Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அன்புள்ள சிநேகிதியே | வாசகர் கடிதம்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர்
கொ.மா. கோதண்டம்
- அரவிந்த்|டிசம்பர் 2020|
Share:
கதை, கவிதை, கட்டுரை, நாவல், மொழிபெயர்ப்பு, பத்திரிகைப் பணி என படைப்புத் தளங்கள் பலவற்றிலும் சிறகை விரித்திருப்பவர் கொ.மா. கோதண்டம். இவர், ராஜபாளையத்தில் செப்டம்பர் 15, 1938 அன்று, கொட்டு முக்கல மாடசாமி ராஜா - சீதாலட்சுமி அம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார்.

'கொட்டு முக்கல' என்பது இவர்களது குடும்பப் பெயர். இவரது முன்னோர்களான கொட்டு முக்கல கிருஷ்ணராஜா, கொட்டு முக்கல சிங்கராஜா, கொட்டு முக்கல பெத்த ராஜா மூவரும் அக்காலத்தில் தெலுங்கு மொழியில் பல நூல்களை இயற்றிப் புகழ்பெற்றவர்கள். படை வீரர்களாக விளங்கி, பின் தமிழகம் வந்து ராஜபாளையம் நகரைத் தமது தொழில்களால் வளப்படுத்தியவர்கள். சில தலைமுறைகளுக்குப் பின் காலச் சூழலால் குடும்பம் வறுமைக்குத் தள்ளப்பட்டது. கோதண்டத்தால் ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே பயிலமுடிந்தது.

மளிகைக்கடை ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தார். தன்னொத்த சிறுவர்கள் பள்ளியில் படிக்கும் காலத்தில், கடையில் வேலை செய்வதை நினைத்து வருந்தினார். ஆனாலும் கிடைத்த விடுமுறை நாட்களில் வாசகசாலைகளுக்குச் சென்று வாசிப்பார். 'கண்ணன்', 'முயல்', 'அணில்' போன்ற இதழ்கள் வாசிப்பார்வத்தைத் தூண்டி வளர்த்தன. பதினெட்டாம் வயதில் பஞ்சாலை ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். புத்தகங்களைத் தேடித்தேடி வாசிக்கும் பழக்கம் தொடர்ந்தது. அக்காலத்தில் சென்னை ராஜதானி முதலமைச்சராக இருந்த குமாரசாமி ராஜா, தான் சேகரித்து வைத்திருந்த நூல்களைப் பாதுகாக்க, தனது இல்லத்தை நூலகமாக்கினார். அங்கு சென்று வாசித்து நூலறிவை வளர்த்துக்கொண்டார் கோதண்டம். அங்கு நூலகராக இருந்த நண்பர்மூலம் பன்மொழிப்புலவர் மு. ஜகந்நாத ராஜா அவர்களின் அறிமுகம் கிடைத்தது. அது கோதண்டத்தின் வாழ்க்கையில் திருப்புமுனை ஆனது. இலக்கண, இலக்கியங்களை ஜகந்நாத ராஜாவிடமிருந்து கற்றார். ஜகந்நாத ராஜா தொடங்கிய 'மணிமேகலை மன்றம்' இலக்கிய அமைப்பின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றார். பரம்பரை இயல்பும், தொடர் வாசிப்பும் எழுத்தார்வம் சுடர்விடக் காரணமானது. 1967ல் 'மனமும் மணமும்' என்ற இவரது முதல் சிறுகதை 'சிவகாசி முரசு' இதழில் வெளியானது.

சாஹித்ய அகாடமி விருதுஇவர் வாழ்ந்தது மலைவாழ் மக்கள் அதிகம் வாழும் பகுதி என்பதால் அவர்களுடன் நட்புக் கிடைத்தது. 'பளியர்கள்' பிரிவைச் சேர்ந்த அவர்களுடன் பழகி, பயணம் செய்து, அவர்கள் வாழ்விடத்திற்குச் சென்று தங்கி, அவர்களது வாழ்க்கையைப் பற்றி நன்கு அறிந்துகொண்டார். அதனை அடிப்படையாகக் கொண்டு 'ஒரு வாய்க்கஞ்சி' என்ற சிறுகதையை எழுதினார். அது 'தாமரை' இதழில் வெளியானது. பளியர்கள் வாழ்வைப்பற்றிக் கூறும் தமிழின் முதல் சிறுகதை அதுதான். அச்சிறுகதை இவருக்கு ஓர் அடையாளத்தைப் பெற்றுத் தந்தது. தொடர்ந்து மலைவாழ் மக்கள் பற்றி, கானகம் பற்றி, தனது அனுபவங்கள் பற்றி இலக்கியச் சிற்றிதழ்களில் எழுதத் தொடங்கினார். 'தீபம்', 'செம்மலர்', 'கோகுலம்', 'தினமணி கதிர்' போன்ற இதழ்களில் இவரது கதை, கட்டுரைகள் வெளியாகிப் பரவலான வரவேற்பைப் பெற்றன. கோதண்டத்தின் முதல் சிறுகதைத் தொகுப்பு 'ஆரண்யகாண்டம்' 1976ல் வெளியானது. இந்த நூல் குடியரசுத் தலைவர் விருதினைப் பெற்றது. தொடர்ந்து எழுத உத்வேகம் தந்தது. முதல் நாவல் 'ஏலச்சிகரம்' 1980ல் வெளியானது. இவரது இரண்டாவது நாவலான 'குறிஞ்ஞான்பூ' இலங்கை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் அவல வாழ்க்கையைக் காட்சிப் படுத்தியது. இதற்கு 'அனந்தாச்சாரி அறக்கட்டளை பரிசு' கிடைத்தது.

தனது படைப்புகள் சிறுவர்களுக்கும் பயன்படக்கூடியதாய் அமைய வேண்டும் என்று கோதண்டம் விரும்பினார். அவர்களுக்கு போதிக்கும் வகையில் சுற்றுச்சூழல், வனம், கானுயிர்கள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் கதை, கட்டுரை, நாவல்கள் எழுதத் தொடங்கினார். 'திக்குத் தெரியாத காட்டில்' என்பது சிறார்களுக்காக இவர் எழுதிய முதல் சிறுகதை. அது தொடங்கி சிறார்களுக்காகவென்றே சுமார் 45க்கும் மேற்பட்ட கதை, கட்டுரை, கவிதைப் படைப்புகளைத் தந்திருக்கிறார். 'காட்டுச் சிறுவன் நீலன்' சிறார்களால் பரவலாக வரவேற்கப்பட்ட ஒன்று. 'நீலன்' என்ற கற்பனைக் கதாபாத்திரத்தை மையமாக வைத்து கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார் கோதண்டம். நீலனுக்குச் சிறுவர்கள் ரசிகர் மன்றம் அமைத்திருப்பதே இவரது பாத்திரப் படைப்பிற்குக் கிடைத்திருக்கும் வெற்றி.

அழ. வள்ளியப்பா விருது"என்னிடம் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா, 'பெரியவர்களுக்கு எழுதுவது இருக்கட்டும். நீங்கள் சிறுவர்களுக்கு எழுதணும் என்று கேட்டுக்கொண்டார். சிறுவர் இலக்கியம் படைக்க ஆளில்லை. சமுதாயப்பணியாக இருக்கும் என்று சொன்னார்." என்கிறார் கோதண்டம். இவர் அதிகம் சிறுவர் இலக்கிய நூல்களைப் படைக்க இதுவொரு காரணம். காடுகளுக்குச் செல்ல வாய்ப்பே இல்லாத சிறுவர்களுக்கு வனங்கள், கானுயிர்கள் பற்றிய தகவல்களை அறிவியல் ரீதியாக எடுத்துச் சொல்லவேண்டும் என்ற இவரது விழைவும் மற்றொரு காரணம்.

கொ.மா.கோதண்டம் நூல்கள்
நாவல்கள்: ஏலச்சிகரம், ஜென்ம பூமிகள், குறிஞ்ஞாம்பூ.
சிறுகதைத் தொகுப்புகள்: ஆரண்ய காண்டம், மலையின் மைந்தர்கள், வெடிக்கத் துடிக்கும் வேர்ப் பலாக்கள், காட்டுக் குயில்கள், இருண்ட வழிகளில் வெளிச்சம், முட்டம் போட்ட இதயங்கள்.
இவரது சிறுகதைகள் யாவும் தொகுக்கப்பட்டு, 'கொ.மா.கோதண்டம் சிறுகதைகள்' என்ற தலைப்பில் 2 பாகங்களாக வெளியாகியுள்ளன.

சிறுவர் நாவல்கள்: உச்சிமலை ரகசியம், இருண்ட வானத்தில் இளம் சிங்கங்கள்.
சிறுவர் சிறுகதை நூல்கள்: திக்குத் தெரியாத காட்டில், பிறந்த பூமி, நீலன் நமது தோழன், எங்கிருந்தோ வந்தான், நீலனும் மலைப்பாம்பும், காக்கை குருவி எங்கள் ஜாதி, தேனி வனம், காட்டுக்குள்ளே திருவிழாக் கொண்டாட்டம், காட்டுக்குள்ளே பட்டிமன்றம், காட்டுக்குள்ளே கும்மாளம், கரடியுடன் ஒரு கம்பு விளையாட்டு, கானகம் சென்ற சிறுவர்கள், உயிர் காப்பான் தோழன், குளத்தில் விழுந்த சந்திரன், பச்சைக்கிளி பாடுது, காட்டில் கேட்ட பாட்டுப் போட்டி, நட்புறவுப் பூக்கள், காடு மலைகளில் ஆடிப் பாடுவோம், காட்டுச் சிறுவன் நீலன் மற்றும் பல.

சிறார் நாடகங்கள்: புனித பூமி, மணிமேகலை
கவிதைத் தொகுப்புகள்: கோழிக் குட்டிகளும் பன்றிக் குஞ்சுகளும், சின்னச்சின்ன அரும்புகள், கங்கை காவிரி, மழைத்துளிகள்.
மருத்துவ நூல்கள்: இயற்கை உணவும் தீரும் நோய்களும், நமக்கு நாமே நல்லதொரு மருத்துவர், நமது மனமே நல்ல மருந்தகம், இனிய வாழ்வுக்கு இயற்கை மருத்துவம்.


மேற்கண்டவை தவிர்த்து, ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலைக்கும் திருக்குறளுக்கும் எளிய உரை தந்துள்ளார். 'அழகினைப் பழகுவோம்', 'இலக்கியத்தில் இன்பக் காட்சி' - இவையிரண்டும் கட்டுரை நூல்கள். தியாகி அரங்கசாமி ராஜாவின் வாழ்க்கை வரலாற்றைத் தொகுத்திருக்கிறார். மலையாள எழுத்தாளர் சிற்பி பள்ளிபுரம் எழுதிய 'தத்தைகளுடைய கிராமம்' என்ற சிறுவர் கதைநூலை 'கிளிகளின் கிராமம்' என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருக்கிறார். கிருஷ்ண தேவராயரின் 'ஆமுத்ய மால்யதா'வை 'ஆண்டாள் காவியம்' என்ற தலைப்பில் தமிழில் தந்துள்ளார். தெலுங்குக் கவிஞர்கள் எழுதிய கவிதைகளை, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தெலுங்கு மொழித் துறைப் பேராசிரியர்களைக் கொண்டு தமிழில் மொழிபெயர்த்து, நூலாக வெளியிட்டுள்ள இவரது சீரிய பணி போற்றத் தகுந்தது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், குற்றாலம் பராசக்தி பெண்கள் கல்லூரி, மதுரை லேடி டோக் கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களில் இவரது படைப்புகள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. இவரது படைப்புகளை ஆய்வு செய்து பலர் முனைவர் மற்றும் இளமுனைவர் (எம்.ஃபில்) பட்டம் பெற்றுள்ளனர்.தனது இலக்கிய படைப்புகளுக்காகப் பல்வேறு பரிசுகளும் பாராட்டுக்களும் பெற்றுள்ளார் கொ.மா. கோதண்டம். இவரது 'மழைத்துளிகள்' கவிதைத் தொகுப்பு ஏவி.எம் அறக்கட்டளையினரின் தங்கப் பதக்கத்தைப் பரிசாக பெற்றது. 'உச்சிமலை ரகசியம்' என்ற நாவல், குழந்தை எழுத்தாளர் சங்கம் நடத்திய சிறுவர் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது. இவர் எழுதிய 'காட்டுக்குள்ளே இசை விழா' என்ற சிறார் நூலுக்கு 2012ம் ஆண்டுக்கான 'பால சாகித்ய புரஷ்கார்' விருது கிடைத்தது. 'குளத்தில் விழுந்த சந்திரன்' சிறுகதைத் தொகுப்புக்கு 'இலக்கியப் பீடம்' விருது கிடைத்தது. 'குட்டி யானையும் சுட்டிகளும்' நூலுக்காக எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் வழங்கிய தமிழ்ப் பேராய விருதை (அழ. வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது) 2013ம் ஆண்டில் பெற்றிருக்கிறார். 'குறிஞ்சிச் செல்வர்', 'சிறுகதைக் கிழார்', 'பண்டித ரத்னா', 'திருக்குறள் தொண்டர்' போன்ற பல பட்டங்களைப் பெற்றிருக்கிறார். இலங்கை தமிழ் பல்கலைக்கழக விருது, இலண்டன் தமிழ்ச் சங்க விருது, கலை இலக்கியப் பெருமன்ற விருது எனப் பல விருதுகளும் இவர் கைவசம்.. 'இருபதாம் நூற்றாண்டின் குறிஞ்சிக்கபிலர்' என்று கி.ராஜநாராயணன் இவரைப் பாராட்டியிருக்கிறார். 2007ல் மலேசிய சர்வதேச தொலைநிலைப் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்துச் சிறப்பித்துள்ளது. முன்னாள் பாரதபிரதமர் இந்திராகாந்தி நேரில் அழைத்துப் பாராட்டிய பெருமையும் கோதண்டத்திற்கு உண்டு.

இவரது 'ஆரண்ய காண்டம்' சிறுகதைத் தொகுப்பில் உள்ள சில சிறுகதைகள் ரஷ்யன், ஜெர்மன், ஃபிரெஞ்ச், ஹிந்தி, வங்காளம், சிங்களம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 'நவீனம்', 'கோபுரம்' போன்ற இலக்கியச் சிற்றிதழ்களின் ஆசிரியர். 'மலைவாழ் மக்கள் நலச் சங்கம்' அமைப்பின் செயலாளரும்கூட. தனது கட்டுரைகள் மூலம், மலைவாழ் மக்கள் பற்றிய செய்திகளை அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றதால், பல கொத்தடிமைகள் விடுபட்டுள்ளனர். மலைவாழ் மக்கள் அரசிடமிருந்து பல்வேறு வாய்ப்புகளைப் பெறவும் இவர் பல விதங்களில் உதவி புரிகிறார்.

இதுவரை 130க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார் கொ.மா. கோதண்டம். தாய்நாட்டின் மீதும், தாம் வாழும் மண்ணின் மீதும் மிகுந்த பற்றுக் கொண்டவர். இவருடைய மனைவி ராஜேஸ்வரி கோதண்டம் அவர்களும் சிறந்த எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். சமஸ்கிருதம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளிலிருந்து பல நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார்.

தமிழகத்தின் பல அடர்வனப் பகுதிகளில் தங்கி, அங்குள்ள மலைவாழ் மக்களுடன் பழகி, வாழ்ந்து தான் பெற்ற அனுபவங்களை மிக விரிவாக எழுத்தில் பதிவு செய்துவரும் கொ.மா கோதண்டம், தமிழ் இலக்கியத்தின் தனித்துவமிக்க படைப்பாளி.
அரவிந்த்
Share: 
© Copyright 2020 Tamilonline