Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | சாதனையாளர் | சிறப்புப் பார்வை
Tamil Unicode / English Search
முன்னோடி
புலியூர்க்கேசிகன்
- பா.சு. ரமணன்|நவம்பர் 2020||(1 Comment)
Share:
பல்கலைக்கழகங்கள் குழு அமைத்துச் செய்யவேண்டிய பணியை தனி ஒருவராகச் செய்து அன்னை தமிழுக்கு அருந்தொண்டாற்றியவர் புலியூர்க்கேசிகன். நற்றிணை துவங்கி குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என எட்டுத்தொகை நூல்கள் அனைத்தையும் ஆராய்ந்து மிக எளிய உரையைத் தந்தவர். இலக்கண நூல்கள் பலவற்றிற்கும் உரையெழுதியிருக்கிறார். கவிஞர், உரையாசிரியர், எழுத்தாளர், இதழாளர், சொற்பொழிவாளர், மொழிபெயர்ப்பாளர், பத்திரிகை ஆசிரியர் எனப் பல களங்களிலும் முத்திரை பதித்திருக்கும் புலியூர்க்கேசிகன், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள புலியூர்குறிச்சி என்னும் சிற்றூரில் கந்தசாமிப் பிள்ளை-மகாலட்சுமி இணையருக்கு, அக்டோபர் 16, 1923ம் நாள் மகனாகப் பிறந்தார். இயற்பெயர் சொக்கலிங்கம். பாரம்பரிய விவசாயக் குடும்பம்.

புலியூர்க்கேசிகன் தொடக்க மற்றும் உயர்நிலைக் கல்விகளை டோணாவூர் பள்ளியில் பயின்றார். இன்டர்மீடியட் வகுப்பை மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியில் பயின்று தேர்ந்தார். இளவயது முதலே தமிழின்மீது மிகுந்த பற்றுக் கொண்டவராக இருந்தார். ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும் கலந்துகொண்டார். புலியூர் கிராமத்தில் பட்டம்பெற்ற முதல் மாணவர் இவர்தான். கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் அருகிலுள்ள வடுகச்சிமலைப் பள்ளியில் ஆசிரியர் பணி கிடைத்தது. நெல்லைப் பகுதியில் வாழ்ந்த தமிழறிஞர்களுடன் தொடர்பு கொள்வதும், அவர்களைச் சந்தித்து உரையாடுவதும் இவரது வழக்கம். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, திரு.வி.க., டாக்டர் மு. வரதராசன் போன்றோருடன் நெருங்கிப் பழகித் தமிழறிவை வளர்த்துக் கொண்டார்.

இக்காலகட்டத்தில் டோணாவூர் மருத்துவமனையில் மறைமலை அடிகளின் மகளான நீலாம்பிகை அம்மையார் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதை அறிந்த புலியூர்க்கேசிகன், தனித்தமிழ் இயக்கத் தந்தையார் மீது கொண்ட பற்றால் நீலாம்பிகை அம்மையாரை மருத்துவமனையில் சந்தித்துத் தேவையான உதவிகளைச் செய்தார். மகளைக் காண வந்த மறைமலையடிகளையும் வரவேற்று, விருந்தினராகத் தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்று அன்பு பாராட்டினார். புலியூர்க்கேசிகனின் தன்னலமற்ற பணியாலும், அன்பாலும் கவரப்பட்ட நீலாம்பிகை அம்மையார், தனது கணவர் திருவரங்கப் பிள்ளையிடம் இவரது திறமையையும், தமிழார்வத்தையும் பற்றி எடுத்துரைத்தார். திருவரங்கப் பிள்ளை, திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் தலைமைப் பணியில் இருந்தார். நீலாம்பிகை அம்மையின் பரிந்துரையின் பேரில், புலியூர்க்கேசிகன், நூற்பதிப்புக் கழகத்தின் மேலாளராகப் பணி நியமனம் செய்யப்பட்டார். சிலகாலம் திருநெல்வேலியில் பணியாற்றிய பின் சென்னைக்குக் குடிபெயர்ந்தார் புலியூர்க்கேசிகன். நீலாம்பிகை அம்மையின் விருப்பத்தில் பேரில் அவர்களது மகள் சுந்தரத்தம்மையை மணந்து கொண்டார். கா.சு. பிள்ளை போன்ற தமிழறிஞர்கள் முன்னிலையில் தமிழ்த் திருமணமாக இவர்களது திருமணம் சிறப்புற நடந்தது.

திருவரங்கப் பிள்ளையின் மறைவிற்குப் பின் வ. சுப்பையாப் பிள்ளையின் மேலாண்மையில் சில காலம் மேலாளராகப் பணியாற்றினார் புலியூர்க்கேசிகன். பல நூல்களின் பதிப்புப் பணிகளுக்கு உறுதுணையாக இருந்தார். மெய்ப்புப் பார்ப்பது முதல் நூலைப் பிரதி மேம்படுத்திப் புத்தகமாக்குவது வரை பல பணிகளை மேற்கொண்டார். சில காரணங்களால் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்திலிருந்து விலகி, அருணா பதிப்பகத்தில் மேலாளராகச் சில காலம் பணிபுரிந்தார். இந்நிலையில்தான் புகழ்பெற்ற பாரி நிலையத்தில் பணியாற்றும் வாய்ப்பு கேசிகனைத் தேடிவந்தது. அது, இவரது வாழ்வின் திருப்புமுனை ஆனது. சொக்கலிங்கம், புலியூர்க்கேசிகன் ஆனார். இலக்கண, இலக்கிய நூல்களுக்கு உரை எழுதத் துவங்கியதும் அக் காலகட்டத்தில்தான்.

1958ல், தொல்காப்பியம் முழு உரை நூல் புலியூர்க்கேசிகனின் முதல் உரை விளக்க நூலாக வெளியானது. பாரி நிலையம் க. செல்லப்பன் இப்பணிகளில் இவரை மிகவும் ஊக்குவித்தார். தொடர்ந்து மணிமேகலை, சிலப்பதிகாரம் போன்ற நூல்களுக்கு உரை எழுதினார் கேசிகன். அனைத்தும் மிக எளிய உரைகள். குறிப்பாக, கிராமத்துப் பள்ளி மாணவர்களும் படித்துப் புரிந்துகொள்ளும்படி உரை எழுதியிருந்தார் கேசிகன். அவை நல்ல வரவேற்புப் பெற்றன. ஒரு பல்கலைக்கழகம் குழு ஒன்றை அமைத்துச் செய்யவேண்டிய பணிகளை தனி நபராகச் செய்து முடித்தது வியக்கத் தக்கது. தமிழ் இலக்கிய உரைநூல் வளர்ச்சிக்குப் பல பேராசிரியர்கள் செய்திருக்கும் பணிகளை விட அதிகம் புலியூர்க்கேசிகன் செய்துள்ளார் என்று சொன்னால் மிகையல்ல.
புலியூர்க்கேசிகனின் குறிப்பிடத்தகுந்த உரை நூல்களாக புறப்பொருள் வெண்பாமாலை, நன்னூல், நளவெண்பா, கலிங்கத்துப்பரணி, திருக்குற்றாலக் குறவஞ்சி, முக்கூடற்பள்ளு, தகடூர் யாத்திரை, திருப்பாவை, திருவெம்பாவை, திருவருட்பா பாராயணத் திரட்டு போன்றவற்றைச் சொல்லலாம். கம்பன், கவி காளமேகம், ஔவையார் போன்றோரது பாடல்களைத் தேடித் தொகுத்து தனித்தனி நூல்களாகத் தந்துள்ளார். 'மாங்காடு காமாட்சி அம்மன் வரலாறு' என்பது இவர் எழுதிய முதல் ஆன்மீக நூலாகும். 'ஸ்ரீ சந்தோஷி மாதா' பற்றியும் நூல் எழுதியுள்ளார். 'முத்தமிழ் மதுரை' என்பது மதுரை மாநகரின் பெருமை பேசும் நூலாகும். 'பூலித்தேவனா? புலித்தேவனா?', 'புறநானூறும் தமிழர் சமுதாயமும்', 'புறநானூறும் தமிழர் நீதியும்', 'புகழ்பெற்ற பேரூர்கள்', 'ஐந்திணை வளம்' போன்றவை இவரது குறிப்பிடத்தகுந்த கட்டுரை நூல்களாகும். திருக்குறளுக்கு இவர் எழுதியிருக்கும் உரை சிறப்பானது.

ஆன்மீகம், ஜோதிடம், எண்கணிதம் போன்றவற்றிலும் இவருக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது. ஜோதிடத்தில் ஆர்வம்கொண்டு அதைக் கற்றுத் தேர்ந்தார். ஜோதிடம், எண்கணிதம் சார்ந்து பல நூல்களை எழுதியிருக்கிறார். பிரபல ஜோதிடர்களான வித்வான் வே. லட்சுமணன், புலியூர் பாலு போன்றவர்களால் பாராட்டப்பட்டவர். மணிமேகலை பிரசுரத்திற்காக 60 வருடப் பஞ்சாங்கத்தைத் தொகுத்தளித்திருக்கிறார். 'நந்திவாக்கு', 'ஜோதிட நண்பன்' போன்ற நூல்களின் ஆசிரியராகவும் பொறுப்பு வகித்திருக்கிறார். ஆனந்தவிகடன், அமுதசுரபி, குமுதம், குங்குமம், இதயம் பேசுகிறது, கல்கண்டு, தாய், ஞானபூமி உள்ளிட்ட பல இதழ்களில் ஆன்மீகம், ஜோதிடம், எண் ஜோதிடம், ஆவியுலகம், உளவியல், இலக்கியம் தொடர்பாகப் பல கட்டுரைகள், தொடர்களை எழுதியுள்ளார். 'இதயம் பேசுகிறது' இதழில் 'தேவி தரிசனம்' என்ற பெயரில் இவர் எழுதிய தொடர் மிகவும் வரவேற்கப்பட்ட ஒன்று.

மேற்கூறிய பல துறைகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களைத் தந்துள்ளார் புலியூர்க்கேசிகன். இவரது தமிழ்ச்சேவையைப் பாராட்டி கம்பன் கழகம், திருவள்ளுவர் இலக்கிய மன்றம், பன்னாட்டுத் தமிழுறவு மன்றம், முத்தமிழ் மன்றம் போன்ற பல அமைப்புகள் இவரைப் பாராட்டிச் சிறப்பித்துள்ளன. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக அளவில் சிறப்புரையாற்றியிருக்கிறார். இவர் எழுதிய 'புகழ்பெற்ற பேரூர்கள்', 'புலவரும் புரவலரும்', 'அறநெறிச் செல்வர்' போன்ற நூல்கள் பாட நூல்களாக வைக்கப்பட்ட பெருமையையுடையன.. இவரது படைப்புகளை ஆராய்ந்து பலர் பட்டம் பெற்றுள்ளனர்.

தமிழுக்காகவும், தமிழ் இலக்கியத்திற்காகவும் வாழ்நாள் முழுவதும் உழைத்த புலியூர்க்கேசிகன், ஏப்ரல் 17, 1992 அன்று காலமானார். இவரது மறைவுக்குப் பின் தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமையாக்கிச் சிறப்பித்தது. 'புலியூர்க்கேசிகன் இலக்கியப் பேரவை' என்ற அமைப்பை அவரது மகள் கலைச்செல்வி புலியூர்க்கேசிகன் நடத்தி வருகிறார். இவ்விலக்கியப் பேரவையின் 25ம் ஆண்டு விழா சமீபத்தில் கொண்டாடபட்டது. ஆண்டுதோறும் இப்பேரவை மூலம் மறைமலையடிகள், நீலாம்பிகை அம்மை, புலியூர்க்கேசிகன், நம்பி ஆரூரன், திருவரங்கம் பிள்ளை போன்றோர் பெயரில் சிறந்த தமிழறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன

இலக்கியத்திற்கு எளிமையாக உரையெழுதுவதுதான் கடினமானது. அதைத் திறம்படச் செய்திருக்கும் புலியூர்க் கேசிகன் தமிழர்கள் என்றும் மறக்கக்கூடாத முன்னோடி.

பா.சு. ரமணன்
Share: 




© Copyright 2020 Tamilonline