Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2006 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நிதி அறிவோம் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | இலக்கியம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | விளையாட்டு விசயம் | தமிழக அரசியல் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
விளையாட்டு விசயம்
உள்ளூர் கிரிக்கெட்
- சேசி|அக்டோபர் 2006|
Share:
Click Here Enlargeஇரவில் அரங்கை ஒளிமயமாக்கும் விளக்குகளின் வெளிச்சத்தில் ஆட்டம். வெள்ளை நிற கூக்கபரா கிரிக்கெட் பந்து. விளையாட்டு வீரர்கள் விதவிதமான நிறங்களில் உடை அணிந்திருக்கிறார்கள். ஆடுவதோ ஒரு நாள் கிரிக்கெட், டெஸ்ட் மாட்ச் அல்ல. இதில் ஏதாவது அதிர்ச்சியான செய்தி இருக்கிறதா? ஆனால் வெள்ளை நிற உடை உடுத்தி, டீ டைம் என்று ஆட்டத்தை நிறுத்தி, ஐந்து நாட்கள் சாவகாசமாக விளையாடும் பிரிட்டிஷ்தனமான கிரிக்கெட் பாரம்பரியத்தில் வளர்ந்தவர்களுக்கு 1977-ல் கெர்ரி பாக்கர் (Kerry Packer) உலக வரிசை கிரிக்கெட்டை (World Series Cricket) அறிமுகப் படுத்திய பொழுது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஆட்டங்களை ஒளிபரப்பும் உரிமையைப் பெற தனது சொந்த லாபத்திற்காக பாக்கர் இந்தப் போட்டி ஆட்டங்களைத் துவக்கினாலும் அதன் தாக்கம் இன்றும் கிரிக்கெட்டில் இருக்கிறது. கிரிக்கெட் ஆட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்களைத்தவிர, அந்த ஆட்டங்களை ஒளிபரப்புவதில் அவர் புகுத்திய பல தொழில் நுட்பங்களும் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு உதவி இருக்கின்றன.

முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு கிரிக்கெட்டில் இப்பொழுது மீண்டும் ஒரு பரபரப்பான சர்ச்சை இந்தியாவில் ஆரம்பித்திருக்கிறது. அதற்குக் காரணம் மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் தனது மாநிலக் குழுவில் விளையாட வெளிநாட்டு ஆட்டக்காரர்களை வரவழைக்கத் திட்டமிட்டிருப்பதுதான். சென்ற வருடம் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டாரன் ஹோல்டரை, மஹாராஷ்டிராவின் பயிற்சியாளராகவும், கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரியாகவும் 27 லட்சம் ரூபாய் சம்பளத்துடன் நியமித்தது. அதைத் தொடர்ந்து வெளி மாநில, மற்றும் வெளி நாட்டு ஆட்டக்காரர்களைக் குழுவில் சேர்ப்பதைப் பற்றித் திட்டமிட்டு வருகிறது.

வெளி நாட்டுப் பயிற்சியாளர்கள் இந்தியாவிற்குப் புதிதல்ல. கிரக் சாப்பல் இந்திய தேசிய அணிக்குப் பயிற்சியாளராக இருக்கிறார். இவருக்கு முன்னால் நியூசிலாந்தைச் சேர்ந்த ஜான் ரைட் பயிற்சியாளராக இருந்தார். தற்போது பஞ்சாப் அணிக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் இண்டிகாப் ஆலம் பயிற்சியாளராக இருக்கிறார். ஆனால் வெளிநாட்டவர் எவரும் இந்தியாவிற்காக சமீபத்தில் விளையாடவில்லை. 1945, 46-களில் இங்கிலாந்து வீரர் டெனிஸ் காம்ப்டன் ரஞ்சிக் கோப்பை ஆட்டங்களில் விளையாடி இருக்கிறார்.

ஆக திடீரென்று வெளிநாட்டு வீரர்களை இந்திய உள்நாட்டு ஆட்டங்களில் சேர்ப்பதற்கு ஆர்வம் வரக் காரணம் என்ன? மஹாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் அஜய் ஷர்கே கூறும் காரணம் இந்தியாவில் உள்நாட்டுக் கிரிக்கெட்டின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பது. ஓவெளிநாட்டு வீரர்கள் போட்டியைக் கடுமையாக்குவார்கள் என்றால், ஏன் இந்தக் கருத்தைப் பின்பற்றக் கூடாது?ஔ என்று கேட்கிறார் அவர். மஹாராஷ்டிரா உள்நாட்டு ஆட்டங்களில் பின் தங்கிவருவதும் இதற்கு ஒரு காரணம். BCCI (Board of Control for Cricket in India) முதலில் இந்தக் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், பிறகு பல்டி அடித்துத் தன் ஆதரவைத் தெரிவித்தது. அதன் செயலாளர் நிரஞ்சன் ஷா ஓவெளிநாட்டவர்கள் இந்தியாவின் உள்நாட்டுப் போட்டிகளில் விளையாட விதிமுறைகள் தடையாக இல்லைஔ என்று கூறினார். ஓஅதோடு, ரஞ்சிக் கோப்பை, துலீப் கோப்பை ஆட்டங்களைக் காணும் ஆர்வத்தை பொதுமக்களிடம் உருவாக்க விரும்புகிறோம்ஔ என்கிறார்.

உள்நாட்டுக் கிரிக்கெட்டில் மக்களுக்கு ஆர்வம் குறைந்து வருவது உண்மை. அதற்கு டெண்டுல்கர் போன்ற சர்வதேச ஆட்டக்காரர்கள் இப்போட்டிகளில் தொடர்ந்து பங்கெடுத்துக் கொள்வதில்லை என்பதும் ஒரு காரணம். இதில் வருமானம் குறைவு என்பதைத் தவிர, ஓய்வு தேவை என்ற காரணத்தைக் காட்டிப் பல திறமையான வீரர்கள் இந்தப் போட்டிகளை தவிர்த்து விடுகிறார்கள். ஓஇங்கிலாந்தில் கௌண்ட்டி கிரிக்கெட்டில் வெளிநாட்டு ஆட்டக்காரர்கள் ஆடும்போது, இந்தியாவில் ஏன் வெளிநாட்டு வீரர்கள் பங்கெடுத்துக் கொள்ளக்கூடாது?ஔ என்ற கேள்வி கிளம்பியிருக்கிறது. அமெரிக்க பேஸ்பால், ஃபுட்பால், ஐரோப்பிய சாக்கர் போன்ற ஆட்டங்கள் தனியாருக்குச் சொந்தமான குழுக்களிடையே நடக்கின்றன. ஏன் அந்த நிலை இந்தியக் கிரிக்கெட்டிற்கும் பரவக்கூடாது என்ற சர்ச்சையும் ஆரம்பித்திருக்கிறது. கால்பந்தில் மோகன் பகான், கிழக்கு வங்காளம் என்று குழுக்கள் இருப்பது போல் கிரிக்கெட்டிலும் தனியார் குழுக்கள் தோன்றி திறமையான ஆட்டக்காரர்களை இந்தக் குழுக்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாமே என்ற சிந்தனையும் பரவ ஆரம்பித்திருக்கிறது. இம்மாதிரிக் குழுக்கள் இடையே நடக்கும் போட்டிகள் உள்நாட்டுக் கிரிக்கெட்டில் ஆர்வத்தை அதிகரிக்கும் ன்ற எண்ணமும் நிலவுகிறது.
Click Here Enlargeமுன்னாள் கிரிக்கெட்டர் வெங்கடராகவன் தென்றலுக்கு அளித்த பேட்டியில் (டிசம்பர் 2005 இதழில் காணலாம்), இங்கிலாந்து கௌண்ட்டி கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் அவரது கிரிக்கெட் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாகக் குறிப்பிட்டிருந்தார். வெளிநாட்டவர் இந்தியாவில் விளையாடுவதைப் பற்றி அவரிடம் கேட்டதற்கு ஓஇந்தியாவின் கிரிக்கெட் சீசன் மற்ற நாடுகளின் கிரிக்கெட் சீசனுடன் மோதுவதால் துரதிருஷ்டவசமாக நம்மால் தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆட்டக்காரர்களை இந்தியாவிற்குக் கொண்டு வந்து ரஞ்சிக் கோப்பையில் ஆட வைக்க இயலாது. இங்கிலாந்து, மேற்கு இந்திய ஆட்டக்காரர்களை கொண்டு வரலாம். அவர்களிடம் அபரிமிதமான திறமை இருந்தது. லாராவைத் தவிர எவரிடமும் அந்த அளவுக்கு திறமை இல்லை.ஔ என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ஓசிறந்த ஆட்டக்காரர்களைக் கொண்டுவருவதற்கு பணம் ஒரு தடையல்லஔ என்று கூறுகிறார் மஹாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத் தலைவர் அஜய் ஷர்கே. இந்தியாவில் மிக அதிக அளவில் பணம் சம்பாதிக்கும் விளையாட்டு கிரிக்கெட். பெப்ஸி, கோக் போன்ற சர்வதேச நிறுவனங்களில் ஆதரவும் இந்த விளையாட்டிற்கு உண்டு. திறமையான வெளிநாட்டு வீரர்கள் விளையாடுவதால் உள்நாட்டு ஆட்டங்களைப் பார்ப்பதில் பொதுமக்களிடையே ஆர்வம் அதிகரிக்கும். அதனால் கிரிக்கெட் அமைப்புகளுக்கு வருமானம் அதிகரிக்குமே ஒழிய குறையப் போவதில்லை என்று சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். ரஞ்சிக் கோப்பையில் டெண்டுல்கரும், கிளென் மக்ராத்தும் ஒரு அணியிலும், ஷாயோயிப் அக்தரும், அனில் கும்ப்ளேயும் மற்றொரு அணியிலும் விளையாடுவதையும் நினைத்துப் பாருங்கள் என்று இணையக் குழுமங்களில் பலர் கனவு காண ஆரம்பித்து விட்டார்கள்.

மஹாராஷ்டிராவின் கருத்தோடு அனைவரும் ஒத்துப் போகவில்லை. முன்னாள் கிரிக்கெட் வீரர் மதன்லால் ஓஇந்தியாவின் உள்நாட்டு ஆட்டங்களின் தரத்தை உயர்த்த வேண்டுமென்றால் ஆடுதளங்களின் (pitch) தரத்தை முதலில் உயர்த்த வேண்டும். வெளிநாட்டு வேகப் பந்து வீச்சாளர்களும் இந்தத் தளங்களில் எடுபட மாட்டார்கள். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் இந்திய வீரர்கள் நேரமின்மையால் உள்நாட்டு ஆட்டங்களில் விளையாடவில்லை என்றால், திறமையான வெளிநாட்டு வீரர்கள் மாத்திரம் எப்படி வருவார்கள்?ஔ என்று கேட்கிறார். டில்லி கிரிக்கெட் சங்கமும் அவரது கருத்தோடு ஒத்துப் போகிறது. அதன் செயலாளர் சுனில் தேவ் ஓடில்லிக்கு வெளிநாட்டு வீரர்கள் தேவையில்லைஔ என்று பேட்டி அளித்திருக்கிறார்.

பேஸ்பால் போல மூன்று மணி நேரத்தில் முடிவடைகின்ற, அணிக்கு 20 ஓவர்கள் கொண்ட Twenty20 என்ற ஆட்டங்கள் இங்கிலாந்தில் பிரபலமடைந்து வருகின்றன. இந்த ஆட்டங்கள் வரும் வருடங்களில் இந்தியாவிலும் நடக்கவிருக்கின்றன. இந்த மாற்றங்கள் இந்தியக் கிரிக்கெட்டிலும், சர்வதேசக் கிரிக்கெட்டிலும் மாற்றங்கள் உண்டு செய்யுமா? பாக்கரின் உலக வரிசை ஆட்டங்களை, பாக்கரின் சர்க்கஸ் என்று கேலி செய்தார்கள். அது புகுத்திய மாற்றங்கள் போல, இந்த மாற்றங்கள் ஒரு புரட்சியை ஏற்படுத்துமா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

பெட்டிச் செய்தி:
வெளிநாட்டு வீரர்கள் இந்தியாவின் உள்நாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வது பற்றி உங்கள் கருத்து என்ன? அவர்களால் திறமையான இந்திய இளைஞர்கள் வாய்ப்பை இழப்பார்களா, அல்லது திறமையான வீரர்களுடன் விளையாடும் வாய்ப்பைப் பெருவார்களா? மாநில வாரியான குழுக்கள் இல்லாமல், தனியார் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் குழுக்களிடையே, அமெரிக்காவில் உள்ள பேஸ்பால் லீக் போல இந்தியாவில் கிரிக்கெட் லீக் ஆட்டங்கள் தோன்றுமா? உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் எண்ணங்களை மின்னஞ்சல் மூலம் thendral@chennaionline.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.

சேசி
மேலும் படங்களுக்கு
Share: 




© Copyright 2020 Tamilonline