|
|
|
ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் ஆலயம், தமிழ்நாடு தஞ்சாவூர் நகரில் இருந்து 11 கி.மீ. தொலைவில் உள்ளது. தஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்து இவ்வாலயத்துக்கு பேருந்து, ஆட்டோ வசதிகள் உள்ளன. 12வது நூற்றாண்டில் சோழ மன்னர்களால் கட்டப்பட்ட ஆலயம். 'திட்டை' என்றால் மேடு என்று பொருள்.
தலப்பெருமை சைவசமயக் குரவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற தலம் இது. தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் 15வது. மூலவர் பெயர் வசிஷ்டேஸ்வரர், ஸ்வயம்பூதேஸ்வரர். தாயார் உலகநாயகி, மங்களாம்பிகை. தீர்த்தம்: சக்கர தீர்த்தம், சூல தீர்த்தம். ஆலயத்திற்கு எதிரே உள்ள சக்கர தீர்த்தம், மகாவிஷ்ணுவின் கையில் உள்ள சக்ராயுதத்தினால் ஏற்பட்டது என வரலாறு. உலகம் பிரளயத்தினால் சூழப்பட்டபோது பிரம்மா, விஷ்ணு அதிலிருந்து காப்பாற்றச் சிவனை வேண்டினர். அலைந்து தேடிய பின்னர் அவர்கள் ஒரு சிவலிங்கம் தண்ணீரில் மூழ்காமல் இருப்பதைக் கண்டனர். சிவன் மேட்டில் இருந்ததால் இத்தலத்திற்கு 'திட்டை' என்று பெயர் வந்தது. 'திட்டை' என்பது மேட்டுப் பகுதியை குறிப்பதாகும்.
பிரம்மா, விஷ்ணு சிவனை பூஜித்ததும், சிவபெருமான் அவர்கள் முன் தோன்றி, அவர்கள் கடமையான படைத்தல், காத்தல் தொழிலைச் செய்ய அருளினார். 'பிரகஸ்பதி' என்னும் குரு பகவானுக்கு 'தேவகுரு' பதவியை அருளினார்.
குரு பகவானை வசிஷ்ட முனிவர் ராஜகுருவாக வழிபட்டதால் இத்தலம் குரு பகவான் தலமாகப் போற்றப்படுகிறது. ஆலங்குடி குரு ஸ்தலத்தில் குரு பகவான் தெற்கு நோக்கி அமர்ந்த நிலையில் அருள்புரிகிறார். இங்கு குரு பகவான் நின்ற நிலையில், நான்கு கைகளுடன், கையில் புத்தகம், ஆயுதம் சகிதம் தனிச்சன்னிதியில் ராஜகுருவாகக் காட்சியளிக்கிறார். தன்னை வந்து வேண்டுவோருக்கு உடனே உதவுவதற்காக நின்ற நிலையில் அருள் செய்கிறார் என்பது ஐதீகம். இவரை வழிபட்டால் மேடைப்பேச்சில் பயம் இருக்காது. கல்வியறிவில் சிறந்து விளங்க மாணவர்கள் இங்கு வந்து குரு பகவானை வழிபடுகின்றனர்.
நான்கு மூலைகளிலும் நான்கு சிவலிங்கங்களின் நடுவில் மூலவர் வசிஷ்டேஸ்வரர் இங்கு காட்சியளிக்கிறார். தனக்கு இணையாக உயர்ந்த பீடத்தில் அன்னை ஸ்ரீ உலகநாயகியை இருத்தியுள்ளார். பெண்களுக்கு மங்கள வாழ்வு அளிப்பதால் அன்னை மங்களநாயகி, மங்களாம்பிகை என்று போற்றப்படுகிறாள். விநாயகர், முருகன், ராஜகுரு, பைரவர் ஆகியோரும் தனித்தனி சன்னிதிகளில் அருள் புரிகின்றனர். அம்மன் சன்னிதி விதானத்தில் 12 ராசிக்கட்டங்கள் உள்ளன. அதன் கீழ் நின்று பிரார்த்தித்தால், சகல தோஷங்களும் நீங்கும்.
சிற்ப வேலைப்பாடுகளுடன் கொடிமரம், விமானம் யாவும் கருங்கற்களால் கட்டப்பட்ட ஆலயம் இது. கருவறை விமானத்தில் இருந்து 20 நிமிடத்திற்கு ஒருமுறை நீர் சொட்டுச் சொட்டாக வடிந்து கொண்டிருப்பது எங்கும் காண இயலாத அதிசயமாகும். விமானத்தின் மேல் சந்திரகாந்தக் கல், சூரியகாந்தக் கல் இருப்பதால் சிவன்மேல் தண்ணீர்ச் சொட்டு விழுகிறதாம். எப்பொழுதும் வசிஷ்டேஸ்வரர்மேல் தண்ணீர் சொட்டுவதால் சிவன்மேல் உள்ள வஸ்திரம் ஈரமாகவே இருக்கிறது. காத்திருந்து பார்த்தால் இந்தக் காட்சியை தரிசிக்கலாம்.
சூரிய பகவான் ஆவணி 15, 16, 17 தேதிகளில் லிங்கத் திருமேனியின் மீது தனது கிரணங்களைப் பரப்பி பூஜை செய்கிறார். உத்தராயண புண்ணிய காலத்தில் அவர் வழிபடுகிறார்.
மகா சிவராத்திரி, திருக்கார்த்திகை தீபம், குருப்பெயர்ச்சி விழா போன்ற விழாக்கள் விமரிசையாக நடைபெறுகின்றன. கோலாகலமான திருவிழாவாகக் குருபெயர்ச்சி விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. நித்திய அபிஷேகம் செய்வது வேறெங்கும் காண இயலாத சிறப்பாகும். சந்திரன் வழிபாடாக இந்த அபிஷேகம் நடக்கிறது.
கருவினால் அன்றியே கருஎலாம் ஆயவன் உருவினால் அன்றியே உருவுசெய் தான்இடம் பருவநாள் விழவொடும் பாடலோடு ஆடலும் திருவினான் மிகுபுகழ்த் தென்குடித் திட்டையே
ராஜ குருவை வணங்கி குருவருளும், அம்மையப்பனின் திருவருளையும் பெற்று உயர்வோமாக. |
|
சீதாதுரைராஜ், சான்ஹோஸே, கலிஃபோர்னியா |
|
|
|
|
|
|
|