|
|
|
தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில், புதுகையிலிருந்து 3 கி.மீ. தொலைவிலுள்ள திருக்கோகர்ணத்தில் அமைந்துள்ளது பிரகதாம்பாள் உடனுறை கோகர்ணேஸ்வரர் ஆலயம். சம்பந்தர், நாவுக்கரசர் ஆகியோரால் பாடப்பெற்ற தலம். குடைவரைக்கோவில், அரிய சிற்பங்கள் நிறைந்த மாடக்கோயில் என்னும் சிறப்புக்களைப் பெற்ற தலம். சிவபெருமான் காமதேனுவுக்கு வேங்கை வடிவில் தோன்றி சாபவிமோசனம் அளித்த தலம். சிவனுக்கு அபிஷேகம் செய்வதற்கான புனிதநீரைத் தனது காதுகளில் சேகரித்து வந்ததால் திருக்கோகர்ணம் ஆயிற்று. (கோ = பசு; கர்ணம் = காது). மூலவர் கோகர்ணேஸ்வரர். அம்பாளுக்கு பிரகதாம்பாள் பெரியநாயகி என்ற பெயர்கள் உண்டு. ஆலயத்தின் ஆதிமுர்த்தியின் பெயர் வகுளாரண்யேஸ்வரர், மகிழவன நாதர். இறைவி மங்களநாயகி. மகிழமரமாக விளங்கியதால் இறைவனின் நாமம் மகிழவனநாதர். இவரது லிங்கத் திருமேனியில் காமதேனுவின் குளம்படித் தடம் பதிந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. தீர்த்தம், கங்கா தீர்த்தம் (சுனை). மங்கள தீர்த்தம் மகிழவனநாதர் சன்னிதிக்கு எதிரில் அமைந்துள்ளது. தலவிருட்சம் மகிழமரம்.
குடைவரைக்கோவில் இது. பல மன்னர்களும் இவ்வாலயத்திற்குச் திருப்பணிகள் செய்துள்ளனர். புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ஆஸ்தான தேவி பிரகதாம்பாள். ஆலயம் தெற்குநோக்கி அமைந்துள்ளது. வாயிலில் வினைதீர்க்கும் விநாயகர் காட்சி தருகின்றார். காசி விஸ்வநாதர், விசாலாட்சி, உயிர்களுக்கு மரணவேதனை நீக்கி இன்பந்தரும் பெருமான், அடுத்து வசந்தமண்டபம். உயர்ந்த பீடத்தில் பெரிய துவாரபாலகர்கள். தெற்கு ராஜகோபுரம் பெரிய வாசல் வழியாகக் கோயிலுக்குள் சென்றால் நவராத்திரி கொலு மண்டபம், ஊஞ்சல் மண்டபம், தேவியுடன் அதிகார நந்தி. எதிரே விநாயகர் சன்னிதியின் உட்புறத்தில் கன்னிமூலை கணபதி, தக்ஷிணாமூர்த்திப் பிள்ளையார் காட்சி தருகின்றனர். விநாயகரும், தக்ஷிணாமூர்த்தியும் இணைந்திருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பு. வியாழன்தோறும் இவர்களுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன.
அம்பாள் சன்னிதியில் அருள்மிகு பிரகதாம்பாள் குழந்தை முகமும் புன்சிரிப்புமாகக் காட்சி தருகிறாள். புதுக்கோட்டை சமஸ்தான மன்னர்களின் குலதெய்வமான இவள் மிகுந்த வரப்ரசாதி. வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் தருபவள். சமஸ்தான மன்னர்கள் இந்த அம்மன் உருவம் பொறித்த காசை வெளியிட்டுப் போற்றினர். இந்த அம்மனுக்கு 'அரைக்காசு அம்மன்' என்ற பெயரும் உண்டு. இந்தக் காசு 'அம்மன் காசு' என்று போற்றப்பட்ட பெருமை உடையது. தொலைந்த பொருள் திரும்பக் கிடைக்க இந்த அம்மனை வேண்டிக்கொண்டால் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
அம்மன் சன்னிதிக்கு எதிரே ராஜகோபுரமும், கொடிமரமும், தலவிருட்சமும் அமைந்துள்ளன. அறுபத்துமூவர் சன்னிதிக்கு எதிரே பிள்ளையார் எழுவரும், பெண் தெய்வங்கள் எண்மரும் உள்ளனர். இவ்வாலயத்தில் விநாயகர் நாற்புறமும் நான்கு திசைகளையும் நோக்கி அமைந்துள்ளது தனிச்சிறப்பு. குழந்தை வடிவேலர் குன்றின்மீது நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். முருகன் வள்ளி, தெய்வானையுடன் மயில்மீது அமர்ந்து காட்சி தருகிறார். முருகன் சன்னிதிக்கு முன்பு வில்வமரம் உள்ளது. ஏழு லிங்கங்கள் குன்றின்மீது அமைந்துள்ளன. மேல்தளத்தின் கிழக்குப் பகுதியில் 3 கைகள், 3 கால்களுடன் ஜுரகேஸ்வரர் காட்சி தருகிறார். இவரை வழிபட ஜுரம் நீங்குவதாக நம்பிக்கை. |
|
மூலவர் கோகர்ணேஸ்வரர் சன்னிதியில் இரு நந்திதேவர்கள் உள்ளனர். இக்குடைவரையை பாண்டியர்கள் அமைத்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆலயத்தில் 11 கல்வெட்டுக்கள் உள்ளன. கொடிமரத்தை வணங்கி, தொடர்ந்து படியேறி மேலே சென்றால் கங்காதீர்த்தமாகிய சுனை உள்ளது. மேற்குப்பகுதியில் ருத்திராக்ஷ லிங்கம், அன்னபூரணி, துர்க்கை, திருமகள், கலைமகள் உள்ளனர். இவ்வாலயத்தின் காவல்தெய்வம் பைரவர். சூரிய சந்திரர் உள்ளனர். ஆனால் நவக்கிரகங்கள் இல்லை.
மகிழவன நாதர் காமதேனுவால் வழிபடப்பட்ட பெருமை உடையவர். அன்னை மங்களநாயகி மங்களங்களை வாரித்தருபவள். சன்னிதியில் ஒலியெழுப்பும் இசைத்தூண்கள் உள்ளன. பெருமானைச் சுற்றி எட்டுப் பலிபீடங்கள் உள்ளன. இவை அஷ்டதிக் பாலகர்களைக் குறிப்பதாகச் சொல்கின்றனர். ஆண்டின் சில நாட்களில் சூரியன் தன் ஒளிக்கதிர்களால் இறைவனைத் தொழுவதாக ஐதீகம். மகிழவன நாதருக்கு எதிரே உள்ள நந்திதேவர் அபூர்வமானவர். ஆஞ்சநேயருக்கும் தனிச்சன்னிதி உள்ளது. சதாசிவ பிரம்மேந்திரரின் உருவம் தூண் ஒன்றில் செதுக்கப்பட்டுள்ளது. மௌனகுருவான இவர் புதுக்கோட்டை சமஸ்தான மன்னர்களின் ஆன்மீக குரு. இவர், புதுக்கோட்டை சமஸ்தான மன்னர் விஜயரகுநாதத் தொண்டைமானுக்கு எழுதிக்காட்டிய தக்ஷிணாமூர்த்தி மந்திரம் இன்றளவும் புதுக்கோட்டை மன்னர் பரம்பரையினரால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. நெரூரில் சதாசிவ பிரம்மேந்திரரின் ஜீவசமாதி உள்ளது. நிர்வாகத்தை புதுக்கோட்டை சமஸ்தானமே செய்து வருகிறது.
ஆலயத்தில் சித்திரை விழா, ஆடிப்பூரம், நவராத்திரி எனப் பல விழாக்களும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகின்றன.
பேதைமட மங்கையொரு பங்கிட மிகுத்திடப மேறியமரர் வாதைபட வண்கடலெ ழுந்தவிட முண்டசிவன் வாழுமிடமாம் மாதரொடு மாடவர்கள் வந்தடி யிறைஞ்சிநிறை மாமலர்கடூய்க் கோதைவரி வண்டிசைகொள் கீதமுரல் கின்றவளர் கோகரணமே
- ஞானசம்பந்தர்
சீதா துரைராஜ், சிகாகோ, இல்லினாய்ஸ் |
|
|
|
|
|
|
|