Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | சாதனையாளர் | சமயம் | பொது
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | அஞ்சலி | சிறப்புப் பார்வை | முன்னோடி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
நேர்காணல்
ஈர நெஞ்சம் மகேந்திரன்
- அரவிந்த்|மே 2015||(3 Comments)
Share:
தஞ்சாவூரைச் சேர்ந்தவர் அசோகன். மனநிலை பிறழ்ந்த இவர் 18 ஆண்டுகளுக்கு முன் வீட்டைவிட்டுக் காணாமல் போய்விட்டார். இறந்துவிட்டதாகக் குடும்பத்தினர் நினைத்தனர். கோவையில் பிச்சைக்காரர்போல் பேருந்து நிறுத்தத்தில் அலைந்து கொண்டிருந்த அவரை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை அளித்து, குணமாக்கி, குடும்பம்பற்றி விசாரித்து அவர்களுடன் அவரைச் சேர்த்து வைத்தார் இளைஞர் மகேந்திரன். இப்படிப் பல சம்பவங்கள்; பரிதாபத்துக்குரிய பல மனிதர்கள். கோவையில் மோட்டார் உதிரிபாகம் தயாரிக்கும் சிறுதொழில் செய்துவரும் மகேந்திரன், தென்றல் வாசகர்களுக்கு முன்பே அறிமுகமானவர்தான். (பார்க்க). தனியொருவராக சமூகப்பணி செய்து கொண்டிருந்தவர் தற்போது 'ஈர நெஞ்சம்' என்ற அறக்கட்டளையைத் தோற்றுவித்து முன்னிலும் தீவிரமாக சமூகப்பணி செய்கிறார். சாலைகளில் அனாதையாகத் திரிந்து கொண்டிருப்பவர்களைச் சுத்தப்படுத்தி, சிகிச்சை அளித்து, ஆதரவற்றோர் காப்பகங்களில் சேர்த்து விடுகிறார்; அனாதையாக இறந்தவர்களை நல்லடக்கம் செய்கிறார். 'அறச்செம்மல்', 'சேவையாளர்' உட்படப் பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார். தொலைக்காட்சிகள், ஆங்கில/தமிழ் இதழ்கள் இவரது சேவையைப் பாராட்டியுள்ளன. மகேந்திரனும் தன்னைப்போல தொண்டுள்ளம் கொண்டோரை அடையாளம் கண்டு கட்டுரைகள் எழுதி வருகிறார். தென்றலுக்காக அவருடன் நிகழ்த்திய உரையாடலிலிருந்து.

கே: சமூகசேவையில் ஆர்வம் வந்தது எப்படி?
ப: குடும்பச்சூழல்தான் மிகமுக்கிய காரணம். அப்போது நான் சிறுவன். ஒருநாள் நான், என் அம்மா, அக்கா மூவரும் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தோம். (அக்கா சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்) கோயிலிலிருந்து திரும்பும் வேளையில், தவறிச் சாக்கடையில் விழுந்துவிட்டார். அம்மாவுக்குப் பெரும்பதட்டம், அவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நானோ சிறுவன், எனக்கும் ஒன்றும் புரியவில்லை. எல்லோரும் சுற்றிநின்று வேடிக்கை பார்த்தார்களே தவிர உதவிக்கு வரவில்லை. அப்போது அம்மா தவித்த தவிப்புக்கு அளவே இல்லை. அந்தவழியே வந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் அக்காவைத் தூக்கிவிட்டு, தண்ணீர் வாங்கி வந்து அக்காமேல் இருந்த சகதியைக் கழுவிச் சுத்தம்செய்து, அவருடைய ஆட்டோவிலேயே எங்களை அழைத்துக் கொண்டுபோய் வீட்டில் விட்டார். அப்போதிருந்த பதட்டத்தில் அவர் யார், பெயர் என்ன என்பதைக்கூட விசாரிக்கவில்லை.

அதுநாள் வரைக்கும் மனிதர்களில் இப்படியும் சிலர் இருப்பார்கள்; கஷ்டத்தில் உதவிசெய்யாமல் வேடிக்கை பார்ப்பார்கள் என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. அதேசமயம் கஷ்டகாலத்தில் வந்து உதவிசெய்த அந்த ஆட்டோக்காரர் எங்களுக்கு தெய்வமாகத் தெரிந்தார். இந்த நிகழ்ச்சி என்னுடைய மனதில் ஆழமாகப் பதிந்தது, தன்னலமற்ற சேவையின் முக்கியத்துவம் விவரந்தெரியும் வயதில் புரிந்தது. அதுவே சாலையோரம் இருக்கும் ஆதரவற்றவர்களின் நிலையை மாற்றி அவர்களுக்கு எப்படியும் ஒரு பாதுகாப்பு தேடிக்கொடுக்க வேண்டும் என்ற உத்வேகத்தை எனக்குக் கொடுத்தது.கே: எப்படிப்பட்டவர்களை நீங்கள் சாலையோரத்திலிருந்து மீட்கிறீர்கள்?
ப: வீட்டைவிட்டு விரட்டப்பட்டவர்கள், குடும்பச்சூழல் சரியில்லாததால் வெளியேறியவர்கள், குடும்பம் இல்லாதவர்கள், சாலையோரம் பிச்சையெடுக்கக்கூட முடியாத நிலையில் இருப்பவர்கள், மனநிலை பாதித்தவர்கள் எனப் பலதரப்பட்டவர்கள் உண்டு. இந்தப் பத்துவருடத்தில் சுமார் 600 பேருக்குமேல் காப்பகங்களில் இடம்கேட்டுச் சேர்த்திருக்கிறேன். சுமார் 200 பேர்வரை குடும்பத்துடன் இணைத்து வைத்திருக்கிறேன். குறிப்பாக மனநலம் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்படுபவர்கள் அதிகம். வடமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வேலைதேடி வருபவர்கள் ரயிலில் இரண்டு, மூன்று நாட்கள் பயணம்செய்து வரவேண்டி இருக்கும். பிழைப்புக்காகக் குடும்பத்தை, மனைவியை, குழந்தைகளை விட்டுவிட்டு பலவித மன அழுத்தங்களுடன் அவர்கள் கிளம்புகின்றனர். அவர்கள் ரிசர்வேஷன் செய்தெல்லாம் வரமாட்டார்கள். கூட்டநெரிசலில், சரியாக உண்ணாமல், உறங்காமல் டென்ஷனோடு பயணம் செய்திருப்பார்கள். இங்கே அவர்களுக்கு யாரையும் தெரியாது. மொழியும் புரியாது. சொந்த நாட்டிலேயே அன்னியர்களாவார்கள். சக மனிதர்களின் புறக்கணிப்பு, ஏமாற்றுவேலை போன்றவற்றால் இவர்கள் மனநிலை பாதிப்புக்கு ஆளாகிவிடுவார்கள்.

தாம் என்ன செய்கிறோம் என்பது அவர்களுக்கே தெரியாது. பார்க்க நன்றாகத் தெரிவார்கள். மனநிலை சரியில்லாமல் செய்யும் செயலால் பொதுமக்களின் புறக்கணிப்பு அடி, உதை கிடைக்கும். குற்றவாளிகளாகச் சித்திரிக்கப்பட்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டுத் துன்பம் அனுபவித்தபிறகே அவர்கள் மனநலம் பாதித்தவர்கள் என்பது தெரியவரும். அவர்களுக்கு முதல் தேவை முறையான மருத்துவ சிகிச்சையும் அன்பும் அரவணைப்பும்தான். அதன்பிறகு அவர்களை நாம் கையாள்வது எளிதாகிவிடும். இதைதான் நான் செய்கிறேன்.

கே: இவர்களை மீட்பதில் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்கள் என்ன? எப்படிச் சமாளிக்கிறீர்கள்?
ப: மனநிலை பாதிக்கப்பட்டவர்களை அணுகும்போது அவர்கள் எழுந்து ஓடுவார்கள் அல்லது கையில் கிடைத்ததைக் கொண்டு நம்மை தாக்குவார்கள். நாம் பதிலுக்கு அவர்களைத் துரத்தவோ, தாக்கவோ கூடாது. நம்முடைய அணுகுமுறையை அன்பு, அக்கறை கலந்ததாய் மாற்றிக்கொள்ள வேண்டும். அவர்கள் வழிக்கு வந்துவிடுவார்கள். அழுக்கான உடல், சடைவிழுந்த தலைமுடி என்று இருக்கும். துர்நாற்றம் வீசும். நாம் பொறுமையாக நெருங்கி அவர்களுக்கு முடிதிருத்தி, குளிக்கவைத்து, மாற்றுடை கொடுத்து, அதன்பிறகு காப்பகத்திற்கோ, மருத்துவமனைக்கோ அழைத்துச் செல்வோம்.

சாலையோர மனிதர்கள் உடல் காயங்களைப் பராமரிக்க இயலாமல் அப்படியே விட்டுவிடுவார்கள். அவை அழுகி புழுவைத்துப் பெரும் துர்நாற்றம் வீசும். அப்படிப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல 108 ஆம்புலன்ஸை அழைத்தால் அவர்கள்கூடச் சிலசமயம் உதவிக்கு வரமாட்டார்கள். பெரும் போராட்டத்திற்கு பிறகு அவர்களை அழைத்துக்கொண்டு அரசு மருத்துவமனைக்குச் சென்றால் சமயத்தில் அங்குள்ள மருத்துவர்கள் புழுக்களைச் சுத்தம் செய்து பின் அழைத்து வாருங்கள் என்பார்கள். காயத்தில் இருக்கும் புழுக்களைச் சுத்தம் செய்து பின்னர் அழைத்துப்போக வேண்டிவரும். சிலசமயம் பணப் பற்றாக்குறை ஏற்படும். நெருங்கிய நண்பர்கள் உதவுவார்கள். எங்களைப்பற்றி அறிந்து முன்பின் தெரியாதவர்களும் உதவுவதுண்டு. பொதுவான சிக்கல் என்றால், காப்பகங்கள் நிரம்பியிருந்தால், புதியவர்களுக்கு உடனடியாக இடம் கிடைக்காது! அப்போது தனியார் காப்பகங்களை நாடநேரிடும். கோவையில் மாநகராட்சி ஆதரவற்றோர் தங்கும்விடுதி ஒன்றுமட்டுமே இயங்கிவருகிறது. மீதமுள்ள மூன்று விடுதிகளும் செயல்பட ஆரம்பித்தால் மிகவும் உதவிகரமாக இருக்கும்.கே: ஆதரவற்றவர்கள் இறந்துபோனால் என்ன செய்வீர்கள்?
ப: சாலையில் ஆதரவற்றவர்களாக இருப்பவர்களை அழைத்துச் செல்லும்போதே அவர்கள் எனது உறவினராக பாவித்துதான் அழைத்துச் செல்கிறேன். மருத்துவமனையில் சேர்க்கும்போதும் அப்படித்தான். சிகிச்சை பலனின்றி அவர் இறக்கும் பட்சத்தில் அநாதையாக விட்டுவிட மனம் ஒப்பாது. அவரவருக்கான முறையில் நானே நல்லடக்கம் செய்துவிடுவேன். ஆரம்பகாலத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்யும் பொறுப்பை வேறொரு அமைப்பினரிடம் கொடுத்து வந்தேன். அறக்கட்டளை துவக்கியபிறகு என்னோடு பலர் கைகோத்து உதவுகின்றனர். அதில் ஒருவர் வைரமணி. (பார்க்க தென்றல்) இவர் ஒரு மயானத் தொழிலாளி. ஆதரவற்றோர் உடலை நல்லடக்கம் செய்வதில் இவர் பெரிதும் உதவியாக இருக்கிறார்.

கே: ஈர நெஞ்சம் அறக்கட்டளை பற்றிச் சொல்லுங்கள்...
ப: அறக்கட்டளை ஆரம்பிப்பதில் ஆரம்பத்தில் எனக்கு அதிக விருப்பம் இருக்கவில்லை. என்னுடைய பணிகளை அவ்வப்போது முகநூலிலும், வலைப்பூவிலும், யூட்யூப் வீடியோவாகவும் பொதுமக்களின் விழிப்புணர்விற்காகப் பதிவிட்டு வந்தேன். அதைப் பார்த்து நண்பர்கள் பலர் என்னோடு தொடர்புகொண்டு "உங்கள் பணியை ஓர் அறக்கட்டளையின்கீழ் நடத்துங்கள். அது மேலும் பலர் உங்களுடன் இணைந்து பணிபுரியவும் உதவவும் வசதியாக இருக்கும்" என்று கூறினர். 2012 ஏப்ரல் 23 அன்று உருவானது இந்த ஈர நெஞ்சம் அறக்கட்டளை. இதில் சென்னையைச் சேர்ந்த சுரேஷ், கடலூரைச் சேர்ந்த பரிமளா, கோவையைச் சேர்ந்த தபசு மற்றும் நான் நிர்வாகிகளாக இருக்கிறோம். 80G வருமானவரி விலக்கு பெற்றுள்ளோம். தாய் தந்தையற்ற பத்து குழந்தைகளைத் தத்தெடுத்து காப்பகத்தில் சேர்த்து கல்வி முதற்கொண்டு அனைத்து உதவிகளையும் அறக்கட்டளை செய்து வருகிறது. ஆதரவற்ற பெண்கள் இருவருக்குத் திருமணம் செய்து வைத்திருக்கிறோம். ஆதரவற்றவர்களே இருக்கக்கூடாது என்பது எமது அறக்கட்டளையின் நோக்கம்.

கே: உங்கள் பணிகளைப் பொதுமக்கள் வரவேற்கிறார்களா?
ப: எங்களது பணிகளைப் பார்த்துப் பலருக்கும் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. எனது பணிகளைப் பார்த்த பிறகு தங்கள் வீட்டுப் பெரியோர்களை நல்லபடியாக பார்த்துக்கொள்வதாக என்னிடம் சிலர் சொல்லியிருக்கிறார்கள். சில ஊர்களில் சமூகப் பணிகள் ஆரம்பித்துள்ளதாகச் சொல்கின்றனர். இதெல்லாம் மகிழ்ச்சிதரும் விஷயங்கள். அதேசமயம், சிலர் என்னை அழைத்து அம்மாவை, அப்பாவை அழைத்துச் செல்லுங்கள். உங்களுக்குத் தேவையான பணம் தருகிறேன் என்றெல்லாம் சொல்கின்றனர். இதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. மிகவும் வேதனையாக இருக்கிறது. அப்படிப்பட்டவர்களைத் தவிர்த்து விடுகிறேன்.
கே: உங்கள் குடும்பத்தினர் உங்களது பணிகளுக்கு உறுதுணையாக உள்ளார்களா?
ப: ஆரம்பத்தில் என் குடும்பத்தில் உள்ளவர்களுக்குச் சற்று விருப்பம் இல்லாமல்தான் இருந்தது. ஆனால் காலப்போக்கில் இந்தப் பணியின் உன்னதத்தையும் மற்றவர்கள் இதனால் அடையும் பலனையும் உணர்ந்து கொண்டனர். "எப்போதும் சமூகப்பணியே முழு மூச்சாக இருந்து விட்டால் உன் குடும்பத்தை யார் காப்பாற்றுவார்கள்; தொழிலைக் கவனிக்க வேண்டிய காலத்தில் இப்படி அலைகிறாயே!" என்று அவ்வப்போது அப்பா, அம்மா சொல்வார்கள். ஆனால் அதற்காக எனது பணிகளைத் தடுக்கமாட்டார்கள். ஏனென்றால் என் அக்காவுக்குப் பல வருடங்களுக்கு முன்னால் ஏற்பட்ட கஷ்டத்தையும் ஆட்டோக்காரர் உதவியதையும் அவர்கள் மறந்துவிடவில்லை. என் அக்காவைப்போல பல அக்காக்களுக்கும், அண்ணன்களுக்கும்தான் நான் உதவி வருகிறேன் என்பதில் அவர்களுக்கு மகிழ்ச்சி. எனக்கு மூன்று அக்கா, ஒரு அண்ணன். எல்லோருக்கும் திருமணம் ஆகிவிட்டது. (மனநிலை சரியில்லாத இரண்டாவது அக்காவைத் தவிர) எல்லோரும் நல்லநிலையில் இருக்கிறார்கள். அதுபோல என் அன்பு மனைவி கலைச்செல்வி, மகள் சம்விதாவின் அனுமதி இல்லாமல் என்னால் என்ன செய்துவிட முடியும்? ஞாயிற்றுகிழமை முழுக்க முழுக்க இவர்களுக்குத்தான். மற்றவர்கள் என்னுடைய பணிகளைப் பெருமையோடு சொல்லும்பொழுது இவர்கள் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதில் எனக்கும் மகிழ்ச்சிதான்.

கே: எதிர்காலத் திட்டங்கள் என்ன?
ப: ஆதரவற்றவர்களே இல்லாத உலகம் வேண்டும் என்பதுதான் எனது ஆசை. என்றாலும், நல்ல இயற்கைச்சூழலில் மருத்துவமனையோடு கூடிய ஆதரவற்றவர்களுக்கென ஒரு தனியிடம் அமைக்கும் விருப்பம் உண்டு. இப்படிக் காப்பகங்கள் பெருகிக்கொண்டே போவது சரியல்ல என்றாலும் சூழ்நிலையின் காரணமாக தனிமையில் தத்தளிப்பவர்களுக்கு நிம்மதி கிடைக்க அது வழி செய்யும் என்பதால் அதை நான் வரவேற்கிறேன்.

"வீதி ஓரத்தில் கிடப்போரை மீட்டு, குணப்படுத்தி, குடும்பத்தைத் தேடிக் கண்டுபிடித்து மீண்டும் இணைக்கும்போது அவர்கள் கண்ணில் தெறிக்கும் மகிழ்ச்சியையே மிகப்பெரிய வரமாக நினைக்கிறேன்" என்னும் மகேந்திரனின் நல்லுள்ளத்தை வாழ்த்தி நிறைவு செய்தோம்.

தொகுப்பு: அரவிந்த்

*****
பணத்துக்காகப் பணி நிற்காது
நிதி கொடுங்கள் என்று யாரிடமும் கேட்டதில்லை. நெருங்கிய நண்பர்கள், இந்தப் பணியின் உன்னதத்தை உணர்ந்தவர்கள் தாமாக முன்வந்து நிதி தருவார்கள். வருவது குறைவுதான், செலவு அதிகம். கையில் இருப்பதைப் போட்டுப் பணி செய்கிறோம். யாரையும் வற்புறுத்துவதில்லை. பணத்துக்காக நற்பணி ஒருபோதும் நிற்காது. விருப்பம் உள்ளவர்கள் உதவலாம்.

வங்கிக் கணக்கு விவரம்:
Name: EERA NENJAM
A/C No: 402010157347
BANK: ING VYSYA BANK
Branch: Coimbatore Branch; 219, Arunachalam road, R.S.puram, Coimbatore 641002, Tamil Nadu, India.
RTGS/NEFT/IFSC Code: VYSA0004020

*****


அந்தப் பத்து நாட்கள்
ஒருநாள் ரயில்வே காவலர் ஒருவர் என்னை அழைத்து, "ரயிலில் ஒரு வடக்கத்திப் பையன் வந்திருக்கிறான். உடம்பு, தலையெல்லாம் காயம். தலைக் காயத்தில புழு வச்சு நாத்தமடிக்குது. யாரும் உதவ முன்வரலை. நீங்க ஏதாவது செய்யுங்க" என்றார். நான் அவனை மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்து கவனித்தேன். எனக்குச் சில திருநங்கைகளும் அவ்வப்போது உதவுவார்கள். எனக்கு இந்தி தெரியாது. அவர்கள் மூலமாக விசாரித்தேன். பெயர் ஷேக் சலீம். ஒரிஸாவில் கட்டாக் பகுதியைச் சேர்ந்தவன், தந்தை சதுஜின் பெயிண்டர், தாய் கெத்தாம் பீபீ. இவன் இரண்டாவது மகன்; அங்கே எட்டாம் வகுப்பு படிக்கிறான் என்பது போன்ற விவரங்கள் தெரியவந்தன. ஐந்து மாதங்களுக்கு முன் வீட்டில் கோபித்துக்கொண்டு ஓடி வந்துவிட்டான். எங்கெங்கோ அலைந்த அவனுக்குப் பல பிரச்சனைகள். சிலர் பிடித்துத் தள்ளியதில் ஓடும் ரயிலிலிருந்து விழுந்து தலையில் பலத்த காயம்.

சிகிச்சை நடந்துவரும் வேளையில் மருத்துவமனையில் இருந்து விடாமல் புகார்கள். "சேட்டை தாங்கவில்லை, அழைத்து செல்லுங்கள். சிகிச்சைக்கு ஒத்துழைப்பதில்லை. பெற்றோர் நினைப்பிலேயே இருப்பதால் அவர்களைத் தேடி ஓடிவிடுவான் போல் இருக்கிறது. சமாளிக்க முடியவில்லை" என்று தொந்தரவு. அவன் கொடுத்த தகவலைவைத்து அவனது உறவினர்களைத் தேடினோம். அவனது புகைப்படத்தை முகநூல் மற்றும் இணையதளங்களில் வெளியிட்டோம். கட்டாக் பகுதி காவல் நிலையத் தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரியைக் கண்டுபிடித்து, அவனது புகைப்படங்களை அனுப்பினோம். ஒரிஸா காவல்துறை அதிகாரி திரு. அஸ்வின் மூலம், அவனது பெற்றோர் தங்கள் மகன் காணாமல் போனதாகக் கொடுத்த புகார் தெரியவந்தது. அவர், அவர்களிடம் நாங்கள் அனுப்பிய புகைப்படத்தைப் பார்த்து தங்கள் மகன்தான் என்பதை உறுதி செய்தனர். அவன் பலத்த காயங்களுடன் இருந்ததைப் பார்த்துக் கதறி அழுதுள்ளனர். உடனடியாக ரயிலேற்றிக் கோவைக்குக் காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

ஷேக் சலீம் மருத்துவமனைக்கு வந்து ஐந்து நாட்கள் ஆகியிருந்தது. பெற்றோர்கள் கோவை வந்துசேர மேலும் நான்கு நாட்கள் ஆகும். அதுவரை அவனுடன் நானும், என் நண்பர்களும் அவனோடு பொழுதைக் கழித்தோம். மருத்துவ மனையில் மகனைக் கண்ட அவர்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.

மருத்துவமனையினர் என்னைப் பாராட்டி கேக் வெட்டி எனக்கும் அவனுக்கும் ஊட்டினர். அடுத்தநாள் ஷேக் சலீமை அழைத்துக்கொண்டு பெற்றோர் புறப்பட்டனர். அவனுடன் கழித்த அந்தப் பத்து நாட்களை என்னால் மறக்கவே முடியாது.

மகேந்திரன்

*****
மனைவிக்கு மறுமணம்!
சாகர் நேபாளத்தில் இருந்து வேலைபார்க்க வந்திருந்தார். அவருக்குத் திருமணம் ஆகிக் குழந்தை உண்டு. திடீரென அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டது. கோவையில் சுற்றிக் கொண்டிருந்தவர் பின் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். நாளடைவில் அவர் முழுமையாகக் குணமடைந்தார். அவர் இந்தியரல்லாத காரணத்தினாலும், 'நேபாளி' என்பதற்குத் தக்க ஆவணம் இல்லாததாலும், காப்பகத்தால் அவரை விடுவிக்க முடியவில்லை.

அவர் சொன்ன முகவரியைக் கண்டுபிடிப்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது. பெருமுயற்சிக்குப் பிறகு அவரது சகோதரரின் தொடர்பு கிடைத்தது. உடனடியாக அவரைக் கோவைக்கு வரவழைத்து, சாகரை அவருடன் நேபாளத்துக்கு அனுப்பி வைத்தோம். இதில் ஒரு சிக்கல். சாகர் இறந்திருக்கக்கூடும் என்று தீர்மானித்து அவரது மனைவிக்கு வேறு திருமணம் ஏற்பாடு செய்துவிட்டார்கள். இந்த நிலையில் சாகர் அவரது குடும்பத்துடன் இணைந்தார்.

மகிழ்ச்சியில் சாகரின் மனைவி, தாய், தந்தை என அனைவரும் என்னைத் தொலைபேசியில் கூப்பிட்டு, கண்ணீர்மல்க நன்றியை தெரிவித்தபோது அது புரியாத பாஷையாக இருந்தாலும், அவர்களின் மகிழ்ச்சியை என்னால் உணர முடிந்தது. இதை நான் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய விருதாக நினைக்கிறேன்.

மகேந்திரன்
Share: 
© Copyright 2020 Tamilonline