவருடைய ஆற்றலைப் பற்றிக் கேள்விப்பட்டு, அரசுப் பதவி தர முன்வந்தார். ஆனால் லண்டன் கல்விக்குப் பகுதி நிதி அளித்திருந்த பஞ்சாப் பல்கலைக்கழகம் முன்னுரிமை கொண்டாட, அங்கே விரிவுரையாளராகச் சேர்ந்தார். பின்னாலும் அரசுப் பணிகள் இவருக்கு வந்தபோதும் "அதில் சுதந்திரச் சிந்தனைக்கும் செயல்பாட்டுக்கும் வாய்ப்பு இருக்காது" என்று கருதி வந்திருக்கிறார். இடையில் நிகழ்ந்த ஒரு சம்பவம் இதை வலியுறுத்தியது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் வற்புறுத்தலால் வர்த்தக அமைச்சரகத்தில் வெளிநாட்டு வணிக ஆலோசகராகப் பொறுப்பேற்றவர், விரைவிலேயே அங்கிருக்கும் மேலதிகாரி களுடன் கருத்து மாறுதல் ஏற்பட, பணியைத் துறந்தார்.

எனவே 1971-ல் மத்திய நிதியமைச்சகத்தில் பொருளாதார ஆலோசகராகப் பொறுப்பேற்கும்வரை அவர் கல்விப் பணியிலேயே தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அடுத்த ஆண்டே தலைமைப் பொருளாதார ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டார். இந்த நியமனங்களின் உச்சமாக 1982-இல் ரிசர்வ் வங்கியின் கவர்னராகப் பொறுப்பேற்றதுதான். இன்றைக்குச் சோனியாவுடன் ஆதரவோடு இவர் பதவிக்கு வந்திருந்தாலும் முதலில் ராஜீவுடனான உறவு கொஞ்சம் நெருடலானதாகத்தான் இருந்தது. ராஜீவ் காந்தி பிரதமரானபோது "திட்டக்கமிஷன் போன்ற அமைப்புக்களுக்குள் கட்சிவாத அரசியல் புகக்கூடாது" என்று கூறி இவர் பதவி துறந்தார். பின்னர் வந்த வி.பி. சிங் இவரை மீண்டும் அழைத்தார். ஒரு தீர்மானத்துக்கு வருவதற்குள் ஆட்சியே கவிழ்ந்து போயிற்று. அடுத்து வந்த சந்திரசேகர் அழைத்து இவருக்குப் பொருளாதார ஆலோசகர் பதவி கொடுத்ததில் அப்போதைய ராஜீவுக்குக் கடுப்புத்தான்.

எளிய குடும்பத்தில் பிறந்த இவருக்கு எப்போதுமே ஏழைகள் மீது பரிவு உண்டு. "வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளை, சர்வதேச நிதி நிறுவனம், உலகவங்கி போன்றவை மூலமாக அடிமைகொள்ளப் பார்க்கின்றன" என்று மன்மோகன் சிங் கண்டித்ததுண்டு. ஆனால் பின்னர் 1991-இல் அவர் நிதியமைச்சர் ஆனபோது பன்னாட்டு நிதி நிறுவனத்தின் (IMF) விருப்பத்துக்கிணங்க ரூபாயின் மதிப்பைக் குறைத்து, உலகமயமாக்கலுக்கான கதவுகளைத் திறந்துவிட்டது இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ப. சிதம்பரம், யஷ்வந்த் சின்ஹா ஆகியோருக்கு இவர்தான் முன்னோடி.
காங்கிரஸின் தலைமையிலான தேசிய முற்போக்குக் கூட்டணியின் அரசை நடத்திச் செல்லப் போகிறார் மன்மோகன் சிங். எல்லாக் கட்சிகளுக்கும் ஏற்பான குறைந்தபட்ச பொதுச் செயல்திட்டத்தை வகுப்பதில் இவர் மணிசங்கர் ஐயர், ஜெயராம் ரமேஷ் ஆகியோருடன் இணைந்து செயல்படுகிறார். "மனிதாபிமானத்துடன் கூடிய பொருளாதார தாராளமயமாக்கல் எங்களது கொள்கை" என்று இவர் சொன்னபோதும் இடதுசாரிக் கட்சிகளுக்கு இவர்மேல் கொஞ்சம் சந்தேகம் உண்டு. ஆனாலும் இவரது நேர்மை மற்றும் நாணயம் இவற்றை யாரும் சந்தேகிப்பதில்லை. ஆனால் சோனியாவின் நிழலில் சுதந்திர சிந்தனை தொடருமா என்பதுதான் பெரிய கேள்வி.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமராகப் பதவி ஏற்றிருக்கும் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களைத் 'தென்றல்' பல்லாயிரக்கணக்கான அமெரிக்கத் தமிழர்களின் சார்பாக வரவேற்கிறது.

மதுரபாரதி
Share: 


© Copyright 2020 Tamilonline