"ஒரு பாடலைப் பதிய ஒரு வாரம் ஆகும்" பி. லீலா
|
|
|
முன்னாள் சி.பி.ஐ. இயக்குநர் தே.ரா. கார்த்திகேயன்!
இந்தியாவை அதிர வைத்த ராஜீவ் கொலைவழக்கில் பெயர் பெற்ற இவர், மத்தியப் புலனாய்வுச் செயலகத்தின் (CBI) இயக்குநர், தேசிய மனித உரிமைக் குழுமத்தின் (NHRC) பொது இயக்குநர், மத்திய சேமக் காவலர் படையின் (CRPF) இயக்குநர் என்று இந்தியாவின் மிக உயர்ந்த பொறுப்புகள் ஏற்றுப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவ்வளவு உயர்ந்த பொறுப்புகளை ஏற்றுப் பணியாற்றிய தமிழர்கள் வெகு சிலராகத்தான் இருக்க வேண்டும்.
காற்றுப் புகாத இடத்திலும் நுழைந்திடுவார் கார்த்திகேயன் என்று பெயர் பெற்றவர். தன் புலன் விசாரணையில் 26 பேர் மீது குற்றம் சாட்டி தடா சட்டத்தின் கீழ் மரணதண்டனை வாங்கிக் கொடுத்தவர். தமிழ்மன்றக் கூட்டங்களுக்கு வழக்கமாய் வரும் ஓர் ஈழத் தமிழ்ப்பெண், "ஓ எங்களைக் கண்டால் கடித்து விழுங்கி விடுவார், நான் வரவில்லை" என்று ஒதுங்குகிறார். கிண்டல் செய்கிறாரா என்று முகத்தைப் பார்க்கிறோம். என்றும் உள்ள அதே மோனா லிசா புன்முறுவல்.
முரட்டுப் போலீஸ் அதிகாரியை எதிர்பார்த்துப் போனவர்களுக்கு, மிடுக்கும், கனிவும் உள்ள மனிதராகத் தெரிந்தார் அவர். இந்திய அதிபர் அப்துல் கலாம் அவர்கள் செயலரோடு தொடர்பு கொண்டு அவரது வாழ்த்துகளைத் தமிழ் மன்றத்துக்குத் தெரியப் படுத்தினார். அவையோர் ஆரவாரம். நடிகர் ரஜினியின் வாழ்த்துகளைக்கூறி அவரது அடுத்த படம் 'ஜக்குபாய்' என்று அறிவித்தார். நிஜ வாழ்க்கையின் "ஹீரோ" கண் முன் இருக்கும்போது திரைப்பட ஹீரோ பற்றி யாரும் அக்கறைப் பட்டதாகத் தெரியவில்லை.
ராஜீவ் கொலை புலனாய்வு, ஒரிசாவில் 'கிரஹாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது குழந்தைகள்' உயிருடன் எரிக்கப்பட்ட வழக்கு, காவல் துறை/சட்டச் சீர்திருத்தம், நதி நீர் பிரச்சினை, தனி மனித உரிமைகளுக்கும் சமூக உரிமைகளுக்கும் இடையே உள்ள இழுபறி, பொடா/தடா சட்டங்கள், காவல் துறையில் அரசியல் குறுக்கீடு என்று பல தலைப்புகளில் ஏறத்தாழ இரண்டு மணி நேரம் பேட்டி அளிக்கிறார். இதுதான்1992க்கு அப்புறம் அவர் தந்த நீண்ட பேட்டியாம். அதிலிருந்து...
காவல்துறையில் நுழைந்த கதை
விவசாயக் குடும்பத்தில் பிறந்து விவசாயம் படித்த இவருக்குச் சிறுவயதில் அரசுத் துறையில் வேலை பார்க்க விருப்ப மில்லையாம். கிராமத்து மக்கள் படும் கஷ்டத்தைப் பார்த்துச் சட்டம் படித்து வழக்கறிஞராக எண்ணினார். கிராமத்தில் சின்னச்சின்ன அதிகாரிகள் எல்லாம் வந்து எல்லோரையும் விரட்டுவதைப் பார்த்த இவர் தந்தையார், இவரும் போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்று ஆசைப்பட்டார். கூடப் படித்தவர்கள் வற்புறுத்தலாலும், தந்தையின் விருப்பத்தாலும், பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுதி ஐ.பி.எஸ். அதிகாரியானார்.
இந்திரா காந்தி அறிமுகம்
பெல்காம் கர்நாடக மாநிலத்தில் இருந்தாலும், மராத்தி பேசுவோர்கள் பெருவாரியாக வாழும் மாவட்டம். மொழிவாரி மாநிலப் பிரிவில் கர்நாடகாவில் சேர்க்கப்பட்டதை இவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். சட்ட மன்ற உறுப்பினரும் மராத்தியக் கட்சியைச் சார்ந்தவர். பிரதமர் இந்திரா காந்தி பெல்காம் வந்த போது இவர்கள் எதிர்த்து மறியல் நடத்த வந்தார்கள். இந்திரா அப்படியும் பேசுவேன் என்று உறுதியாக இருந்தார். இந்திராவுக்கு அடிதடியெல்லாம் பிடிக்காது. ஆனால், பத்தாயிரம் பேர் மறியல் செய்வதை எப்படிக் கட்டுப் படுத்த முடியும்? இந்திராவின் முன்னாலே லத்தியால் அடித்துக் கட்டுப்படுத்தினோம். தன் விஜயம் நல்ல முறையில் நடத்தியதற்கு நன்றி கூறிப் பிரதமர் இந்திரா காந்தியிடம் சிறப்புப் பாராட்டு பெற்றேன் என்று நினைவு கூர்கிறார்.
தான் வகித்த பதவிகளில் CRPF இயக்குநர் பதவியை மிக முக்கியமானதொன்றாகக் கருதுகிறார். ஹைதராபாதில் தலைமையகம் கொண்ட இந்தப் படையினர், உள்ளூர் காவல்துறையால் சமாளிக்க முடியாத சிக்கல்களைக் கையாளச் செல்வார்கள். மாநிலங்கள் அழைப்பின் பேரில், உள்ளூர்க் காவல்துறையோடு இணைந்து பணியாற்றுபவர்கள்.
கே: தீவிரவாதிகள் தோன்றுவது ஏன்?
ப : பலர் வேலையில்லாமல் இருந்தாலோ, வறட்சியால் விவசாயம் இல்லாமல் போனாலோ, சமுதாயத்தில் கிடைக்க வேண்டிய நீதி கிடைக்கவில்லை என்று கருதினாலோ, வறுமையில் வாடினாலோ, சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வு தோன்றும். சிலர் வசதியாக வாழ்ந்து கொண்டு, பலர் அன்றாடத் தேவைகளுக்கே அல்லாடிக் கொண்டிருந்தால் அந்தச் சமுதாயத்தில் நிச்சயமாய் படபடப்பு உருவாகும். அடிப்படைத் தேவைகளான உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், இதெல்லாம் பல பேருக்குக் கிடைக்காமல் போனால், கலவரங்கள் உருவாகும்.
அந்த மாதிரி கலவரங்கள் இருக்கக் கூடாது என்றால் சமூக நீதி, பொருளாதார நீதி இருக்க வேண்டும். அது சுலபமில்லை. அடிப்படைத்தேவைகள் நிறைவேறாத அதிகமான நபர்கள் இருந்தால் அந்த சமூகத்தில் தீவிரவாதம் வளரத்தான் செய்யும்.
கே: காவல்துறையில் அரசியல் குறுக்கீடு பற்றி...
ப : காவல்துறை, குற்ற நீதித் துறை இரண்டும் திருப்தியாக நடைபெறுவதில்லை. நாளாக நாளாகப் பாதுகாப்பின்மை அதிகரிக்கிறது என்பது உண்மைதான். 100 குற்றங்கள் நடந்தால் அதில் 6 தான் தண்டிக்கப்படுகின்றன. நாம் பிரிட்டிஷ் முறையைப் பின்பற்றுகிறோம். ஆனால் இங்கிலாந்தில் 100க்கு 90 குற்றவாளிகள் தண்டிக்கப்படுகிறார்கள். நம் நாட்டில் குற்றம் செய்வது எந்தவித இடையூறும் இல்லாத லாபகரமான தொழில் என்ற எண்ணம் பரவிவிட்டதால் குற்றங்கள் கூடிக் கொண்டிருக்கின்றன. இது தான் உண்மையான நிலைமை. அதற்குக் காரணங்கள் பல.
1. முக்கியமான காரணம், நம் சட்டங்கள், நிர்வாக முறை, நீதி பரிபாலன முறை இவை எல்லாம் 100 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேய அரசால் உருவாக்கப் பட்ட பழைய காலத்து முறைகள். மாறாமல் அதே நிலையில் இருக்கின்றன. இங்கிலாந்தில் மாற்றத்தை எதிர்நோக்கிச் சட்டங்களைத் திருத்தி விடுகிறார்கள். அதை நாம் செய்யாமல் விட்டு விட்டோம்.
2. இந்தியப் போலீஸ் பிரிட்டிஷ் காலத்தில் ஒரு அந்நிய ஏகாதிபத்தியம் இன்னொரு நாட்டு மக்களை அடக்கி ஆள ஏற்படுத்திய எந்திரம். சுதந்திரம் பெற்ற நாட்டில் போலீசின் பொறுப்பே வேறு. அந்த அளவுக்குப் போலீஸ் துறையை நாம் மாற்றி அமைக்கவில்லை.
3. போலீஸ் சட்டத்தின் கருவியாகச் செயல் பட வேண்டுமே ஒழிய ஆளும் கட்சியின் கருவியாக மாறக்கூடாது. இந்தியாவில் போலீஸ் நிர்வாகத்தில் அரசியல் குறுக்கீடு மிகவும் அதிகம். இன்னும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால், மக்களே போலீசுக்குப் போனால் நமக்கு நியாயம், தர்மம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்து விட்டார்கள். பெரும்பாலும் ஆளுங்கட்சி அமைச்சர்/எம் எல் ஏ சொன்னபடிதான் நடக்கும் என்ற நம்பிக்கை வளர்ந்து விட்டது. அதில் உண்மையும் நிறைய இருக்கிறது.
சில அதிகாரிகள் எதற்கும் வளைந்து கொடுக்க மாட்டார்கள். நேர்மையாக இருப்பார்கள். அந்த மாதிரி அதிகாரிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. ஆளுங்கட்சி சொல்வதைக் கேட்காவிட்டால் மாற்றல் என்று தூக்கிப் போட்டுக் கொண்டே இருப்பார்கள். போலீஸ் அதிகாரப் படிநிலையை முழுக்க முழுக்க அழித்து விட்டார்கள் அரசியல்வாதிகள். எதிர்க்கட்சியில் இருக்கும்போது திட்டுபவர்கள் ஆளுங்கட்சியில் இருக்கும் போது போலீசை உபயோகிப்பார்கள். ஆனால் போலீசை உபயோகப்படுத்தியே அதிகாரத்தில் யாரும் இருந்ததில்லை. அதிகாரத்தில் இருக்கும்போது போலீசை இஷ்டப்படிப் பயன்படுத்தும் நப்பாசை தவிர்க்கப்பட வேண்டும்.
என்னுடைய புத்தகத்தின் முடிவுரையில் சொல்லியிருப்பேன். ராஜீவ் கொலை வழக்கில் வெற்றிகரமாகத் துப்புத் துலக்கி தண்டனை வாங்கிக் கொடுக்க முடிந்ததற்கு முக்கியமான காரணம் அரசியல் குறுக் கீட்டுக்கு இடம்கொடுக்காததுதான். மக்கள் அதைப் படித்து அரசியல் குறுக்கீட்டை நிறுத்தும் எண்ணம் வரவேண்டும்.
கே: போலீஸ் “என்கவுண்டர்” தவறா?
ப : போலீசுக்கு எங்கிருந்து அதிகாரம் வருகிறது? அரெஸ்ட், ஸர்ச் செய்ய, துப்பாக்கியால் சுட எங்கிருந்து அதிகாரம் வருகிறது? சட்டத்தில்தானே வருகிறது? நாம் குடியரசு. சட்டத்தின் அடிப்படையில் வாழ்கிறோம். சட்டத்தின் மூலம் கிடைத்த அதிகாரத்தை சட்டம் வைத்த முறையில் பயன்படுத்த வேண்டுமே தவிர ஒருத்தன் வாழலாமா கூடாதா என்ற அதிகாரத்தை ஒரு போலீஸ்காரனுக்குச் சட்டம் கொடுக்கவில்லையே. போலீசே அரசு வழக்கறிஞர், துப்பு துலக்குபவர், இன்வெஸ்டிகேட்டர், நீதிபதி, மற்றும் தூக்கில் ஏற்றுபவர் என்ற எல்லாப் பொறுப்பையும் எடுத்துக் கொள்வதா?
நம் அரசியல் சட்டப்படி அந்த அதிகாரத்தை யாருக்குமே கொடுக்கக் கூடாது. நீதிபதிக்குக் கூடக் கொடுக்க வில்லையே. புலன் விசாரணை செய்த காவலதிகாரி, குற்றம் செய்தான் என்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, சாட்சியத்தை முன்னால் வைத்து, டி·பென்ஸ் வக்கீல் பேசிய பின்னால்தான், சாட்சியத்தின் அடிப்படையில் தண்டனை கொடுக்கக்கூடிய அதிகாரம் கொடுக்கிறோம். தண்டனை கொடுக்கலாமே ஒழியக் குற்றவாளியைக் கொல்ல நீதிபதிக்கு அதிகாரம் இல்லை. அதற்கு என்று தனித் துறைகள் இருக்கின்றன.
இந்த அதிகாரத்தை எல்லாம் சேர்த்து காக்கிச் சட்டை போட்ட போலீஸ் காரனுக்குக் கொடுக்கலாமா? அது சட்டவிரோதம். தீவிரவாதம் வளர்வதற்கு ஒரு காரணம். என்கவுண்டர் - நான் அதை ஆதரிக்கமுடியாது. அது குறுக்கு வழி. ஆபத்து நிறைய. நாலு ரவுடியையும் கொல்லலாம். நாலு நல்ல மனுஷனையும் கொல்லலாமே. இருப்பதிலேயே உத்தமனான போலீஸ்காரனுக்கும் அதைக் கொடுக்கக் கூடாது. வேண்டுமானால் சட்டத்தை மாற்றி அமையுங்கள். குற்றவாளிகள் தப்பித்துப் போகிறார்கள் என்றால் சட்டத்தை மாற்றுங்கள். சட்டத்தின் குறையைத் திருத்தி அதிகாரம் கொடுக்க வேண்டும். கொடுக்கப்பட்ட அதிகாரத்தில் தான் அவர்கள் செயல்பட வேண்டுமே ஒழிய அதிகாரத்தைத் தன் கையில் எடுத்துக் கொள்ளக்கூடாது.
கே: இந்தியக் கட்சிகள் சட்டத்தைத் திருத்தக் கலந்து ஆலோசித்து மாற்றியமைப்பதாகத் தெரியவில்லையே.
ப : அந்த அளவுக்கு நம் குடியரசுக்கு முதிர்ச்சி வரவில்லை. மக்கள்தான் வரவழைக்க வேண்டும். சட்டத்தின் அடிப்படையில்தான் எல்லோரும் இயங்க வேண்டுமே ஒழிய சட்டத்தை மீறி யாரும் ஏதும் செய்யக்கூடாது (உணர்ச்சி வசப்படுகிறார்). கிரிமினல் ஜஸ்டிஸ் சிஸ்டத்தையே முழுதாகத் திருத்தி அமைக்கணும். பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
கே: நீங்கள் இலங்கைக்கு விடுதலைப் புலிகளைப் பற்றி அறியச் சென்றது பற்றி...
ப : 1. நான் புலிகளைப் பார்க்கப் போகவில்லை. ஏன் இந்திய அமைதிப் படைக்கு வெற்றி கிடைக்கவில்லை. 1000 பேர் உயிர்த்தியாகம் செய்தும், பல்லாயிரம் கோடி ரூபாய்களை மத்திய அரசு செலவு செய்தும்கூட, எதற்காக அமைதிப்படை அனுப்பப்பட்டதோ அது வெற்றிகரமாக நடக்கவில்லை. 2. திருகோணமலையைத் தலைநகராகக் கொண்ட தமிழ்மாநிலத்துக்கு இந்திய-இலங்கை ஒப்பந்தப்படி அதிகாரம் வழங்கப்பட்டதா? 3. வேறு ஏதாவது வழியில் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியுமா? 4. இந்திய ராணுவத்தின் மனோபலம் ஏன் குறைந்திருக்கிறது?
இதற்கெல்லாம் விடைகாணத்தான் என்னை அனுப்பினார்கள். இருக்கக்கூடிய தீவிரவாதிகளில் விடுதலைப்புலிகள்தாம் பலம் மிக்கவர்கள் என்பது தெரியவந்தது. அதைத்தான் நான் ரிபோர்ட் செய்தேன். இந்திய ராணுவத்தின் மனோபலம் குறைந்த காரணம் நிறைய உயிர்ச்சேதம், இலங்கைத் தமிழர்களுக்கும் சிங்களவர் களுக்குமான சண்டையில் நாம் ஏன் போகவேண்டும் என்ற எண்ணம், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர்களை நாம் ஏன் கொல்லவேண்டும், அவர்களால் நாம் ஏன் கொல்லப்படவேண்டும், என்று பல பிரச்சினைகள்.
இந்திய இலங்கை ஒப்பந்தப்படி இலங்கை அரசியல் சட்டம் திருத்தப்பட்டாலும்கூட ஒப்பந்தப் படி அதிகாரங்கள் தமிழ் மாநிலத் துக்கு வழங்கப்படவில்லை. இதைத்தான் நான் சொன்னேன். ராஜீவ் விசாரணைக்கும் இதற்கும் தொடர்பு இல்லை. விசாரணை முடிவுகள் தடயத்தின் அடிப்படையில் வந்தவை. |
|
கே: அமைதிப்படை முதலில் இலங்கைத் தமிழர்களால் வரவேற்கப் பட்டது, சிங்களவர்களால் எதிர்க்கப் பட்டது. பின் ஏன் அமைதிப் படைக்கும் தமிழர்களுக்கும் இடையே போர் மூண்டது?
ப : ஆமாம். இலங்கைத் தமிழர்கள் மேளதாளத்துடன், மாலை போட்டு வரவேற்றார்கள். இலங்கை ஜனாதிபதி ஜெய வர்த்தனேயின் அழைப்பில் அமைதிப்படை போய் இறங்கியிருந்தாலும், பல சிங்களவர்களுக்கு, முக்கியமாக, ஜே.வி.பி. என்ற சிங்களத்தீவிரவாதக் கட்சி, புத்தமத குருமார்களின் கட்சி இவற்றிற்கு அமைதிப்படையின் வருகை பிடிக்கவில்லை. இந்தியா இலங்கையைத் தன்னோடு இணைத்துக் கொள்ள அனுப்பப்பட்ட படை என்று அவர்கள் எண்ணி அவர்கள் எதிர்த்தார்கள் என்பது உண்மைதான். இந்தியா இலங்கை ஒப்பந்தப்படி, திருகோணமலையைத் தலைநகராகக் கொண்ட தமிழ் மாநிலத்துக்கு அதிகாரங்கள் வழங்கப் படவேண்டும். எல்லாத் தீவிரவாதக் குழுக்களும் ஆயுதங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அதற்குப் புலிகள் உடன் படவில்லை. இலங்கை அரசோ, இது உங்கள் ஒப்பந்தத்தை நீங்கள்தான் நிறைவேற்ற வேண்டும் என்று இந்தியாவை வலியுறுத்தினார்கள். அதனால் அமைதிப் படைக்கும் புலிகளுக்கும் சண்டை வருவது இயல்புதானே. அமைதியை நிலைநாட்டச் சென்ற படை, போரில் முடிந்தது.
கே: இந்த அனுபவத்தால்தான் ராஜீவ் கொலைக்குப் புலிகள் மீது சந்தேகம் எழுந்ததா?
ப : புலனாய்வுக்குப் போகும்போது திறந்த மனத் துடன் போவோம். முதலிலேயே ஒரு முடிவு செய்து போவதில்லை. இருந்தாலும், பழைய அனுபவத்தினால், இப்படி உள்ளுணர்வு சொல்லியிருக்கலாம். புலிகளாக இருக்கக் கூடாது என்று விரும்பினேன். காரணம், இலங்கைத் தமிழர்களுக்கு எழக்கூடிய பாதிப்பு எனக்குத் தெரியும். அதோடு, புலிகளாக இருந்தால், அவர்களை விசாரிப்பதோ, சாட்சியம் தேடிப் பிடித்துக் குற்றம் சாட்டுவதோ, குற்றத்தை நிரூபிப்பதோ முடியாத காரியம். புலிகள்தான் குற்றவாளிகள் என்று கண்டுபிடிக்க வேண்டும் என்று நான் போகவில்லை. புலிகள் குற்றவாளிகளாய் இருந்தால் அவர்களைக் கண்டுபிடிக்கக்கூடாது என்றும் தோன்ற வில்லை. இது உள்ளுணர்வில் தோன்றிய எண்ணம்.
கே: ராஜீவ் கொலைக்கு முன்னால் அவருக்கு எச்சரிக்கைகள் வந்தன என்று சில செய்திகள் தெரிவிக் கின்றன. குறிப்பாக, பி.எல்.ஓவின் யாசிர் ஆர·பாட், ராஜீவிடம் உங்களைத் தென்னிந்தியாவில் புலிகள் மூலம் கொல்ல ஒரு சதித் திட்டம் இருப்பதாக எச்சரித்தார் என்று கூறப்படுகிறது. அது உண்மையா?
ப : இந்தியாவைப் போன்ற நாட்டில் ஒரு வலிமையான தலைவருக்கு ஆபத்து இருக் கிறது என்று சொல்லப் பெரிய அறிவாளி தேவையில்லை. பஞ்சாப், காஷ்மீர், மணிப்பூர், நாகாலாந்து, நாக்சலைட் என்று பல ஆபத்துகள். உளவு அதிகாரிகள் தினமும் இந்த ஆபத்துகள் பற்றி எச்சரித்துக் கொண்டிருப்பார்கள். அதற்காகப் பயணம் செய்யாமலோ, தேர்தலில் நிற்காமலோ இருக்க முடியுமா? எனக்குக்கூட 'பயணம் செய்வதால் ஆபத்து' என்று சொல்லலாம். அதனால் போகாமல் இருக்க முடியுமா?
கே: சிலர் சதித்திட்டம் என்பது போலப் புத்தகங்கள் எழுதியுள்ளனர். விடை கிடைக்காத கேள்விகள் என்று சொல்லி... டாக்டர் சுப்ர மணியம் சுவாமி சொல்லியிருப்பதைக் கேளுங்கள்...
ப : (முகத்தைச் சுளித்தபடிக் குறுக்கிடுகிறார்) என் நேரத்தையும் உங்கள் நேரத்தையும் சேர் த்து ஏன் வீணடிக்கிறீர்கள்? இதெல்லாம் வேலையில்லாத பசங்கள் பொழைப்பு. மூன்றாந்தர அரசியல். அவர்களுக்கு இதே பிழைப்பு.
கே: சுவாமி கேட்கிறார் "சிவ ராசனின் சடலத்தை உடனடியாக எரித்தனர், தனுவின் உடலைப் பாதுகாத்தனர், ஏன்?"
ப : இதற்கு ஒரு பதில் அனா வசியம். நமது நேரத்தை முட்டாள்தனங்களில் வீணாக்க வேண்டாம்.
கே: ராஜீவ் ஷர்மாவும் இதே கேள்வி கேட்கிறார்...
ப: மேலே போகலாம்...
கே: காவேரிப் பிரச்சினைக்கு நதி நீர் இணைப்புத் திட்டம் போதுமா?
ப: நதி நீர்ப் பிரச்சினைக்கு ஏன் கர்நாடகத்துப் போகிறீர்கள். மாவட்டத்துக்கு மாவட்டம் தண்ணீர் கொண்டு போகக் கூடாது என்கிறார்கள். சென்னைக்கு வெளியூர்களில் இருந்து கொண்டு வருகிறார்கள். அந்த ஊர்க்காரர்கள் தடுக்கிறார்கள். எல்லாத் தண்ணியும் கொண்டுபோனால் நாங்கள் எப்படிப் பிழைப்போம்? இது வாழ்க்கைப் பிரச்சினை. கர்நாடகத்துக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையே உள்ள சிக்கல் அல்ல.
உண்மையாகவே தண்ணீர்த் தட்டுப்பாடு எல்லா மாநிலங்களிலும் இருக்கிறது. 3000 பேர் தற்கொலை ஆந்திராவில். 1000 பேர் கர்நாடகாவில். தமிழ்நாட்டில் கஷ்டப் பட்டார்களே ஒழிய இவ்வளவு பேர் தற்கொலை செய்ததாக எனக்குத் தகவல் இல்லை. ஆந்திரா, கர்நாடகா விவசாயிகள் நம்மைவிட அதிகம் கஷ்டப்படுகிறார்கள் என்று தானே கணக்கு. தமிழ்நாட்டு விவசாயிகளோடு சுற்றுபவன் நான். ரொம்ப கஷ்டப்படறாங்க. இதுவரைக்கும் இவ்வளவு கஷ்டப்பட்டதே கிடையாது. விவசாயமே போச்சு இந்த முறை. கால்நடைக்கு வேண்டிய தண்ணீரும் தீவனமும் இல்லாததால் அவற்றையும் சந்தைக்கு அனுப்புகிறார்கள்.
கே: தேசிய மனித உரிமைக் குழுமத் தின் பொது இயக்குநராய் இருந்தீர்கள். அதில் சுவையான சம்பவம் ஏதும்... ஆஸ்திரேலியன் மிஷனரி ஸ்டெயின்ஸ் பற்றி...
ப : ஆஸ்திரேலிய மிஷனரி கிரஹாம் ஸ்டெயின் பயங்கரமான முறையில் கொல்லப்பட்டார் இல்லையா. அவரையும் அவரது இரண்டு குழந்தைகளையும் எரிச்சிட்டாங்க. எரிக்கப்பட்ட மூன்றாவது நாள் நான் அங்கு இருந்தேன். மனதை உலுக்கக்கூடிய ஒரு கொலை அது. கிளேடிஸ், அவர் மனைவி, அவர்களைப் பார்க்கப் போனேன். ரொம்ப உறுதியாக இருந்தார்கள். மிக எளிமையான வாழ்க்கை. ஆஸ்திரேலியர்கள் அமெரிக்கர்களை விட வசதியாக வாழ்பவர்கள். ஆனால் சாதாரண இடத்தில், டிவி கூட இல்லாத வீட்டில், இருந்தார்கள். ஸ்டெயின் கிளேடிசைக் காதலித்தபோது சொன்னாராம், இந்த மலைவாழ் மக்களுக்குச் சேவைசெய்ய நான் முடிவு செய்திருக்கிறேன். வசதியான வாழ்க்கையெல்லாம் கிடைக்காது. என்னோடுசேவை செய்யத் தயாராய் இருந்தால் வாங்க. அதோட அங்க குஷ்டரோகம் அதிகம். யார் யாருக்கெல்லாம் குஷ்ட ரோகம் இருந்ததோ அவர்களை வண்டியில் அழைத்து வந்து, வைத்தியம் செய்து - பெரிய சேவை செய்த மனிதர். நல்ல மனிதர். அப்படி வாழ்ந்தவர். அந்த அம்மாவும் அதை ஏற்று அவரைத் திருமணம் செய்து இங்கே வந்தது. மூணே டிரஸ். ஷ¥ வந்து கிழிஞ்சு தச்சது. புதுசா ஷ¥ வாங்குங்க என்றால், அந்தப் பணத்தில் மூன்று நான்கு குடும்பத்தைக் காப்பாற்றலாமே என்பாராம். அவரது கிரிமேஷனுக்குப் பத்தாயிரம் பேர் திரண்டனர். அவ்வளவு தூரம் மக்களால் பாராட்டப்பட்டவர். ஒரு மத வெறியன் போய்க் கொலை செய்து விட்டான். மதம் மாற்றுகிறார் என்று சொல்லி. நான் புள்ளிவிவரம் பார்த்தேன். மதமாற்றம் அங்கே அப்படி நடக்கவில்லை. கிறித்தவர்கள் எண்ணிக்கை அங்கே சொல்லப்போனால் குறைந்திருந்தது. ஜனத்தொகை கூடிய அளவுக்கு, கிறித்தவர்கள் எண்ணிக்கை கூடவில்லை. அவர் கிறிஸ்துவ மிஷனரி. கிறிஸ்துவைப் பற்றிப்பேசினாலும்கூட சேவை செய்தது மக்களுக்குத்தான்.
யார் மீது சந்தேகம் என்று கேட்டேன். யாரு மேலேயும் இல்லை. யார் மீதும் எங்களுக்கு வெறுப்பு இல்லை. எங்களுக்கு விரோதிகள் இல்லை. யார் செய்தாலும் அவர்களை மன்னித்து விடுகிறேன் மறந்து விடுகிறேன். எனக்கு அவர்கள் மீது ஒரு கோபமும் இல்லை ஏதோ கடவுளின் சித்தம் இப்படி ஆக வேண்டும் என்று. அதனால் நடந்திருக்கிறது. என்றார் கிளேடிஸ்.
நீங்கள் தனிமையாக உணரவில்லையா என்று கேட்டேன். நான் தைரியமாக இருக்கிறேன். என் பெண்தான் நள்ளிரவில் எழுந்து என்னைக் கட்டிப்பிடிக்க யாரும் இல்லையே என்று அழுவாள். அப்போது தான் எனக்குக் கஷ்டமாய் இருக்கும். என்றார்.
ஜெயிலில் 50 பேரை அடைச்சு வச்சிருந்தாங்க. விசாரிச்சேன். அவர்கள் நிரபராதிகள். முதலமைச்சரைப் பார்த்து சி.ஐ.டி.க்குக் கொடுங்கள் விசாரியுங்கள் என்றேன். அவர்களுக்கு ஒரு வண்டியை கொடையாகக் கொடுத்து உதவுங்கள் என்றேன். மறுநாளே செய்தார்கள். குஷ்டரோகிகள் வாழும் இடத்துக்குச் சென்று பார்த்தேன். அவர்கள் அவரைத் தெய்வமாகப் போற்றி அழுதுகொண்டிருந்தார்கள்.
என்னுடைய ரிப்போர்டில், இது வரைக்கும் விசாரித்ததில் இதற்குக் காரணம் தாராசிங், பஜ்ரங் தல் என்ற அமைப்பைச் சேர்ந்ததாகச் சொல்லப்படுபவர் என்று எழுதிக் கொடுத்தேன். மூணாவது நாள். ஒரு தயக்கமும் இல்லாமல் சொன்னேன். சி.பி.ஐ. விசாரணையில் ஓராண்டு கழித்து அதே முடிவுக்கு வந்தது. தாரா சிங் தலைமையில் செய்தது என்று.
கே: மாநில அளவிலும் மனித உரிமைக் குழுமங்கள் இருக்கின்றன. எந்த அளவுக்கு இவை மனித உரிமையைக் காக்கப் பயன்படுகின்றன?
ப : ஓரளவுக்குப் பயன் இருக்கிறது. மாநில அளவிலோ, தேசிய அளவிலோ, இந்த மனித உரிமைக் குழுமங்கள் இல்லாமல் இருந்தால், மனித உரிமை மீறல்கள் இன்னும் அதிக மாயிருக்கும். எல்லாரும் நீதிமன்றத்துக்குப் போக முடியாது. நாளாகும், பணம் செலவாகும். உரிமைக் குழுமத்துக்குக் கடிதம் எழுதினால் போதும். இல்லை செய்தித் தாளில் வந்தால் போதும், அவர்கள் விசாரணை தொடங்கலாம். குழுமங்கள் இருப்பதால் மனித உரிமை மீறல்கள் இல்லாமல் போகக்கூடுமா என்றால் இல்லை. இன்னும் சிறப்பாகச் செயல்பட வேண்டும். மனித உரிமை அத்துமீறல்கள் தொடர்கின்றன. ஆனால் இந்தக் கமிஷன் இருக்கிறதனாலே அதிகமா அக்கிரமம் பண்ணா இவங்க கேப்பாங்க என்று பயப்படுவாங்க.
கே: TADA, POTA, Patriot போன்ற அடக்குமுறைச் சட்டங்கள் மனித உரிமைகளை எந்த அளவு பாதித்திருக்கின்றன?
ப : பொதுமக்கள் இவற்றை ஆதரித்தாலும் மனிதஉரிமை செயல்வீரர்கள் எதிர்க்கிறார் கள். தனி மனிதனின் உரிமை யைப் பாதிக்காமல் சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாப்பது அவசியம். நாட்டையும், சமூகத்தையும் தனிப்பட்ட மனிதரின் உரிமையை மீறாமலேயே பாதுகாக்க முடியும். இந்த இரண்டுக்கும் சச்சரவே கிடையாது. அப்படி சச்சரவு வந்தால், தனி மனித உரிமைகளைக் காட்டிலும் சமூகத்தின் பாதுகாப்புக்குத்தான் முதலிடம் கொடுக்க வேண்டும். தனிப்பட்ட மனிதரின் உரிமை மீறப்பட்டால்தான் சமுதாயத்தைக் காப்பாற்ற முடியும் என்றால் நாம் அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
கே: ஒரு நிரபராதியைத் தண்டிப்பதைக் காட்டிலும், நூறு குற்றவாளி களை விட்டு விடுவதே மேல் என்ற கொள்கை என்ன ஆவது?
ப : முதலில் ஒரு நிரபராதியைத் தண்டிப்பதை விட ஆயிரம் குற்றவாளிகளை விட்டுவிடு வோம் என்று இருந்தது. இப்போது, சட்டம் கொஞ்சம் கொஞ்சமாக எப்படி மாறி இருக்கிறது என்றால், ஒரு நிரபராதியைத் தண்டிப் பதைக் காட்டிலும் நூறு குற்றவாளிகளை விட்டுவிடு என்றாகிவிட்டது. கொஞ்சம் வித்தியாசம் இருக்கிறது. இல்லையா. தனி மனித உரிமைகள்முக்கியம் தான். ஆனால், சமூகத்தின் பாதுகாப்பு அதைவிட முக்கியம்.
கே: ஆனால் அந்த முடிவு எடுப்ப வரைப் பொறுத்து அல்லவா இது செயல்படுத்தப்படும்.
ப : அத்து மீறல்கள் இருக்கலாம். ஆனால், அதைத் தடுப்பதற்கும், தண்டிப்பதற்கும் சட்டத்தில் இடம் இருக்கிறதே. சட்டம் தன்னளவிலேயே சீர்மை யானதாக (perfect) இருக்காது, ஜனங்கள் விழிப்புணர்வோடு இருக்கணும்; ஊடகங்கள், அரசுசாரா நிறுவனங்கள் விழிப்பா இருக்கணும். கோர்ட் இருக்கணும். எந்தச் சட்டம் வேண்டுமானாலும் தவறாக உபயோகிக்கலாமே. தனிப்பட்டவர்கள், நிரபராதிகள் பாதிக்கப்படாமல் இருக்க முடிந்த முன்னெச்சரிக்கைகளை எடுத்திருக்கிறீர்களா என்றுதான் கேட்க வேண்டும். அப்படி எடுத்த பின்னரும் தனிமனிதர்கள் பாதிக்கப் பட்டால் நஷ்ட ஈடு கொடுக்கலாமே ஒழிய தண்டிக்கப்பட மாட்டார்கள். சட்டங்கள் எல்லாம் அமுல் படுத்துபவர்கள் பொறுப்போடு செயல்படுவார்கள் என்ற நம்பிக்கையோடு கொண்டு வரப்பட்டவை. பொறுப்பில்லாமல் நடந்து கொள்பவர் களைத் தண்டிக்கத்தான் முடியும்.
கே: உங்கள் முன்னுரையில் ராஜீவ் படுகொலை துப்பு துலக்கல் ஒரு மாபெரும் விசாரணை, நாங்கள் செய்தது எல்லாமே ஒரு குறையும் இல்லாதது என்று சொல்ல முடியாது என்று சொல்லியிருக்கிறீர்கள். நீங்கள் செய்த பிழைகளில் ஏதேனும் ஒன்றைக் குறிப்பிட முடியுமா?
ப : வேதாரணியம் சண்முகம் மிராசுதார் நிகழ்ச்சி. இரவு பகலாக அதிகாரிகள் பணிபுரிந்து பல தடயங்களைக் கண்டு பிடித்தார்கள். பல கடிதங்களைக் கண்டு பிடித்தோம். புதைத்து வைக்கப்பட்ட முருகனின் கடிதங்களை சண்முகம் மிராசுதார் மூலம் கண்டுபிடிக்கலாம் என்று நம்பினோம். யாரையும் சித்திரவதை செய்யக்கூடாது என்று கட்டளையிட்டிருந்தது மட்டுமல்லாமல், இவரை நல்ல முறையில் நடத்தினோம். வீட்டுச் சாப்பாடு சாப்பிட விட்டோம். வீட்டில் சாப்பிட்ட போது உறவினர் ஒருவர் நாம் கள்ளக் கடத்தல் செய்தாலும் செய்யலாம், நாட்டுக்கே துரோகம் செய்துவிட்டாயே, மானத்தை வாங்கி விட்டாயே என்று திட்டியிருக்கிறார். இதனால் அவமானப்பட்ட சண்முகம் கை கழுவும் போது உடனே ஓடி விட்டார். பிடிக்க முடியவில்லை. இரவு 10 மணி. ஒரு தவறில்லாமல் நடந்ததில் இது ஒரு பிழை. தப்பித்தது பரவாயில்லை, சாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்றேன். காலை 6 மணிக்கு அவர் தூக்கில் தொங்குகிறார் என்றார்கள். இது பெரும் பின்னடைவு என்று புரிந்து கொண்டேன். யார் நம்புவார்கள்; போலீஸ் தான் அடித்தார்கள் என்று சொல்வார்கள். உடனே ஹெலிகாப்டரில் சென்றேன். தற்கொலைதான் என்று ஊர்ஜிதம் ஆகியது. உடனே உள்ளூர் மேஜிஸ்ட் ரேட்டை அழைத்து உள்ளூர் போலீஸ் அழைத்து ஊர் ஜனங்களுக்குத் தெரியும்படி போஸ்ட் மார்ட்டம் செய்யுங்கள் என்று உத்தரவிட்டேன்.
ஒரு போலீஸ்காரன் ஒரு நிமிடம் அசந்ததால் இந்தப் பாடு. அமைச்சர் உடனே அந்தக் காவலரை தற்காலிகப் பணிநீக்கம் செய் என்றார். நான் மறுத்து விட்டேன். பதவி விலகுவேனே ஒழிய சஸ்பெண்ட் செய்ய மாட்டேன் என்று உறுதியாக நின்றேன். 24 மணி நேரம் சாப்பாடு தூக்கம் இல்லாமல் காத்திருக்கிறார்கள். சில தவறுகள் செய்திருக்கலாம்; அதனால் சஸ்பெண்ட் செய்ய மாட்டேன் என்றேன். முழுப்பொறுப்பையும் நான் ஏற்றுக் கொள்கிறேன் என்றேன். புலன் விசாரணையில் எங்கள் ஆட்கள் சண்முகம் மேல் ஏதேனும் ஒரு காயம் ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்று கண்டுபிடித்தால், சஸ்பெண்ட் என்ன அரெஸ்டே செய்கிறேன் என்றேன்.
சண்முகம் எங்கள் விசாரணைக்கு அவ்வளவு முக்கியம் இல்லை. இருந்தாலும் அவர் தற்கொலை எங்கள் விசாரணையின் மீதான நம்பிக்கையைச் சற்றே உலுக்கி விட்டது. இது போல ஓரிரண்டு விஷயங்கள். இவ்வளவு பெரிய புலனாய்வில் சில இப்படி நடக்கத்தான் செய்யும். யாரும் வேண்டு மென்றே செய்யவில்லை.
கே: 26 பேருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. நீங்களோ சித்திரவதை ஏதும் செய்யக்கூடாது என்று சொல்லிவிட்டீர்கள். இவர்களில் பலர் விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளர்கள். மன உறுதி மிக்கவர்கள். அவர்களிடம் எப்படி ஒப்புதல் வாக்கு மூலம் வாங்கினீர்கள்?
ப : இல்லை. யாரும் குற்றத்தைச் செய்தோம் என்று ஒப்புக் கொள்ளவில்லையே. ஒப்புதல் வாக்குமூலம் என்று நாங்கள் பதிவு செய்தோம். ஒரு சில உண்மைகள் வெளிவந்தன. தடாவில் ஒப்புதல் வாக்குமூலம் வழியாகத்தான் தண்டனை வழங்கப்படும் என்று இருந்தா லும், அதை மட்டும் நம்ப வேண்டாம் என்று நான் சொல்லியிருந்தேன். தனித்தனி தடயங்கள் மூலமாகக் குற்றத்துக்கு ஆதாரம் காட்டினோம். ஒவ்வொரு ஆதாரமும் தனித்தனியே நிரூபிக்கப் படவேண்டும் என்றேன். தனிப்பட்ட முறையில் தனியாக ஆதாரம் காட்டி நிரூபித்தோம்.
நெடுநேரம் நம்மோடு தம் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கூறி விடை பெறுகிறோம்.
*****
தேவராயபுரம் ராமசாமி கார்த்திகேயன், கோவை மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். விவசாயப் பட்டப் படிப்பு, சட்டப் படிப்பு முடித்து IPS தேர்வு பெற்றார். CRPF இயக்குநர், CBI இயக்குநர், தேசிய மனித உரிமைக் கழகப் பொது இயக்குநர், Head of Chancery - இந்தியத் தூதரகம், மாஸ்கோ, இந்தியத் தேநீர் வணிக மேம்பாட்டுக் கழகம், ஆஸ்திரேலியா என்று பல பொறுப்புகளை வகித்தவர். இவரது வாழ்க்கைக் குறிப்புகளின் முதல் பகுதி தினத்தந்தி வெள்ளி மலரில் "திரும்பிப் பார்க்கிறேன்" என்ற தலைப்பில் 80 வாரம் தொடர்ந்து வந்தது.
பல தொண்டூழிய இயக்கங்களுக்கு ஆலோசகராக இருக்கும் இவர், 'நாம் உழவர்' National Agricultural Movement, என்ற இயக்கத்தில் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்குகிறார். இந்த இயக்கத்தின் செய்தி மடலில் "நினைவுக் கரையோரம்" என்ற தலைப்பில் தன் வாழ்க்கைக் குறிப்புகளைத் தொடர்கிறார்.
ராஜீவ் காந்தி கொலைவழக்கு புலன் விசாரணையில் இவரது பங்கை, "குற்றப் பத்திரிக்கை" என்ற படத்தில் முக்கிய பாத்திரமாக எடுத்திருக்கிறார்கள். படத்தில் ராஜீவ் காந்தியின் படுகொலை புலன் விசாரணைக் குழுவையே பிரமிக்கும் வகையில் தத்ரூபமாகச் சித்தரிக்கப் பட்டிருந்தது. பல ஆண்டுகளுக்கு முன்னே எடுத்த இந்தப் படம் சில சிக்கல்களால் இன்னும் வெளி வரவில்லை.
*****
டி. ஆர். கார்த்திகேயன் அவர்களின் "ராஜீவ் காந்தி படுகொலை: புலனாய்வு - வாய்மையின் வெற்றி" என்ற புத்தகத்தின் முதல் பிரதியை ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் ஏப்ரல் 5 அன்று ராஷ்ட்ரபதி பவனில் பெற்றுக் கொண்டார். தென்றல் பேட்டியின் போது, டி. ஆர். கார்த்திகேயன் தான் காலையில் மணி மு மணி வண்ணனுக்குத் தந்த தன் புத்தகத்தை வாங்கிக் கொண்டே சொன்னார், "புத்தகம் கொடுத்த சில நாள் கழித்து ஜனாதிபதி அப்துல் கலாமைப் பார்த்த போது, அவர் புத்தகத்தை என் கையில் கொடுத்து, 'கார்த்திகேயன் 15ம் பக்கம் புரட்டுங்கள், அதாவது ரோமன் xv, அதில் மூன்றாவது பத்தியைப் படியுங்கள் என்றார்." இப்படிச் சொல்லியவாறே கார்த்திகேயன் அப் புத்தகத்தை எடுத்துப் பக்கத்தை புரட்டி ஆச்சரியத்தால் புருவம் உயர்த்தி புன்முறுவல் பூத்தார். "நீங்களும் அதே வரிகளைக் கோடிட்டு இருகிறீர்கள்... மணிவண்ணன்...." என்று புளகாங்கிதம் அடைந்தார்.
இந்திய ஜனாதிபதியையும் ஒரு புலம் பெயர்ந்த தமிழரையும் கவர்ந்த அந்த வரிகள் எவை? "If you want everything to be perfect, if you want to do everything in a manner where there is no scope for lapse, then you would prefer to do nothing." கோச்சா
The Rajiv Gandhi Assassination: The Investigation - Triumph of Truth D.R. Kaarthikeyan, Radhavinod Raju Hardcover 264 pages (July 1, 2004) Publisher: New Dawn Press ISBN: 1904910041 (listed at Amazon.com) List Price: $24.95
சந்திப்பு:மணி மு. மணிவண்ணன், "கோச்சா" கோவிந்த் படங்கள்:ஆஷா மணிவண்ணன், செல்வராஜ் வேணுகோபால் தொகுப்பு:மணி மு. மணிவண்ணன் |
|
|
More
"ஒரு பாடலைப் பதிய ஒரு வாரம் ஆகும்" பி. லீலா
|
|
|
|
|
|
|
|