Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2021 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | அஞ்சலி | சிறுகதை | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | வாசகர்கடிதம் | ஹரிமொழி | சாதனையாளர்
Tamil Unicode / English Search
சிறுகதை
பெருங்காயம்
ஆஷ்ட்டு குட்டி
- சிவா துரை|நவம்பர் 2021|
Share:
மாலைநேர ஜாகிங் முடித்து, உடலில் வழிந்த வியர்வையோடு, சாக்ஸைக் கழட்டிக்கொண்டே, தொலைக்காட்சியில் ஓடிய கருத்தரங்க நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்க ஆரம்பித்தான் சோமு. கொரோனாவால் பாதிக்கப்பட்டு, உயிருக்குப் போராடி, மீண்டு வந்த பாட்டி ஒருத்தியின் கையில் இருந்த நகப்பூச்சைக் குறித்து, நெறியாளர் புன்முறுவலுடன் கேட்டுக் கொண்டிருந்தார். ஓடிவரும்போது ஏதோ செடி லேசாகக் கிழித்திருக்க வேண்டும் என்று நினைத்தபடி தன் காலைத் தடவி விட்டுக் கொண்டான், லேசாகச் சிவந்திருந்தது.

"என்ன ரொம்ப தூரம் ஓடிட்ட போலிருக்கு இன்னிக்கு" என்று நக்கலுடன் கேட்டபடி வந்தாள் பிரியா. சோமுவின் தங்கை. கல்லூரி முடித்துவிட்டாள், வேலைக்கு முயன்று கொண்டிருக்கிறாள்.

பதிலுக்குத் தலையசைத்து, புன்னகைத்தான் சோமு என்கிற சோமாஸ்கந்தன். வீட்டில் சோமு, வெளியில் இப்போதெல்லாம் சோம்.

தங்கள் கொரோனா அனுபவத்தை ஒவ்வொருவரும் பகிர்ந்து கொண்டதைப் பார்த்ததும், சோமுவின் மனதில் ஒரு வெறுமையும், சோகமும் அப்பிக்கொண்டது. நிகழ்ச்சி முடிந்ததும், உடையைக் களைந்து ஷவரில் நின்றான். மிதமான சூட்டில் தண்ணீர் விழ ஆரம்பித்தது. அந்தப் பாட்டி தன்னிடம் நகப்பூச்சு இல்லை என்பதால் பேத்தியிடம் இருந்ததைப் போட்டுக்கொண்டு வந்தேன் என்றாள். பேத்தியின் நகப்பூச்சு என்று சொல்லும்போது கூச்சப்படவில்லை, பெருமைதான் தெரிந்தது. அது ஏன் அவளும் தனம் அத்தை போலவே இருக்கிறாள் என்று நினைத்தான்.

குளித்து முடித்து, கொஞ்சம் தொளதொள என்றிருந்த பெர்முடாவை போட்டுக்கொண்டு, அதற்குத் தோதாக ஒரு மஞ்சள்நிறச் சட்டையைப் போட்டுக்கொண்டான். தனம் அத்தை மீண்டும் அவன் நினைவில் வந்தாள்.

"சோமு, எதிர்வீட்டு ரமேஷைப் பார்த்தியா ஆசை அஜீத் மாதிரியே டிரெஸ் பண்ணிகிட்டு கிளம்பிட்டான், ரொம்ப ஸ்மார்ட்டா இருக்கான் இன்னிக்கு. சரி, சரி இந்தா கத்திரிக்கா கறி, உங்கம்மா சாம்பாரோட சேர்த்துச் சாப்பிடு. உனக்கு மட்டும்தான்" என்று சொல்லிவிட்டு என் பதிலுக்கோ அம்மாவின் பதிலுக்கோகூடக் காத்திராமல் விரைவாள் தனம் அத்தை. பக்கத்து வீடு என்பதால் வருவதும் தெரியாது, போவதும் தெரியாது. சின்னக் கிண்ணத்தில், கறியோ, குழம்போ, இனிப்போ எதுவாக இருந்தாலும், வாரத்தில் இருமுறையாவது அத்தையின் ரன்னிங் கமெண்டரியுடன் வந்துவிடும். மற்ற நாட்களில் அத்தை வீட்டில் மெல்லிய கவுச்சி வாசம் வீசும், அதனால் அதெல்லாம் வராது.

இன்னொரு சமயம், "போன வருஷம் வேர்ல்ட் கப் மேட்சில", என்று சோமு ஆரம்பித்தால்

"அதெல்லாம் என்ன, நீ 1983 உலகக்கோப்பை மேட்சைப் பார்த்திருக்கணும், தெருவே நம்ப வீட்லதான் இருக்கும். சாப்பாடு, காப்பி, நொறுக்குத் தீனி, அதுலயும் பஞ்சு இருக்கான் பாருன்னு" சுவரசியம் குறையாமல், சச்சின் அடிக்கும் சதத்துக்கு இணையாக நடந்தவற்றைச் சொல்லும்போது, கேட்பதற்கு அலுப்பே தட்டாது.

"கண்ணா சாப்பிட வர்றியா?" அம்மாவின் கணீர்க் குரலில் சடாரென மீண்டான்.

சோமுவின் அம்மா! கால் நூற்றாண்டுக்கும் மேலாக, பலமுறை இடமாற்றங்களைச் சந்தித்தபடி அரசாங்க உத்தியோகத்தில் இருந்தவள். பாசத்தைப் பந்தியில் காட்டாமல் தேவையான அளவு மட்டுமே பரிமாறுவாள். வீட்டிலிருக்கும்போது உணவைச் சமைத்தவுடன், சூடு ஆறுவதற்குமுன் உண்ணவேண்டும் என்பாள். உணவை வீணடிப்பதும் அவளுக்குச் சுத்தமாகப் பிடிக்காது.

அதனால் தாமதிக்காமல், "வரேம்மா" என்று சொல்லிக் கொண்டே வந்தான்.

"ரவா பொங்கலா?"

"ஆமாண்டா, சாப்பிட்டுப் பாரு."

நன்றாகவே இருந்தது. மூன்று கரண்டி சாம்பாரும், பின்னர் ஒரு ஏப்பமும் சோமுவை எழுந்து கை கழுவிக்கொள்ளச் செய்தன.

"அம்மா, இப்பெல்லாம் தனம் அத்தை அடிக்கடி பேசறதில்ல, இல்ல"

"ஆமாம், அவளுக்கு சினிமா பார்க்கவே நேரம் சரியா இருக்கும். இருபது வருஷமாச்சு அந்த ஊரவிட்டு வந்து, இதுல இது வேற" என்று சொல்லிக்கொண்டே மிச்சமிருந்த வேலையைக் கவனித்தாள்.

எதற்கும் வளையாத, குழந்தைகளிடம் இன்னும் கொஞ்சம் கூடுதல் கண்டிப்பான அம்மாவிற்கு தனம் அத்தைமேல் இருக்கும் மென்கோபத்தைச் சோமு புரிந்துகொள்வான். அந்தக் கோபத்தின் அளவைச் சோதனை செய்ய, தேவைப்படும்போது கேள்விகளை இவ்வாறு உருமாற்றிக் கேட்பான்.

மாடிக்கு வந்து கோபாலுக்கு ஃபோன் செய்தான். இரண்டு ரிங் போனபின், ஃபோனை இப்போது எடுப்பானா என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே, "என்னா சோமு ஆளையுங் காணும், ஃபோனையுங் காணோம்" என்று வழக்கம் போலவே ஆரம்பித்தான் கோபி என்கிற கோந்து.

"அதெல்லாம் ஒன்னும் இல்லடா. இப்பதான் இங்க பாம்பேயில் கொரோனால்லாம் கொஞ்சம் குறைஞ்சிருக்கு, அங்க எப்படி?"

"நியூஸ் எல்லாம் பார்க்கறது இல்லையா நீ? கொஞ்சம் குறைக்கச் சொல்லியிருக்காங்க" என்றான் எகத்தாளமாய்.

"ம்" என்றபடியே தான் பார்த்த தொலைக்காட்சி விவாதத்தைப்பற்றிச் சொல்லிவிட்டு, "ஆமா, தனம் அத்தை எப்படி இருக்காங்க?" என்றான் கொஞ்சம் கனிந்த குரலில்.

"மாசமானா நீ ஒருத்தன்தாண்டா அவங்களப்பத்தி கேட்கிறது. மாமா போனப்புறம் அவங்க வீட்லகூட சுமாரான கவனிப்புதான்."

"மறக்க முடியலடா..."

"எத அந்த அத்த பொண்ணையா?"

"ச்சீ, அத்தை எத்தனை ஜாலியான ஆளு தெரியுமா!"

அத்தைக்கு பெண் எல்லாம் இல்லை, எல்லாம் பசங்கதான். ஆனாலும் பேச்சை மடைமாற்ற கோந்து செய்யும் உத்தி இது. இதற்கு சோமு சொல்லும் பதிலைப் பொறுத்து, அடுத்த அரைமணி நேரப் பேச்சில் அனைத்து நடிகைகளையும், ஊரின் மிக அழகான பெண்களையும் கோந்து கோர்த்து விடுவான் என்பதால், சோமுவே தொடர்ந்தான்.

"அவங்க குறும்பெல்லாம் நீ பார்த்ததில்ல."

"தெரியுந் தெரியும், வாரமானா டவுனுக்குப் போய் படம் பாக்கிறது, சின்னப் புள்ளங்கள கூட்டி வச்சிக்கிட்டு கல்லாங்கா, கேரம் போர்டுனு ஆடுறது" என்றான் கோபால், சற்றே அங்கலாய்ப்பா என்று கண்டுபிடிக்க முடியாதபடி.

"டேய், அதுதாண்டா லைஃப்னு தோணுது இப்ப."

"சும்மாயிருடா, அவங்கதான் வெதரணையில்லாம அப்படி இருந்தாங்க. அம்பது அம்பத்தஞ்சு வயசுல அப்படியிருந்ததுக்கு அக்கம் பக்கத்துல என்னெல்லாம் சொன்னாங்க தெரியும்ல!"

"என்ன இரண்டாவதா வாக்கப்பட்டவங்கன்னுதானே. அத விடுறா, அத்த மாமாவ என்ன சொல்லி திட்டுவாங்க தெரியுமா?"

எதிர் முனையில் கோந்து மெளனமானான்.

ஒவ்வொரு முறையும் கோந்துவை உரையாடலில் சிக்க வைக்க, புதிதாக ஒரு செய்தியைச் சொல்லுவான் சோமு. அதுமட்டுமில்லாமல், அத்தையைப் பற்றிப் பேசும்போது மட்டும்தான் வேறொரு சோமுவாக மாறுவான்.

"என்னன்னு சொல்லு" என்றான் சோமு.

கோந்துவிடமிருந்து இப்போதும் பதிலில்லாததால் ஒரு குறிப்பாக அந்த வார்த்தையைச் சொன்னதும், "அடப்பாவி!" என்றான் கோந்து

"தனம் அத்தை ஜாலியான மூடுல இருக்கும்போது மாமாவை இப்படிச் சொல்லி திட்டுவாங்களாம்."

"உண்மையா? அவங்க இப்படியெல்லாம் பேசுவாங்களான்னு ஆச்சரியமா இருக்குடா. நேரடியாவா? இல்ல நீ சொன்ன மாதிரியா?"

"நாஞ்சொன்ன மாதிரிதான், மாமாவோட அம்மாவுக்கு தெய்வபக்தி ரொம்ப ஜாஸ்திங்கிறத கிண்டல் செய்யறதுக்காக. வெளிலதான் மாமாவோட சண்டை போடுவாங்க. உள்ள அவ்வளவும் லவ்வு. அதேமாதிரி, மாமா மட்டும்தான் அத்தைய ‘அம்சவல்லி’ன்னு பேர் சொல்லி கூப்பிடுவாராம், மத்தவங்களுக்குத்தான் அவங்க தனம். அம்சவல்லிங்கிற பேர தனம்னு மாத்தினதும் மாமாதானாம். கல்யாணமாகி முதல் குழந்தை பொறந்தப்புறம், மாமாவோட அப்பா, அத்தைய ஒரு வருஷம் கழிச்சிதான் கூட்டிகிட்டு வரணும்னு சொல்லிட்டாராம். அதுக்காக ஒருவருஷம் காத்திருந்துதான் கூட்டிகிட்டு வந்தாராம், அந்தளவுக்கு அப்பாமேல மரியாதையும், பயமுமாம் மாமாவுக்கு. அதனாலயே மாமாமேல லவ்வு ஜாஸ்தியாயிடிச்சாம். இதச் சொல்லிட்டு, ‘இப்ப இருக்கிற பசங்கெல்லாம் மூணு மாசத்துக்கு மேலன்னு சொன்னலே, அப்பனும் வேணாம், ஆத்தாளும் வேணாம்னு பொண்டாட்டிய கூட்டிட்டு போய்கிட்டேயிருப்பாங்க, என்ன சொல்றே’ன்னு வேற கேட்பாங்க."

"என்னத்த சொல்றது அந்த வயசில" என்றான்

"ம்ஹும், இவ்ளோ லவ்வா? அப்புறம் எப்படி அஞ்சு புள்ள பொறக்காதாம்?", என்று சோமுவிடம் கோந்து பதின்ம வயது குறும்புபோல் கேட்க நினைத்தான். ஆனால் சோமு அத்தையைப் பற்றி வரைமுறை தாண்டிப் பேசியதில்லை என்பதால் விட்டுவிட்டான். அத்தை பேசுவாங்க, அதற்காக நாமும் அதுபோல் பேசவேண்டுமா என்பது சோமுவின் வாதம்.

இதிலிருந்து விடுபட நினைத்து, மெளனத்தைத் தொடர்ந்தான் கோந்து. ஆனாலும் பள்ளிக் காலத்தில், சோமு வீட்டுக்கு வரும்போது அல்லது போகும்போது பார்த்த, பழகிய, துறுதுறுப்பான தனம் அத்தை அவன் நினைவிலும் இப்போது வந்தாள்.

தனம் அத்தை சராசரி உயரம், கொஞ்சம் பருமனான தேகம். மாநிறத்தைத் தாண்டிய தோலில் மினுமினுப்பு சற்றே குறைவு. வயதானதால் ஏற்பட்ட சிறு சுருக்கங்கள் அங்கங்கே. செளரி முடி வச்சு பின்னிகிட்டு, பாண்ட்ஸ் பவுடர் அடிச்சிகிட்டு, அத்தை ஒரு பதினோரு, பன்னிரெண்டு மணிக்கு டவுனுக்கு கிளம்புவாங்க. கூடவே ஒரு ஒயர் கூடை, அதில் ஊறவைத்த நெல், மாமாவுக்கு அவுல் இடிக்க. அப்பதானே மாமா இன்னும் ஒரு நூறு ரூபா எக்ஸ்ட்ரா கொடுப்பாரு. சும்மா அப்படியே போய் ஒரு சினிமா, பேரும் தெரிய வேணாம், கதையும் புரிய வேணாம். ஹீரோ மட்டும் யாருன்னு பார்த்துப்பாங்க. பாதி தூக்கம், மீதி படம். படம் பார்த்துட்டு வந்து அவங்க ஒரு கதை சொல்லுவாங்க. பல நாள் அதைக் கேட்டு ரசித்திருக்கிறோம்.

சில சமயம் தன் விளையாட்டுத் தோழர்களான பேரன் வயதுள்ள பசங்களையும், சினிமாவிற்கு கூட்டிப் போய், பின்னர் காமாட்சி ஹோட்டலில் ஒரு ஸ்பெஷல் தோசையும் வாங்கிக் கொடுப்பாங்க. அதனால் தெருவில், அவங்ககிட்ட கதை கேட்கவும், பேசவும், விளையாடவும் எப்பவும் ஒரு கூட்டமிருக்கும்.

ஒருநாள் மதிய சாப்பாட்டுக்கு பிறகு, வாயில் வெற்றிலை பாக்கைப் போட்டு குதப்பிக்கொண்டே, வாசல் வராண்டாவில் கல்லாங்காய் விளையாடிக் கொண்டிருக்கும்போது, திடீரென்று திரும்பிப் பார்த்து, "ஆஷ்ட்டு குட்டி வேஷ்டிய திங்குது, ஓஷ்ட்டு ஓஷ்ட்டு" என்று வீட்டின் பின்பக்கமா கைய காட்டியிருக்காங்க. ஆடும் இல்லை, குட்டியும் இல்லை, ஆனா இது புரியாது சின்னப் பசங்க கிடுகிடுன்னு கொல்லைப் பக்கம் இல்லாத ஆட்டை விரட்ட ஓடியிருக்காங்க. ஏமாற்றப்பட்டது தெரிந்து, சோகம் கலந்த கோபத்துடன் அவர்கள் திரும்பி வந்தபோது சமாதானப்படுத்த, அவங்களே வீட்டில் செய்து வைத்திருந்த கடலை உருண்டைகளை மென்சிரிப்புடன் கொடுத்தபோது, அத்தையும் ஒரு ஆட்டுக்குட்டி போலவே மகிழ்ச்சியாக இருந்தாக சோமு சொல்லியிருக்கிறான்.

தனம் அத்தைக்கு அஞ்சு பசங்க. மூத்தவனும், கடைசிப் பையனும் மட்டுமே இங்கே, மத்தவங்க எல்லோரும் சென்னையில. அத்தை அவங்களோட பசங்ககிட்ட ஒரு நண்பன் மாதிரிதான் பழகுவாங்க. அதிலும் இரண்டாவது பையன் ரொம்ப அடாவடி. கடைசிப் பையன் பரமசிவத்துக்கு புடிக்காத காயோ சாப்பாடோ அன்னிக்கி சமைச்சிருந்தா, ஒன்றாக அமர்ந்து சாப்பிடும்போது பரமசிவம் இரண்டாவது அண்ணனுக்கும், முதல் அண்ணனுக்கும் நடுவில் சிக்கி சின்னா பின்னமாகிவிடுவான். கேலி பொறுக்காமல் சமயங்களில் கோபித்துக் கொண்டு சாப்பிடாமல்கூட எழுந்து ஓடிவிடுவான். அம்மாதிரி சமயங்களில் அத்தை , பரமசிவத்தை சமாதானப்படுத்த, தட்டிலே சாப்பாட்டை வைத்துக்கொண்டு கெஞ்சுவது பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும்.

பரமசிவத்துக்குப் படிப்பு ஏறவில்லையே தவிர நன்றாக பாடுவான். அத்தை பால் வியாபாரத்திற்காக வைத்திருந்த ஐந்தாறு பசு மாடுகளை நன்றாகப் பராமரிப்பான். அவ்வப்போது மது வாசனையும், புகையிலை வாசனையும் வீசும் அவனிடமிருந்து. ஆனால் அதையெல்லாம் சாமர்த்தியமாக அத்தையிடமிருந்து மறைத்துவிடுவான்.

பரமசிவம் மேல மட்டும் கொள்ளைப் பிரியம் தனம் அத்தைக்கு. ஏன்னு கேட்டா, "வழிச்சி ஊத்தின மாவு தோசை அவன், அதான்" என்று சின்ன சிரிப்புடன் முடிச்சுக்குவாங்க. அதனால், படிப்பு ஏறல, உருப்படியா எந்த நல்ல பழக்கமும் இல்லையின்னு மாமா திட்டும்போதெல்லாம் சோமு வீட்டுக்கு வந்து, மாமா சின்ன வயசில செஞ்ச தப்பெல்லாம் சொல்லுவாங்களாம், ஒரு குழந்தையாட்டம். "எல்லாம் அவனும் மேல வருவான், என்னத்த படிச்சி என்ன பண்ணப்போறான். இப்பக்கூட சினிமாக்கோ, டிராமாக்கோ போனா, ஹீரோவாயிடுவான். நாந்தான் இங்கயே இருக்கட்டும், அவசரத்துக்கு ஏதாவதுன்னா கொள்ளியாவது வெப்பான்" என்னும்போது சோமுவுக்குள் எழும் தர்மசங்கடம், சோகமெல்லாம் சொல்லி மாளாது என்றிருக்கிறான்.

அத்தைக்கு ஆறுதல் சொல்லமுடியாது. அதை எதிர்பார்க்கவும் மாட்டாங்க. சொன்னாலும் மாமாவையும், பரமசிவத்தையும் விட்டுக்கொடுக்க மாட்டாங்க. அதனால், இதுபோல் சில நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, சோமு அந்த வயதிலேயே பக்குவப்பட்டவனாக, வெறுமனே அத்தை சொல்லும் செய்திகளை மட்டும் கேட்டுக் கொண்டிருந்ததாகச் சொல்லுவான்.

எல்லாத்தையும் சொல்லிவிட்டு, கண்ணைத் துடைத்துக் கொண்டு, இரண்டு நிமிடங்களில் எதுவுமே நடக்காதது போல் போயிடுவாங்களாம்.

ஒவ்வொரு முறையும் சோமு பேசும்போதெல்லாம் புதிதாகச் சொல்வது போலவே, அவ்வளவு ஆர்வத்துடன் தனம் அத்தையுடனான அனுபவங்களைச் சொல்வான். அதனால் எது சோமு சொன்னது, எது தான் உணர்ந்தது என்றுகூடச் சில சமயம் குழப்பம் வரும் கோந்துவுக்கு.

தான் நீண்ட நேர சிந்தனைக்குள் சென்றதை கோந்து உணர்வதற்குள், "என்னடா ஃப்ளாஷ்பேக்குக்கு போய்ட்டியா?" என்று அதைக் கலைத்தான் சோமு.

"ஆமாண்டா, அத விடு. பரமசிவம் கொரோனால போயிட்டான், ஒரு வாரம் முன்னாடி, தெரியுமில்ல?"

"அப்படியா? யாருமே சொல்லலையேடா" என்றான் ஆதங்கத்துடன்

"யாருக்குமே சொல்லலை. ஒரு வாரம் பெரிய ஆஸ்பத்திரியில இருந்துருக்கான். அன்னிக்கி காலைலகூட நல்லாத்தான் பேசினானாம், திடீர்னு..."

"ஓ , ஆனா இது அத்தைக்கு தெரியாதில்ல. இல்ல புரியாதுன்னு நினைக்கிறேன்."

"அதெல்லாம் இல்லைடா, நினைவுக்கு வரும்போது அழறாங்களாம். அப்புறம் கொஞ்ச நேரத்துல மறந்துடுதாம். மூணு நாள் முன்னாடி அவனுக்காக சின்ன வெங்காய வத்தக் குழம்பும், உருளைக்கிழங்கு வறுவல் கறியும் பண்ணிட்டு, அவன் வந்தாதான் சாப்புடுவேன்னு அடம் புடிச்சாங்களாம்."

"நினைவு தப்பினதுகூட ஒரு வகையில நல்லதுதான். இல்லையின்னா அத்தையால் இத தாங்க முடியாது."

"ஆமாண்டா, பரவாயில்ல நீயெல்லாம் ரொம்ப தூரமா இருக்க, இதெல்லாம் பாக்க வேணாம்ல."

தொடர்ந்து பேசினால் சோகம் அதிகமாக வாய்ப்புள்ளதாகத் தெரிந்ததால், "அப்படியில்ல, இப்பகூட அத்தை மாதிரி வாழ்க்கைய வாழற ஒரு பாட்டிய பார்த்ததுலதான் உனக்கு கால் பண்ணினேன். பாப்போண்டா, அத்தைய பார்த்தேன்னா, நான் விசாரிச்சேன்னு சொல்லு" என்று ஃபோனை வைத்தான்.

அத்தை வீட்டுப் பெரிய திண்ணை, கால்சட்டை போட்ட சிறுவயது கோந்து, பாசி படர்ந்த கோயில் திருக்குளம், பேபி ஸ்டோர், இடமே இல்லாத வளைவில் ஏர் ஹாரன் அடித்துத் திரும்பும் டவுன் பஸ் என மனதில் சடசடவென தோன்றிய நினைவலைகளுக்கிடையே, அம்மா படியேறி வரும் சத்தம் கேட்டது.

"என்னடா கோபிகிட்ட இந்த மாச புலம்பல் ஓவரா?" என்று கேட்டபடியே, கையில் மடித்துக் கொண்டு வந்திருந்த துணிகளுடன் கேட்டாள் அம்மா.

"இப்படி புலம்பற அளவுக்கு அப்படி என்ன பண்ணினா த….ன….ம் அ..த்..த! ஆன வயசுக்கு அடையாளமில்லாம, கால்ல கொலுசு, நைலக்ஸ் புடவை, கண்ணுல மை, கழுத்துல பவுடர்னு அறுபது வயசுக்கு மேலயும் சின்னப் பொண்ணாட்டம் ஆடினதுதான் மிச்சம்."

"கேஸ் ஸ்டவ்லகூட சமைக்க கத்துக்காம, கும்முட்டி அடுப்பிலயும், விறகு அடுப்புலயும் சமைச்சத வேற அவசர, அவசரமா உனக்கு மட்டும் கொஞ்சூண்டு கொண்டு வந்து கொடுப்பா, ப்ப்ப்பா" என்றதும்...

அந்தக் காரமான மோர்க்குழம்பு, உருளைக்கிழங்கு கறி, அதில் வரும் வாசனையெல்லாம் அந்த விறகு அடுப்பு புகையாலா? அல்லது அத்தையின் கை மணமா? சோமு யோசித்துக் கொண்டிருக்கையிலே,

"வாழ்க்கைனா ஒரு பொறுப்பு வேணாம். எப்பவும் சிரிச்சி பேசிக்கிட்டு, வயல்ல வெளஞ்சத சாப்பிட்டுட்டு, திண்ணைல உட்காந்து கதை பேசி, என்னத்த உருப்படியா பண்ணிணா. ஏதோ பசங்க அவங்களா படிச்சி, வேலைக்குப் போனாங்க" என்று அர்ச்சனையைத் தொடர்ந்துகொண்டே துணிகளை பீரோவில் அடுக்கி வைத்தாள்.

இது ஒன்றும் புதிதில்லை என்பதால், அம்மாவிடம் பதிலுக்கு எதுவும் பேசாமல், சுவற்றில் தொங்கிக் கொண்டிருக்கும், எல்லாவற்றிற்கும் காரணமான, இளவயது அப்பாவின் புகைப்படத்திலிருந்த காய்ந்த சந்தனத்தையே வெறித்துப் பார்க்க ஆரம்பித்தான் சோமு. பல சொல்லமுடியாத துயரங்களும், பழைய நினைவுகளும் அவனை ஆக்கிரமிக்க ஆரம்பித்தன.
சிவா துரை,
கோப்பெல், டெக்சஸ்
More

பெருங்காயம்
Share: 
© Copyright 2020 Tamilonline