Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2021 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | அஞ்சலி | சிறுகதை | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | வாசகர்கடிதம் | முன்னோடி | ஹரிமொழி | கவிதைபந்தல் | அன்புள்ள சிநேகிதியே
Tamil Unicode / English Search
சிறுகதை
துளசி
அஞ்சு பைசா மிட்டாய்
- லக்ஷ்மி சங்கர்|அக்டோபர் 2021|
Share:
நான் அப்பொழுது பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். சாரங்கபாணி சார்தான் எங்கள் அல்ஜீப்ரா வாத்தியார். ஒருநாள் ஒரு கணக்கைக் கரும்பலகையில் எழுதினார். "இத எல்லாரும் ஒரு தாளுல போட்டுட்டுப் பக்கத்துல இருக்கறவங்ககிட்ட கொடுங்க. அவங்க சரி பார்ப்பாங்க. அஞ்சு நிமிஷம் டைம்" என்றார்.

அப்படியே செய்தோம். "இப்ப நான் அதுக்கு விடையைச் சொல்றேன், சரியா தப்பானு பாருங்க" அவர் குரல் ஒலித்தது. என் விடை தப்பு. அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. கணக்கில் நான் ஒன்றும் புலியில்லை.

ஆனால் அடுத்து அவர் ஒரு குண்டை வீசினார். "யாரெல்லாம் தப்பாப் போட்டீங்களோ, அவங்கெல்லாரும் சரியாப் போட்டவங்களுக்கு ஒரு பாரி மிட்டாய் அடுத்த அல்ஜீப்ரா வகுப்புல கொணாந்து கொடுக்கணும்." அது எப்படி என்று தெரியவில்லை, வகுப்பில் பாதிப்பேர் சரியாகவும், பாதிப்பேர் தப்பாகவும் போட்டிருந்தோம். அவரே யார், யாருக்கு மிட்டாய் கொடுக்க வேண்டுமென்று சொன்னார். நான் கொடுக்க வேண்டியது சிவராமகிருஷ்ணனுக்கு. (அந்தக் காலத்தில் இந்த மாதிரி நீளப் பெயர்களெல்லாம் இருந்தன).

வாரத்தில் மூன்று நாள் அல்ஜீப்ரா வகுப்பு இருக்கும். அன்று திங்கள். புதனன்று மிட்டாய் எடுத்துப் போகவேண்டும். பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தேன். டிஃபன் சாப்பிட்டேன். தயங்கித் தயங்கி அம்மாவிடம் விஷயத்தைச் சொன்னேன். பச்சை அல்லது சிவப்புத் தாள் சுற்றி வரும் பாரி மிட்டாயின் விலை அப்பொழுது ஐந்து பைசா. சீறினாள் அம்மா.

"வெக்கமால்ல ஒனக்கு? கணக்கச் சரியாப் போடத் தெரியல்ல. அஞ்சு பைசா வேணுமாம், அஞ்சு பைசா! இங்க காசென்ன கொட்டியா கெடக்கு? சீனாவுக்குக் (என் அண்ணா) காலேஜுக்குப் பணம் அனுப்பணும். ஒன்ன வேற கரையேத்தணும். எங்காத்துல தரமாட்டேன்னு சொல்லிட்டானு சொல்லு. அதான் ஒனக்குப் பனிஷ்மெண்ட்."

என் சப்த நாடியும் ஒடுங்கியது. எப்படி அடுத்த அல்ஜீப்ரா வகுப்புக்குப் போவது?

அப்பாவிடம் கேட்க முடியாது. அப்பா ஒண்ணாந் தேதி வேலையிலிருந்து வந்ததும், சம்பளக் கவரை அம்மாவிடம் கொடுப்பார். அம்மா அதிலிருந்து ஒரு ரூபாய் எடுத்து, முருகனுக்கு என்று சொல்லி ஸ்வாமி ரூமில் இருந்த உண்டியலில் போட்டுவிட்டு, மீதியை காட்ரெஜ் பீரோவில் வைத்துப் பூட்டிவிடுவாள். சாவிக்கொத்து எப்போதும் அவள் இடுப்பிலிருந்து தொங்கும். அம்மாதான் எங்கள் வீட்டுக் கஜானாவின் அதிகாரி. எதாக இருந்தாலும், அப்பா, "உங்கம்மா கிட்டக் கேட்டுக்கோ" என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார்.

வயிற்றில் புளியைக் கரைத்தது. இரவு, "எனக்குப் பசிக்கல" என்று சொல்லிவிட்டுச் சாப்பிடாமல் படுத்துவிட்டேன்.

அடுத்த நாள் காலையில் "தலவலிக்கறது, ஜொரம் வராப்ல இருக்கு" என்று சொல்லிப் பள்ளிக்கூடம் போகாமல் இருந்தேன். அம்மா காலையில் மடி என்பதால் என்னைத் தொட்டுப் பார்க்கவில்லை. ஒன்பது மணிக்கு, "நேத்திக்கே, ராத்திரி நீ சாப்பிடல. இப்ப ஒரு வாய் ரசஞ்சாதம் சாப்டுட்டுச் சாரிடான் ஒண்ணு முழுங்கு" என்றாள். எனக்கும் பசி வயிற்றைக் கிள்ளியது. நிஜமாகவே தலை வலித்தது. சாப்பிட்டுவிட்டு, மாத்திரையை முழுங்கிவிட்டு உட்கார்ந்தேன். மன உளைச்சல்.

"அம்மா, தாயே! பிச்ச போடுங்கம்மா. கண்ணில்லாத கபோதிம்மா" வாசலில் பிச்சைக்காரன் குரல் கொடுத்தான். அம்மா "டீ உமா! அந்தக் குருட்டுப் பிச்சக்காரன் வந்திருக்காம் பாரு. நா கைக்காரியமா இருக்கேன். ஒரு பிடி அரிசி எடுத்துப் போடு" என்று குரல் கொடுத்தாள் .நான் அரிசி டிரம்மிலிருந்து ஒரு பிடி எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தேன். அவனுடைய கப்பரையில் கொஞ்சம் அரிசி இருந்தது. அதன்மேல் ஒரு பைசா, இரண்டு பைசா நாணயங்கள் வெய்யிலில் பளபளத்துக் கொண்டிருந்தன. அவற்றுக்கெல்லாம் மதிப்பிருந்தது அப்போது.

அரிசி போடும் சாக்கில், ஐந்து பைசா பொறுக்கிக் கொள்ளலாமா என்று நினைத்தேன். கை நடுங்கியது. அவன் கப்பரையில் கை இடித்து அதிர்ந்தது. "நெதானமா போடு சின்னத்தாயி" என்றான் அவன். அதைக் கேட்டு என் மனம் படபடத்தது. பூ விழுந்தது போலிருக்கும் இவன் கண்களில் கொஞ்சம் பார்வை இருக்கும் போலிருக்கிறது. இல்லாவிட்டால், பிச்சை போடுவது ஒரு சிறுபெண் என்று அவனுக்கு எப்படித் தெரிந்தது? நல்லவேளை, நான் திருடவில்லை என்று சந்தோஷப்பட்டேன்.

பூஜையை முடித்துவிட்டுச் சாப்பிட்டுவிட்டு வந்த அம்மா, என்னைத் தொட்டுப்பார்த்தாள். "ஜொரம் ஒண்ணும் இல்ல. ராத்திரி சாப்டல நீ. அதான் தலய வலிச்சிருக்கு. சைக்கிள்ல காத்தில்லயாம். அப்பா சொன்னார், இன்னிக்குப் பஸ்லதான் ஆஃபீஸ் போய்ருக்கார். நீ வண்டியத் தள்ளிண்டு போய், ஆலமரத்தடி சைக்கிள் கடைல காத்தடிச்சுண்டு வந்துடு". பத்து பைசா எடுத்து நீட்டினாள், ஒரு சக்கரத்திற்குக் காற்றடிக்க ஐந்து பைசா.

சரி என்று எழுந்தேன். இரண்டு வீலிலும் காற்று குறைவாக இருந்தது. காற்றடித்து விட்டேன் என்று பொய் சொல்லி, ஐந்து பைசா எடுத்துக் கொள்ளலாமா என்று நினைத்தேன். அந்த மாதிரி ஒருமுறை என் அண்ணா சீனா செய்தான். அடுத்த நாள் அப்பாவால் வண்டியை மிதிக்கமுடியவில்லை.

"எங்கிட்டக் காத்தடிக்கிறேன்னு காசு வாங்கிண்டு போனியே? திருட்டுக் கழுத, பத்துப் பைசாவ என்னடா செஞ்சே? காத்தடிச்சுட்டேன்னு வந்து பொய் சொல்றதுக்கு ஒனக்கு என்ன நெஞ்சழுத்தம் இருக்கணும்?" அம்மா விசிறிக்காம்பால் விளாசினாள் சீனாவை. அதிலிருந்து சைக்கிளுக்கு யாராவது காற்றடித்துவிட்டு வரும்போதெல்லாம் சக்கரத்தைத் தொட்டு, அது விண்ணென்றிருக்கிறதா என்று செக் செய்ய ஆரம்பித்திருந்தாள்.

நான் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு நடந்தேன். நாலாவது வீட்டுப் பாட்டி வாசலில் உட்கார்ந்து அரிசி பொறுக்கிக் கொண்டிருந்தாள். பாட்டி ஒருமுறை என்னை மில்லில் மாவு அரைத்துக்கொண்டு வரமுடியுமா என்று கேட்டாள். அரவைக்கூலி போக பாக்கி ஐந்து பைசா இருந்தது. "நீயே வெச்சுக்கோ" என்று சொன்னாள். நான் வீட்டுக்கு வந்து அம்மாவிடம் சொன்னேன். அம்மா என்னைத் தரதரவென்று பாட்டி வீட்டுக்கு இழுத்துப் போனாள். "இத பாருங்கோ மாமி! உமாவுக்குக் காசு கீசெல்லாம் கொடுக்காதீங்கோ. கொழந்தேள் பெரியவாளுக்கு ஒத்தாசையா இருக்கணும். பிரதிபலன எதிர்பாக்கக்கூடாது" என்று சொல்லி என்னை ஐந்து பைசாவைத் திருப்பித் தர வைத்தாள்.

இன்று எனக்கு ஒரு நப்பாசை. போன தடவை மாதிரி அந்தப் பாட்டி காசு கொடுத்தால், அதை அம்மாவிடம் காண்பிக்காமல் வைத்துக்கொள்ளலாமென்று.

"பாட்டி, மில்லுல மாவு, கீவு ஏதாவது அரைக்கணுமா? " என்றேன். "நீ நன்னாருக்கணும்டி கொழந்தே. நா நேத்திக்கு சாயரட்ச வேளல மில்லுல அரிசி அரெக்கப் போனேன். பில்லப் போட்டுக் காசையும் கொடுத்துட்டேன். பட்டுனு கரண்ட் போய்டுத்து. கரண்ட் வந்தவொடனே அரச்சு வெக்கறேன்னு சொன்னான். சித்த இரு. பில்ல எடுத்துண்டு வரேன். அவன் அரச்சுட்டானானு பாரு. அரச்சிருந்தா எடுத்துண்டு வா" என்றாள்.

எனக்குச் சப்பென்றாகி விட்டது. வேலையத்த வேலை என்று மனதில் கறுவிக்கொண்டு, பில்லை வாங்கிக்கொண்டு நடந்தேன்.

சைக்கிளில் காற்றடித்தல், மாவு மில் விசிட் இரண்டும் முடிந்தன. அம்மா மறக்காமல் வீல்களைச் செக் செய்தாள்.

மத்தியானம் அந்த வாரத்திய பத்திரிகைகளைப் படித்து முடித்தேன். ஐந்து மணியானவுடன் "அம்மா ஸ்டெல்லாவாத்துக்குப் போய் ஹோம் ஒர்க் என்னன்னு கேட்டுண்டு வரேன்" என்று சொல்லிவிட்டுத் தோழி வீட்டுக்கு வந்தேன்.

ஸ்டெல்லா சரியான விடை போட்டவள். அவளுக்கு என் சங்கடமில்லை. உடம்பு சரியில்லாததால் பள்ளிக்கு வந்திருக்கவில்லை என்று அவளிடம் சொன்னேன்.

நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது ஸ்டெல்லாவின் அம்மா "ஸ்டெல்லா! அலமாரில, ரெண்டாவது தட்டுல ஒரு ரூபா முப்பத்தஞ்சு காசு வெச்சுருக்கேன். இஸ்திரிப் பையன் வந்தாத் துணிய வாங்கிக்கிட்டுக் குடு. நா மார்க்கெட் வரைக்கும் போய்ட்டு வரேன்" என்று சொல்லிவிட்டுப் போனார்.

என் மனம் துள்ளியது. தண்ணீர் வேண்டுமென்று கேட்டு ஸ்டெல்லாவைச் சமயலறைக்குள் அனுப்பிவிட்டால், சரக்கென்று எழுந்து, இஸ்திரி பணத்திலிருந்து ஐந்து பைசா எடுத்துக்கொள்ளலாம் என்று திட்டமிட்டேன். பத்து நிமிடம் கழித்து, ஸ்டெல்லாவைத் தண்ணீர் வேண்டுமென்று கேட்டு உள்ளே அனுப்பினேன். சடக்கென்று எழுந்து அலமாரி அருகில் போனேன். ஸ்டெல்லாவின் அம்மா ஒரு ரூபாய் நோட்டு பறக்காமல் இருப்பதற்காக ஒரு ஃபோட்டோ ஃப்ரேம் போலிருந்த ஒன்றை அதன்மேல் வைத்திருந்தார். அதில் ஃபோட்டோ இல்லை. "நம் தேவன் எப்பொழுதும் நம்முடன் இருக்கிறார். அவர் ஒவ்வொரு வினாடியும் நம்மைக் கவனித்துக் கொண்டிருக்கிறார். நமக்கு யாரும் இல்லை என்றெண்ணி மனம் தளராதீர்" என்று எழுதியிருந்தது. என் உடல் நடுங்கியது. ஜீசஸ் என்னைப் பார்ப்பதுபோல் தோன்றியது. காசை எடுக்கவில்லை. இதற்குள் ஸ்டெல்லா தண்ணீருடன் வந்துவிட்டாள்.

"உமா, அங்க என்ன பண்ற?" என்றாள். நான், "ஸ்டெல்லா, நீயும் ஒங்கம்மாவும் பீச்ல ஒக்காந்திருக்கற ஃபோட்டோவ பாத்துக்கிட்டிருக்கேன். நீ அதுல நல்லா இருக்க" என்றேன். அவள் முகம் மலர்ந்தது.

வீட்டுக்கு வந்து ஹோம் ஒர்க் செய்து முடித்தேன். அப்பா வேலையிலிருந்து திரும்பியிருந்தார். அம்மா சாப்பிட அழைத்தாள். அப்பா, "என்ன உமா? கார்த்தால ஜொரம் வராப்புல இருக்குன்னியே, இப்ப தேவலாமா?" என்றார். அம்மா, "அவளுக்கு ஒடம்புக்கு ஒரு கேடுமில்ல. அவளத் தெரியாதா எனக்கு. மனசுக்குத்தான் கேடு. அவ கைல அஞ்சு பைசா கொடுத்தா எல்லாஞ் சரியாய்டும்" என்றாள். அப்பா புரியாமல் விழித்தார்.

நான் சாரங்கபாணி சார் வகுப்பில் நடந்ததைச் சொன்னேன். அம்மா காசு கொடுக்க மறுத்ததையும் சொன்னேன். அப்பா சிரித்துக்கொண்டே "சரி. எவ்ளோ நாள்தான் நீ ஸ்கூலுக்குப் போகாம இருக்க முடியும்?" என்று சொல்லி, பாக்கெட்டிலிருந்து ஐந்து பைசா எடுத்துக்கொடுத்தார். "கொழந்தேளச் செல்லங் கொடுத்தே கெடுங்கோ" என்று முனகிவிட்டு அம்மா பரிமாற ஆரம்பித்தாள்.

மறுநாள் பள்ளிக்குப் போகும் வழியில் பெட்டிக் கடையில் மிட்டாய் வாங்கிக்கொண்டு போய் அல்ஜீப்ரா வகுப்பில் சிவராமகிருஷ்ணனிடம் கொடுத்தேன். சாரங்கபாணி சாரே மிட்டாய் விஷயத்தை மறந்து விட்டிருந்தார். மிட்டாய் கொண்டு வரவேண்டியவர்களில் சிலர், "மறந்து விட்டேன். கொண்டுவரவில்லை" என்றார்கள். மிட்டாய் கிடைத்தவர்களில் சிலர், "தாளைப் பிரித்தால் அதில் கல், மண்கட்டி, பஞ்சுதான் இருக்கு" என்றார்கள். சார் ஒன்றும் சொல்லவில்லை. "இதுக்கெல்லாம் நா பஞ்சாயத்துப் பாக்க முடியாது" என்று சொல்லிவிட்டு மேலே பாடம் நடத்தத் தொடங்கிவிட்டார்.

எனக்கு ஏன் இதுமாதிரி செய்யத் தோணவில்லை என்று என்னையே நொந்துகொண்டேன்.

வாழ்க்கைச் சக்கரம் உருண்டோட, நான் திருமணமாகிக் கொல்கத்தாவில் வசிக்கத் தொடங்கினேன்.

ஒருமுறை லேக் மார்க்கெட்டில் கறிகாய் வாங்கிக் கொண்டிருந்த போது சிவராமகிருஷ்ணனைப் பார்த்தேன். போன மாதந்தான் கொல்கத்தாவுக்கு மாற்றலாகி வந்ததாகவும், கோல்பார்க்கில் குடியிருப்பதாகவும் சொன்னான். அருகிலிருந்த பெண்ணை மனைவி என்று அறிமுகம் செய்தான்.

பேச்சுக்கிடையில் அவன் மனைவி, "சின்ன வயசிலே இவர் எப்படி?" என்றாள். நான், "சிவா கணக்கிலே புலி. ஒரு தடவ கணக்கத் தப்பாப் போட்டுட்டுச் சரியாப் போட்டிருந்த சிவாவுக்கு மிட்டாய் வாங்கிக் கொடுக்கும்படி ஆய்டுத்து. ஒனக்கு ஞாபகம் இருக்கா?" அவனைக் கேட்டேன். அவன் அதைச் சுத்தமாக மறந்துவிட்டிருந்தான். வீட்டுக்கு அவசியம் வரவேண்டுமென்று சொல்லிவிட்டு, விலாசம் கொடுத்துவிட்டுப் போனார்கள்.

எனக்கு உடல் படபடத்தது. ஐந்து பைசாவுக்காக நான் பட்ட பாடென்ன? இவன் மறந்துவிட்டேன் என்கிறானே?

வீட்டிற்கு வந்தேன். கணவரிடம் இதைப்பற்றிச் சொன்னேன். "உமா, சின்ன வயசுல ஒனக்கு அது ஒரு ட்ரௌமா. நீ மறக்கல. நீ நூறு சதவிகிதம் ஆனஸ்ட் பேர்வழி. மிட்டாய்னு சொல்லிக் கல்லையும் மண்ணையும் கட்டிகொடுத்தோ கொண்டுவர மறந்து போச்சுன்னு சொல்லியோ ஏமாத்த நெனக்கல. காசத் திருடவுமில்ல. ஒங்கம்மாவும் நல்லவதான். கண்டிப்பா இருந்து கொழந்தெங்கள வளர்க்கணும்னு நெனச்சிருக்கா. என்ன சொல்றது? நீ எப்பவும் போல நேர்மையாவே, நீயாவே இரு, என்ன? எல்லாம் அப்பபோல ஒர்க்கவுட் ஆய்டும். பி பாஸிடிவ்" என்றார்.
லக்ஷ்மி சங்கர்,
நார்கிராஸ், அட்லாண்டா
More

துளசி
Share: 
© Copyright 2020 Tamilonline