Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | புதிரா? புரியுமா?
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே | சமயம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல்
Tamil Unicode / English Search
நேர்காணல்
களத்து மேட்டு ஊர்க்குருவி பாடுகிறது...
- கேடிஸ்ரீ|ஜூலை 2004|
Share:
Click Here Enlargeபுஷ்பவனம் குப்புசாமியைச் சந்தியுங்கள்

தாலாட்டு, கும்மி, நடவு, தெம்மாங்கு போன்ற கிராமிய பாடல்கள், கிராமத்தில் வாழும் மக்களின் படைப்பாற்றலையும், சிந்தனைகளையும், பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கக்கூடியன. மக்களின் அன்றாட வாழ்வைப் பாட்டாகத் தருவன. கிராமியப் பாடல்களை மண்மணம் மாறாமல் நம்மிடையே புஷ்பவனம் குப்புசாமி - அனிதா இணையர் பலமேடைகளில் பாடி வருகிறார்கள். பல தொகுப்புக்களும் வெளியிட்டு அவை தமிழகத்தின் பட்டிதொட்டிகளில் ஒலியெழுப்புகின்றன. முன்னோடி என்ற முறையில் பல தடைக்கற்களை இவர் தாண்டவேண்டியிருந்தது. ஆனால், இது பின்வருபவர்களுக்கு நல்ல வழியமைத்துக் கொடுத்துள்ளது.

தென்றல் இதழுக்காக புஷ்பவனம் குப்புசாமியைச் சந்தித்து பேசிய போது...

துவக்கம்

தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது வேதாரண்யம் பகுதி. அங்குள்ள புஷ்பவனம் என்கிற அழகிய சிற்றூர்தான் நான் பிறந்த ஊர். அப்பா காளிமுத்து, அம்மா சீதாலட்சுமி. குடும்பத்தில் நான் தான் மூத்த பிள்ளை. சாதாரணக் குடும்பம் எங்களுடையது.

புஷ்பவனம் கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் நான் ஆறாம் வகுப்புவரை படித்தேன். பின் 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரசினர் உயர் நிலைப்பள்ளியில் போய்ப் படித்தேன். எல்லோரும் அந்தக்காலத்தில் பள்ளிக் கூடத்திற்கு நடந்து சென்றுதான் படித்தோம்.

பள்ளிக்குப் போகும் வழியில் வயலில் நாற்று நடுபவர்கள் பாடுவதையும், நடந்து செல்லும் போது களைப்புத் தெரியாமல் இருப்பதற்காகப் பாடிக்கொண்டு வருபவர் களின் பாட்டுக்களையும் கேட்க முடிந்தது. இப்படித்தான் எனக்கு நாட்டுப்புறப் பாடல்கள் அறிமுகம் ஆயின.

இசை மேல் ஆசை

பள்ளிப் படிப்பை முடித்தவுடன் தஞ்சாவூரில் மன்னர் சரபோஜி அரசினர் கலைக்கல்லூரியில் புகுமுக வகுப்பு (PUC) படித்தேன். பின்பு அதே கல்லூரியில் கணிதத்தில் பட்டப்படிப்பு படித்தேன். கல்லூரி படிப்பின் மூன்றாம் ஆண்டுதான் என் வாழ்வில் எனக்குத் திருப்புமுனை யானது. எங்கள் கல்லூரியில் ஆண்டு தோறும் முத்தமிழ் விழா நடத்துவார்கள். பல மாணவர்கள் அவ்விழாவில் கலந்து கொண்டு பாடிப் பரிசுகளை வாங்கிச் செல்வார்கள்.

நான் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் போது என் சகமாணவர் களும், ஆசிரியர்களும் என்னை வற்புறுத்தி முத்தமிழ் விழாவில் பாட வைத்தனர். என் பாட்டிற்கு எல்லா முனையிலிருந்தும் பாராட்டுகள் குவிந்தன. என் நண்பர்களும், ஆசிரியர்களும் பாராட்டியது என் மனதில் உற்சாகத்தை அள்ளித் தெளித்தது.

இரண்டு அவமானங்கள்

என் நண்பர்கள், மற்றும் என்னைச் சேர்ந்தவர்கள் எனக்கு அளித்த உற்சாகம் என்னுள் திரைப்படத்தில் பாடுவதற்கான ஆசையைத் தூண்டிவிட்டது. திரைப்படத்தில் பாடவேண்டும் என்ற ஆசை யினால் அப்போது திரைப்படத்தில் பாடிக்கொண்டிருந்த ஓர் இசைக்குழுவிடம் வாய்ப்புக் கேட்டேன். உடனே அவர்களும் ஆர்மோனியம், தபலா எடுத்துக் கொண்டு நான் பாடுவதற்கு வாசிக்க உட்கார்ந்தார் கள். எனக்கு ஒரே மகிழ்ச்சி. மெல்லப் பாட ஆரம்பித்தேன்.

நான் பாட ஆரம்பித்த சிறிது நேரத்திற்குள் அவர்கள் வாசிப்பதை நிறுத்திவிட்டார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை! உடனே அவர்களைப் பார்த்து, ''ஏன் நிறுத்தி விட்டீர்கள்?" என்றேன். அதற்கு அவர்கள் ''தாளமும் இல்லாமல், சுருதியும் இல்லாமல் என்ன பாட்டு பாடுகிறாய் நீ?'' என்று கேட்டனர். எனக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. உடனே நான் அவர்களிடம் ''சுருதி என்றால் என்ன, தாளம் என்றால் என்ன என்று நீங்கள் எனக்கு சொல்வதை விட்டுவிட்டு வாசிப்பதை நிறுத்தி விட்டால் எப்படி?'' என்றேன். என்னுடைய கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல் ஒருவர் என்னைப் பார்த்து, ''முதலில் நீ நல்ல ஆசிரியரிடம் கர்நாடக சங்கீதம் கற்றுக் கொள்'' என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றுவிட்டார். இது எனக்கு ஏற்பட்ட முதல் அவமானம்.

பிறகு எனக்குக் கர்நாடக சங்கீதம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற வெறி ஏற்பட அதற்காகக் கர்நாடக சங்கீத ஆசிரியரிடம் சென்றேன். அவர் என் குடும்பச் சூழலையும், நான் என்ன படிததுக் கொண்டிருக்கிறேன் என்பதையும் விசாரித்துவிட்டு, என்னைப் பார்த்து ''கணக்குப் பாடம் படித்துக் கொண்டிருக் கிறாய். அதில் மேலும் படித்து முன்னேறி, கஷ்டப்படுகிற உன் குடும்பத்திற்கு ஏதாவது உபயோகமாக சம்பாதித்து கொடுக்கும் வழியைப் பார்ப்பதை விட்டுவிட்டு சங்கீதம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசைப் படுகிறாயே. நீ என்ன பைத்தியமா?'' என்றார். ''சங்கீதம் கற்க வேண்டும் என்கிற ஆசையில்தான் நான் உங்களிடம் வந்தேன்?'' என்ற என் பதிலைக் கேட்டவுடன், ''சங்கீதம் என்ன கத்திரிக்காயா? கடையில் வாங்கு வதற்கு? அது இரத்தத்தில் ஊறின சமாச் சாரம் தெரியுமா?'' என்றார். சங்கீதம் கற்க வேண்டும் என்று சென்ற எனக்கு இது இரண்டாவது அவமானம்.

சங்கீதமா? படிப்பா?

நான் அடைந்த இரண்டு அவமானங் களுமே என்னுள் சங்கீதம் கற்க வேண்டும் என்கிற வெறியை வளர்த்தது. நான் அடைந்த தோல்விகளை வெற்றியாக்க வேண்டும் என்று என்னுள் ஒரு வேகம் ஏற்பட்டது. 'முதுகலை படிக்க வேண்டுமா? சங்கீதம் படிக்க வேண்டுமா?' என நான் எனக்குள் கேட்டுக் கொண்டேன். என் உள்ளம் சங்கீதத்திற்கு அதிக முக்கியத்துவம் தர, சங்கீதம் கற்கவேண்டும் அதற்கான படிப்பை படிக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

சங்கீதம் கற்கும் ஆசையை நான் என் அப்பாவிடம் சொன்னேன். அப்பாவிற்கு இதில் சிறிதும் விருப்பம் இல்லை. சத்தம் போட்டார். எப்படியாவது சங்கீதம் கற்க வேண்டும் என்ற வெறியினால் நான் என் நண்பர்கள் சிலரிடம் சென்று அப்பாவிடம் பேசி அனுமதி வாங்கித் தரும்படி கேட்டேன். என் நண்பர்கள் எல்லோரும் என்னைவிட வயதில் மூத்தவர்கள்தான். பள்ளி ஆசிரியர் கள், தலைமையாசிரியர், பஞ்சாயத்தைச் சேர்ந்த பெரியவர்கள் போன்றோர். அவர்கள் என் அப்பாவிடம் பேசி அவரது சம்மதத்தை வாங்கிவிட்டார்கள்.

சங்கீதபூஷணம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் சங்கீதபூஷணம் பட்டயப் படிப்பில் சேர்ந்தேன். நான் படிக்கும் காலத்தில் அன்று அங்கு இசைக்கல்லூரி முதல்வராக இருந்தவர் மதுரை சோமு அவர்கள். சங்கீதபூஷணம் பட்டயப் படிப்புப் படிக்க 4 ஆண்டு ஆகும். ஆனால் நான் இரண்டு ஆண்டுதான் அங்கு படித்தேன். அப்போது சென்னைப் பல்கலைக்கழகத்தில் இசையில் இளங்கலை வகுப்பு (B.A. Music) ஆரம்பித்தார்கள். அதனால் அங்கிருந்து சென்னைக்கு வந்து சென்னைப் பல்கலைக் கழக இசைத்துறையில் சேர்ந்தேன். இதில் சேர்ந்த முதல் மாணவன் நான்தான். எனக்குப் பிறகு சசிகுமார், பால சுப்ரமணியன் என்று இரண்டு பேர் வந்தார்கள். எந்தவித இசைப் பின்னணியும் இல்லாமல் நான் இசை கற்க ஆர்வத்துடன் வந்தததால் ஆசிரியர்கள் எனக்கு அதிக ஒத்துழைப்புத் தந்தார்கள். குறிப்பாக இசைத்துறைத் தலைவர் முனைவர் கீதா அவர்களின் ஒத்துழைப்பை மறக்க முடியாது.

கிராமியப்பாடல்கள் பற்றிய ஆய்வு

நான் இசையில் முதுகலை முடித்து எம்.·பில், பி.எச்டி. வரை செய்தேன். முதுகலையில் ஆய்வுக்காக நான் எடுத்துக் கொண்டது கிராமியப் பாடல்களைத்தான். அதன் தலைப்பு 'கீழ்த்தஞ்சை மாவட்ட கிராமியப்பாடல்கள்' என்பது. என்ன மாதிரியான பாடல்கள் இருக்கின்றன, அந்தப் பாடல்களின் அமைப்பு என்ன என்று ஆய்வு செய்தேனே தவிர அதில் அதிக ஆழம் செல்லவில்லை. இந்த ஆய்வுக்காக நான் தஞ்சை மாவட்டம் முழுவதும் பயணம் செய்தேன். சுமார் 6 மாதம் ஆய்வுக்காக எடுத்துக்கொண்டேன். என் பயணங்களின் போது நிறையப் பாடல்கள் கிடைத்தன. மேலும் இந்த ஆய்வின் போதுதான் நான் நாட்டுப்புறப் பாடல்களைப் பற்றிய பல விஷயங்களைத் தெரிந்துக்கொண்டேன். அந்த காலக்கட்டத் தில் தான் எனக்கு கிராமியப் பாடல்களின் மீது மதிப்பும் மரியாதையும் வந்தது.

கிராமத்தில் வளர்ந்தும் நாம் இதை யெல்லாம் கேட்காமல் இருந்துவிட்டோமே என்று வருத்தப்பட்டேன். கிராமியப் பாடல்கள் திரைப்படப் பாடல்களைவிடவும், கர்நாடகப் பாடல்களைவிடவும் எளிதாக மக்களைச் சென்றடைகிறது என்கிற உண்மையையும் அப்போது புரிந்துக் கொண்டேன்.

'நாட்டுப்புறப் பாடல்கள்தான் கர்நாடக சங்கீதத்திற்கு அடிப்படை' என்ற என் ஆய்வுக்கான படிப்பைச் செய்தேன். நாட்டுப்புறப் பாடல்கள் பற்றிய இந்த உண்மையைப் பலர், குறிப்பாக சாம்பமூர்த்தி, டாக்டர் எஸ். ராமநாதன் போன்றோர் சொல்லியிருக்கிறார்கள். மேலும் இதுபற்றி ஆராய்ச்சி செய்து ஆய்வுகளை வெளியிட்டிருக்கிறோம்.

இசையே முழுநேரப் பணியானது!

நான் பள்ளியில் படிக்கும் காலத்திலேயே பாடிக்கொண்டிருப்பேன். என்னுடைய முனைவர் படிப்பை முடித்தவுடன் நான் எங்கும் வேலைக்குப் போகவில்லை. கிராமியப்பாடல்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்குப் பரப்பும் வேலையில் என்னை மறந்து ஈடுபட்டேன். கிராமத்திலிருந்து வந்ததும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். மக்களிடையே இதைப் பற்றிச் சொல்ல வேண்டிய கடமையும் எனக்கு அதிகம் இருப்பதாக நினைக்கிறேன். ஆகையால் வேலை தேடிக்கொள்ள நான் முயற்சிக்கவில்லை. இன்று பல மேடைகளில் கிராமியப்பாடல்களைப் பாடிவருகிறேன்.

விருதுகளும் சாதனைகளும்

இதுவரை கிட்டத்தட்ட இரண்டாயிரத்திற் கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடத்தியிருக் கிறேன். பலவிதமான விருதுகளைப் பெற்றிருக்கிறேன். மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி அறநிலை 'அருளிசைத் தென்றல்' என்ற விருதை அளித்துப் பெருமைப்படுத்தியது. அதுபோல் 'தமிழிசைப் பாணர்' விருதைத் தந்தை பெரியார் தமிழிசை மன்றம் வழங்கியது. தமிழக அரசு 1997-இல் 'கலைமாமணி' விருது வழங்கியது. 'நாட்டுப்புற நல்லிசை நாயகன்', 'இசை மாமணி', 'கிராமிய சிகரம்', 'கிராம கலாஸ்ரீ', 'சங்கீத சேது' போன்ற பட்டங்கள் எனக்கு வழங்கப்பட்டுள்ளன.

பயணம் செய்த நாடுகள்

உலக நாடுகள் பலவற்றிற்கும் நம் கிராமியப் பாடல்களை பாடுவதற்காகச் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. கனடா, சிங்கப்பூர், அரபுநாடுகள், இலங்கை, நார்வே, டென்மார்க் என்று பல நாடுகளுக்குப் பயணம் செய்திருக்கிறேன். அங்கெல்லாம் நம் கிராமிய இசைக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

நம் மண்ணின் மணத்தை வெளிநாட்டில் இருப்பவர்க்குக் கொடுக்கிறோம். அங்கு வாழும் இந்தியர்கள் எங்கள் நிகழ்ச்சிகளை மிகவும் விரும்பி கேட்கின்றனர். நாங்கள் அங்கு நம் கிராமங்களில் பாடும் திருவிழாப் பாட்டு, கோலப்பாட்டு, கும்மிப் பாட்டு என்று பல பாடல்களைப் பாடும்போது அவர்கள் பிறந்த மண் பற்றிய நினைவும், அவர்கள் ஊரில் இருந்தபோது நடைபெற்ற திருவிழாக்களும் மனதில் அப்படியே வந்துபோகின்றன. மேலை நாட்டவர்கள் நம் கலாச்சாரத்தை, கிராமியக் கலைகளை அதிகம் விரும்புகின்றனர்.

வளர்ந்து வரும் கிராமியக் கலைகள்

இன்று கிராமியக் கலைகள் நன்கு வளர்ந்து இருக்கின்றன. இன்றைய கல்லூரி மாணவர்கள் கிராமியக் கலைகள் பற்றியும், நாட்டுப்புறப் பாடல்கள் பற்றியும் படிக்க வருவது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. கிராமியக் கலைகளுக்காக 'நாட்டுப்புறக் கலைமணி' என்கிற பட்டயப் படிப்பு ஒன்று இப்போது இருக்கிறது. அதுபோல் 'நாட்டுப்புறக் கலைவடிவம்' என்கிற பாடமும் இருக்கிறது. நாட்டுப்புற நடனத்திற்கு என்றும் வகுப்புகள் உள்ளன.

இன்று கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் கிராமிய இசைப் பாடல்களுக்கான போட்டிகள் நடத்துகிறார்கள். இளைஞர் களிடையே இத்தகைய போட்டிகள் வளர்வது ஆரோக்கியமானது. நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் கிராமியக் கலைகளைப் பற்றிய ஆராய்ச்சிகளில் மாணவர்கள் இன்று முனைவர் பட்டம் வாங்க ஆர்வம் கொள்வதைப் பார்க்கும் போது கண்டிப்பாக இவற்றுக்கு மதிப்புக் கூடியுள்ளது என்பதை அறியலாம். அதுபோல் இப்போது வரும் திரைப்படங்களில்கூட நாட்டுப்புறப் பாணியில் பாடல்கள் அதிகம் வருவதைப் பார்க்கிறோம்.

மற்ற இசைகளுடன் வேறுபடும் கிராமிய இசை

கர்நாடக சங்கீதம், திரையிசை, கிராமியப் பாடல்கள் மூன்றுக்கும் இடையில் வேறுபாடு உண்டு. திரைப்படப் பாடல்கள் கதையின் சூழ்நிலைக்கேற்ப உருவாகின்றன. சூழ் நிலையை இயக்குநர் சொல்வார். இசை யமைப்பாளர் அவருடைய மனநிலைக்கேற்ப இசையமைப்பார். அதற்குக் கவிஞர் பாட்டு எழுதுவார். இப்படி மூவரின் மனநிலைக் கேற்ப உருவாகிறது திரைப்பாடல்.

கர்நாடக சங்கீதம் என்று எடுத்துக் கொண்டால் அதை யார் வேண்டு மானாலும் திடீரென்று பாடிவிடமுடியாது. முறைப்படி கற்றுக்கொள்ள வேண்டும். கற்றுக்கொண்டதை முறைப்படி பாட வேண்டும். ஆனால் நாட்டுப்புறப் பாடல்களில் மட்டும்தான் பாடுபவர் அவரே பாட்டை எழுதி, அவரே மெட்டுப்போட்டு, அவரே பாடி ரசிக்கிறார். அவர்கள் யாருக்காகவும் பாடவில்லை. அந்தந்த நேரத்திற்கேற்பப் பாடுகிறார்கள். அவர்கள் பாடல்களில் நவரசமும் தென்படுகிறது.

இந்த நவரசத்தைத் தேவாரம், திருவாசகத் தில் பார்க்க முடியாது. அங்கு பக்தி என்கிற ரசத்தைதான் பார்க்க முடிகிறது. அதுபோல் கர்நாடக சங்கீதத்திலும் பார்க்கமுடியாது. ஆனால் நாட்டுப்புற பாடல்களில் மட்டும்தான் ஒரு சேர கோபம், பக்தி, வெகுளி, நகைச்சுவை, பயம் என்று எல்லாவற்றையும் பார்க்க முடிகிறது.

கிராமியப் பாடல்களில் இலக்கிய நயம்

கிராமியம் என்பது வழக்காற்றுச் சொல்லில் வரும். அதாவது 'போனீர்களோ' என்றால் 'போனீங்களா' என்பது போல் வரும். வழக்காற்றுச் சொல்லில் எதுகை, மோனை இல்லாமல் ஒரு பாடலும் இருக்காது. உதாரணமாக

ஆத்தோரம் நான் பறிச்ச அரும்பரும்பு வெத்திலைய
போட்டா சிவக்குதில்ல வீராயி
பொன்மயிலே உன் மயக்கம் வீராயி

மேற்கூறிய பாடலில் முதல் எழுத்து மோனை, இரண்டாவது எழுத்து எதுகை, கடைசி எழுத்து பிராசம் அதாவது முடிவு. இதை இயைபு என்று சொல்லலாம். ஆக கிராமிய பாடல்களில் இந்த மோனை, எதுகை, இயைபு போன்றவை தானாகவே பாடும்போது இயல்பாக வந்துவிடும். இதற்கு எழுத்தில் முறையான வடிவம் இல்லை என்றாலும் பாட்டிற்குரிய எதுகை, மோனை இலக்கணம் இருக்கிறது. அதுபோல் பாட்டுப் பாடுவதற்கு முன்பு தண்டவாளம் மாதிரி சந்தம் அமைத்துவிடுகிறார்கள்.

வாழ்க்கையின் இலக்கணமே நாட்டுப்புறப் பாடல்களில்தான் இருக்கிறது என்று சொல்லலாம். சுருங்கச் சொல்ல வேண்டு மானால் நாட்டுப்புறப் பாடல்களை வாழ்வியல் இலக்கியம் என்று சொல்லலாம். இந்தக் கருத்தைச் சிலப்பதிகாரம், தொல்காப்பியம் போன்ற நூல்கள் அதிகம் சொல்லியிருக்கின்றன. உதாரணமாகப் பந்து விளையாட்டுப் பாடல்கள், கானல் வரிப் பாடல்கள் என்று நிறையச் சொல்லலாம்.

இசைத்தொகுப்புகள்

இதுவரை நான் 16 இசைத்தொகுப்புகள் பாடி வெளியிட்டிருக்கிறேன். கரிசல் மண், மண் ஓசை, சோளம்வெதக்கையிலே, மண் வாசம், மேகம் கருத்ததடி, களத்துமேடு, ஊர்க்குருவி, கிராமத்து கீதம், நாட்டுப்புற மணம், தஞ்சாவூர் மண்எடுத்து, ஒத்தையடிப் பாதையிலே, காட்டுமல்லி, ஆவாரம்பூ இன்னும் நிறைய ஆல்பங்கள் வெளியிட்டிருக்கிறேன். என் ஆல்பங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. கிராமங்களில் என் இசைத் தொகுப்புகளை அதிகம் கேட்கிறார்கள்.

திரைப்படத்தில் கிராமியப்பாடல்

இன்றைய திரைப்படத்தில் அதிக அளவில் கிராமிய இசையின் மணம் வீச ஆரம்பித்திருக்கிறது. இளையராஜா அவர்களின் வருகைக்குப் பிறகு தமிழ்த் திரைப்படங்களில் கிராமிய மணம் அதிக மாகியிருக்கிறது. திரைப்படம் என்கிற ஊடகம் இதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நான் பல திரைப்படங்களில் பாடியுள்ளேன். 'எதிரும் புதிரும்', 'காதல் கவிதை', 'தென்றல்', 'திருப்பாச்சி', 'திரு', 'பேரழகன்', தயாரிப்பில் இருக்கும் 'சுள்ளான்' என்று பல படங்களில் பாடியிருக்கிறேன்.

கிராமிய இசைவிழா

கர்நாடக இசைவிழா ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் கொண்டாடுவதுபோல் பொங்கல் சமயத்தில் நிறைய இசை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக எங்களை அழைக்கிறார்கள். கிராமியப் பாடல்களை நான் பல அரங்குகளில் பாடியிருக்கிறேன். நான் சென்னை ராணி சீதை மன்றம் போன்ற பெரிய அரங்குகளில் பாடியிருக்கிறேன். அதுபோல் இப்போது நிறையத் திருமண வரவேற்புகளில் கிராமிய இசைக் கச்சேரிகளை ஏற்பாடு செய்கிறார்கள்.

வாழ்வியல் கலை

கிராமத்து மக்களின் கலாசாரம், பண்பாடு போன்றவற்றை எதில் தேடலாம் என்றால் கிராமிய பாடல்களில் தேடலாம். கிராமியப் பாடல்கள் என்றும் அழியாதவை. அவை செவிவழியாக அறியப்படுகின்றன. எளிமை யான மெட்டு, நிறைந்த கருத்துகள் கொண்டவை. இதை ஏதோ டப்பாங்குத்து என்று சொல்கிறார்கள். அது தவறு. சுருங்கச் சொல்ல வேண்டும் என்றால் கிராமியக் கலைகள் என்பதைவிட, வாழ்வியல் கலை என்றே சொல்லலாம்.

எதிர்கால ஆசை

நம் கிராமியப் பாடல்கள் பற்றிய முழு விழிப்புணர்வை மக்களிடையே உண்டாக்க வேண்டும் என்பது என் ஆசை. இப்போது நிறையப் பேர் இத்தகைய பாடல்களை ரசிக்கிறார்கள் என்பது எங்களுக்கு வெற்றி என்றே சொல்லலாம். இதுமட்டுமல்லாமல் கிராமியக் கலைகள் பற்றிக் கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் பாடத்திட்டத்தை அரசாங் கமே கொண்டுவர வேண்டும். அதுவும் இளநிலைப் பட்டம் வரை கொண்டுவர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். கிராமியப் பாடங்களுக்கென்றே அரசாங்கத் தில் ஒரு துறை ஒதுக்கவேண்டும் என்பது என் விருப்பம்.

இந்த பாடத்திட்டத்தின் மூலம் கிராமியக் கலைகளை எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பாக கூடைபின்னுவது, மண்பாண்டங்கள் செய்வது, தையல் கலை என்று வாழ்க்கைக்கு உபயோகமான பல கிராமியக் கலைகளை பாடமாக வைத்து கற்றுத் தரவேண்டும். மேலும் உடல் நலம் பேணுதல், குழந்தை வளர்ப்பு, உணவு வகைகள், ஆடு, மாடு வளர்ப்பது என்று சகல விஷயங்களையும் இப்பாடத்திட்டத்தின் மூலம் மாணவ, மாணவிகளுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்பதே என் ஆசை.

மக்களுக்குப் பயன்படும் கலையாக கிராமியக்கலையைக் கொண்டு போக வேண்டும். தொலைக்காட்சியில் பழமொழிக் கதைகள் மூலமாகவும் நான் பல விஷயங் களை இன்றைய இளம் சமுதாயத்திற்கு சொல்லி வருகிறேன். 'சன்' தொலைக் காட்சியில் தினமும் பத்து நிமிடத்திற்கு மேல் பழமொழிக் கதை சொல்லி வருகிறேன். விதவிதமான தலைப்புகளில் பழமொழி சொல்லி, அதற்கேற்ற கதைகளைச் சொல்லி வருவதால் இந்நிகழ்ச்சி பலரால் விரும்பிப் பார்க்கப்படுகிறது. ஆன்மீகம், கல்வி, தன்னம்பிக்கை, பெண்கள் முன்னேற்றம், மூலிகை மருத்துவம் என்று ஏதாவது ஒரு தலைப்பில் கதை சொல்லி, கேட்பவர் களுக்கு நல்ல கருத்துக்களையும், சிந்தனைகளையும் வாழைப்பழத்தில் கசப்பு மாத்திரை வைத்துக் கொடுப்பது போல், பழமொழி, கதைகள் மூலம் வாழ்க்கைக்குப் பயனுள்ள செய்திகளை எடுத்துச் சொல்கிறேன்.

மறக்க முடியாதது

நான் சமீபத்தில் டில்லி சென்ற போது இசை விமர்சகர் சுப்புடு அவர்கள் எனக்கு எழுதி அனுப்பிய பாராட்டுக் கடிதத்தை என்னால் மறக்க முடியாது. நான் டில்லியில் நிகழ்ச்சி நடத்த சென்றபோது அவருக்கு உடல்நலம் சரியில்லாததால் என்னுடைய நிகழ்ச்சிக்கு நேரில் வர இயலவில்லை. ஆனால் அவர் என்னையும், என் மனைவியையும் வாழ்த்தி அனுப்பிய வாழ்த்துரையை நான் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். டில்லியில் எங்கள் நிகழ்ச்சி முடிவடைந்தவுடன் நாங்கள் அவரைப் போய் பார்த்தோம். அவருடைய ஆசியையும் பெற்றுக்கொண்டோம்.

என் மறுபக்கம்

எல்லோருக்கும் என்னுடைய ஒரு முகம் தான் தெரியும். நான் நாட்டுப்புற பாடல்கள் பாடுபவன் என்பது மட்டும்தான் தெரியும். ஆனால் நான் இளைஞர்களுக்கும், நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்துகிறேன். அவர்களுக்குத் தன்னம்பிக்கை, புதிய சிந்தனைகள் வளர்க்கும் பணியைச் செய்கிறேன். அன்றாடம் நடைமுறை வாழ்க்கையில் சந்திக்கும் விஷயங்களை அவர்களுக்குப் புரிய வைப்பேன்.

நம் எண்ணம் தான் வாழ்க்கை. மனித ஆற்றலைப்பற்றி அவர்களுக்கு உதாரணங்கள் பல சொல்லிப் புரியவைப்பேன். இளைஞர்கள் மத்தியில் ஓர் பொறி ஏற்படுத்துகிறேன். அவர்கள் வாழ்வில் வெளிச்சம் ஏற்படுத்திக் கொடுக்கிறேன். இத்தகைய ஆலோசனைக் கூட்டங்கள் என் மனதிற்குச் சந்தோஷத்தை தருகிறது. திருப்தியைத் தருகிறது.

******
காதல் காவலர் குப்புசாமி

எங்களது திருமணம் காதல் திருமணம். அனிதா எனக்கு அறிமுகமானது நிகழ்ச்சி ஒன்றில்தான். எங்கள் இசைத்துறையில் எம்.ஏ. (இசை) படிக்க வந்தார். 1990ஆம் ஆண்டு சென்னை நாரத கான சபாவில் 'பிருஹத்வனி' என்ற அமைப்பு கொண்டாடிய இசைவிழாவில் என்னுடன் மக்களிசைப் பாடல்கள் பாடுவதற்கு வந்தார். எங்கள் இசைத்துறையில் பல மாணவிகள் இருந்தும் யாரும் பாட முன் வராதபோது இவர் துணிந்து என்னுடன் பாட வந்தார். சிறப்பாகப் பாடி என் மனதில் இடம்பிடித்தார். இனிமையான குரல், அன்பான பேச்சு. நம் கலாசாரத்தின் மீது கொண்ட ஈடுபாடு போன்றவையால் என் மனதில் குடிகொண்டுவிட்டார். இருமனம் இணைய, 1992-இல் திருமணம் செய்து கொண்டோம். அவர் வடஇந்தியப் பெண்ணாக இருந்தாலும் தமிழின் மீதும், மக்களிசைப் பாடலின் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். என்னுடைய இந்த உயர்வுக்கும், வெற்றிக்கும் உறுதுணையாகவும், அடித்தளமாகவும் இருப்பவர்.

என் மகள் பெயர் பல்லவி. நான்காவது வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறாள். இதுவரை 75 சிறுவர் பாடல்களுக்கு மேல் வானொலி, தொலைக்காட்சிகளில் பாடியிருக்கிறார். எங்களுடன் சேர்ந்து பாடி வருகிறார். வருகிற ஜூலை மாதம் அமெரிக்காவில் நாங்கள் நடத்தவிருக்கும் நிகழ்ச்சியிலும் பாடவிருக்கிறார்.

******


பழைய மொழி புதிய விளக்கம்

இதுவரை 150க்கும் மேற்பட்ட பழமொழிகளுக்கு விளக்கம் சன் டி.வி.யில் சொல்லியிருக்கிறேன். ஒவ்வொன்றிலும் ஒரு புதிய சிந்தனை, புதிய விளக்கம் கொடுத்திருக்கிறேன். 'அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டான்' என்பார்கள். அதாவது நாம் வாழ்கின்ற காலத்தில் திருக்குறளின் இரண்டு அடி, நம்மிடையே வாழ்ந்து சென்றவர்கள் சொன்ன பாதை முன்னடி, எல்லாவற்றுக்கும் மேலே இறைவனது திருவடி இந்த மூன்று அடிகள் ஒரு மனிதனுக்கு உதவுவது போல் அண்ணன் தம்பிகூட உதவமாட்டான் என்பதுதான் விளக்கம்.

அதுபோல் 'ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்' என்பது பழமொழி. ஊரான் பிள்ளை என்பது இன்னொருவர் பிள்ளை. அந்த இன்னொருவர் யார்? கட்டிய மனைவிதான். அவள் கர்ப்பமாக இருக்கும் காலத்தில் அவளுக்கு வேண்டியதைக் கணவன் அருகில் இருந்து ஊட்டி வளர்த்தால், அவள் வயிற்றில் வளரும் இவன் பிள்ளை தானே வளரும் என்பதுதான் பொருள்.

******


அமெரிக்க நிகழ்ச்சிகள்

அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை மாநாடு, சூலை 3-4, பால்டிமோர், மேரிலாந்து (www.fetna.org)

சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்ற வெள்ளிவிழா, சூலை 11, மாலை 4 மணி. (www.bayareatamilmanram.org)

******


சந்திப்பு: கேடிஸ்ரீ
தொகுப்பு: மதுரபாரதி
Share: 




© Copyright 2020 Tamilonline