Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | சாதனையாளர் | சமயம் | சிறுகதை | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | கவிதைப்பந்தல் | சிறப்புப் பார்வை | மேலோர் வாழ்வில் | முன்னோடி
Tamil Unicode / English Search
ஹரிமொழி
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: பார்த்தசாரதி சபதம்
- ஹரி கிருஷ்ணன்|ஜனவரி 2019||(3 Comments)
Share:
பாரதியின் கண்ணம்மா என் காதலி (நாணிக் கண்புதைத்தல்) பாட்டில் இந்த வரி வருகிறது:

ஊற்றமு தென்னவொரு வேய்ங்குழல் கொண்டோன் - கண்ணன்
உருவம் நினக்கமையப் பார்த்தன் அங்கு நான்


'கண்ணம்மா! நீ கண்ணனாகப் பிறந்தபோது நான் பார்த்தனாக இருந்தேன்' என்று பாடுகிறாரே, இந்தக் கருத்து வியாச மூலத்திலிருந்து பெறப்பட்ட ஒன்று. பாரதத்தில் பற்பல இடங்களில் சொல்லப்படும் கருத்துதான். பாண்டவர்கள் சூதில் தோற்று வனம் புகுந்தார்கள் என்று கேள்விப்பட்டு அவர்களைப் பார்ப்பதற்காகக் காட்டுக்கு வரும்போது கண்ணனே இதைப் பார்த்தனிடத்தில் சொல்வதாக மூலத்தில் வருகிறது. "எவர்கள் என்னைச் சார்ந்தவர்களோ அவர்கள் உன்னைச் சார்ந்தவர்கள். எவன் உன்னைப் பகைக்கின்றானோ அவன் என்னைப் பகைக்கின்றவனே. எவன் உன்னை அனுஸரிக்கிறானோ அவன் என்னை அனுஸரிக்கிறான். பிறரால் மீறமுடியாதவனே! நீ நரனாய் இருக்கின்றாய். நான் ஹரியான நாராயணனாய் இருக்கின்றேன். நர-நாராயணர்கள் என்ற ரிஷிகளாகி ஒரு சமயத்தில் இவ்வுலகத்தை அடைந்தோம். பார்த்த! நீ என்னைவிட வேறில்லை; அப்படியே, நானும் உன்னைவிட வேறில்லை. பரதரில் சிறந்தவனே! நம்மிருவர்களுக்கும் பேதம் அறியமுடியாதது," என்று வனபர்வம், அர்ஜுனாபிகமன பர்வத்தில் (அத். 12, பக். 49) கண்ணன் பாண்டவர்களிடத்தில் உரையாடிக்கொண்டிருக்கையில் அர்ஜுனனிடத்திலே சொல்கிறான். கண்ணன் பாண்டவர்கள் பக்கம் நின்றதன் காரணம், 'எங்கே தர்மமோ அங்கே கண்ணன்' என்று நவம்பர், 2018 இதழில் குறிப்பிட்டிருந்தோம், அது முதற்காரணம். இது அதைத் தொடரும் காரணம். 'அன்புடையார் இன்புற்று வாழ்தல் இயல்பு' என்று பாரதி, விநாயகர் நான்மணி மாலையில் சொல்வதைப் போல, அறத்தில் வேரூன்றி நிற்பவர்களுக்கிடையில் எப்போதும் இயல்பானதொரு பிணைப்பு இருக்கவே செய்யும் கிட்கிந்தா காண்டம், நட்புக்கோள் படலத்தில்

'மற்று, இனி உரைப்பது என்னே? வானிடை, மண்ணில், நின்னைச்
செற்றவர் என்னைச் செற்றார்; தீயரே எனினும், உன்னோடு
உற்றவர் எனக்கும் உற்றார்; உன் கிளை எனது; என் காதல்
சுற்றம், உன் சுற்றம்; நீ என் இன் உயிர்த் துணைவன்' என்றான்.


என்று ராமன் சுக்ரீவனிடத்தில் சொன்னதற்கும், மேலே கண்ணன் பார்த்தனிடத்தில் சொல்வதற்கும் பலவிதங்களில் நெருங்கிய பிணைப்பு இருக்கிறது. சுக்ரீவனுடைய பாத்திரத்தையும் பார்த்தனுடைய பாத்திரத்தையும் ஒப்பிட முடியாது என்பதுதான் வேற்றுமை. 'நீயே நான்; நானே நீ' என்று பார்த்தனிடத்தில் கண்ணன் சொல்வதற்கும் சுக்ரீவனிடத்தில் ராமன் சொன்னதற்கும் சொல்லப்பட்ட பாத்திரங்களினிடையிலே உள்ள வேறுபாடு என்ற நூலிழை வேற்றுமைதான் இருக்கிறது.

இப்படி தருமபுத்திரனோடும் அர்ச்சுனனோடும் மற்றவர்களோடும் உரையாடிக்கொண்டே கண்ணன் திரெளபதியைச் சந்திக்கிறான். அவளுக்கு மனத்தில் அடக்கி வைத்திருந்த அத்தனை உணர்கவுளும் பொங்கியெழுகின்றன. எல்லோரையும்போல அன்னையின் கருவில் உதிக்காமல் ஓமத்தீயில் தோன்றிய தன்னுடைய பிறப்புமுதலாக, யாரிலும் சிறந்தவனான அர்ச்சுனனால் வெல்லப்பட்டு ஐவரை மணமுடித்த சிறப்பு, பீம-அர்ச்சுனர்களுடைய பேராற்றல், தனக்கு கண்ணனுடைய மகனான பிரத்யும்னனுக்கு இணையான ஐந்து மக்கள் பிறந்தது என்று ஒவ்வொன்றாகச் சொல்லிக்கொண்டு வருகிறாள் பாஞ்சாலி. இங்கே ஜாயை என்ற கருத்துருவை பாஞ்சாலி முன்வைக்கிறாள். "கணவர்கள், அற்ப பலமுள்ளவர்களாயினும் மனைவியை ரக்ஷிக்கின்றார்கள் என்ற இந்தச் சாஸ்வத தர்ம மார்க்கமானது எப்பொழுதும் ஸாதுக்களால் நடத்தப்பட்டது. மனைவி காப்பற்றப்படும்போது பிரஜை காப்பாற்றப்ட்டதாகின்றது. பிரஜை காக்கப்படும்போது ஆத்மா ரக்ஷிக்கப்படுகின்றது அவளிடத்தில் (பதி) தானே ஜனிப்பது பற்றியன்றோ ஜாயை ஆகின்றாள்? பாரியையினால் ரக்ஷிக்கப்படவேண்டிய பர்த்தா (ஆகிய) புத்ரன் நான் ரக்ஷிக்கப்படாவிடில் எவ்விதம் என் வயிற்றில் உண்டாவான்?" என்று கேட்கிறாள் பாஞ்சாலி. (வனபர்வம், அர்ஜுனாபிகமன பர்வம், அத். 12, பக். 51). ("The eternal path of dharma is always followed by the righteous ones. The husband, however weak he may be, must protect his wife. When the wife is protected, the offspring are protected. When the offspring are protected, one’s own soul is protected. One’s own self is born in one’s wife and that is the reason she is called jaya." (from "The Mahabharata: Volume 2"--Bhandarkar Oriental Research Institute (BORI) edition, translated by Bibek Debrai)). ஒவ்வொரு கணவனும் தன்னுடைய மனைவியின் கர்ப்பத்தில் தானே பிரவேசித்து, அவளிடத்திலிருந்து தானே புத்திரன் வடிவத்தில் தோன்றுகிறான். அப்படிப்பட்ட மனைவியைக் காப்பது ஒவ்வொரு கணவனுக்கும் கடமையாகும். எனக்கோ அதி வீரர்களான ஐந்து கணவர்கள். நாண் ஏற்றப்பட்ட காண்டீவத்தைத் தூக்குவது என்றால் அது அர்ச்சுனரால் முடியும் அல்லது பீமனாலோ கிருஷ்ணனாலோ மட்டும்தான் முடியும். இப்படித் தூக்கிப் பிடிப்பதற்கே அபாரமான பலம் தேவைப்படுகின்ற காண்டீவத்தை அர்ச்சுனர் பிடித்து என்ன பயன்? நான் வீட்டு விலக்காயிருந்த சமயத்தில் சபைக்கு ஒற்றையாடையுடன் இழுத்துவரப்பட்டேன். அங்கே வீற்றிருந்த திருதராஷ்டிரருக்கும் பீஷ்மருக்கும் நான் மருமகள் அல்லவா? அவர்களும் இந்த உண்மையை நினைத்துப் பார்க்கத் தவறினார்கள்.
இப்படிப்பட்ட பேராற்றலைக் கொண்ட கணவர்களிடமிருந்து எனக்கு ஐந்து புத்திரர்கள் தோன்றினார்கள். "யுதிஷ்டிரரிடமிருந்து உண்டான ப்ரதிவிந்தியனும்; பீமஸேனரிடமிருந்து உண்டான ஸூதஸோமனும்; அர்ஜுனரிடமிருந்து உண்டான ஸ்ருதகீர்த்தியும்; நகுலபுத்திரனான சதானீகனும்; ஸஹதேவரிமிருந்து உண்டான ஸ்ருதகர்மாவும் யாவரும் உண்மையான பராக்ரமமுள்ளவர்கள்." அற்ப பலத்தை உடையவர்களான துரியோதனாதியருக்கு வேலைக்காரர்களாகச் செய்யப்பட்டு, அதர்மமாக ராஜ்யம் அபகரிக்கப்பட்டதை இவர்கள் எல்லோரும் எதற்காகப் பொறுக்கிறார்கள் என்றெல்லாம் கேட்கின்ற பாஞ்சாலி, பிரமாணகோடியில் பீமனுக்கு நஞ்சு வைக்கப்பட்டது, அவன் அதிலிருந்து மீண்டுவந்தது, அரக்கு மாளிகையிலிருந்து தாயாரையும் மற்ற நான்கு சகோதரர்களையும் பீமன் தூக்கிக்கொண்டு வந்தது, பகாசுர வதம், ஹிடிம்ப வதம் என்று அனைத்தையும் பட்டியலிட்டு 'இவ்வளவு பெருமை மிக்கவர்கள் இவர்கள். சரணடைந்தாரைக் கைவிடாதவர்கள். இருந்தும் என்னைக் காக்கத் தவறினார்கள்' என்று தனக்கேற்பட்ட அவமானத்தின்போது யாருமே உதவாமல் இருந்ததுபற்றி மிக நீண்ட உரையொன்றை ஆற்றுகிறாள். 'நான் தந்தை இருந்தும் தந்தையற்றவள்; சகோதரனிருந்தும் சகோதரனற்றவள்; கணவர்களிருந்தும் துணையற்றவள்; உறவினரிருந்தும் சொந்தங்களற்றவள்; சொந்தமென்று சொல்லிக்கொள்ள எனக்கு யாருமில்லை. நீரும் இல்லை.' என்று முடிக்கிறாள். "மதுஸூதனரே! எனக்குப் பதிகளில்லை; புத்திரர்களில்லை; பந்துக்களில்லை; சகோதர்களில்லை; பிதாவுமில்லை; நீருமில்லை. ஏனெனில், நீங்கள் அற்பர்களால் துன்புறுத்தப்பெற்ற என்னைத் துக்கமற்றவர்போல் அலக்ஷியம் செய்தீர்கள். அப்பொழுது கர்ணன் சிரித்தானென்பது பற்றின துக்கமும் எனக்கு ஆறவில்லை. கேசவரே! ஸம்பந்தம், கௌரவம், சிநேகம், பிரபுத்தன்மை ஆகிய நான்கு காரணங்களால் எப்பொழுதும் உம்மால் ரக்ஷிக்கப்படத் தகுந்தவளாகிறேன்' என்று கூறினாள். (மேற்படி அத்தியாயம், பக்கம் 55-56) இவற்றுள் சம்பந்தம் என்பது, அத்தை மகன்களுடைய துணைவி என்ற உறவு முறையால்; கௌரவம் என்பது, ஓம குண்டத்திலிருந்து பிறந்தவள் என்பதால்; சினேகம் என்பது, சிறுவயதில் விளையாட்டுத் தோழி என்ற காரணத்தாலும், கண்ணனிடத்தில் பாஞ்சாலிக்கிருக்கின்ற பக்தியாலும்; பிரபுத்தன்மை என்பது கண்ணனுடைய இறைத் தன்மையைக் குறிக்கிறது. "On these grounds I deserve to be ever protected by thee, O Kesava, viz., our relationship, thy respect (for me), our friendship, and thy lordship (over me)" என்பது கிஸாரி மோகன் கங்கூலியின் மொழிபெயர்ப்பு.)

உணர்ச்சிமயமான இந்தக் கட்டத்தில் யார்தான் உணர்ச்சிவயப்பட மாட்டார்கள்! கண்ணனும் கோபம் கொண்டான். பாஞ்சாலியைப் பார்த்துச் சொல்கிறான்: "கோபமுள்ளவளே! எவர்கள் விஷயத்தில் கோபங்கொண்டவளாய் ஆகின்றாயோ அவர்களின் மனைவியரும் அர்ஜுனன் பாணங்களால் மறைக்கப்பட்டவர்களும்; இரத்தப் பெருக்கால் நனைக்கப்பட்டவர்களும்; கொல்லப்பட்டு பூதலத்தில் படுத்தவர்களுமான பர்த்தாக்களைப் பார்த்து இவ்விதமே அழப் போகின்றார்கள். பாண்டவர்கள் விஷயத்தில் எது செய்யத்தக்கதோ அதைச் செய்கின்றேன். சோகப்படாதே. உண்மையான பிரதிக்ஞை செய்கிறேன். அரசர்க்கரசியாவாய். திரெளபதி! சொர்க்கம் விழுந்தாலும் ஹிமயமலை வெடித்தாலும பூமி பொடியானாலும் கடல் வற்றினாலும் என் வார்த்தை வீண்போகாது' என்றார்." (மேற்படி இடம்)

இப்படித்தான் இதுவரையில் பீம-அர்ஜுனர்கள் செய்திருக்கின்ற சபதங்களோடு வாசுதேவனுடைய சபதமும் இணைந்து, கண்ணன் போரின் ஒரு அங்கமாகிறான். 'ஆயுதமெடுக்க மாட்டேன்' என்று அர்ச்சுனனிடத்திலே சொன்னாலும் போர் நடந்தது என்னவோ கண்ணனுக்கும் கௌரவர்களுக்கும் இடையில்தான் என்னும் படியாகத்தான் கண்ணனே போரைச் செலுத்துகிறான் என்பதையெல்லாம் பார்க்கப் போகிறோம். இதன் பிறகு கண்ணன் சுபத்திரையையும் அபிமன்யுவையும் அழைத்துக்கொண்டு துவாரகைக்குச் செல்கிறார். திருஷ்டத்யும்னன் உபபாண்டவர்கள் ஐவரையும் அழைத்துக்கொண்டு பாஞ்சால தேசத்துக்குச் சென்றான். நகுலனுடைய இன்னொரு மனைவியான கரேணுமதி அல்லது ரேணுமதி என்ற பெயரை உடையவளை அவளுடைய சகோதரனான திருஷ்டகேது சுக்திமதி என்ற நகரத்துக்குச் சென்றான். பாண்டவர்கள் ஐவரும், திரெளபதியும், பாண்டவர்களைப் பின்தொடர்ந்து வந்த மக்கள் கூட்டமும் காட்டிலேயே தொடர்ந்து வசித்து வந்தது. இங்கேதான் பாண்டவர்களுக்கு நள சரித்திரம், சத்தியவான் சாவித்திரி சரித்திரம், ராமோபாக்யானம் எனப்படும் ராமாயணத் துணுக்கு எல்லாம் சொல்லப்படுகின்றன. நாம் அவற்றுக்குள்ளெல்லாம் போக இயலாதவர்களாக இருக்கிறோம்.

மேலே நாம் பார்த்தனவற்றில் 'கர்ணன் சிரித்தான். அதைத்தான் என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை' என்று பாஞ்சாலி சொல்வதைக் கேட்டோம். இந்தப் பாஞ்சாலிதான் சத்யபாமாவிடம், 'நான் யாரைப் பார்த்தும் சிரிப்பது இல்லை' என்று சொல்லப் போகிறாள். இவள்தான் தன்னைப் பார்த்துச் சிரித்ததாக துரியோதனன் சொன்னான்; சூதுக்கே அது முதல் காரணமாக விளங்கிற்று என்பதையெல்லாம் பார்த்திருக்கிறோம். பாஞ்சாலி 'நான் யாரைப் பார்த்தும் சிரிப்பதில்லை' என்று சொன்ன இடத்தைப் பார்க்கவேண்டும். அடுத்ததாக, குந்தி எப்படி கண்ணனுக்கு அத்தை முறையாகிறாள் என்பதைப் பார்க்கவேண்டும். இவற்றைப் பார்ப்போம்.

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்
Share: 




© Copyright 2020 Tamilonline