Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | சாதனையாளர் | சமயம் | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | அஞ்சலி
Tamil Unicode / English Search
ஹரிமொழி
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: அழைக்காமலும் வருவேன்
- ஹரி கிருஷ்ணன்|டிசம்பர் 2018|
Share:
தர்மபுத்திரனுக்கும் துரியோதனன், சகுனிக்கும் சூதாட்டம் நடக்கும்போது கண்ணன் துவாரகையிலேயே இல்லை. இதைக் கண்ணனே பாண்டவர்களிடத்திலே வன பர்வத்தின் 12ம் அத்தியாயத்திலிருந்து 22ம் அத்தியாயம் வரையிலான நிகழ்வுகளில் விஸ்தாரமாகக் கூறுவதைக் கேட்கிறோம். இங்கே ஒன்று சொல்லிவிட வேண்டும். இந்த விவரங்களெல்லாம் வியாச பாரதத்தில் மட்டும்தான் இடம்பெற்றிருக்கின்றன. நான்காயிரத்துச் சொச்சம் பாடல்களால் இயற்றப்பட்ட வில்லி பாரதத்திலோ, வில்லி பாரதத்தில் விடுபட்டனவற்றைச் சொல்வதற்கென்றே இயற்றப்பட்டு, வில்லி பாரதத்தில் விடுபட்ட வியாச பாரதப் பகுதிகளில் பெரும்பான்மையானவற்றைச் சொல்லியிருக்கின்ற பத்தாயிரத்துச் சொச்சம் பாடல்களைக் கொண்ட நல்லாப்பிள்ளை பாரதத்திலோ இடம்பெறவில்லை.

தருமன் ராஜசூய யாகத்தை நடத்தியபோது தன்னை நிந்தித்த சிசுபாலனை நூறு நிந்தனைகளைப் பொறுத்தபிறகு கொன்றான் என்பதை நாமறிவோம். சிசுபாலன், ஜராசந்தன், சால்வன் ஆகிய மூவரும் நெருங்கிய நண்பர்கள். சால்வ நாட்டை ஆண்ட காரணத்தால் இவன் சால்வன் என்று அறியப்படுகிறான். இவனுக்கு சௌபன் என்றும் ஒரு பெயர் உண்டு. ராவணனிடத்திலே புஷ்பக விமானம் இருந்ததைப் போல சால்வனிடத்திலே 'சௌபம்' என்றெரு விமானம் இருந்தது. இதன் காரணத்தால் இவன் சௌபன் என்று அழைக்கப்பட்டான். இந்த விவரம் வேதகாலத்து விமானங்களைப் பற்றிச் சொல்கின்ற இந்தத் தளத்திலே காணப்படுகிறது. http://www.crystalinks.com/vedic.html இதில் In one particular exchange, the hero, Krishna, is pursuing his enemy, Salva, in the sky, when Salva's Vimana, the Saubha is made invisible in some way. Undeterred, Krishna immediately fires off a special weapon: 'I quickly laid on an arrow, which killed by seeking out sound'. என்று ஒரு வரி இருக்கிறது. இது வியாசரின் மூலத்தில் வனபர்வத்தில் காணப்படும் வரியாகும். "பிறகு, பெரிய சண்டையில் சப்தத்தைக் குறிவைத்து அடிக்கும் அஸ்திரத்தை வேகமுள்ளவனாகி, அவர்களைத் தொலைக்கவேண்டிப் பிரயோகம் செய்தேன்" என்று கிருஷ்ணன் குறிப்பிடுகிறான். (வனபர்வம் அத். 22, பக். 80). இன்ஃப்ராரெட் எனப்படும் அகச்சிவப்புக் கதிரைத் தடம்பற்றிச் செல்கின்ற இக்காலத்து குண்டுகளைப் போல ஒலியைத் தொடர்ந்து சென்று அந்த ஒலி கிளம்பும் இடத்தை அடிக்கும் அஸ்திரத்துக்கு சப்தவேதி என்று பெயர். சரயு நதியில் நீர்மொள்ள வந்திருந்த ச்ராவணகுமாரனுடைய குடத்திலிருந்த எழுந்த ஒலியைக் கேட்டு, 'ஏதோ யானைதான் நீர்பருகுகிறது' என்று நினைத்துக்கொண்டான் தசரதன். அந்த யானையைக் கொல்வதாக நினைத்துக்கொண்டு ரிஷி குமாரனான ச்ராவணகுமாரனைத் தவறுதலாகக் கொன்றபோது எய்த அஸ்திரமும் இந்த சப்தவேதிதான். ஒலியைப் பின்பற்றிச் சென்று இலக்கை அடிக்கும் அஸ்திரங்களைப் பற்றிய குறிப்பு, ராமாயணம், பாரதம் ஆகிய இரண்டு இதிகாசங்களிலுமே கிடைக்கிறது.

இந்த சௌபன் அல்லது சால்வனைத்தான் மணந்துகொள்ள விரும்புவதாக காசி அரசனின் மூன்று மகள்களில் ஒருத்தியான அம்பா சொல்லியிருந்தாள். இதற்காகத்தான் பீஷ்மர் தன்னுடைய தம்பியான விசித்திரவீரியனுக்காகக் கடத்தி வந்திருந்த அம்பா, அம்பிகா, அம்பாலிகா மூவரில் அம்பாவைத் திருப்பி அனுப்பிவிடுவிறார். இந்த அம்பாதான் பிற்காலத்தில் சிகண்டியாக மாறி பீஷ்மரின் மரணத்துக்குக் காரணமாக இருக்கப் போகிறாள். இது ஒருபுறமிருக்கட்டும்.

சால்வனுடைய நண்பர்களில் ஜராசந்தன், ராஜசூய யாகக்துக்கு முன்னால் பீமனால் கொல்லப்படுகிறான். இதற்குக் காரணகர்த்தாவாக இருந்தது கண்ணன் என்பதையும்; தன்னுடைய இன்னொரு நண்பனான சிசுபாலனைக் கொன்றதும் கண்ணனே என்பதையும் அறிந்துகொண்ட சால்வனால் அதற்குமேல் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. உடனேயே துவாரகையின் மேல் படைதிரட்டிக்கொண்டு சென்று போரைத் தொடங்கினான். அப்போது கண்ணன் ராஜசூய யாகத்திலிருந்து திரும்பியிருக்கவில்லை. வனபர்வத்தில் இந்தச் சம்பவங்களை விவரித்துக்கொண்டு வரும்போது கிருஷ்ணன் சொல்கிறான்: "பாவச் செய்கையுள்ளவனும் நம்பிக்கைத் துரோகம் செய்பவனும் அற்பனுமான அவனை (கண்ணனை) இப்பொழுது சிசுபாலனைக் கொன்ற கோபத்தால் யமன் வீட்டை அடையச் செய்வேன். கெட்ட ஸ்வபாவமுள்ள எவனால் என் பிராதாவான சிசுபாலராஜன் கொல்லப்பட்டானோ அவனை பூதலத்தில் கொல்லுவேன். பிராதாவும் பாலனும் யுத்தத் திறமையில்லாதவனும் அவதானமில்லாதவனும் வீரனுமான (சிசுபால) ராஜன் எவனால் கொல்லப்பட்டானோ அந்த ஜனார்தனனைக் கொல்லுவேன்' என்றான்." (பாரதம், வனபர்வம் அத். 14, பக். 59)

இப்படி அவன் கண்ணன்மேல் சினங்கொண்டு துவாரகையின்மேல் படையெடுத்த சமயத்தில் கண்ணன் ராஜசூய யாகத்திலிருந்து துவாரகைக்குத் திரும்பியிருக்கவில்லை. அப்போது துவாரகையிலிருந்த உக்கிரசேனரும், கண்ணனுடைய மகன்களான ஸாம்பன், பிரத்யும்னன் முதலானோர் சால்வனை எதிர்த்தது விரிவாகப் பேசப்படுகின்றன. இறுதியில் கிருஷ்ணனுக்கும் சால்வனுக்கும் போர் தொடங்குகிறது. ராமாயணத்தில் இந்திரஜித் ஒரு மாயாசீதையை உருவாக்கி அதை அனுமனுக்கு எதிரில் வெட்டி வீழ்த்தியதைப் போலவே, சால்வனும் கண்ணனின் தந்தையான வஸுதேவரை மாயையால் உண்டாக்கி, கண்ணனுக்கு எதிரில் வெட்டுவதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்திக் கண்ணனுக்கே சற்று மயக்கத்தை உண்டாக்குகிறான். இறுதியில் 'இப்படிக் காலத்தை நீட்டித்தது போதும். இவனை உடனடியாகக் கொல்லுங்கள்' என்று கண்ணனுடைய தேரோட்டியான தாருகன் கேட்டுக்கொள்ள, கிருஷ்ணன் ஆக்னேயாஸ்திரத்தைத் தொடுத்து சால்வனைத் தொடர்கின்ற அசுரர்களை அழிக்கின்றான். கம்ஸன், சால்வன், ஜராசந்தன் எல்லோருமே நண்பர்கள் என்பதும் அசுரர்கள் என்பதும் இவர்கள் அனைவருடைய மரணத்துக்கும் கண்ணனே நேரடி அல்லது மறைமுகக் காரணனாக இருந்திருக்கிறான் என்பது குறிப்பிடத் தக்கது. சால்வன் அமர்ந்திருந்த சௌபம் என்கிற விமானத்தை (அல்லது பறக்கும் நகரத்தை) தன்னுடைய சக்கரப் படையால் பிளந்து வீழ்த்தியதாகக் கண்ணன் குறிப்பிடுகிறான். "யுத்தத்தில் யக்ஷர்கள், ராக்ஷஸர்கள், அஸுரர்கள், மிலேச்ச அரசர்கள் இவர்களைச் சாம்பலாக்கக்கூடியதும் பெரிதும் கூர்மையான முனையுள்ளதும் கானனுக்கும் அந்தகனுக்கும் யமனுக்கும் ஒப்பானதும் பளபளப்பானதும் குற்றமற்றதும் ஒப்பற்றதம் பகைவர்களை நாசமாக்கக்கூடியதுமான சக்கரத்தை நான் ஜபம் செய்து, 'எவர்கள் இப்பொழுது என் சத்ருக்களோ அவர்களையும் ஸௌபத்தையும் உன்னுடைய வீர்யத்தால் நாசம் செய்' என்று சொல்லித் தோள் வலிமையால் அவனைக் குறித்துக் கோபத்துடன் ப்ரயோகம் செய்தேன். அப்பொழுது ஆகாயத்தில் போகின்ற ஸுதர்சனத்தினுடைய உருவமானது யுகமுடிவில் மிக எரிக்கப் போகின்ற இரண்டாவது ஸூரியனுக்கு ஒப்பாக இருந்தது" என்பது கிருஷ்ணன் வாய்மொழியாகச் சொல்வது. (வனபர்வம், அத். 22, பக். 82)
இப்படி ஏவப்பட்ட சுதர்ஸனச் சக்கரம் ஆகாயத்தில் பறந்துகொண்டிருந்த சௌபத்தை இரண்டாகப் பிளந்தது. 'திரிபுரம் விழுந்ததைப் போல சௌபம் விழுந்தது' என்கிறான் கண்ணன். இப்படியெல்லாம் உக்கிரமான போர் நடந்துகொண்டிருந்த காரணத்தால்தான் நான் சூதாட்டம் நடைபெற்ற சமயத்தில் துவாரகையில் இல்லை. நான் இருந்திருந்தால், சூதாட்டத்தை நடைபெறவிடாமல் தடுத்திருப்பேன்' என்கிறான் கிருஷ்ணன். இதை தருமபுத்திரரை நோக்கிச் சொல்லும்போது, "வாஸுதேவர், 'பூபதியே! ஓ அரசரே! நான் துவாரகையில் இருந்திருப்பேனேயானால் சமீபத்தில் வந்திருப்பேன்; நீர் இந்தக் கஷ்டத்தை அடைந்தவராக மாட்டீர். ஓ! எதிர்க்கப்பட முடியாதவரே! அம்பிகா புத்திரரான அரசராலும்* துரியோதனனாலும் கௌரவர்களாலும் அழைக்கப்படாதவனாயினும் நான் வந்திருப்பேன். அதிக தோஷங்களைக் காட்டி நான் சூதைத் தடுத்திருப்பேன். பீஷ்மர், துரோணர் கிரபர், பாஹ்லீகர் இவர்களை அழைத்து உமக்காக, விசித்ரவீரிய புத்ரரான** அரசரை நோக்கி, 'கௌரவரே! ராஜந்திரரே! பிரபுவே! உமது புத்திரர்களுக்குச் சூதாட்டம் போதும்' என்று, நீர் துரத்தப்பட்டதற்குக் காரணமாயிருந்த தோஷங்களையும், முன்பு, வீரஸேன குமாரனான நளன் ராஜ்யத்திலிருந்து துரத்தப்பபட்டதற்குக் காரணமான தோஷங்களையும் அந்த விஷயத்தில் தெளிவாகச் சொல்லியிருப்பேன்" (வனபர்வம், அத். 13, பக் 57) என்றெல்லாம் விரிக்கும் கண்ணன், சூதாட்டத்தைத் தொடங்கினால் எப்படி நிறுத்த முடியாமல் போகும் என்பதையும் சுட்டிக் காட்டுகிறான். (* **அம்பிகா புத்திரன், விசித்திர வீரியன் புத்திரன் இரண்டுமே திருதராஷ்டிரனைக் குறிக்கும் அடைமொழிகள்.)

அழைக்காமல் இருந்திருந்தாலும் வந்திருப்பேன் என்று கூறும் இந்தக் கண்ணனைத்தான், 'சூதாட்டச் சபைக்குள்ளே நுழையாதே' என்ற தருமபுத்திரனுடைய பிரார்த்தனை கட்டிப் போட்டுவிட்டது என்று வாட்ஸாப் செய்தி சொல்லும் வேடிக்கையையும் சென்றமுறை பார்த்தோம்.

இவற்றையெல்லாம் விட முக்கியமானது வனத்திலிருந்த பாண்டவர்களைப் பார்க்க வந்திருந்த கண்ணன், உள்ளே நுழைந்ததுமே பாஞ்சாலி அவனிடத்தில் கோபித்துக் கொள்வதும், கண்ணீர்விடுவதும், அவளுடைய கண்ணீரைத் துடைத்துவிட்டபடி கண்ணன் அவளுக்குத் தந்த உறுதிமொழியும். பாஞ்சாலி சபதத்தைப் போல வாஸுதேவ சபதம் என்று சொல்லக்கூடிய இடம் அது. அதைப் பார்க்கலாம்.

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்
Share: 
© Copyright 2020 Tamilonline