Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2021 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | அஞ்சலி | சிறுகதை | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | வாசகர்கடிதம் | ஹரிமொழி | சாதனையாளர்
Tamil Unicode / English Search
சமயம்
ரத்னகிரீஸ்வரர் ஆலயம்,
- சீதா துரைராஜ்|நவம்பர் 2021|
Share:
தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் அருகில் நன்னிலத்திற்கு 10 கி.மீ. கிழக்கே திருமருகல் என்னும் தலத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ ரத்னகிரீஸ்வரர் ஆலயம்.

சைவ சமயக் குரவர்களில் அப்பர், ஞானசம்பந்தர் ஆகியோரால் பாடப்பெற்ற தலம் இது. இறைவன் பெயர் ரத்னகிரீஸ்வரர். மாணிக்கவண்ணர் என்ற பெயரும் உண்டு. தாயார் பெயர் வண்டுவார்குழலி. தலவிருட்சம் வாழை (மருகல்). தீர்த்தம், லட்சுமி, மாணிக்க தீர்த்தம். புராணப் பெயர் மருகல் என்னும் திருமருகல். இங்கு இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சுயம்பு மூர்த்தி என்றால் உளி பாயாமல் தானே உருவான மூர்த்தி என்பது பொருள். இது பொது சகாப்தம் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவத்தலம். சிவலிங்கத்தின் பீடங்கள் தரமானவை. சுவாமியின் தோள் பக்கத்தில், பாணத்தின் அடிப்பாகத்தில் ஒரு வெட்டு காணப்படுகிறது. அது குச சேது மகாராஜாவால் உருவானது என்பர்.

இவர் இங்கு வந்தபோது இத்தலம் காடாக இருந்ததாம். காடு வெட்டித் திருத்தும்போது மண்வெட்டி சுயம்பாக மண்ணுள் மறைந்திருந்த இறைவன் திருவுருவின் மீது தாக்கி, ரத்தம் பெருகியதாகவும் அரசன் சுற்றிலும் வெட்டிப் பார்த்து இறை உருவைக் கண்டு மயங்கிப் பின் தெளிந்து ஆலயம் எழுப்பியதாக வரலாறு கூறுகிறது. வடமொழியில் இறைவன் பெயர் ரத்னகிரீஸ்வரர். சிவலிங்கத் திருவுரு மிக அழகானது. இங்கு விநாயகர் பிரதான விநாயகர் என அழைக்கப்படுகிறார்.



மும்மூர்த்திகளில் யார் சிறந்தவர் என முனிவர்கள் கூட்டத்தில் விவாதம் வர, பிருகு முனிவர் விவரம் அறிய, பிரம்மா, சிவபெருமான் ஆகியோரைக் காணச் சென்றபோது, தகுந்த மரியாதை கிடைக்காமல் வருந்தி வைகுண்டம் சென்றார். அங்கே திருமால், திருமகளோடு இருந்தார். பிருகு முனிவர் இரண்டு மணி நேரமாக நின்று பார்த்துவிட்டு, கோபம் கொண்டு திருமாலின் மார்பில் உதைத்தார். மாலின் மார்பு திருமகள் உறைவிடமாதலால் திருமகள், திருமாலிடம், "உன்னை விட்டுப் பிரிந்து செல்கிறேன். நான் இருக்கும் இடத்தில் உங்களை வலிய வரச் செய்வேன்" என்று சொல்லிவிட்டுப் பிரிந்து சென்றார்.

பல தலங்களைத் தாண்டி, காவிரி தென்கரை ஓரமாகச் சிறு குளம் ஒன்று வெட்டி, தவம் செய்து மாணிக்கவண்ணரை வழிபட்டு மௌன விரதம் இருந்தார் மகாலட்சுமி. அதன் பலனாகத் திருமகள்முன் திருமால் மருகலில் தோன்றினார். திருமகள் மகிழ்ந்து, "இது ஒரு ஒரு சித்தி தரும் தலம் ஆகட்டும்" என்று வாழ்த்தினார். அவர் வெட்டி வழிபட்ட குளம் 'லட்சுமி தீர்த்தம்' என்ற பெயருடன் விளங்குகிறது.

ஒரு வணிகன், வணிகப் பெண் இருவரும் திருமணம் செய்ய மதுரைக்குப் போகும்போது இந்த ஊருக்கு வர இரவு நேரம் ஆகிவிடுகிறது. உடனே தர்ப்பையைப் போட்டுவிட்டு இத்தலத்தில் உறங்குகின்றனர். அப்போது வணிகனைப் பாம்பு தீண்டிவிட அவன் இறக்கிறான். அவ்வழியே வந்த ஞானசம்பந்தர், அழுதுகொண்டிருந்த பெண்ணிடம் நடந்தது என்ன என்று கேட்க, அவரிடம் விவரம் கூறுகிறார் வணிகப்பெண். திருஞானசம்பந்தர் பதிகம் பாடி விஷத்தை இறக்குகிறார். இறந்த வணிகன் உயிர் பிழைக்கிறான். இறைவனே வன்னி மரமாகவும், கிணறாகவும், வாழை மரமாகவும் இருந்து, திருமணத்திற்குச் சாட்சியாக இருந்து திருமணம் செய்து வைக்கிறார்.



ஆனால், வணிகனின் பெற்றோர் இதனை ஏற்றுக்கொள்ள மறுக்கவே, வணிகன் இறைவனைத் தியானிக்க, சிவபெருமான், மதுரையில் வன்னிமரம், கிணறு வடிவில் காட்சி தந்து அருள்புரிந்தார். இங்கு வழிபடுவோரைப் பாம்பு தீண்டுவதில்லை என்பதால் பலரும் வந்து வழிபட்டு அச்சம் நீங்கி நன்மை அடைகின்றனர்.

சித்திரைப் பருவ உற்சவத்தில் இருவேளையும் திருவீதி உலா நடக்கிறது. ஏழாம் நாள் செட்டிப்பெண் கல்யாண விழா. பத்தாம் நாள் தீர்த்தவாரி. வரலட்சுமி நோன்பன்று கமல வாகனத்தில் லட்சுமியும், வரதராஜப் பெருமாளும் எழுந்தருளி லட்சுமி தீர்த்தத்தில் தீர்த்தம் கொடுத்தருள்கின்றனர். தீபாவளி, பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு, ஆங்கிலப் புத்தாண்டு நாட்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடக்கும்.

சிந்தா யெனுமால் சிவனே யெனுமால்
முந்தா யெனுமால் முதல்வா எனுமால்
கொந்தார் குவளை குலவும் மருகல்
எந்தாய் தகுமோ இவள்ஏ சறவே.

- ஞானசம்பந்தர் தேவாரம்
சீதா துரைராஜ்,
சான்ஹோஸே, கலிஃபோர்னியா
Share: 




© Copyright 2020 Tamilonline