Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம்
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | முன்னோடி | Events Calendar | பொது | நலம்வாழ | எனக்கு பிடித்தது | புதினம் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
நலம்வாழ
உயரச் செல்வோர் கவனிக்க வேண்டியவை
- மரு. வரலட்சுமி நிரஞ்சன்|மே 2016|
Share:
Click Here Enlargeகோடைக்காலம் நெருங்கிவரும் வேளையில் விடுமுறைக்கு எங்கு பறக்கலாம் என்று நம்மில் பலர் எண்ணுவதுண்டு. பயணக்காலத்தில் கையாளவேண்டிய மருத்துவ எச்சரிக்கையை சென்ற வருடம் ஆகஸ்டு இதழில் கண்டோம். இந்த இதழில் குறிப்பாக மலைப்பயணம் சமயத்தில் கையாள வேண்டிய எச்சரிக்கை முறைகள் பற்றிப் பார்க்கலாம்.

மலைப்பயணம்
மலையேற்றம் உடற்பயிற்சி அல்லது சுற்றுப்பயணமாக மிகவும் பிரபலமாகி வருகிறது. சிலருக்கு அலுவலக வேலையாகவும் உயர்ந்த மலைப்பிரதேசங்களுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். இதில் குறிப்பாக அமெரிக்காவில் இருக்கும் சில தேசியப் பூங்காக்களும், கொலாராடோ மலைப்பிரதேசமும், பெரூ நாட்டின் மாச்சு பிச்சு மலையும், இந்தியாவில் இமாலயம், கைலாயம், லடாக் பிரதேசங்களும், நேபாள மலைத்தொடர்களும் அடங்கும். இந்த இடங்களுக்குப் பயணிக்கும் முன்னர் அறியவேண்டிய எச்சரிக்கை முறைகளை அறியலாம் வாருங்கள்.

மலைப்பிரதேசங்களை அவற்றின் உயரத்தை வைத்து மூன்றுவகையாகப் பிரிக்கலாம்:
உயரமான பிரதேசம் - 1500m -3500m (4921-11,483 ft )
மிக உயரமான பிரதேசம் - 3500m -5500m (11483-18,045 ft )
மிகமிக உயரமான பிரதேசம் - > 5500m (>18045 ft )

உயரப்பிரதேச உபாதைகள்

இவற்றை மூன்று விதமாகப் பிரிக்கலாம்.
மலைப்பிரதேச உபாதை - Acute Mountain Sickness
உயரப் பிரதேச நுரையீரல் உபாதை - High Altitude Pulmonary Edema
உயரப் பிரதேச மூளை உபாதை - High Altitude cerebral Edema

இதில் முதலாவதாகச் சொல்லப்படும் உபாதை அதிகம் காணப்படும்.
இவை உயரப்பிரதேசத்திற்கு ஏறிய முதல் ஓரிரண்டு நாட்களில் உண்டாகும்.
அறிகுறிகள்
தலைவலி
களைப்பு
வயிற்றுப் போக்கு
தலைசுற்றல்
தூக்கம் தடைப்படுதல்

தீவிரமான அறிகுறிகள்
மூச்சுவாங்குதல்
இடைவிடாத இருமல்
இளஞ்சிவப்பு நிறத்தில் சளி வருதல்,
நடக்கமுடியாமல் தள்ளாடுதல்
மனக்குழப்பம்
அதீதமான களைப்பு

தீவிர அறிகுறிகள் இருந்தால் உடனடியாக தகுந்த பாதுகாப்புடன் மலைப்பிரதேசம் விட்டு இறங்குதல் நல்லது. உடனடி மருத்துவ சிகிச்சை மிகவும் அவசியம். அறிகுறிகள் குறைவாக இருந்தால் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஓய்வு எடுத்தல் அவசியம். மேலும் உயரம் ஏறுவதைத் தள்ளிப்போட வேண்டும்.

பயணத்திற்கு முன்பு செய்யவேண்டிய தற்காப்பு முறைகள்
* பயணம் மேற்கொள்ளும்போது தேவையான நாட்கள் அவகாசம் எடுத்துக்கொள்ள வேண்டும். உயரம் ஏறிய முதல் 2 நாட்களுக்கு ஓய்வு அவசியம். மேலும் மேலும் உயரம் ஏறாமல் ஒரே இடத்தில் இருந்தபடி அந்த உயரத்திற்கு பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு ஏற்றபடி விடுமுறை நாட்களை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும். இடத்தைப்பற்றி முன்பே படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.

* இந்தப் பிரதேசங்களுக்குப் போவதற்கு முன்னர் உடற்பயிற்சி செய்து உடலைத் திடமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.

* பயணத்திற்கு முன்னர் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. குறிப்பாக, நுரையீரல், இருதய உபாதை இருப்பவர்கள் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இருமல், சளி இருந்தால் மருந்து எடுத்து குணப்படுத்திக்கொள்ள வேண்டும்.
* பயணத்திற்கு முன்னரும், பயணத்தின்போதும் நிறையத் தண்ணீர் அருந்தவேண்டும். ஒரு நாளைக்கு 2- 3 லிட்டர் தண்ணீர் தேவைப்படலாம். அதிகமாக காஃபி, தேநீர், மது அருந்தாமல் இருப்பது நல்லது.

* வெவ்வேறு நாடுகளில் இருந்து பயணிப்போரும், பயணப் பின்தங்கல் இருப்பவரும் தூக்கம், ஓய்வு இவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். பயணக் கால அட்டவணையில் ஓய்வுக்கென்று ஒருநாள் ஒதுக்கிவிட வேண்டும்.

* மிக அதிக உயரம் செல்பவரும், அதற்கு முன் உயர உபாதை வந்தவரும் மருத்துவரை நாடி, இவற்றுக்கான மருந்துகளை வாங்கிக்கொள்ள வேண்டும். குறிப்பாக விமானம் வழியே விரைந்து அதிக உயரம் பயணிப்பவர்கள் கவனம் செலுத்தவேண்டும்.

எந்தப் பிரச்சனை ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவ உதவி பெறவேண்டும். கூடுமானவரை தனியாகச் செல்லாமல் கூட்டமாகப் பயணிக்க வேண்டும். ஆக்சிஜன் குறைவாக இருக்கும் இடங்களில் ஆக்சிஜன் கூட எடுத்துக்கொள்வது நல்லது.

மருந்துகள்
தலைவலிக்கு Tylenol அல்லது Ibuprofen எடுத்துக்கொள்ளலாம். ஆனால் தீவிர மலைப்பிரதேச உபாதை வராமல் இருக்கச் சில மருந்துகள் தேவைப்படும். இவற்றை மருத்துவர் சீட்டுடன் பெற்றுகொள்ள வேண்டும். இவற்றில் Diamox, Dexamethasone ஆகிய மருந்துகள் அடங்கும். இவற்றில் ஏதேனும் ஒன்று பிரயாணம் தொடங்கும் நாள் முதல் முடியும்வரை தேவைப்படலாம். மேலும் மேலும் உயரம் ஏறுவதாக இருந்தால் ஒரு நாளைக்கு 600 மீட்டருக்கு மேல் ஏறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

மரு. வரலட்சுமி நிரஞ்சன்
Share: 




© Copyright 2020 Tamilonline