Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2006 Issue
பதிப்புரை | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | முன்னோடி | தமிழக அரசியல் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | புதிரா? புரியுமா? | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | விளையாட்டு விசயம் | சினிமா சினிமா | Events Calendar
Tamil Unicode / English Search
விளையாட்டு விசயம்
ஆடி ஓய்ந்தவர்கள்
- சேசி|நவம்பர் 2006|
Share:
Click Here Enlargeமைக்கேல் ஜோர்டன், பீட் சாம்பிரஸ், வெயின் கிரெட்ஸ்கி மூவருக்கும் என்ன சம்பந்தம்? மூவரும் அவரவர் துறையில் மிகவும் சிறந்த ஆட்டக்காரர்களாகத் திகழ்ந்தவர்கள். உண்மை. ஆனால் சட்டென்று யார் மனதிலும் தோன்றாத விஷயம் அவர்கள் மூவரும் ஓய்வு பெற்ற விளையாட்டு வீரர்கள். இதென்ன பெரிய விஷயம், எல்லோரும் தங்கள் வேலையில் இருந்து எப்போதாவது ஓய்வு பெறத்தானே வேண்டும் என்று தோன்றலாம். ஆனால் விளையாட்டு வீரர்கள் இளம் வயதில் பெறும் ஓய்வு அவர்கள் வாழ்க்கையை மிகப் பெரிய அளவில் பாதிக்கிறது.

என் வாழ்க்கையில் முதன் முறையாக எனக்கு அதிர்ச்சி கொடுத்த விளையாட்டு வீரர், பியான் போர்க். பள்ளி நாட்களில் ஹிந்து தினசரியில் நான் படித்து வளர்ந்த டென்னிஸ் வீரர் இவர். எனது கல்லூரி வாழ்க்கை முடிவதற்குள் அவர் டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஓஎத்தனை வருடம் ஒவ்வொரு வகுப்பிலும் பெஞ்சியைத் தேய்த்தாய்?ஔ என்று கேட்டு மானத்தை வாங்காதீர்கள்! அவர் ஓய்வு பெறும் போது அவருக்கு வயது இருபத்து ஐந்துதான். எனக்கு வாழ்க்கையே துவங்கவில்லை, என்னைவிட நான்கு, ஐந்து வருடங்களே பெரியவரான போர்க் ஓய்வு பெறுகிறார்! நம்ம ஊர் கிரிக்கெட்டில் கவாஸ்கர், விஸ்வநாத் என்று பேரன், பேத்தி எடுத்து, கூன் போட்ட பிறகும் விளையாடிக் கொண்டு இருப்பார்கள். அதனால் இந்தச் செய்தி எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்ததில் ஒன்றும் ஆச்சரியமில்லை.

ஓய்வு பெற்ற பிறகு பீட் சாம்பிரஸ் கொடுத்த பேட்டியைத் தொலைக்காட்சியில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. தனது வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்ள அவர் எவ்வளவு சிரமப் படுகிறார் என்று புரிந்தது. டென்னிஸே வாழ்க்கை என்று இருந்த அவருக்கு, திடீரென்று அதிகப்படியாக இருக்கும் ஓய்வு நேரத்தை எப்படிச் செலவழிப்பது என்று தெரியவில்லை. விம்பிள்டன் போன்ற போட்டிகளில் ரசிகர்களின் ஆரவாரத்திற்கு நடுவே வாழ்ந்து பழகிய அவரால் அந்தப் போட்டிகள் நடக்கும் போது வீட்டில் வெறும் பார்வையளராக தொலைக்காட்சி முன்னால் அமர்ந்து இருக்க முடியவில்லை.

பல விளையாட்டு வீரர்கள் ஓய்வு பெற்றபின், அந்த ஆட்டத்தில் இப்படி விளையாடி இருக்கலோமோ, இந்தப் பந்தை வேறுவிதமாக அடித்திருக்கலாமோ, என்று எண்ணி மனக் குழப்பத்திற்கு ஆளாவதாகப் பேட்டி அளித்திருக்கிறார்கள். பயிற்சியாளர், உதவியாளர், ஆலோசகர் என்று தன்னைச் சுற்றி ஒரு பட்டாளத்தோடு வாழ்ந்துவிடும் இவர்கள் வாழ்க்கை, ஓய்வு பெற்றபின் அடியோடு மாறிவிடுகிறது. முதல் வகுப்பில் விமானப் பயணம், ஐந்து நட்சத்திர ஹோட்டல் வாழ்க்கை, நினைத்ததை நடத்திக் கொடுக்க ஒரு பட்டாளம், ஆரவாரத்துடன் எப்போதும் வரவேற்கத் தயாராக இருக்கும் ரசிகர்கள் கூட்டம் என்று வாழும் விளையாட்டு வீரர்கள் உலகமே தங்களைச் சுற்றி இருப்பதாக எண்ணி வளர்ந்து விடுகிறார்கள். ஓய்வு பெற்றபின் குப்பை வண்டியை வெளியே கொண்டுபோய் வைக்கும், குழந்தையை பள்ளியிலிருந்து அழைத்து வரும், மளிகை சாமான் வாங்கிக் கொடுக்கும் சராசரி அப்பாவாகி விடுகிறார்கள். இந்த அதிர்ச்சியைப் பலராலும் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.

ஓய்வு பெற்ற விளையாட்டு வீரர்கள் பலரின் திருமணம் விவாகரத்தில் முடிகிறது. விளையாட்டு நாட்களில் ஹீரோவாக இருந்த கணவன் ஓய்வு பெற்றபின் சராசரி மனிதன் என்பது வெளிப்படுகிறது. தங்கள் விளையாட்டைத் தவிர வேறு எந்தத் திறமைகளையும் வளர்த்துக் கொள்ளாததால் அவர்களது பல குறைகள் வெளிப்பட ஆரம்பிக்கின்றன. வருடத்தில் ஒரு சில வாரங்களே சேர்ந்திருந்த கணவனும், மனைவியும் திடீரென்று தொடர்ந்து ஒன்றாக வாழ ஆரம்பிக்கும் போது அவர்கள் குறைகள் தெளிவாக ஆரம்பிக்கின்றன. இவைகளே விவாகரத்துக்களுக்கு அடிப்படை காரணம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

புகழோடும், பணத்தோடும் வளரும் விளையாட்டு வீரர்கள் பலருக்கு ஓய்வு பெற்றபின் தனது படாடோ பமான வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்ளத் தெரிவதில்லை. பலருக்கு தான் சம்பாதித்த பணத்தை எந்த விதத்தில் முதலீடு செய்வது என்று தெரியாது. அல்லது விவாகரத்தில் பாதிச் சொத்தை மனைவியிடம் இழந்து விடுவார்கள். என் ஹீரோ பியான் போர்க் ஓய்வு பெற்றபின் இந்த மூன்று பாடத்தையுமே கற்றுக் கொண்டார். விளையாட்டு வீரர்களுக்கு உடை தயாரிக்கும் தொழிலை ஆரம்பித்த போர்க் தனது நிர்வாகத் திறமையின்மையால் நஷ்டமடைந்தார். போர்க் போல சம்பாதித்த பணத்தை இழந்து வாழ்க்கையை அடியிலிருந்து துவங்கும் விளையாட்டு வீரர்கள் பலரைப் பட்டியலிட்டுக் காட்டலாம்.
Click Here Enlargeஓய்வு நேர வாழ்க்கையை ஆக்கபூர்வமாக செலவழிக்கும் விளையாட்டு வீரர்கள் மிகக் குறைவு. சிலர் தங்கள் துறைகளில் பயிற்சியாளர்களாகவோ, நிர்வாகிகளாகவோ வாய்ப்பைத் தேடிக் கொள்கிறார்கள். மற்றும் சிலர் தொலைக்காட்சி, வானொலி அறிவிப்பாளர்களாகவோ, அல்லது பத்திரிகைகளில் விளையாட்டு விமர்சகர்களாகவோ வாய்ப்பு பெறுகிறார்கள். இது போன்ற வாய்ப்பு பல வெற்றிகளைக் கண்ட, அல்லது ரசிகர்களிடையே பெயரும், புகழும் பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு எளிதாக அமைகிறது.

ஆனால் பெயரும் புகழும் எல்லா விளையாட்டு வீரர்களுக்கும் எளிதாக வருவதில்லை. கால்பந்தில் சூப்பர் பௌல் வெற்றி காணாதவர்கள், பேஸ்பாலில் உலகக் கோப்பையைக் கைப்பற்றாதவர்கள், டென்னிஸில் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் வெற்றி பெறாதவர்கள் இந்தப் போட்டிகளில் அந்த வெற்றிகளைப் பெற்றவர்களைவிட அதிகம். பெரிய வெற்றிகளைப் பெறாதவர்கள் அதிக அளவில் பணமோ, புகழோ சம்பாதிப்பதுமில்லை. அட்லாண்டா ஒலிம்பிக்ஸில் 400 மீட்டர் ஓட்டத்தில் ஏழாம் இடத்தைப் பெற்றவர் பெயரை அறிந்து கொள்ள யாருக்கு விருப்பம் இருக்கிறது? ஆனால் ஒலிம்பிக்ஸில் பங்கு பெற உலகிலேயே தலைசிறந்த ஆட்டக்காரர்களில் ஒருவராக இருந்தால்தான் முடியும். எல்லா விளையாட்டுகளும் ஒரேவிதமான வருமான வாய்ப்பைப் பெற்றுத் தருவதும் இல்லை. நாஸ்கார் காரோட்டப் போட்டிகளில் பங்கு பெறும் விளையாட்டு வீரர் சம்பளத்தையும், ஸின்க்ரோனைஸுடு ஸ்விம்மிங்க் நீச்சல் போட்டிகளில் பங்குபெறும் விளையாட்டு வீரர் சம்பளத்தையும் ஒப்பிட முடியாது.

எந்த விளையாட்டாக இருந்தாலும் சரி, எவ்வளவு புகழோ, பணமோ சம்பாதித்தாலும் சரி, விளையாட்டு வீரர்கள் தங்கள் வாழ்க்கையையே அந்த விளையாட்டிற்காக அர்ப்பணம் செய்து கொள்கிறார்கள். ஐந்து, ஆறு வயதில் தொடங்கும் பயிற்சி அவர்கள் ஓய்வு பெறும் வரை தொடர்கிறது. அதனால் அவர்கள் வாழ்க்கைக்குத் தேவையான மற்ற திறமைகளையோ, கல்லூரிப் படிப்பையோ தவற விடுகிறார்கள். போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றபின் நிஜ வாழ்க்கைக்கு அவர்கள் தயாராக இல்லை. பல வெற்றிகளையும், பணத்தையும் சம்பாதிக்காத விளையாட்டு வீரர்களின் ஓய்வு வாழ்க்கை சோதனைகளில் ஆரம்பிக்கிறது. NFL, NBA போன்ற பண வசதியுள்ள அமைப்புகள்கூட விளையாட்டு வீரர்களின் திறமையை வளர்ப்பதற்கான பயிற்சிகளில் கவனம் செலுத்துகிறார்களே தவிர, அவர்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான பயிற்சிகளில் கவனம் செலுத்துவதில்லை.

விளையாட்டு வீரர்களின் ஆட்ட வாழ்க்கை மிகக் குறுகியது. அதிலும் அடிபட்டு அதனால் ஆடுவதைத் தொடர முடியாமல் போனவர்களும் உண்டு. அமெரிக்கக் கால்பந்து போன்ற ஆட்டங்களில் இந்தப் பிரச்சினை அதிகம். முழங்கால், கணுக்கால் முட்டுகளில் அடிபட்டு அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு அந்தக் காரணங்களால் ஆட்டங்களில் தொடர்ந்து பங்கு எடுத்துக் கொள்ள முடியாமல் போன வீரர்கள் பலர். ஆட்டத்திற்காக 250 பவுண்டு, 300 பவுண்டு என்று எடைபோட்டு கிங்கரர்களாக மாறும் பல கால்பந்தாட்ட வீரர்கள் ஓய்வுக்குப் பின் அதே காரணங்களால் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பல வியாதிக்களுக்கு ஆளாகிறார்கள். இதற்கான மருத்துவச் செலவுகள் இவர்களைத் தொடர்ந்து வரும் சோதனைகள். விளையாட்டு வீரர்களுக்கான மருத்துவ இன்ஷூரன்ஸ் விலையும் எட்டாத ஏகானிக் கொம்புதான்.

ஓய்வு பெறும் விளையாட்டு வீரர்களின் மன பாதிப்பைப் பற்றி பல மனோதத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். குறிப்பாக நார்த் கரோலினா பல்கலைக் கழகத்தில் ஓய்வு பெற்ற விளையாட்டு வீரர்கள் ஆய்வு மையம் (Center for the Study of Retired Athletes) துவங்கி மனோதத்துவ ஆராய்ச்சி மட்டுமின்றி, உடல் நிலை பாதிப்பு, மருத்துவ தேவைகள் போன்ற ஆராய்ச்சிகளைத் துவக்கி யிருக்கிறார்கள். முக்கியமாக இந்த ஆராய்ச்சிகளுக்குத் தேவையான புள்ளி விவரங்களையும் சேகரித்து வருகிறார்கள்.

Perception is not reality என்பது விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையைப் பொறுத்தவரை உண்மை. விளையாட்டுத் துறையில் அவர்கள் வெற்றிக்குப் பின்னால் எவ்வளவு கடுமையான உழைப்பு இருக்கிறது என்று தெரியும். ஆனால் ஓய்வு பெற்றபின் வாழ்க்கையில் வெற்றிபெற அவர்கள் மீண்டும் உழைக்க ஆரம்பிக்கிறார்கள் என்பதுதான் யதார்த்தம்.

சேசி
Share: 
© Copyright 2020 Tamilonline