Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
June 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | அமெரிக்க அனுபவம் | சமயம் | பொது
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | அஞ்சலி | சிறப்புப் பார்வை | கவிதைப்பந்தல்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சமயம்
ஸ்ரீ அக்னீஸ்வரர் ஆலயம், கஞ்சனூர்
- சீதா துரைராஜ்|ஜூன் 2015|
Share: 
Click Here Enlargeநவக்கிரகத் தலங்களில் கஞ்சனூர் சுக்கிரபகவான் தலம். இத்தலம் மயிலாடுதுறை - கும்பகோணம் வழித்தடத்தில் அமைந்துள்ளது. ரயில் மற்றும் பேருந்து மூலம் இத்தலத்தை அடையலாம். இத்தலத்தின் பழைய பெயர் கஞ்சாறு. தேன் ஒழுகிப் பழச்சாறுடன் சேர்ந்து ஆறாக ஓடும் ஊர் என்பது மருவி கஞ்சனூர் ஆயிற்று. கம்சபுரம் என்ற பெயரும் உண்டு. இறைவன் அக்னீஸ்வரர். இறைவி கற்பக நாயகி. தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம், அக்னி தீர்த்தம், பராசர தீர்த்தம். தலவிருட்சம்: பலாசமரம்.

பிரம்மா ஒருமுறை இறைவன், இறைவியின் திருமணக்கோலம் காணவிரும்பித் தவமிருக்க, இத்தலத்தில் இறைவன் அவ்வாறே காட்சியருளினார். இதை மற்றவரும் காணவேண்டும் என பிரம்மா விரும்ப அதன்படி இந்த ஆலயம் அமைக்கப்பெற்றது. எல்லாத் தலங்களிலும் இறைவனை வேண்டி இறைவி தவமிருந்து இறைவனை மணந்ததாக வரலாறு இருக்கும். ஆனால் இத்தலத்தில் இறைவனே வந்து தேவியை மணந்ததாக வரலாறு. இத்தலத்திற்கு சுக்கிரன், சந்திரன், பராசரர், கம்சன், அக்னி, ஏயர்கோன் கலிக்காமநாயனார், சுரைக்காய்ச்சித்தர் உள்ளிட்ட பலர் வந்து தரிசித்து அருள் பெற்றுள்ளனர்.

ஒருசமயம் அந்தகாசுரன் தலைமையில் தேவர்கள், அசுரர்கள் போரிட, மாண்ட அசுரர்கள் யாவரையும் அசுர குரு பார்க்கவர் சஞ்சீவினி மந்திரம்மூலம் இறந்தோரை உயிர்பெறச் செய்தார். தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட, சினங்கொண்ட சிவன், பார்க்கவனை அழைத்துவரச் செய்து அக்னிப் பிழம்பாக மாற்றி விழுங்கிவிட்டார். இறைவனுள்ளுள் ஒடுங்கிய பார்க்கவர் அங்கேயே அவரைத் தொழுது பல ஆண்டுக்காலம் தவம்செய்தார். இறைவன் மனமிரங்கி அவரை வெளிவரச் செய்தார். அவரது வெண்ணிறம் கருதி பார்க்கவர், 'சுக்கிரன்' என்று பெயர்பெற்றார். வெள்ளி, சுக்ராச்சாரியார் எனப் பலபெயர்கள் அவருக்குண்டு.

மகாபலி, வாமனராக வந்த மாலுக்கு தானங்கொடுக்க முன்வந்தபோது சுக்கிராச்சாரியார் ஒரு வண்டாக உருவெடுத்து கிண்டியின் வாயிலை அடைத்து தானம் முழுமைபெறாமல் தடுத்தார். வாமனர் தர்ப்பையால் அடைப்பைக் குத்தவே, சுக்கிரனின் ஒரு கண் போயிற்று. பின்னர் காசி சென்ற சுக்கிரன் ஈசனை வேண்டித் தவம்செய்து கிரகபதவி பெற்றார்.
இத்தலத்தில் சுக்கிரனுக்கென்று தனிச்சன்னிதி இல்லை. மூலவரான சிவனே சுக்கிரனை வயிற்றினுள் அடக்கியவராகக் காட்சிதருகிறார். அதனால் சுக்ரதோஷ வழிபாடு அனைத்தும் ஸ்ரீ அக்னீஸ்வரருக்கே நடைபெறுகிறது. சுக்கிரனின் நிறம் வெண்மை. மொச்சைப்பயிறு, அன்னம், வெண்தாமரை மலர், தேங்காய், பழம், வெள்ளாடை சாற்றி அக்னீஸ்வரரை இங்கு வழிபடுவர்.

கோயிலமைப்பு: அம்மன் சன்னிதி நுழைவாயில் முன்பக்கம் இடப்புறம் விநாயகரும் வலப்புறம் காசி விஸ்வநாதர், விசாலாட்சியும் காட்சி தருகின்றனர். பிரகாரத்தில் தக்ஷிணாமூர்த்தி, விநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, துர்க்கை காட்சியளிக்கின்றனர். தலமரமாகிய பலாசம் அருகேயுள்ளது. இறைவன் சன்னிதி முன்மண்டபத்தில் மேற்குச்சுவர் பக்கம் நடராஜர், நவக்கிரக சன்னிதி, சனிபகவான் சன்னிதி ஆகியன அமைந்துள்ளன. மேற்குப்பக்கம் மானக்கஞ்சனார், கலிக்காமர், சுரைக்காய்ச்சித்தர் ஆகியோரை தரிசித்து வடக்குப்பக்கம் சூரியன், சனி, சுக்கிரலிங்கம், கம்சலிங்கம், நால்வர் நந்தியை வழிபட்டு கோபுர வாயிலுக்கு வந்தால் வழிபாடு பூர்த்தியாகிறது.

கொடிமரம் பக்கமுள்ள நந்திபற்றி ஒரு சுவையான கதை கூறப்படுகிறது. அந்தணர் ஒருவர் புல்கட்டைக் கைதவறி கன்றின்மீது போட அது இறந்தது. அதனால் பசுவைக்கொன்ற தோஷம் அந்த அந்தணரைப் பீடித்ததாகக் கருதி மற்ற அந்தணர்கள் அவரை விலக்கிவைத்தனர். அவர் இத்தலத்திற்கு வந்து ஹரதத்தன் என்பரிடம் முறையிட, அவர் அந்தணரை பிரம்மதீர்த்தத்தில் நீராடி, ஒரு கைப்பிடிப்புல்லை நந்திதேவரிடம் வைத்து இறைவனை வேண்டிவரும்படிக் கூற, அந்தணர் அவ்வாறே செய்தார். என்ன ஆச்சரியம், கல்நந்தி அவர் வைக்கும் புல்லைத் தின்றுவிட்டதாம்! அதனால் இங்கு நந்தியின் நாக்கு வெளியில் தெரிவதில்லை என்று கூறப்படுகிறது.

இக்கோயிலில் மாசி மாதத்தில் மாசிமகப் பெருவிழா, ஏகதினவிழா, தைமாதத்தில் ஹரதத்தன் காட்சிபெற்ற விழா போன்றவை நடைபெறுகின்றன. இத்தலம் மதுரை திருஞானசம்பந்த ஆதீனத்தின் பராமரிப்பில் இயங்கிவருகிறது. தினசரி மூன்றுகால பூஜையும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. சுக்ர தோஷ நிவர்த்தித்தலமான இது, வளமாக வாழ விரும்புவோர் அவசியம் வழிபடவேண்டிய தலமாகும்.

சீதா துரைராஜ்,
அயோவா
Share: