Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | சாதனையாளர் | சமயம் | பொது
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | அஞ்சலி | சிறப்புப் பார்வை | முன்னோடி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சித்திரம் | மாயச்சதுரம் | மூளைக்கு வேலை | Sudoku | சதுரங்கப் புலி |
Tamil Unicode / English Search
இளந்தென்றல்
பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா
- |மே 2015|
Share:
ராஜராஜ சோழன் ஆண்ட காலத்தில் தஞ்சை நகரத்திலே அழகி என்ற மூதாட்டி ஒருத்தி இருந்தாள். அவள் மிகவும் நல்லவள். கருணையும் பணிவும் கொண்டவள். சிவன்மீது பேரன்பு கொண்டவள். ஆனால் அவள் இறைவனிடம் எதையும் கேட்டதில்லை. இறைவனிடம் எதையும் கேட்டுப்பெறும் தகுதி தனக்கில்லை என்று நினைத்தாள். தெய்வ சிந்தனை உள்ள பெரியோருக்குச் சேவை செய்வதே பரமனுக்குச் செய்யும் சேவை என்று அவள் மனதார நினைத்தாள்.

அரசன் தஞ்சைப் பெரியகோயில் கட்டுவதை அறிந்து, திருப்பணி நடக்குமிடத்துக்கு அவள் தினந்தோறும் செல்வாள். அங்கு சிற்பிகள், கொத்தனார்கள் மற்றும் பிறர் செய்யும் பணியை ஆர்வத்தோடு பார்த்தாள். அவளுக்குத் தானும் ஏதேனும் பணி செய்ய ஆசையானது. அவளுக்கு வயதாகி இருந்ததால் அவர்கள் "உன்னால் வேலை செய்யமுடியாது" என்று மறுத்தார்கள். அவள் அளவுகடந்த பக்தியுடன் கவனித்த போது, வெம்மையான நண்பகல் நேரத்தில் பணியாளர்கள் சோர்வடைவதை அவள் கவனித்தாள். கடுகு, இஞ்சி, கறிவேப்பிலை போட்டுத் தாளித்த நீர்மோரை அவள் கொண்டு வந்து அன்போடு அவர்களுக்குத் தந்தாள். அவர்கள் அதைப் பருகிக் களைப்பு நீங்கி வேலையை உற்சாகமாகத் தொடர்ந்தனர். திருப்பணி முடியும்வரை பல ஆண்டுகள் அவள் இந்தச் சேவையை அன்போடு செய்தாள்.

216 அடி உயர்ந்த விமானமானது கட்டிமுடியும் தருவாயில் இருந்தது. அப்போது கிழவிக்கு ஒரு ஆசை வந்தது. "பாட்டி, என்ன வேண்டுமென்று சொல்லுங்கள். உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுகிறோம்" என்று பணியாளர்கள் கூறினார்கள். "என் வீட்டுத் தோட்டத்தில் ஒரு பெரிய கல் இருக்கிறது. அது இந்தக் கோவில் விமானத்தில் மேல்தளமாகப் பொருத்த உதவும். அதை எடுத்து வந்து சரியாகச் செதுக்கி இங்கே பொருத்திவிட்டால் எனக்கு மகிழ்ச்சியாகும்" என்றாள் கிழவி. கட்டடப் பொறுப்பாளர் ஆட்களை அனுப்பி அந்தக் கல்லை எடுத்து வந்து, சரியாகச் செதுக்கி விமானத்தின் உச்சியிலே பொருத்திவிட்டனர்.

கும்பாபிஷேக நாள் நெருங்கியது. கோயிலைச் சுற்றிப் பார்த்த ராஜராஜன் பெரிதும் மகிழ்ந்தான். இந்தத் தெய்வத் திருப்பணி செய்வதற்கெனத் தான் தேர்ந்தெடுக்கப்பட்ட கருவி ஆனோம் எனத் தற்பெருமை கொண்டான். மறுநாள் நடக்கவிருக்கும் கும்பாபிஷேகத்தை நினைத்தபடியே உறங்கிப் போனான். அன்றிரவு கனவில் சிவபெருமான் பிரகதீஸ்வரராக வந்து, "அரசனே, பெரியகோவிலில் கிழவி அமைத்துத் தந்த நிழலில் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்" என்று கூறினார். அரசன் திடுக்கிட்டெழுந்தான். பெருந்தெய்வம் ஒரு கிழவி தந்த புகலிடத்தில் தங்குவதாவது? நானல்லவா கோவிலைக் கட்டினேன்? இந்தக் கிழவி யார்? குழம்பினான் ராஜராஜன். இருந்தாலும் பணிவுகொண்ட அவன் உள்ளம் யோசித்தது.
அந்தக் கிழவி எங்கே இருக்கிறாள் என்று தேடச் சொன்னான். அழகி என்ற கிழவி அந்தக் கோயில் எத்தனை ஆண்டுகளாகக் கட்டப்பட்டதோ அத்தனை ஆண்டுகளும் அங்கு நீர்மோர் சேவை செய்தாள் என்பதைக் கூறினர். பரமேஸ்வரனுடைய மனதையும் அவள் குளிர வைத்திருக்கிறாள் என்பதைப் புரிந்துகொண்டான். அவளது பக்தியின் உயர்வைக் கருதி, கூப்பிய கரத்தோடு அரசன் அவளுடைய குடிசை வாசலிலே மக்களோடு போய் நின்றுவிட்டான். அவளை ஊர்வலமாகக் கோவிலுக்கு அழைத்து வந்த பின்பே கும்பாபிஷேகத்தைத் துவங்கினான். அவள் எப்போதும்போல் பணிவோடு தலைதாழ்ந்து நின்றாள்.

அவளுடைய பக்தியின் கதை கர்ணபரம்பரைக் கதையாகக் கொண்டாடப்பட்டது. அவளது குடிசை 'அழகி பூங்கா' ஆனது. குடிசைக்கு முன்னே இருந்த இடத்தில் 'அழகி குளம்' வெட்டப்பட்டது.

சடங்கு சம்பிராதயத்தைவிட அன்போடு சேவையே விமானத்தின் உச்சியில் வைக்கப்பட்ட கல்போல் உயர்வானது.

(இந்தக் கதை 'பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் சின்ன கதைகள்' என்ற பெயர்கொண்ட MP3 CDயில் கவிஞர் பொன்மணி அவர்களால் சொல்லப்பட்டது. வெளியீடு: Sri Sathya Sai Books and Publications Trust, Tamil Nadu, Chennai.)
Share: 




© Copyright 2020 Tamilonline