Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | அமெரிக்க அனுபவம் | சமயம் | பொது
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | அஞ்சலி | சிறப்புப் பார்வை | கவிதைப்பந்தல்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
நேர்காணல்
ராஜ ராஜேஸ்வரி
ஹரிகதை சிந்துஜா சந்திரமௌலி
- அரவிந்த், சிரிப்பானந்தா|ஜூன் 2015|
Share:
ஹரிகதையை மரபுமீறாமல் அளிக்கும் கலைஞர்களில் குறிப்பிடத்தகுந்தவர் சிந்துஜா சந்திரமௌலி. எம்.காம். பட்டதாரி. சிறுவயதிலேயே ஹரிகதை சொல்ல ஆரம்பித்தவர். பதின்மப்பருவத்தில் தொடங்கிய அவர், இன்றைக்கு கம்பராமாயணம், நளசரிதம், அருட்பெருஞ்சோதி அகவல், பதினெண் சித்தர்கள், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ சக்கரத்தம்மாள், ரமண மஹரிஷி, மாணிக்கவாசகர் என்று 150 தலைப்புகளில் பேசுமளவிற்கு வளர்ந்திருக்கிறார். தமிழக அரசின் 'கலைவளர்மணி', உலகத் திருக்குறள் மையத்தின் 'திருக்குறள் மாமணி', 'இறையருள் வித்தகி', 'செஞ்சொற்கலை நங்கை', 'ஹரிகதா சுடர்' எனப் பல விருதுகளையும் பெற்றுள்ள சிந்துஜா, தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா, மும்பை, டெல்லி, கல்கத்தா எனப் பல இடங்களிலும் எண்ணற்ற ஹரிகதைகளை நடத்தியிருக்கிறார். சென்னை தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றிற்கான தயாரிப்பில் ஈடுபட்டிருந்தவரை, அனல்வீசும் ஒரு முற்பகல் வேளையில் சந்தித்து உரையாடினோம். அந்த உரையாடலிலிருந்து...

கே: ஹரிகதையில் ஆர்வம் வந்தது எப்போது, எப்படி?
ப: இதற்கு முழுக்காரணம் என் அம்மா ஸ்ரீமதி. உஷா ஏகாம்பரம்தான். சின்னவயதில் டி,.எஸ். பாலகிருஷ்ண சாஸ்திரிகளின் உபன்யாசங்களைக் கேட்டுக்கேட்டு அவருக்கு அதில் ரொம்ப ஈடுபாடு வந்துவிட்டது. எம்.ஏ. ஹிந்தி படித்திருந்தாலும் தமிழில் அவருக்கு மிகுந்த ஆர்வம். கவிதைகள் எழுதுவார். திருமணம் ஆகி 18 வருடங்கள் கழித்து நான் பிறந்தேன். என்னை ஒரு இசைக்கலைஞராக ஆக்கிவிட அம்மா ஆசைப்பட்டார். 8 வயதில் ஸ்ரீமதி கமலா ராமநாதனிடம் நான் கர்நாடக இசை கற்றுக்கொண்டேன். போட்டிகள் எல்லாவற்றிலும் பங்கேற்றுப் பரிசு வாங்குவேன். இப்படிப் பேசி, பாடியதால் தமிழ் எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாகிவிட்டது.

அப்போதுதான் 'திருக்குறளில் அடக்கமுடைமை' என்ற தலைப்பில் ஒரு பேச்சுப்போட்டியில் பங்கேற்றேன். அம்மா என்னைப் பாட்டும் கலந்து பேசச் சொன்னார். அப்படி நன்கு தயார் செய்துகொண்டு பேசினேன். நல்ல வரவேற்பு கிடைத்தது. அதுதான் ஆரம்பம். எனது பன்னிரண்டாவது வயதில் 'ஸ்ரீ விநாயக பிரபாவம்' என்ற தலைப்பில் பேசியதுதான் ஹரிகதை அரங்கேற்றம். பாட்டும், விளக்கமுமாக சுமார் ஒருமணி நேரம் பேசினேன். அம்மாதான் எல்லாம் தயாரித்துக் கொடுத்துப் பேசப் பயிற்சியளித்தார். தொடர்ந்து 'அபிராமி அந்தாதி' போன்ற தலைப்புகளில் பேச ஆரம்பித்தேன். அப்படி ஆரம்பித்ததுதான் என் ஹரிகதைப் பயணம்.

கே: மஹா பெரியவாளைப்பற்றி முதன்முதலில் ஹரிகதை செய்தது நீங்கள்தான் இல்லையா?
ப: நாங்கள் பாரம்பரியமாக மஹா பெரியவாளின் பக்தர்கள். ஒருமுறை கணேச சர்மா காஞ்சிப் பெரியவரைப் பற்றி அம்பத்தூரில் பேசினார். நான் தினந்தோறும் போய்க் கேட்டேன், குறிப்பு எடுத்தேன். ஒருமுறை அந்தக் குறிப்புகளைப் புரட்டிப் பார்த்தபோது, அவரைப்பற்றி ஏன் நாம் ஒரு சங்கீத உபன்யாசம் செய்யக்கூடாது என்று தோன்றியது. கணேச சர்மா குறிப்புகளோடு, மேலும் தகவல்கள், பாடல்கள், கீர்த்தனைகள், நாமாவளிகள் எல்லாம் சேர்த்து சிறுசிறு நிகழ்ச்சிகளைக் கொடுக்க ஆரம்பித்தேன். சென்னை சமஸ்கிருதக் கல்லூரியில் மஹா பெரியவாளைப் பற்றிய முதல் சங்கீத உபன்யாசத்தை நிகழ்த்தினேன். இன்றைக்கு மகான்கள், ஞானிகள், அவதாரங்கள் என்று சுமார் 150 தலைப்புகளில் ஹரிகதை சொன்னாலும் நான் அதிகம் சொன்னது எதுவென்று பார்த்தால் மஹா பெரியவாளின் கதைதான்.

கே: படிப்பு, ஹரிகதை இரண்டையும் எப்படி உங்களால் ஒரே சமயத்தில் மேனேஜ் செய்யமுடிந்தது?
ப: படிக்கும் காலத்தில் சிறுசிறு நிகழ்ச்சிகளைச் செய்தேன் என்றாலும் படிப்பு முக்கியம் என்பதற்காகப் பயிற்சியை விட்டுவிடவில்லை. தினமும் விடியற்காலையில் எழுந்து திருப்புகழ், பிற பாடல்களை விடாமல் பாடிப் பயிற்சிசெய்தேன். எம்.காம் முடித்தபின்னர் தான் ஹரிகதைக்கென்று நேரம் ஒதுக்கி முழுமையாகச் செய்ய ஆரம்பித்தேன். சங்கரா டி.வி., விஜய் டி.வி.யின் பக்தித்திருவிழா, பாலிமர் டி.வி., மக்கள் டி.வி., பொதிகை தொலைக்காட்சி என்று நிறைய வாய்ப்புகள் வந்தன. இன்றைக்கு டி.வி. தவிர இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்று ஹரிகதை சொல்கிறேன்.கே: ஹரிகதையில் நீங்கள் யார் பாணியைப் பின்பற்றுகிறீர்கள், உங்கள் குரு யார்?
ப: குரு என்று பார்த்தால் அம்மாதான். நிகழ்ச்சித் தயாரிப்பு, ஆலோசனை என்று என்னைவிட அதிக ஈடுபாட்டோடு எல்லாவற்றையும் செய்வது அவர்தான். யாரும் பேசாத புதுப்புது தலைப்புகளில் பேசவேண்டும்; சங்க இலக்கியங்களிலிருந்து எடுத்துப் பேசவேண்டும் என்றெல்லாம் அம்மாவுக்கு ஆசை. தினந்தோறும் அவர் அதற்காக நிறையப் படிக்கிறார், எழுதுகிறார். அம்மாவுக்கு பிரம்மஸ்ரீ டி.எஸ். பாலகிருஷ்ண சாஸ்திரிகள்தான் இன்ஸ்பிரேஷன். எனக்கு என் அம்மா இன்ஸ்பிரேஷன். சாஸ்திரிகளின் பாணி என்னிடம் இருப்பதாகப் பலர் சொல்லியிருக்கிறார்கள்.

கே: ஹரிகதை நிகழ்ச்சிக்காக எப்படி நீங்கள் உங்களைத் தயார் செய்துகொள்கிறீர்கள்?
ப: நான் சொற்பொழிவுகளுக்கு உபன்யாசங்களுக்கு, கச்சேரிகளுக்குப் போவேன். எனக்குத் தேவையான பாடல்களை அவர்களிடம் கேட்டுக் குறிப்பெடுத்து, என் நிகழ்ச்சிகளில் பயன்படுத்திக் கொள்வதுண்டு. கம்பன் கழகப் பட்டிமன்றம், சொற்பொழிவுகளுக்குப் போவேன். ஒருமுறை ரமண பகவானைப்பற்றி உபன்யாசம் செய்வதற்கு முன்னால் ரமணாச்ரமம் போயிருந்தேன். எப்படி நிகழ்ச்சியை ஆரம்பிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போது அங்கிருந்த ஒரு பெண்மணி என்னைப் பார்த்ததும் "நீதானே ஹரிகதை செய்கிறாய்?" என்று கேட்டார். நான் "ஆமாம்" என்றதும், பக்கத்தில் இருந்த தாடிவைத்த ஒருவர், "இதோ நான் சில பாடல்களை எழுதியிருக்கிறேன். வேண்டுமானால் பயன்படுத்திக் கொள்" என்று சொல்லி ஒரு பேப்பரை என் கையில் கொடுத்துவிட்டுப் போனார். அதில் பகவானின் வாழ்க்கை முழுவதையும் அழகான பாடல்களாக எழுதியிருந்தார். அவற்றை உபன்யாசத்தில் பயன்படுத்திக்கொண்டேன். நமது தேடலும் முயற்சியும் உண்மையாக இருந்தால் உதவி நம்மைத் தேடிவரும், சத்சங்கத்தில் இருந்தால் நல்ல விஷயங்கள் நம்மைத் தேடிவரும் என்பது அனுபவபூர்வமான உண்மை.

கே: உங்களைக் கவர்ந்த ஹரிகதா கலைஞர்கள் யார், யார்?
ப: ஹரிகதை என்பது ஒரு பெரிய ரத்தினமாக இருக்க வேண்டிய விஷயம். ஆனால் இன்றைக்கு மிகச்சிலர் மட்டுமே ஹரிகதை செய்கிறார்கள். ஆனால் அருகேயுள்ள ஆந்திராவில் நிறைய ஹரிகதா கலைஞர்கள் இருக்கிறார்கள். போஷிக்கப்படுகிறார்கள். இங்கே கமலா மூர்த்தி, ஆராவமுதாச்சாரியார் போன்ற மூத்த கலைஞர்களிலிருந்து இளையவர்களான விசாகா ஹரி, சுசித்ரா பாலசுப்பிரமணியன், துஷ்யந்த் ஸ்ரீதர் என எல்லாருமே என்னைக் கவர்ந்தவர்கள்தான்.

கே: மறக்கமுடியாத பாராட்டு என்று எதைச் சொல்வீர்கள்?
ப: தஞ்சாவூரில் ஒருமுறை நந்தனார் சரித்திரம் பேசினேன். மேடையில் சேக்கிழார் அடிப்பொடி டி.என். ராமச்சந்திரன், கமலா மூர்த்தி போன்றவர்கள் இருந்தார்கள். மகாமேதைகள் உட்கார்ந்திருக்கும் மேடையில் பேச எனக்கு கொஞ்சம் பதட்டமாகவே இருந்தது. நிகழ்ச்சி முடிந்ததும் ராமச்சந்திரன் மிகவும் சிலாகித்துப் பாராட்டினார். கமலா மூர்த்தியும் "ரொம்ப திருப்தியாக இருந்தது. மிகவும் நன்றாக ஹரிகதை சொன்னாள்" என்று பாராட்டினார். எனக்கு அழுகையே வந்துவிட்டது. ஹரிகதையின் உச்சாணிக்கொம்பில் இருக்கும் அவர் என்னைப் பாராட்டியதைவிட வேறென்ன பெருமை, ஆனந்தம் இருக்கமுடியும்? அவரது பேத்தி சுசீலா பாலசுப்ரமணியன் மாதிரி அவருக்கு நானும் ஒரு பேத்திதான். அதுபோல நிகழ்ச்சி முடிந்ததும் சேக்கிழார் அடிப்பொடி தமது வீட்டுக்கே என்னை அழைத்துப் பாராட்டினார். நிறையப் புத்தகங்களைக் கொடுத்து இந்தத் தலைப்புகளில் பேசு என்று ஊக்குவித்தார். இதெல்லாம் மறக்கமுடியாதது.
கே: ஹரிகதையின் போது நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களைப் பற்றிச் சொல்லுங்களேன்!
ப: ஹரிகதையை நாம் மனமொன்றிச் சொன்னால்தான் பார்வையாளர்களும் மனமொன்றிக் கேட்பார்கள். மேம்போக்காகச் சொல்லமுடியாது, மனதை ஊடுரும்வும்படிச் சொல்லவேண்டும். ஒருமுறை காஞ்சிப் பெரியவரைப்பற்றிய கதையைச் சொல்லிக் கொண்டிருந்தேன். அதில் சிறுகுழந்தை ஒன்றுக்கு அவர் மோட்சமருளிய கதை ஒன்று வரும். அது முடிந்ததும் திடீரென்று ஒரு பெரியவர் என்னருகே வந்தார். எண்பது வயது இருக்கும். என்னைப் பார்த்தவர், "கதை கேட்கவேண்டும் என்பதற்காக வரவில்லை. ஏதோ ஒரு வேலையாக இந்தப் பக்கமாகப் போய்க்கொண்டிருந்தேன். திடீரென்று உள்ளே வந்தேன். வாழ்க்கையே எனக்கு விரக்தியாகி விட்டிருந்தது. உட்கார்ந்து நீ சொன்ன கதையைக் கேட்டேன். எட்டுவயதுக் குழந்தைக்கே அனுக்கிரகம் பண்ணியிருக்கிறார் பெரியவா, எண்பது வயசான எனக்குக் கிடைக்காதா என்ன?" என்று சொல்லி குலுங்கிக்குலுங்கி அழுதார். நான் நெகிழ்ந்து போனேன்.

கேட்போரில் நகரவாசிகள் சிறந்தவர்கள், கிராமவாசிகள் ரசனை குறைந்தவர்கள் என்பதெல்லாம் கிடையாது. கிராமத்தில் படிப்பறிவு ஒருவேளை குறைவாக இருந்தாலும் அனுபவஞானம் அதிகம். அரக்கோணம் தாண்டி ஒரு குக்கிராமம். 'பண்டரிபுர மகாத்மியம்' பேசவேண்டும். அங்கே அதைச் சொன்னால் எடுபடுமா என்ற யோசனையில் வள்ளிதிருமணத்தை முதலில் சொல்லிவிட்டுப் பின்னர் பண்டரிபுர மகாத்மியம் சொல்ல ஆரம்பித்தேன். அதுவரை பின்னால் உட்கார்ந்திருந்தவர்கள், பண்டரிபுரம்பற்றிச் சொல்ல ஆரம்பித்ததும் முன்னால் வந்தார்கள். நிகழ்ச்சி முடிந்ததும் "திரும்பவும் இந்தக் கதையைச் சொல்லுங்க. இப்போ இல்லாவிட்டாலும் அடுத்தமுறை இந்த ஊருக்கு வரும்போது சொல்லுங்க" என்றார்கள். அவர்களது அந்த ரசனை எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

ஒருமுறை கச்சேரி செய்துகொண்டிருந்தேன். முடிந்ததும் நகராட்சியின் சுத்தம்செய்யும் பணியாளர் வந்து, "நான் அப்படியே எல்லா வேலையையும் நிறுத்திட்டேன்மா. கேட்டு முடிச்சிட்டுதான் வேலையைப் பார்க்க ஆரம்பித்தேன். நல்லா இருந்திச்சி" என்றார். ஆக, படித்தவர்கள் பாராட்டினால்தான் பெருமையென்பது இல்லை. பாமரர்களையும் எந்த இசை அல்லது பேச்சு கவர்கிறதோ அதுதான் உண்மையானது. ஹரிகதையின் நோக்கமே எல்லாருக்கும் சென்று சேரவேண்டும் என்பதுதான். என்னளவில் அதைச் செயல்படுத்திக்கொண்டு வருகிறேன்.

கே: நீங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?
ப: புதிய விஷயங்களைச் சொல்ல வேண்டுமென்பது ஒரு முக்கிய சவால். பேச்சு நீர்த்துவிடக்கூடாது. சுவாரஸ்யம் கருதி வெளித்தலைப்புக்குப் போனாலும் உடனேயே தலைப்புக்குத் திரும்பிவந்துவிட வேண்டும். ஜனரஞ்சகமாகப் பேசுவதாக நினைத்து ஆன்மீகத்தை மலினப்படுத்தக்கக்கூடாது. அப்படிப் பேசினால் சொல்லவந்த விஷயம் போய் வேறேதாவது நினைவில் தங்கும். எல்லா இடத்திலும் ஒன்றையே சொல்லிக் கொண்டிருக்க முடியாது. புதிய புதிய விஷயங்களைச் சொல்லவேண்டும். அதற்கு நம்மை அப்டேட் செய்துகொள்ள வேண்டும். ஆன்மீகத்தை லௌகீகமாக்காமல் ஆன்மீகமாகவே தரவேண்டும், கேட்போரைக் கவர்வதாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியச் சவால்.

கே: உங்களுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் யார், யார்?
ப: எனது குடும்பம் முழுக்கவே எனக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். அம்மாவைப்பற்றிச் சொன்னேன். புகுந்தவீட்டாரும் எனக்கு மிகவும் சப்போர்ட். என் மாமனார் சுரேஷ்ராம் தி.நகர் டைம்ஸ் இதழை நடத்தியவர். சென்னையில் முதன்முதலில் வந்த இதழ் அது. அவர் நிறையப் புத்தகங்களை வாங்கித் தருவார், குறிப்புகள் எடுத்துத் தருவார். முதலில் எதைச்செய்யலாம் என்று தெளிவுதருவார். தலைப்பு ரெடியானவுடன் அவரிடம் காண்பிப்பேன், படித்துப் பார்த்து திருத்தங்கள் சொல்வார். ஐடியா கொடுப்பார். என் கணவர் சந்திரமௌலியும் எனக்கு நிறைய உதவுவார். எனது பாட்டி கல்யாணி, என் மாமியார் என்று இவர்களது புரிதலும், ஒத்துழைப்பும் இல்லையென்றால் என்னால் எதுவுமே செய்யமுடியாது.

சமீபத்தில் 'முருகனடியார்கள்' என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சி செய்தேன். குறைந்தது 30 அடியார்களைப் பற்றியாவது சொல்ல விரும்பினேன். அந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்துத் தந்து அதற்கு உதவியவர் பி.என்.பரசுராமன். இப்படிப் பலர் எனக்கு உறுதுணையாக இருக்கிறார்கள்.

கே: இன்னும் என்னவெல்லாம் செய்யத் திட்டம் வைத்திருக்கிறீர்கள்?
ப: நமது பெருமை நமக்கே சரிவரத் தெரியவில்லை. தோப்புக்கரணம் போடுவதை அலட்சியமாகவும், கிண்டலாகவும் பார்த்தவர்கள் இன்றைக்கு அமெரிக்கர்கள் பலர் அதனை ஒரு பயிற்சியாகச் செய்யும்போது வியந்து பார்க்கின்றனர். நமது ஆன்மீகத்தைப்பற்றிய சரியான புரிதல் இங்கே இல்லை. ஆன்மீகத்தை வெறும் ஆன்மீகமாகமட்டும் சொல்லாமல் மக்கள் வாழ்வியலோடு கலந்து சொல்லவேண்டும் என்பது எனது ஆசை. தேசியத்தையும் தெய்வீகத்தையும் கலந்துகொடுக்கக்கூடிய பேச்சுக்களே இன்றைய தேவை. சீதா கல்யாணம், ராதா கல்யாணம் என்றுதான் ஹரிகதை பண்ண வேண்டுமென்பதில்லை. மக்களுக்குத் தேவையான, சமூகத்துக்குப் பயன்படக்கூடிய பல விஷயங்களையும் ஹரிகதையாகச் செய்யலாம், செய்யவேண்டும் என்பது என் எண்ணம். சுதந்திரப்போராட்ட வீரர்களைப் பற்றி ஹரிகதை செய்ய எண்ணமிருக்கிறது. தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலும் ஹரிகதா செய்ய ஆசையுண்டு. அதற்கான தயாரிப்புகளைச் செய்துவருகிறேன். இன்னும் புதிய தலைப்புகளில் பேச ஆசையுண்டு. தமிழிசைப் பாடல்கள், சித்தர்கள் பாடல்களைத் தொகுத்து சி.டி.யாகக் கொண்டுவரும் ஆசையுண்டு.

தெளிவான தமிழ் உச்சரிப்பு, இசையொழுகும் குரல், உறுதியான கருத்துக்கள் என நம்மோடு உரையாடிய சிந்துஜாவின் உயரிய நோக்கங்கள் நிறைவேற வாழ்த்தி விடைபெற்றோம்.

சந்திப்பு, படங்கள்: அரவிந்த்
உதவி: சிரிப்பானந்தா

*****


மஹாபெரியவாளும் நானும்
எனக்கு அப்போது இரண்டு அல்லது மூன்று வயது. குடும்பத்தோடு பெரியவரைப் பார்க்கப் போயிருந்தோம். பெரியவர் அப்போது உடலளவில் தளர்ந்திருந்த நேரம், சக்கரநாற்காலியில் அழைத்து வந்தார்கள். அவர் கையில் ஒரு செவ்வாழைப்பழம் இருந்ததாம். கூட்டத்திலிருந்த நான் திடீரென்று முன்னேபோய் அவர் கையிலிருந்த பழத்தைப் பிடுங்கிக்கொண்டேனாம். உடன்வந்தவர்களுக்கு ஒரே அதிர்ச்சி. பின்னர் என்னை விலக்கி அம்மா, அப்பா அருகில் கொண்டுபோய் விட்டிருக்கிறார்கள். பெரியவர் "அவசரப்படறது; ரொம்ப அவசரப்படறது" என்றுமட்டும் சொன்னாராம். நான் இதையெல்லாம் கவனிக்காமல் பழத்தைத் தின்றுவிட்டேனாம். இதை அம்மா எனக்கு பின்னால் விரிவாகச் சொன்னார்கள். இந்தச் சம்பவம் ஒரு நிழல்போல நினைவில் இருக்கிறது.

ஆனால் பெரியவர் அன்று சொன்னதை வெறும்வார்த்தையாக நினைக்கவில்லை, ஓர் அனுக்கிரகமாகத்தான் பார்க்கிறேன். உண்மையில் நான் அவசர அவசரமாக நினைப்பதெல்லாம் பின்னால் நடக்கும்; நடக்கிறது. பெரியவாளின் கை பிரசாதத்தைச் சாப்பிட்டது பாக்கியம். அவரை நேரில் பார்த்ததே புண்ணியம். அவரைப்பற்றி எதுவுமே தெரிந்திராத அந்தவயதில் மஹாபெரியவர் என்னைப் பார்த்தது எனக்குக் கிடைத்த பாக்கியம்தான்.

- சிந்துஜா சந்திரமௌலி

*****


எதைப் பார்த்தாலும் திருக்குறள்
நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது உலகத் திருக்குறள் மையம் நடத்திய போட்டியில் பங்கேற்றேன். 1330 குறட்பாக்களையும் நேராக, தலைகீழாக, எண் சொன்னால் சொல்லுதல், முதல்வார்த்தை சொன்னால் சொல்லுதல், குறள் சொல்லிப் பொருள், பொருள் சொல்லிக் குறள் என்று மொத்தம் நூறுகோணங்களில் பேசவேண்டும். தினந்தோறும் பலவிதங்களில் பயிற்சித்தேன். 150 பேர் போட்டியிட்டனர். இறுதிக்கட்டத்தை 8 பேர் மட்டுமே தொட்டனர். நான் முதலிடம் பெற்று 'திருக்குறள் மாமணி' பட்டம் வென்றேன். தாயார் உஷாவின் தயாரிப்பு, நான் படித்த அம்பத்தூர் ரமண வித்யாகேந்திரா பள்ளித் தாளாளர், தலைமையசிரியர், ஆசிரியர்கள் ஆகியோரின் ஊக்குவிப்பு என்னைச் செலுத்தியது. திருக்குறளைத்தவிர வேறெதையுமே அப்போது நான் படிக்கவில்லை. வீட்டின் கதவு எண்ணைப் பார்த்தால் ஒரு திருக்குறள் ஞாபகம், சாலையில் ஒரு வண்டியின் எண்ணைப் பார்த்தால் உடனே ஒரு திருக்குறள் ஞாபகம். ஏன் சொல்கிறேன் என்றால் ஒரு விஷயத்தில் நாம் முழுமுனைப்போடு செயலாற்றினால் எதைப் பார்த்தாலும் அதுவே கண்முன் வந்துநிற்கும்.

1330 குறட்பாக்களை இசையோடு பாடி 'திருக்குறள் இசைச்செல்வர்' விருதைப் பெற்றேன். எப்படியென்றால் 372 என்று ஒரு குறளெண் சொன்னதும் 38வது அதிகாரத்தின் இரண்டாவது குறளை இசையோடு பாடவேண்டும். அடுத்த கேள்வி கேட்டதும் அதற்கான குறளை வேறொரு ராகத்தில் பாடவேண்டும். சற்றே கடினமான போட்டிதான். கலைஞர் மு. கருணாநிதி அப்போது முதல்வராக இருந்தார். அமைச்சர் சற்குணபாண்டியன் அந்த விருதை வழங்கினார்.

- சிந்துஜா சந்திரமௌலி

*****


நரேந்திர மோதியும் சில கேள்விகளும்
மோதி குஜராத் முதல்வராக இருந்த சமயம் அது. நான் பூஜ்யஸ்ரீ மதிஒளி சரஸ்வதி அம்மாவின் நந்தலாலா ட்ரஸ்ட் சார்பான நிகழ்ச்சி ஒன்றுக்காக துவாரகை சென்றிருந்தேன். எனது பெரியப்பா இராம. கோபாலன் வாய்ப்பிருந்தால் மோதி அவர்களைச் சந்தித்துவருமாறு கூறியிருந்தார். பெரியப்பா கொடுத்த தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு, என்னைப்பற்றிச் சொல்லி மோதிஜி அவர்களைச் சந்திக்கும் விருப்பத்தைச் சொன்னேன். பேசியவர் 'ஏக் மினிட்' என்றார். ஒருநிமிடம்கூட ஆகவில்லை. "நமஸ்தே" என்றவாறு மோதிஜி பேசினார்.

எனக்குச் சட்டென்று நடுக்கமாகிவிட்டது. சமாளித்துக்கொண்டு நான் துவாரகை வந்திருப்பதையும் அவரைச் சந்திக்கும் ஆவலையும் சொன்னேன். அவர் உடனே நான் என்ன படித்திருக்கிறேன், என்ன செய்துகொண்டிருக்கிறேன், எதற்காக குஜராத் வந்திருக்கிறேன் என்பறெல்லாம் விசாரித்தார். பின்னர் "துவாரகாவிலிருந்து அகமதாபாத் மிகவும் தூரம். எட்டுமணி நேரம் பயணம் செய்யவேண்டும். நீங்கள் அவ்வளவு சிரமப்பட வேண்டாம். நான் இரண்டொருநாளில் ராஜ்காட் வருகிறேன். அங்கு சந்திக்கலாம்" என்று சொன்னார். அப்போது தேர்தல் நேரம். அவர் மிகவும் பிஸியாக இருந்தார். இருந்தாலும் என்னைச் சந்திக்க நேரம் ஒதுக்கினார்.

இரண்டொரு நாட்கள் கழித்து ராஜ்காட் பயணியர் இல்லத்துக்குச் சென்றேன். ஃபோனில் பேசியதுதானே தவிர என்னிடம் எந்த அனுமதிக் கடிதமும் இல்லை. சர்க்யூட் ஹவுஸின் மாடியில் தங்க வைத்திருந்தார்கள். மோதியைச் சந்தித்து நிறையக் கேள்விகள் கேட்க என்னைத் தயார்படுத்திக் கொண்டேன். 12.30க்கு அப்பாயின்ட்மென்ட். ஆனால் சந்திப்புக்கான அறிகுறியே இல்லை. சரி, பிஸியில் மறந்துவிட்டார்போல என நினைத்துக் கொண்டிருந்தபோது அறைக்கதவு தட்டப்பட்டது. அப்போது மணி 12.25.

கதவைத் திறந்தால் ஒரு போலீஸ் ஜவான். அவர் என்னை ஓர் அறைக்கு அழைத்துச்சென்றார். பதட்டத்தில் எதையும் கவனிக்காமல் அந்த அறையிலிருந்த சோஃபாவில் அமர்ந்தேன். மணி அப்போது 12.30. சரி, அவர் வர நேரமாகும் என்று நினைத்தபோது மற்றொரு சோஃபாவிலிருந்து "நமஸ்தே" என்றவாறு மோதி எழுந்துவந்தார். அவர் அங்கே அமர்ந்திருப்பதையே நான் கவனிக்கவில்லை. கேட்க நினைத்த கேள்விகளெல்லாம் மறந்துபோய்விட்டன.

மோதி, "நீ எவ்வளவு நாளாகக் கதை சொல்லிக்கொண்டிருக்கிறாய், ஒருநாளைக்கு எவ்வளவு மணிநேரம் பயிற்சி செய்வாய், எந்தெந்தத் தலைப்புகளில் கதை சொல்லியிருக்கிறாய், குஜராத்தில் வாழ்ந்த மகான்கள் பற்றியெல்லாம் கதை சொல்வாயா?" என்றெல்லாம் அடுக்கடுக்காகக் கேட்டார். பின் நீ வருவதை முன்பாகவே ஈமெயில் மூலமாகவோ ஃபோனிலோ தெரியப்படுத்தியிருந்தால் இங்குள்ள டூரிஸம் டிபார்ட்மெண்ட் மூலம் சில நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருக்கலாம்" என்றார்.

ஒப்பிட்டால் நான் மிகமிகச் சாதாரணமானவள். ஆனாலும் தனக்கு சரிநிகர் சமானமாக என்னை நடத்தினார். எங்களிடம் பேசினார், பழகினார். பின் கீதா ஜோரி என்ற ஐ.பி.எஸ். ஆஃபிசரை வரவழைத்து, "இவர் தமிழ்நாடுதான். உங்க ஊர்தான். தமிழில் பேசுங்கள்" என்று சொல்லி எங்களைத் தமிழில் பேசவைத்து ரசித்தார். கீதா ஜோரி குஜராத்தின் முதல் ஐ.பி.எஸ். அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. அவர் சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்தவர்.

எல்லாரையும் தனக்குச் சரிசமமாக மதித்து நடக்கும் மோதியின் உயர்ந்த பண்பினை அன்று நான் தெரிந்து கொண்டேன். அதுதான் ஒரு தலைமைக்குரிய பண்பு இல்லையா?

- சிந்துஜா சந்திரமௌலி
More

ராஜ ராஜேஸ்வரி
Share: 
© Copyright 2020 Tamilonline