அறுவடைக்காலம் அடமானத்தில் வண்டிமாடு!
★★★★★
வரப்புச் சண்டைகள் இனி இல்லை வீடானது நிலம்!
★★★★★
இறந்த விவசாயம் எழுப்பிய நினைவுத்தூண் எங்கும் கட்டடங்கள் !
மேற்கண்ட 'ஹைக்கூ' கவிதைகள் மூலம் விவசாயத்தின் அவலத்தையும் விவசாயிகளின் போராட்டத்தையும் தன் கவிதைகளில் முன்வைத்திருப்பவர் உமையவன். இயற்பெயர் ப. ராமசாமி. கவிஞர், கட்டுரையாளர், எழுத்தாளர், ஆன்மீக, வரலாற்று ஆய்வாளர், பேச்சாளர் எனப் பல தளங்களில் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார். ஈரோடு அருகே கெம்பநாயக்கன்பாளையத்தில், மார்ச் 15, 1990ம் நாளன்று பழனிச்சாமி - சரஸ்வதி இணையருக்கு மகனாகப் பிறந்தார். பாரம்பரியமான விவசாயக் குடும்பம். இளவயதிலேயே எழுத்தார்வம் வந்துவிட்டது. காரணம். பள்ளியின் தமிழாசிரியர்கள். கவிதை வடிவம் இவரை மிகவும் ஈர்த்தது. பள்ளி நாட்களிலேயே சிறு சிறு கவிதை, கதைகள் எழுதினார். பள்ளி சார்பாகப் பல போட்டிகளில் பங்கேற்று வென்றதும், ஆசிரியர்கள் தந்த ஊக்கமும் எழுத்தார்வம் மேலும் சுடர்விடக் காரணமாயின. பதினொன்றாம் வகுப்பு பயிலும்போதே 'அறிவுரை கூறும் அற்புதக் கதைகள்' என்ற நூலை எழுதிவிட்டார். உயர்நிலைக் கல்வி முடித்ததும், வணிகவியலிலும் தொழில் மேலாண்மையிலுமாக இரண்டு முதுகலைப் பட்டங்கள் பெற்றார். கல்லூரி நாட்களிலேயே 'கவியோசை' என்ற கவிதை நூலை எழுதி வெளியிட்டார். தொடர்ந்து பேராசிரியர்களின் ஊக்கத்தால் 'நீர் தேடும் வேர்கள்' என்ற கவிதைத்தொகுப்பு வெளியானது. உமையவன் படித்த கோவை எஸ்.என்.எஸ். கல்லூரியிலேயே அந்நூல் வெளியிடப்பட்டு பலரது பாராட்டைப் பெற்றது. அப்போது அவருக்கு வயது 21தான். தமிழ்மீது கொண்ட ஆர்வத்தால் முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்று தேர்ந்தார்.
தொடர்ந்து 'விதையின் விருட்சம்' கவிதைத் தொகுப்பு 2013ல் வெளியானது. என்றாலும், 2015ல் வெளியான 'வண்டி மாடு' தொகுப்புதான் இலக்கிய உலகிற்கு உமையவனைப் பரவலாக அடையாளம் காட்டியது. விவசாயம் சார்ந்து தமிழில் வெளியான முதல் ஹைக்கூ கவிதை நூல் இதுதான். இதற்கு அணிந்துரை வழங்கிய வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன், "இந்த விவசாயம் சார்ந்த முதல் தமிழ் ஹைக்கூவில் கவிஞர் உமையவன் அவர்கள் இன்றைய விவசாயத்தின் நிதர்சனத்தைப் படம்பிடித்துக் காட்டிவிட்டார். இவருடைய ஹைக்கூக்களைப் படித்த எவரும் இனி நமக்கு உணவு எவ்வாறு உற்பத்தி செய்யப்படும் என்று கவலைப்படாமல் இருக்க முடியாது. இரு சொல்லால் மூன்றடுக்காய் என்று ஹைக்கூ கவிதை அமைந்தாலும் இவ்வடிவத்திலும் கவிஞர் உமையவன் தன் சொல்லாட்சித் திறத்தால் உண்மையைப் படம்பிடித்துக் காட்டிவிட்டார்." என்று பாராட்டியிருக்கிறார். "உழவின் உயர்வும் பயனும் சீரழிந்து போன இன்றைய யதார்த்தத்தில் சிதறுண்டு போனதை வருத்தத்தோடு உமையவன் பதிவு செய்துள்ளார். இந்தியா கிராமங்களில் உள்ளது என்றும், இந்தியா விவசாய நாடு என்றும் சொன்னதெல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய் போனதை ஹைக்கூ வெளிப்படுத்த முற்பட்டுள்ளது" என்கிறார், கவிஞர் ஈரோடு தமிழன்பன்.
எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி, கவிஞர் மு.மேத்தா, கவிஞர் ஆலந்தூர் கோ. மோகனரங்கன் போன்றோர் இவரது படைப்புகளைப் பாராட்டவே, விவசாயத்துடன், மென்பொருள் நிறுவனத்திலும் பணியாற்றியவாறே கவிதை, கதை கட்டுரை, சிறார் படைப்புகள் என்று நிறைய எழுத ஆரம்பித்தார். கொங்கு வேளாள கவுண்டர்களின் குலங்கள், கொங்கு நாட்டின் பகுதிகள், கொங்கு திருமணங்களில் பாடப்படும் பாடல்கள் ஆகியவற்றை ஆராய்ந்து எழுதப்பட்ட நூல் 'கொங்கு நாட்டு மங்கள வாழ்த்து'. அந்நூலில், கொங்கு நாட்டின் பகுதிகளான பூந்துறை நாடு, தென்கரை நாடு, பொங்கலூர் நாடு, ஆறை நாடு, மண நாடு, கிழக்கு நாடு, அண்ட நாடு, வெங்கால நாடு, ஆனைமலை நாடு போன்றவை எவை என்று ஆய்ந்து விளக்கியுள்ளார். 'கொங்கு நாட்டுக் கோயில்கள்' என்பது இவரது மற்றுமொரு முக்கியமான நூலாகும். இவரது 'ஆகாய வீடு' அறிவியல் செய்திகளைக் கொண்ட சுவையான சிறார் கதைகளின் தொகுப்பு. கம்பரின் 'ஏரெழுபது' நூலை, தெளிவுரை எழுதிப் பதிப்பித்துள்ளார். இவரது சிறார் நூல்களும் சிறந்த வரவேற்பைப் பெற்றவையாகும்.
தன் எழுத்து பற்றி உமையவன், "ஏர்வழியே நேர்வழி என்றெண்ணி வாழ்ந்த எளிய வேளாண் குடும்பத்துப் பிள்ளை நான். என் எந்தத் தலைமுறையோடும் எழுத்துக்குப் பந்தமில்லை. உயிர்ச்சூடு தணியாமல் பதமாக்கிவைத்த வைக்கோல் கோட்டைக்குள்ளிருந்து தெறித்து விழுந்து துளிர்த்த முதல் விதை நான். கைவிட்டுப்போன உழவு வாழ்க்கையைத் தேடித் திரிந்து ஓலமிடும் ஒரு குடியானவனின் துயரத்தைப் பின்தொடர்கிறது என் எழுத்து. என் மொழியென்பது, வயல் நீரோட்டத்தின் ஈரம் தோய்ந்தது. எவரின் பார்வையும் விழாத, ஊர்ப்புறச் சுவற்றில் கிறுக்கப்படும் கரிக்கோட்டுச் சித்திரங்களை நான் எழுத்தாகப் பெயர்க்கிறேன். அதன் வழி என் பெயர் கவிஞனாகிறது" என்கிறார்.
உமையவன் எழுதிய நூல்களுக்கும் இலக்கியப் பணிகளுக்கும் பல்வேறு அமைப்புகளின் பாராட்டுக்களும், விருதுகளும் கிடைத்துள்ளன. 'பறக்கும் யானையும் பேசும் பூக்களும்' என்ற சிறார் நூலுக்கு டாக்டர் மு.வ. விருது கிடைத்தது. தியாக துருவம் தமிழ்ச்சங்கத்தின் சிறந்த நூலுக்கான பரிசும் இதே நூலுக்குக் கிடைத்துள்ளது. 'குழலினிது யாழினிது', 'மழலை உலகு' இரண்டு நூல்களும் குறளகத்தின் சிறந்த நூல்களுக்கான பரிசைப் பெற்றுள்ளன. 'வண்டி மாடு' நூல் பொதிகை மின்னலின் பரிசைப் பெற்றுள்ளது. மித்ரா துளிப்பா விருது, 'என் குளத்தில் சில முத்துக்கள்' என்ற கவிதை நூலுக்குக் கிடைத்துள்ளது. இவரது 'பறக்கும் யானையும் பேசும் பூக்களும்' சிறுவர் நூல் ஆங்கிலத்தில் 'The flying Elephant' என்ற தலைப்பில் துளசி பட் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கதை, கவிதை, சிறுகதை, சிறுவர் இலக்கியம், ஆன்மீகம் என இதுவரை 16க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் உமையவன்.
தமிழக அரசு 'தமிழ்ச்செம்மல்' விருது வழங்கி இவரைச் சிறப்பித்துள்ளது. கம்போடியாவில் நடந்த உலகக் கவிஞர்கள் மாநாட்டில், கம்போடிய அரசின் கலை மற்றும் பண்பாட்டுத் துறை இவருக்கு 'பாரதியார் விருது' வழங்கி கௌரவித்துள்ளது. 'ரவுண்ட் டேபிள் இந்தியா' அமைப்பு, 'பெருமைமிகு தமிழர்' விருது வழங்கிப் பாராட்டியுள்ளது. அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம் வழங்கிய 'கவியரசு கண்ணதாசன் விருது', ஈரோடு தமிழ்ச் சங்கப் பேரவை வழங்கிய 'புதுக்கவிதைப் புதையல்', இலக்கியச் சாரல் வழங்கிய 'குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா விருது', 'சக்தி டி.கே. கிருஷ்ணசாமி' விருது, 'தமிழ் இலக்கிய மாமணி', 'பைந்தமிழ்க் கவி', 'துளிப்பா சுடர்', 'ஹைக்கூ செம்மல்', 'சாதனை இளஞ்சுடர்', 'விவசாயப் பாவலர்', 'ஸ்ரீ ராமாநுஜர் விருது' எனப் பல விருதுகளைப் பெற்றுள்ளார். United Writer's Association சார்பாக 'UWA, Effulgent Star of the Decade Award' வழங்கப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டிற்கான திருப்பூர் இலக்கிய விருதையும் சமீபத்தில் உமையவன் பெற்றிருக்கிறார். இவரது விவசாயம் சார்ந்த கவிதை ஒன்று, பொள்ளாச்சியில் உள்ள எம்.ஜி.எம். கல்லூரியின் பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது. இவரது 'நவீன வேளாண்மையும் திருக்குறளும்', 'உழுத புழுதி' உள்ளிட்ட சில நூல்கள் விரைவில் வெளியாக உள்ளன.
'இலக்கியச் சாரல்' அமைப்பின் தலைவர், ஆசிரியர் பொறுப்புகளை வகித்தவர். 'ஏர்கலப்பை' என்ற சமூகசேவை அமைப்பின் தலைவராக இருக்கிறார். கவியரங்குகளில் கலந்துகொண்டு சிறப்புரைகள் ஆற்றுகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்களிக்கிறார். பொதிகை, கலைஞர் தொலைக்காட்சி, மக்கள் தொலைக்காட்சியில் இவரது நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகியுள்ளன. வானொலியிலும் இவரது சிறப்பு நிகழ்ச்சிகள் பல ஒலிபரப்பாகியுள்ளன. சாகித்ய அகாதமியின் சார்பில் மணிப்பூரில் நடைபெற்ற அகில இந்திய இளம் எழுத்தாளர்கள் சந்திப்பில் தமிழ்நாட்டின் சார்பாகப் பங்கேற்றார். இவரது படைப்புகளைப் பற்றிய ஆய்வாக, 'உமையவனின் இலக்கியப் பயணம்', 'உமையவனின் மெய்க்கீர்த்தி' ஆகிய நூல்கள் வெளியாகியுள்ளன.
உமையவனின் இலக்கிய சாதனைகளைப் பாராட்டி, "இவர் தமிழுக்கும் தமிழருக்கும் கிடைத்த பெரும் பேறு" என்று வாழ்த்தியிருக்கிறார் சிலம்பொலி செல்லப்பன். இவரது சிறார் நூல்கள் பற்றி, நீதியரசர் தி.நெ. வள்ளிநாயகம், "சிறுவர்களுக்காகப் படைத்துள்ள கதைகள் அத்தனையும் தமிழ் அன்னையின் கழுத்தில் முத்தாரமாக ஒளி விடுகின்றன" என்று பாராட்டுகிறார்.
பெற்றோர் மற்றும் மனைவி ரேகாமணியுடன், ஈரோடு கெம்பநாயக்கன்பாளையத்தில் வசித்து வரும் உமையவன், இலக்கிய உலகின் பளிச்சென்ற நம்பிக்கை முகம்.
உமையவனின் நூல்கள் கவிதை: நீர் தேடும் வேர்கள், விதையின் விருட்சம், என் குளத்தில் சில முத்துக்கள், வண்டி மாடு. சிறார் நூல்கள்: சிறுவர் நீதிக் கதைகள், குழலினிது யாழினிது, மழலை உலகு, பறக்கும் யானையும் பேசும் பூக்களும், ஆகாய வீடு. ஆன்மிக/வரலாற்றாய்வு நூல்கள்: அருள்மிகு மன்னீஸ்வரர் திருத்தல வரலாறு, திருமணத் தடை நீக்கும் தெய்வீகத் திருத்தலம், கொங்கு நாட்டுக் கோயில்கள். இலக்கிய ஆய்வு: கம்பரின் ஏரெழுபது - மூலமும் உரையும். கட்டுரை நூல்கள்: இனிது இனிது இல்லறம் இனிது. பதிப்பித்த நூல்கள்: திருக்கை வழக்கம், கொங்கு நாட்டு மங்கள வாழ்த்து. |