Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | சாதனையாளர் | சமயம் | பொது
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | அஞ்சலி | சிறப்புப் பார்வை | முன்னோடி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சமயம்
சூரியனார் கோயில்
- சீதா துரைராஜ்|மே 2015|
Share:
தென்னிந்தியாவில் சூரியனுக்கென்று அமைந்துள்ள ஒரே தலம் சூரியனார் கோயில். இத்தலம் தமிழ்நாட்டில் கும்பகோணத்திலிருந்து 15 கி.மீ. தொலைவிலும், ஆடுதுறையிலிருந்து 2 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. அருகேயுள்ள தலம் திருமங்கலக்குடி. இங்குள்ள மங்களநாயகி சமேத பிராணநாதேஸ்வரரை வழிபட்ட பிறகே சூரியனார் கோயிலுக்குச் சென்று வழிபடவேண்டும். சூரியதோஷ நிவர்த்தித் தலம். தோஷ பரிகாரத்தலம். நவக்கிரகங்கள் தங்கள் வரம்புக்கு மீறி வரங்களை காலவ மகரிஷிக்கு அளித்து பிரம்மனது சாபத்திற்கு ஆளாகினர். சாப நிவர்த்திக்காக இத்தலம் வந்து காவிரியில் நீராடி, மங்களநாயகி சமேத பிராணநாதேஸ்வரரைக் குறித்துப் பலகாலம் தவமிருந்து சிவதரிசனம் பெற்றனர். சிவபெருமான் அவர்களிடம் "இங்கு உங்களுக்கெனத் தனி ஆலயத்துடன் உங்களுக்கான தலமாக விளங்கட்டும். உங்களை வழிபடுவோருக்கு நீங்கள் சுதந்திரமாக அருள்புரியும் வரம் தந்தோம்" என்று அருளினார்.

ஆலய ராஜகோபுரம் மேற்குநோக்கி அமைந்துள்ளது. சுமார் ஐம்பதடி உயரம். மூன்று நிலைகள், ஐந்து கலசங்களைக் கொண்டுள்ளது. ஆலயத்தில் உள்ளே சிவசூரியப் பெருமான் சாயா, உஷா தேவியருடன் எழுந்தருளியுள்ளார். சூரியன் இரு கரங்களிலும் செந்தாமரை ஏந்திப் புன்முறுவலுடன் காட்சிதருகிறார். உஷாதேவி வலக்கரத்தில் நீலோத்பல மலரும், பிரத்யுஷா தேவியின் இடக்கரத்தில் தாமரை மலருடனும் நின்ற வண்ணத்தில் காட்சி தருகின்றனர். குரு பார்க்கக் கோடி நன்மை என்பதற்கேற்பக் கருவறையில் இருக்கும் சூரியனை குரு பார்க்கிறார். கர்ப்பக்கிரகத்தின் மேலே ஏகதள விமானமும் அதன் நான்கு மூலைகளில் கருங்கற்களால் அமைந்த சிற்பங்களும் உள்ளன. இக்கோயில் தேர் வடிவில் அமைந்துள்ளது. வருடத்தில் மூன்று நாட்கள் சூரிய ஒளிக்கதிர்கள் மூலவரின் பாதத்தில் படுமாறு ஆலயம் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் அக்னிநட்சத்திர நாட்களில் மூலவர் சூரியபகவான் மீது அனல்பறக்கும் அனுபவத்தை ஆலய சிவாசாரியார்கள் சிலிர்ப்புடன் கூறுகின்றனர்.

வாகனங்கள், ஆயுதங்கள் ஏதுமின்றி நவக்கிரகங்களும் இத்தலத்தில் தனித்தனிச் சன்னதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். இரண்டு அசுப கிரகங்களுக்கு நடுவில் ஒரு சுபக்கிரகம் என்ற வரிசையில் இத்தலத்தில் நவக்கிரகங்கள் அமைந்துள்ளனர். இந்த ஒரே தலத்தில் அனைத்து கிரகங்களுக்கும் தோஷ பரிகாரம் செய்யலாம். சண்டேஸ்வரர் தனிச்சன்னதியில் எழுந்தருளியுள்ளார். கோள்தீர்த்த விநாயகர் ஆலயத்தின் தென்மேற்கு மூலையில் தனிச்சன்னதியில் எழுந்தருளி உள்ளார். மிகுந்த வரப்பிரசாதி. அனைத்து கிரகங்களும் ஒன்று சேர்ந்து பிரதிஷ்டை செய்து, வழிபட்டு தங்கள் தோஷங்களை நிவர்த்தி செய்துகொண்ட விநாயகர் இவர். வடக்குப் பிரகாரத்தில் தீர்த்தக் கிணறு, தெற்குப் பிரகாரத்தில் வெள்ளெருக்காகிய தல விருட்சம் ஆகியன உள்ளன.
பன்னிரண்டாம் நூற்றாண்டில் முதலாம் குலோத்துங்க சோழன் ஆலயத்தை கற்றளியாக அமைத்து 'குலோத்துங்க சோழ மார்த்தாண்டாலயம்' எனப் பெயர் சூட்டினான். விஜயநகர மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் பல மண்டபங்கள் கட்டப்பட்ட செய்திகள் கல்வெட்டில் காணக் கிடைக்கின்றன. பரீட்சித்து மன்னன், சித்திராங்கத பாண்டியன், புரூரவசு மன்னன், இந்திரன், தூமகேது, நள மகாராஜா எனப் பலர் நவக்கிரகங்களை வழிபட்டு நற்கதி அடைந்தனர். இவ்வாலயம் திருவாவடுதுறை நிர்வாகத்தின்கீழ் அமைந்துள்ளது. ஆலய நுழைவாயில் அருகே அமைந்துள்ள திருமூலர் வைத்தியசாலையில் இலவச மருத்துவம், அன்னதானம், பக்தர்கள் தங்கும்வசதி போன்றவை ஆதீனத்தால் சிறப்புற நடத்தப்படுகின்றன.

சூரியன் நவக்கிரகங்களில் தலைவர். சிவபெருமானின் முக்கண்ணில் வலக்கண்ணைக் குறிப்பவர். உடல்நலம், புகழ், செல்வாக்கு, மங்களம், வெற்றி ஆகியவற்றை அளிப்பவர். ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பதனாலும், சிவப்பு வஸ்திரம், மாணிக்கக்கல் அணிவதாலும் கோதுமை, பசு தானம் செய்வதாலும் சூரியகிரக தோஷங்கள் நிவர்த்தியாகும். தினந்தோறும் சூரியனை வழிபட எல்லா நலங்களையும் பெறலாம். நான்கு வேதங்களும் சூரிய வழிபாட்டைக் குறிப்பிடுகின்றன. தொன்றுதொட்டு உலகின் பல மதங்களிலும் சூரிய வழிபாடு பழக்கத்தில் இருந்திருக்கிறது. சூரியன் இல்லையேல் இவ்வுலகமே இல்லை என்பதே உண்மை. சூரியனுடைய கிரணங்களுக்குச் சில நோய்களைப் போக்கும் சக்தி உள்ளதை விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். சூரிய வழிபாட்டால் கண்நோய், சருமநோய், இதயநோய், காமாலை போன்றவை நீங்குவதாக நம்பிக்கை. ராமபிரான் அகத்திய முனிவர் உபதேசித்த 'ஆதித்ய ஹ்ருதயம்' என்னும் சூரிய தோத்திரத்தைக் கூறியே ராவணனை வெல்லும் வல்லமையைப் பெற்றார்.

தமிழ்நாட்டில் சூரியன் மகரராசியில் தைமாதம் முதல் தேதியன்று பிரவேசிப்பதைப் பொங்கல் விழாவாகக் கொண்டாடுகிறோம். இந்தியாவின் பிற பகுதிகளில் இது மகர சங்கராந்தியாகக் கொண்டாடப்படுகிறது. சனிப்பெயர்ச்சி, ராகு, கேதுப் பெயர்ச்சி, குருப் பெயர்ச்சி போன்ற சிறப்பு வழிபாட்டு நாட்களில் நேரில் வரமுடியாது தொகையனுப்பும் அன்பர்களுக்கு ஆலய நிர்வாகத்தால் அர்ச்சனை செய்யப்பட்டு பிரசாதம் தபாலில் அனுப்பி வைக்கப்படுகிறது.

சீதா துரைராஜ்,
சான் ஹோஸே, கலிஃபோர்னியா
Share: 




© Copyright 2020 Tamilonline