|
|
|
தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் டவுன்ஹாலில் இருந்து சுமார் 9 கி.மீ. தொலைவில் உள்ள பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்துக்குப் பின்புறத்தில் உள்ள அங்காளம்மன் வீதியில் அங்காள பரமேஸ்வரி ஆலயம் உள்ளது.
தாயார் பெயர் அங்காள பரமேஸ்வரி. தலவிருட்சம் வேப்பமரம். தீர்த்தம் சிறுவாணி தீர்த்தம். பேரூர் ஆகமப்படி ஒரு கால பூஜை நடைபெறுகிறது. அம்மன் பெயர் ஏற்படக் காரணம் ஓர் அதிசய நிகழ்ச்சி. சிவனும் பார்வதியும் நொய்யல் ஆறு வழியாகச் செல்லும் சமயம், ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஆழம் இருப்பதைப் பார்த்து பார்வதி, சிவனிடம், "நாதா அங்கு ஆழம்" எனக் கூறினார். அதன் விளைவுதான் அங்காளம்மன் எனப் பெயர் ஏற்படக் காரணமாயிற்று என்கிறது தலபுராணம்.
இங்கு அங்காளம்மன் பாறையில் சிலை வடிவம் இல்லை. பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் பாம்புப்புற்று ஒன்று அங்கு இருந்ததாம். அதற்கு மக்கள் பால் ஊற்றுவது வழக்கம். சிறிது காலத்திற்குப் பின் அந்தப் புற்று, அம்மனைப் போலக் காட்சியளிக்கத் தொடங்கியது. அங்கு அம்மன் எழுந்தருளியதாகக் கருதி பாம்புப்புற்றுக்கு மஞ்சள் பூசி வழிபடத் துவங்கினர். அதனால் பக்தர்கள் சிலைக்குக் கண்மலர் பொருத்தி வழிபடுகின்றனர்.
அம்மன் உருவமான பாம்புப்புற்றில் ஒரு கருநாகமும் கோதுமை நாகமும் உள்ளது. பக்தர்கள் பார்வையில் படுவதில்லை. கோவில் அர்ச்சகரின் கண்களில் பலமுறை தென்பட்டுள்ளன. பாம்புகள் இரண்டும் 25 அடிக்கு மேல் நீளம் கொண்டவை என அர்ச்சகர் தெரிவித்துள்ளார்.
கரிகாற்சோழன் இக்கோவிலுக்கு வந்ததாக வரலாறு. திருவிழாக் காலங்களில் மட்டும் அம்மன் சிலைக்கு அபிஷேகம் உண்டு. கோவில் மக்கள் வாழும் இடத்தில் அமைந்துள்ளதால், சுற்று வட்டாரங்களில் 'கொலுசு சத்தம்' கேட்பதாக மக்கள் கூறுகின்றனர்.
முக்கியப் பிரார்த்தனையாக, கல்யாணம் ஆகாதவர்கள் விரைவில் திருமணம் நடந்தேறப் பிரார்த்தனை செய்கின்றனர். இக்கோவிலில் பேச்சியம்மன் எழுந்தருளியுள்ளார். பேச்சியம்மன் சிறந்த மருத்துவம் பார்ப்பவர் எனக் கூறப்படுகிறது. கர்ப்பிணிப் பெண்கள் இங்கு வந்து வேண்டுதல் செய்தால் சுகப்பிரசவம் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பல வருடங்களுக்கு முன் இக்கோவில் பேச்சியம்மன் ஒரு பெண்ணுக்குப் பிரசவம் பார்த்ததாகச் செவிவழிச் செய்தி உண்டு.
குண்டம் திருவிழாவின்போது தீமிதித் திருவிழா சாலையில் நடைபெறுகிறது. கோவிலில் சித்திரைக் கனி அன்று அங்காளம்மனுக்கு பழங்கள், காய்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறும். பலவகை திரவியங்களால் அம்மனுக்கு அபிஷேகம், விளக்கு பூஜை, நவராத்திரி ஒன்பது நாளும் ஒன்பது வகை அலங்காரம் எனச் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
புரட்டாசி மாத விரதம் இருப்பவர்கள் இக்கோவிலுக்கு வந்து விரதம் நிறைவேற மக்களுக்கு விருந்து கொடுத்தல், மண்சோறு சாப்பிடுதல் ஆகியவற்றுடன் வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள். அங்காளம்மனைக் குலதெய்வமாகக் கொண்டவர்கள், குழந்தைகளுக்கு மொட்டை போடுதல், விசேஷ காலங்களில் அன்னதானம் போன்றவற்றைச் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். பொதுவாக சிவன் கோவில்களில் நந்தியையும் அம்மன் கோவில்களில் சிங்கத்தையும் வாகனமாக வைப்பார்கள். இந்த அம்மன் கோவிலில் சிம்மத்திற்கு பதில் நந்தியை வாகனமாக வைத்திருப்பது ஒரு சிறப்பாகும். |
|
சீதா துரைராஜ், சான் ஹோஸே, கலிஃபோர்னியா |
|
|
|
|
|
|
|