Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2021 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | அஞ்சலி | சிறுகதை | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | வாசகர்கடிதம் | முன்னோடி | ஹரிமொழி | கவிதைபந்தல் | அன்புள்ள சிநேகிதியே
Tamil Unicode / English Search
சமயம்
அருள்மிகு ஸ்ரீ நட்டாற்றீஸ்வரர் ஆலயம், ஈரோடு
- |அக்டோபர் 2021|
Share:
தமிழ்நாடு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள காங்கயம்பாளையத்தில் காவிரி ஆற்றில் நட்டாற்றீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.

மூலவர் நட்டாற்றீஸ்வரர். அம்பாள் நல்லநாயகி, அன்னபூரணி. பிருத்வித் தலம். காவிரியின் நடுவிலுள்ள குன்றின் மீது ஓம்கார வடிவில் இவ்வாலயம் அமைந்துள்ளது. கோவில் ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் சோழ அரசர்களால் கட்டப்பட்டது. இங்கு சிவன் மணலில் வடிக்கப்பட்ட லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

கோவில் வளாகத்திலுள்ள பாறைமீது தலவிருட்சமாகிய அத்திமரம் உள்ளது. இம்மரத்தில் புதிய கிளைகள் தோன்றுவதில்லை என்பது ஓர் அதிசயம். இந்த மரத்தின்கீழ் காவிரிகண்ட விநாயகர் உள்ளார். சுற்றிலும் உள்ள ஊர்களான கொக்கராயன் பேட்டையில் முக்கூட நாதசுவாமி, சாத்தம்பூரில் வல்லாளேஸ்வரர், காளமங்கலத்தில் மத்யபுரீஸ்வரர், மௌசியில் முக்கண்ணீஸ்வரர் என நான்கு சிவன் கோவில்கள் அமைந்துள்ளன. மத்தியில் இக்கோயிலையும் சேர்த்து இவை பஞ்சபூதத் தலங்களாகக் கருதப்படுகின்றன.

வாதாபி, வில்வலன் என்னும் அசுரர் இருவர், முனிவர்களின் வயிற்றுக்குள் உணவின் வடிவில் சென்றபின், வயிற்றைக் கிழித்துக்கொண்டு வெளியேறி, அந்த முனிவர்களையே உண்ணும் பழக்கம் உடையவர்கள். உலகைச் சமப்படுத்தப் பொதிகை நோக்கிச் சென்றுகொண்டிருந்த அகத்திய மகரிஷியைக் கண்டனர். அவரை உணவாக்கிக் கொள்ளத் திட்டமிட்டனர். வாதாபி மாங்கனி உருவெடுத்தான். அதை எடுத்துக்கொண்ட வில்வலன், சிவனடியார் வேடத்தில் அகத்தியர் முன் சென்றான். 'சிவனின் கட்டளைப்படி தென்திசைக்குச் செல்லும் தாங்கள் என் உபசரிப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்' என வேண்டி மாங்கனியை அவரிடம் கொடுத்தான். அவர் அதை வாங்கிச் சாப்பிட்டார். உடனே வில்வலன், அகத்தியரின் வயிற்றுக்குள் இருந்த வாதாபியை வெளியே வருமாறு அழைத்தான். சூழ்ச்சியை அறிந்த அகத்தியர், 'வாதாபி, ஜீர்ணோ பவ' என்று சொன்னபடி வயிற்றைத் தடவினார். உடனே வாதாபி அவர் வயிற்றில் ஜீரணமாகி விட்டான். கோபங்கொண்ட வில்வலன் சுயரூபம் எடுத்து அவரை அழிக்க முயன்றான். அகத்தியர் அவனையும் சங்கரித்தார். இருவரையும் கொன்றதால் அகத்தியருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷம் நீங்கக் காவிரியாற்றின் நடுவிலிருந்த குன்றில் மணல் லிங்கம் செய்து பூஜித்தார். பின் தென்திசை நோக்கிய பயணத்தைத் தொடர்ந்தார்.அந்த லிங்கம் அப்படியே இறுகிப்போனது. ஆற்றின் நடுவில் இருந்ததால் 'நட்டாற்றீஸ்வரர்' எனப் பெயர் ஏற்பட்டது. இக்கோயிலுக்குச் செல்பவர்கள் ஆற்றைக் கடந்துதான் செல்ல வேண்டும். இதற்காகப் பரிசல் உண்டு. பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை ஆற்றில் தண்ணீர் குறைவாக இருக்கும் என்பதால் ஆற்றுக்குள் நடந்து சென்றுவிடலாம்.

அம்பாள் நல்லநாயகி, சிவன் சன்னதிக்கு வலப்புறம் தனிச் சன்னிதியில் காட்சி தருகிறார். பிரார்த்திக்கும் பக்தர்களுக்கு நற்பலன்களைத் தருவதால் அம்பாளுக்கு அன்னபூரணி என்ற பெயரும் உண்டு. ஆடிப்பூரம் அன்று மதியபூஜையில் 108 சங்காபிஷேகம் நடக்கும். அகத்தியர் சிவபூஜை செய்தபோது சுவாமிக்கு கம்பு தானியத்தைப் படைத்து வழிபட்டார். இதன்படி சித்திரை முதல்நாள் மட்டும் சிவனுக்குத் தயிர்கலந்த கம்பங்கூழ் நைவேத்தியம் செய்து பிரசாதமாக வழங்கப்படுகிறது. இங்குள்ள முருகன் வலதுகாலை முன்வைத்தும் இடதுகாலைப் பின்வைத்தும் நடந்து வருவது போன்ற பாவனையில் காட்சி தருகிறார். அகத்தியர், சிவனைத் தரிசிக்க வந்தபோது முருகன் அவரை முன்னின்று வரவேற்று இக்கோலத்தில் காட்சி தந்ததாகக் கூறப்படுகிறது. இவர் இடக்கையில் கிளியை வைத்திருப்பது வித்தியாசமான தரிசனம்.

மார்கழித் திருவாதிரை நாளன்று நடராஜருக்கு விசேஷபூஜை நடைபெறும். பரிசலில் காவிரி நதியைச் சுற்றி வருவார் நடராஜர். அவருக்கு முன்பாகப் பரிசலில் மேள வாத்தியங்கள் செல்லும். மாலையில் திருக்கல்யாண வைபவம். விஜயதசமியன்று அம்பாள் சிலையைப் பரிசலில் எழுந்தருளச் செய்வார்கள்.

பேச்சுக் குறைபாடு உள்ளவர்கள் முருகனை வேண்டிக் கொள்கின்றனர். அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் அணிவித்துப் பிரார்த்தனை செய்கின்றனர். திருவிழா: ஆடிப்பெருக்கு, சித்திரை முதல்நாள், மார்கழி திருவாதிரை. கார்த்திகை கடைசி திங்கட்கிழமை 1008 சங்காபிஷேகம் நடக்கும். அன்று ஒரு பரிசலில் நடராஜர் எழுந்தருளி நதியில் கோவிலைச் சுற்றி வருவார்.

கோவில் காலை 8.00 மணி முதல் மாலை 8.00 மணி வரை திறந்திருக்கும்.
சீதா துரைராஜ்,
சான் ஹோஸே, கலிஃபோர்னியா
Share: 
© Copyright 2020 Tamilonline