|
ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாள் ஆலயம், திருக்கோஷ்டியூர் |
|
- சீதா துரைராஜ்|மே 2016| |
|
|
|
|
தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது திருக்கோஷ்டியூர் திவ்யதேசம். இத்தலம் சிவகங்கை-திருப்பத்தூர் சாலையில், சிவகங்கையிலிருந்து வடக்கே 28 கி.மீ. தொலைவிலும், காரைக்குடியிலிருந்து மேற்கே 25 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. திருப்பத்தூர், காரைக்குடி, சிவகங்கையிலிருந்து சாலைவழியே இத்தலத்தை அடையலாம்.
108 வைஷ்ணவ திவ்ய தேசங்களில் திருகோஷ்டியூர் பாசுர அமைப்பில் 108ல் முதலாவதாகவும், பாண்டி 18 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார் ஆகியோர் மங்களாசாஸனம் செய்த தலம். பெரியாழ்வார் தன் திருப்பல்லாண்டுப் பாசுரத்தில், "வண்ணமாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்" எனப் பாடியுள்ளார். அரசர்கள், ஆசாரியர்கள், ஆழ்வார்கள் பெருமாளை வழிபட்டுச் சிறப்படைந்துள்ளனர். கதம்ப மகரிஷி இங்கு வழிபட்டுப் பெருமாளைப் பெற்றார். தேவேந்திரன் வழிபட்டுத் தன் பெயரால் ஒருநாள் கூடுதல் உற்சவம் நடைபெற வரம் பெற்றார். புரூரவ சக்ரவர்த்தி பெருமாளை வழிபட்டு மகாமகத்தன்று இத்தலத்தில் 12 வருடத்துக்கு ஒருமுறை கங்கை முதலிய புண்ணிய நதிகள் திருக்கோயில் கிணற்றில் எழுந்தருள வேண்டி அருளைப் பெற்றார். மாசி பிரம்மோத்சவ காலத்தில் பெருமாள் கருடசேவையில் எழுந்தருளுகிறார். தெப்ப உத்சவத்தில் மகாதீர்த்தமாடி ஆன்மீகப் பெருமக்கள் பெருவாழ்வு கிடைக்கப் பெறுகிறார்கள்.
உலகநன்மை கருதி அசுரர்களை வதம் செய்து தீமை ஒழிய கோஷ்டியாக கூட்டம் கூடியதால் 'திருக்கோஷ்டியூர்' என்று அழைக்கப்படுகிறது. 'திருக்கு' என்றால் பாவம். 'பாவம் ஓட்டும்' என்னும் வகையில் பாவங்கள் தீர்ந்து இன்பம் பெற்றதால் இத்தலம் திருக்கோஷ்டியூர் என அழைக்கப்படுகிறது. இத்தலம் சிறந்த பிரார்த்தனைத் தலமுமாகும். மாசி தெப்பத் திருவிழாவில் விளக்குப் பிரார்த்தனை செய்துகொண்டு நிறைவேறியதும் பல ஊர்களிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் இங்கு விளக்கேற்றி வைத்து வணங்குகிறார்கள். கால்நடைகளைக் கோயிலுக்கு விடுவது, பசுமாடு வால் உருவுதல், பாலாரிஷ்டம் உள்ள குழந்தைகளை பிள்ளைக் கிரயமாக பெருமாளுக்குச் செலுத்துவது, எடைக்கு எடை துலாபாரமாகத் தானியம் கொடுப்பது முதலான பிரார்த்தனைகள் இங்கு மிகச்சிறப்பாக நடைபெறுகின்றன.
மூலவர் திருநாமம் ஸ்ரீ சௌம்யநாராயணப் பெருமாள், உரகமெல்லணையான், பன்னக மிருதுசாயி. தாயார் நாமம் திருமாமகள், ஸ்ரீதேவி, பூதேவி, நிலமாமகள். தீர்த்தம் தேவபுஷ்கரணி மகாமக தீர்த்தம். தலவிருட்சம் பலாமரம். திருமாமகளுக்கு வில்வமரம்.
ஹிரண்யன் என்ற அசுரன் நெடுங்காலத்திற்கு முன் தேவர்களையும் ரிஷிகளையும் தன் தவ வலிமையினால் தானே கடவுள் என்றும், தன் பெயரையே மந்திரமாக உச்சரிக்க வேண்டும் என பலவாறாகத் துன்புறுத்திக் கொன்றான். பல யுகங்களாக நாராயண மந்திரத்தால் உயர்வுபெற்ற கதம்ப மகரிஷியின் ஆசிரமத்தில் ஒரு பூதனைத் தூக்கி எறிந்தான். கோபம் கொண்ட மகரிஷி, தன் ஆசிரமப் பகுதிக்கு ஹிரண்யன் வந்தால் அவன் அழிவான் என்று சாபமிட்டார். கதம்பவனம் தவிர மீதி இடங்களில் எல்லாம் அவன் அட்டகாசம் பொறுக்க முடியவில்லை. இதனால் மனம் வருந்திய மகரிஷிகள், தேவர்கள், பிரம்மா, ருத்ரன் ஆகியோர் ஸ்ரீமன் நாராயணனிடம் முறையிட்டனர். ஹிரண்யன் பிரவேசிக்க முடியாத கதம்பவனத்தில் தேவர் மூவரும் கோஷ்டி கூட, ஹிரண்யனை அழிக்க முடிவுசெய்து, ஸ்ரீமன் நாராயணன் தான் நரசிம்ம அவதாரம் எடுத்து ஹிரண்யனை அழிப்பதாகக் கூறினார். அவர்கள் அங்கேயே அந்த அவதாரத்தைக் காண விரும்ப, எம்பெருமான் நரசிம்ம அவதாரம் எடுக்கும் முன்பேயே அவர்களுக்கு நரசிம்ம உருவில் தரிசனம் அளித்தார். மற்ற அவதாரங்களின் காட்சிகளையும் அவர்கள் காண விரும்ப, அவ்வாறே அவர்களுக்குக் காட்சி கொடுத்தார். |
|
ஐந்துநிலை கோபுரங்களுடன் அழகுறக் காட்சி அளிக்கிறது ஆலயம், ராஜகோபுரம் 85 அடி உயரம் கொண்டது. ஆயிரம் வருடங்களுக்கும் முற்பட்ட மிகப்புராதனமான கோயில். வைஷ்ணவ திவ்யதேசங்களில் அஷ்டாங்க விமானம் அமையப்பெற்ற பிரசித்தி பெற்ற தலம். இங்கு அஷ்டாங்க விமானம் கீழ்த்தளம் நீங்கலாக மேல்தளம் மூன்று அடுக்குகளைக் கொண்டது. மூன்று தளங்களும் 'ஓம் நமோ நாராயணா' என்னும் தத்துவத்தின் அடையாளமாக உள்ளது. கீழ்த்தளத்தில் பூலோகப் பெருமாள் நர்த்தனக் கண்ணனாகக் காட்சி தருகிறார். முதல்தளம் சயனத் திருக்கோலத்துடன் மூலவர் எழுந்தருளும் கருவறையாகவும், இரண்டாம் தளம் உபேந்திர நாராயணர் எழுந்தருளும் கருவறையாகவும், மூன்றாம் தளம் அமர்ந்த திருக்கோலத்தில் பரமபதநாதர் காட்சிதரும் நிலையிலும் வைகுண்டப் பெருமாளாகச் சேவை சாதிக்கிறார். தாயார் திருமகள் தனிச் சன்னிதியில் நிலமகள், குலமகள் எனப் போற்றப்படுவராகக் காட்சி தருகிறார். அஷ்டாங்க விமானத்தின் வடதிசையில் ஸ்ரீ நரசிம்மர் சேவை சாதிக்கிறார். ராகு, கேது கிரகங்கள் அருகில் உள்ளன. தாயார் சன்னிதி மகாமண்டபத்தின் உட்புறம் பூதேவி, ஸ்ரீதேவி சமேதராக நின்ற திருக்கோலத்தில் சங்கு, சக்கரம் அபயஹஸ்தராகச் சிங்கமுகத்துடன் காட்சி தருகிறார் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர். ஊரில் தொற்று வியாதிகளால் தொல்லைகள் நேரும்போது இரவு அகால நேரத்தில் லக்ஷ்மி நரசிம்மரை வீதிவலம் எழுந்தருளச் செய்து ஊர் நலம்பெற்றதாகப் பெரியோர்கள் கூறுகின்றனர்.
திருக்கல்யாண மண்டபம் எழிலுற அமைந்துள்ளது. புராண வரலாறுகளைச் சித்திரிக்கும் புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மூலவரின் சிரசருகே கதம்ப மகரிஷி, திருவடி அருகில் தேவேந்திரன், மது கைடபர்கள், புரூரவ சக்ரவர்த்தி, சுபர்ண மத்தியில் பிரம்மா, சரஸ்வதி, காயத்ரி, சாவித்ரி, சூரியன், சந்திரன், கருடன், நாரதர், தும்புரு முதலான சமஸ்த தேவகணங்களுடன் பாற்கடல்நாதன், தென்திசையில் சிரசும், வடதிசையில் திருப்பாதங்கள், மேல்திசையின் பக்கத்தில் ஸ்ரீ தேவி, பூதேவி, தன் கணவருக்கு சிசுருஷை செய்யும் நிலையில் பாம்பணைப் பள்ளியில் வலக்கரம் உயர்த்தி, அபயகரம் சாதித்து, இடக்கரம் உயர்த்தி, கஜஹஸ்தமாக வரத நிலையில் திருவடி நிலை காட்டி போக சயனமாகக் காட்சி தருகிறார்.
திருக்கல்யாண மண்டபத்தில் மேற்புறமாகச் சிவசன்னதி அமைந்துள்ளது. ஸ்ரீமன் நாராயணன் மூலவராக சயனத் திருக்கோலத்தில் உள்ளது போலவே லிங்கத் திருமேனியான சிவனும், பெருமானின் உடம்பின் ஒரு பாகமாக புருஷ சக்தியாகக் கொண்டு அருள்செய்பவர், சயனக் கோலத்தில் அருள்வது வியக்க வைக்கிறது. இவ்வாலயத்தில் சிவாகம முறைப்படி பூஜை நடக்கிறது. மகாமண்டபத்தில் விநாயகர், சுப்பிரமணியர், நால்வர், இக்கோயிலின் உபகோயிலான வடக்குவாசல் செல்வி அம்மனின் உற்சவர் காட்சி தருகின்றனர். மண்டபத்தின் மேற்கே நந்திகேஸ்வரர் காட்சி தருகிறார். ஏகதள விமானத்துடன் கோயில் எழிலுற அமைந்துள்ளது.
மயன், விஸ்வகர்மாவில் தொடங்கி பல அரசர்கள் இக்கோயிலுக்குத் திருப்பணிகள் செய்துள்ளனர். தொல்லியல் துறையால் 54 கல்வெட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாதவனை வழிபட்டுச் செய்யும் எச்செயலும் வீண்போவது இல்லை என்பது பக்தர்கள் நம்பிக்கை. வருடம் முழுவதும் பெருமாளுக்கு பல திருவிழாக்கள் நடைபெறுகின்றன. மாசியில் நடக்கும் தெப்பத் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
வைஷ்ணவ ஆச்சாரியார் ஸ்ரீராமானுஜர் திருக்கோஷ்டியூர் நம்பி அவர்களிடமிருந்து உபதேசம் பெற்ற 'ஓம் நமோ நாராயணா' என்னும் அஷ்டாட்சர மந்திரத்தை அஷ்டாங்க விமானத்தின்மேல் இருந்து ஜாதி, மத, பேதமின்றி எல்லாருக்கும் உபதேசிக்கிறார். நம்பிக்கும், ராமானுஜருக்கும் ஆலயத்தில் தனிச்சன்னிதி அமைந்துள்ளது.
நாமம் பலசொல்லி நாராயணா என்று நாமங் கையால் தொழுதும் நன்னெஞ்சே வா, மருவி மண்ணுலகம் உண்டுமிழ்ந்த வண்டறையும் தண்டுழாய் கண்ணனையே காண்க நம்கண்!
- பேயாழ்வார்
சீதாதுரைராஜ், அயோவா |
|
|
|
|
|
|
|
|