|
|
|
முன்கதை: ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு சூர்யாவை அறிமுகம் செய்தாள். என்ரிக்கே, க்ரிஸ்பர் முறையால் எவ்வாறு மரபணு எழுத்துத் தொடர்களில் ஓரெழுத்தைக்கூட மாற்றி நோய்களை நிவர்த்திக்கவும், உணவு உற்பத்தியைப் பெருக்க முடியும் என்று விளக்கினார். பிறகு க்ரிஸ்பர் முறையின் பலவீனங்களைப் பற்றி விளக்கி அவற்றைத் தன் ஆராய்ச்சியால் நிவர்த்தித்துள்ளதாகவும், ஆனால் திடீரென நுட்பம் தவறாக செயல்படுவதாகவும் தெரிவித்தார். சூர்யா முதலில் சக நிறுவனரான விக்ரம் மேத்தாவை சந்தித்தார். அவர் க்ரிஸ்பர் முறையின் அடிப்படைக் குறைகளை எவ்வாறு நிவர்த்தித்தனர் என்று விளக்கினார். ஆனால் சூர்யா அவரது அளவுக்கதிக செலவுப் பழக்கத்தைப் பற்றிக் கேட்கவே விக்ரம் கொந்தளித்தார்! வாருங்கள் மேலே நடப்பதைப் பார்க்கலாம்...
*****
விக்ரம் தன் மற்றும் தன் மனைவியின் அபரிதமான செலவுப் பழக்கங்களுக்கான பணத் தேவையைப் பற்றிச் சூர்யா கேட்க, எரிமலையாகக் கொதித்தெழுந்தார். அறையை விட்டு உடனே வெளியேறுமாறு உத்தரவிடவே, சூர்யா, ஷாலினி, கிரண் மூவரும் என்ரிக்கே குழுவினரின் அடுத்த உறுப்பினரைச் சந்திக்கச் சென்றனர்.
என்ரிக்கே அவர்களை நிதித்துறைத் தலைவர் ஷான் மலோனியின் அறைக்கு அழைத்துச் சென்றார். ஷானின் அறை விக்ரமின் அறையைப் போலத் துளிக்கூட ஆடம்பரமாக இல்லை! சுவரில் ஒரு கடிகாரமும், ஒரு சில சட்டமிட்ட சான்றிதழ்களுமே காணப்பட்டன. அவருடைய மேஜைமேல் ஒரு கணினித் திரையும், சில தாள் கோப்புக்களும் (file folders) ஒரு தொலைபேசியுமே இருந்தன.
ஒருக்களித்திருந்த கதவைத் திறந்து எட்டிப் பார்த்த என்ரிக்கேயை, தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த ஷான் உள்ளே வருமாறு சைகை செய்தார். என்ரிக்கே மற்ற மூவரையும் உள்ளே அழைத்து வந்தார். ஷான் அவசரமாக, "சே சே அப்படியெல்லாம் ஒண்ணுமேயில்லை. ஒரு சின்ன சிக்கல் அவ்வளவுதான், சீக்கிரமே நிவர்த்திச்சுடுவோம், உங்க மூலதனம் பிரமாதமான பலன் தரும் கவலையே வேண்டாம்!" என்று கூறிவிட்டு உள்ளே வந்தவர்களை அமருமாறு சைகை செய்தார். "ஹூம் மூலதனத்தார்! அவங்களைச் சமாளிச்சே என் வாழ்க்கை பூரா கழிஞ்சுடும் போலிருக்கு! சரி வாங்க. உங்களுக்கு என்ன உதவி செய்ய முடியும்? எங்க பிரச்சனை தீரும்னா என்னாலான எதையும் செய்யத் தயார்" என்றார்.
கிரண் துள்ளினான்! "ஷான்! நான் உங்க நிதித்துறை இனத்தைச் சேர்ந்தவன். இவங்க மாதிரி விஞ்ஞான நெர்டு இல்லை. நாம ரெண்டு பேரும் நல்லா நிதித்துறை ரகசியங்கள் நெளிவு சுளிவெல்லாம் பேசிக்கலாம்."
ஷான் தலையைப் பின் சாய்த்து "அஹ்ஹஹ்ஹா!" என்று அட்டகாசமாகச் சிரித்துக் கொண்டு கிரணுக்குக் கை கொடுத்தார். முறுவலித்தபடி ஷானுக்குக் கை கொடுத்த சூர்யா, ஓர் அதிர்வேட்டை வீசினார். "என்ன ஷான் உங்க ஹார்வர்டு எம்.பி.ஏ. நண்பர், அதான் கோல்ட்மன் ஸாக்ஸ்ல வேலை பாக்கராறே, ஸ்டீவ், அவர் உங்க நிறுவனத்துல தானிட்ட முதலீடு பத்தி ரொம்ப கவலைப் படராறோ? ஹூம் மூலதனத்தார்!"
ஷான் அதிர்ந்து தொப்பென நாற்காலியில் விழுந்தார். ஆனால் உடனே சினத்துடன் குதித்து எழுந்து என்ரிக்கே பக்கம் கையை உயர்த்தி ஒரு சுட்டு விரலை வெகு ஆத்திரத்துடன் ஆட்டி "எ... எ.... என்ன இது என்ரிக்கே?! என் மேலயே நம்பிக்கையில்லையா உங்களுக்கு? என் தொலைபேசி உரையாடலை ஒட்டுக் கேட்கறீங்களா? என்ன சாதனம் அது? வெளியில நின்னுகிட்டே அதைப் பயன்படுத்தி என் நண்பன் பேசினதையும் கேட்டுட்டு இப்படியெல்லாம் பேசராறா? சே! ஒரு வார்த்தை சொல்லுங்க போதும் நான் வேலையை விசிறிக் கிடாசிட்டு வால் ஸ்ட்ரீட்டுகே திரும்பப் போயி மிக எளிதா பல மில்லியன் பணம் பண்றேன். இங்க கிடந்து அல்லாட வேண்டியதில்லையே!" என்று குமுறினார்.
என்ரிக்கே பதறாமல் சிரிக்கவே ஷான் இன்னும் ஆத்திரத்துடன், "எ...எ... என்னது சிரிக்கறீங்க, என் கோபம் ஜோக்கா இருக்கா உங்களுக்கு?" என்று முகம் சிவக்கக் கொந்தளித்தார்.
என்ரிக்கே சிரிப்பை அடக்கிக்கொண்டு கைகளை மெல்ல தாழ்த்தி சினத்தை அடக்குமாறு சைகை செய்து, விளக்கினார். "அதில்லை ஷான், இது சூர்யாவின் பொதுவான வழிமுறை. புதுசா சந்திக்கற யாரையும் பத்தி சில நொடிகளில எதையோ கண்டுபிடிச்சு அவங்களை அசத்தரார். என்னையும் விக்ரமையும் கூட இப்படித்தான் அசரடிச்சுட்டார். இங்க இருக்கற எதையோ வச்சுத்தான் அவர் யூகிச்சிருக்கணும். என்ன் சூர்யா?"
ஷான் நம்பிக்கையின்றிப் பொருமினார். "அதெப்படி அதுக்குள்ள அத்தனையையும் யூகிக்க முடியும்? என்னை சமாளிக்கறத்துக்காக சால்ஜாப்பு சொல்றீங்களா?" |
|
கிரண் இடைமறித்தான். "சே சே அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. ஆனா நீங்க சொன்னீங்களே ரெண்டு பக்க உரையாடலையும் தொலைவிலிருந்தே கேட்கறா மாதிரி சாதனம்னு, அது நல்ல யோசனையா இருக்கே நாம ரெண்டு பேரும் அதைத் தயாரிக்க ஒரு நிறுவனம் ஆரம்பிக்கலாமே?" கிரணின் நகைச்சுவை ஷானின் சினத்தை இன்னும் உச்சிக்குக் கொண்டு சென்றது.
என்ரிக்கெ கையமர்த்திச் சாந்தப் படுத்தி, "கிரண், ப்ளீஸ் கொஞ்சம் சும்மா இரு, கிண்டல் வேண்டாம், சூர்யா நீங்களே விளக்கிடுங்க, ஷான் ரொம்பக் கோவமாயிருக்கார்!"
சூர்யா முறுவலுடன், விளக்கலானார். "யூகம்னு நீங்க நம்பலை, ஆனா நான் விளக்கினப்புறம் சே இவ்வளவுதானான்னுடுவீங்க… பரவாயில்லை விடுங்க விளக்கிடறேன். உங்க தொலைபேசி உரையாடலைக் கொஞ்சம் நான் கேட்டது உண்மைதான். எங்களை உள்ளே வரச்சொல்லிட்டு கடைசியா சொன்ன ஒரே ஒரு வாக்கியந்தான். அதிலிருந்துதான் பேசியவர் அவருடைய மூலதனத்தைப் பத்திப் கவலைப் படரார்னு தெரிஞ்சுகிட்டேன்! மீதியெதுவும் கேட்கலை."
ஷான் சற்று தணிந்தார். "அப்போ ஹார்வர்டு எம்.பி.ஏ... அவர் பேர் ஸ்டீவ்... அதெல்லாம்? எப்படி அவர் என் எம்.பி.ஏ. நண்பர்னு தெரியும்?"
சூர்யா புன்னகையுடன் தொடர்ந்தார். "உங்க கணினித் திரைப் பக்கத்துல இருக்குற கோப்புல சில தாள்களை மட்டும் விரிச்சு வைச்சிருக்கீங்க பாருங்க." ஷான் இன்னும் சற்றுத் தணிந்தார்! "ஓ! அதுலேந்தா. ஆனா அதுலேந்து அத்தனை விவரம் எப்படித் தெரியும்?"
சூர்யா முறுவலித்தார். "அந்தத் தாள்கள் மட்டுமில்லை ஷான், உங்க சுவர்ல இருக்கற சான்றிதழ்களும் கூடத்தான்!"
ஷான் சுவற்றைப் பார்த்து விட்டுப் புன்னகைத்தார். "ஓ என் ஹார்வர்ட் எம்.பி.ஏ. பட்டச் சான்றிதழ்! ஓகே, ஓகே. ஆனா எப்படி ஸ்டீவ் என் எம்.பி.ஏ. நண்பர்னு தெரியும்?"
சூர்யா புன்னகையுடன் விளக்கினார். "அது வெறும் யூகந்தான். ஆனா நிரூபணமாயிடுச்சு! உங்க சான்றிதழ்லிருந்து உங்க பட்டம் என்ன வருஷம்னு தெரிஞ்சுகிட்டேன். அப்புறம் அந்தத் தாள்களில ஒரு மின்னஞ்சலில ஸ்டீவ் பேருக்கும் @ எழுத்துக்கும் நடுவுல அதே வருஷமும், ஹார்வர்ட் முன்னாள் மாணவர் முகவரி இருக்கறதையும் கவனிச்சேன். ரெண்டும் ரெண்டும் அஞ்சு அவ்வளவுதான்!"
ஷான் "அஹ்ஹஹா! நீங்க சொன்ன மாதிரி இப்போ சே இவ்வளவுதானான்னு நினைக்கத்தான் தோணுது. ஆனா அது ஒண்ணும் அவ்வளவு எளிதில்லன்னு எனக்கு புரியுது. சில நொடிகளில் இத்தனையையும் விவரமாக் கவனிச்சு அதெல்லாம் வச்சு சரியா யூகிக்கறது ரொம்ப சிறப்பான திறன். நீங்க எங்கப் பிரச்சனைக்கு நிவாரணம் காண முடியும்னு எனக்கு நம்பிக்கை தருது. சரி விஷயத்துக்கு வருவோம். சூர்யா சொல்லுங்க, உங்களுக்கு என்ன விவரம் வேணும்?"
சூர்யாவும் ஷானும் பேசப் பேச.....
(தொடரும்)
கதிரவன் எழில்மன்னன் |
|
|
|
|
|
|
|