Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | சாதனையாளர் | சமயம் | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | அஞ்சலி
Tamil Unicode / English Search
பொது
நமக்குத் தொழில் அன்பு செய்தல்: சாயி பிரசாத் வெங்கடாசலம்
- ரதிப்ரியா சுவாமிநாதன், மதுரபாரதி|டிசம்பர் 2018|
Share:
அந்த இளைஞர் சக்கர நாற்காலியில் வருகிறார். மெல்லிய உடல்வாகு. பேசுவதும் மிக மென்மையாகத்தான். அவர் சொல்லும் விஷயங்கள்தாம் மனதைக் கனக்கச் செய்துவிடுகின்றன.

பெங்களூரிலிருந்து வந்திருக்கும் சாயி பிரசாத் வெங்கடாசலம் நவம்பர் 25, 2018 அன்று மோர்கன் ஹில் யுனைடெட் மெதாடிஸ்ட் தேவாலயத்தில் ( 17175 Monterey st., Morgan Hill) பேசியபோது, வயதுக்கு மீறிய அனுபவம் மற்றும் செயல்பாட்டைக் கொண்டவராக அவர் இருப்பதை உணர முடிந்தது. அந்தப் பல்சமயக் கருத்தரங்கில் அவருக்கு முன்னால் ஒரு யூத மதகுரு, ஒரு பவுத்த சன்னியாசி, ஒரு இஸ்லாமிய இமாம் மற்றும் அந்தத் தேவாலயத்தின் ஆயர் ஆகியோர் தத்தமது மதங்களின் கோட்பாடுகளைப் பற்றிச் சுருக்கமாகப் பேசினர்.

அடுத்து வந்தார் சாயி பிரசாத். சுமார் 45 நிமிடங்கள் அவர் பேசுகையில் அவரது மதமே அன்பு எனவும், வழிபாட்டுமுறை ஆதரவும், அரவணைப்புமே என்பதாகவும் தோன்றியது. போரினால் இடம்பெயர்ந்து, களிப்பையும், குழந்தைத்தனத்தையும் இழந்த, அச்சத்தால் நிரம்பி, மரணத்தை எதிர்நோக்கி நின்ற சிறாரைச் சிரியாவின் எல்லைப்பகுதியில் சந்தித்து உதவிய அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார் சாயி. காலில் செருப்பில்லாமல், வயிற்றில் உணவில்லாமல் அந்தச் சிறுவர்கள் விளையாட முயலும் போதே மயங்கி விழுந்துவிடுவார்களாம். மயக்கம் மரணத்திலும் முடியலாம். இதனை எதிர்பார்த்தே சாயி தன்னோடு இந்தியாவிலிருந்து பால், தண்ணீர், ரொட்டி, விளையாட்டுப் பொருள்கள் எல்லாம் எடுத்துச் சென்றிருக்கிறார். சூடான் நாட்டின் எல்லையிலும் இதே கதைதான்.

Click Here Enlarge"உலகத்தின் ஒருபுறத்தில் இப்படி இருக்க, மறுபுறத்தில் செல்வச் செழிப்புமிக்க நாடுகளின் மக்கள் ஒவ்வொரு வேளையும் எவ்வளவு உணவுப் பொருட்களை வீணாக்குகிறார்கள் என்ற கேள்வி என்னுள் எழுந்தது. அப்படி வீணாகிறவற்றை இப்படி பசித்தவர்களுக்குக் கொடுக்க முடிந்தால் எத்தனை உயிர்களைக் காப்பாற்றி இருக்கலாம் என்ற வருத்தமும் ஏற்பட்டது" என்று சாயி பிரசாத் கூறியபோது வந்திருந்தோர் கண்களில் நீர் அரும்புவதைத் தடுக்க முடியவில்லை.

சாயி ஆஷ்ரயா (www.SaiAashraya.org) என்னும் லாபநோக்கற்ற தொண்டு நிறுவனத்தை சாயி பிரசாத் இந்தியாவின் பெங்களூரில் தொடங்கி நடத்திவருகிறார். சிரியாவின் அகதிக் குழந்தைகளைப் பார்த்த போதுதான் இதனைத் தொடங்கும் எண்ணம் ஏற்பட்டதாம் அவருக்கு. இந்தியாவிலும் படிப்பதற்காக அல்லாமல் பள்ளியில் தரும் இலவச மதிய உணவுக்காகவே ஏழைக்குழந்தைகள் பள்ளிக்குப் போகின்றன என்பதைக் கவனித்தார் அவர். அந்த நிலையை மாற்ற எண்ணி, அரசுப்பள்ளிக் குழந்தைகளுக்குக் காலைச் சிற்றுண்டி, தேவைப்படும் இடங்களில் மதிய உணவு போன்றவை வழங்க முன்வந்தது சாயி ஆஷ்ரயா. இப்படித் தினந்தோறும் 3000 பேருக்கு இலவச உணவை வழங்குகிறது.
அதுமட்டுமல்லாமல், பெங்களூரிலும், அருணாசலப் பிரதேசத்தின் தவாங் என்ற ஊரிலும் இலவச மருத்துவ முகாம்களை நடத்துகிறது சாயி ஆஷ்ரயா. இந்திய-சீன எல்லையிலுள்ள தவாங்கின் சுற்றுப்புறத்தில் பல மைல் தொலைவுக்கு மருத்துவர்களோ மருத்துவ மனைகளோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற ஆண்டில்மட்டும் 31,000க்கும் மேற்பட்ட நோயாளிகள், நெடுந்தொலைவு நடந்து வந்து, இந்த முகாம்களில் பரிசோதனை, சிகிச்சை மற்றும் மருந்துகள் பெற்றுப் பயனடைந்துள்ளனர். அந்தப் பகுதியில் இன்னும் பல இடங்களுக்கு மருத்துவ முகாம்களை விரிவாக்கும் முயற்சி தொடர்கிறது.

இந்த மனிதாபிமான முயற்சியில் பங்கேற்க விரும்புகிறவர்கள் பணமாக உதவுவதைவிட, முதலில் சேவையில் பங்கேற்க வாருங்கள் அழைக்கிறார் சாயி பிரசாத். "எங்கள் மூலதனம் அன்புதான். அது இருந்தால் எல்லாம் சாத்தியமாகும்" என்பது அவரது நம்பிக்கை மட்டுமல்ல, அனுபவமும்கூட. அத்தோடு, பிறருக்கு உதவுவதற்காகத் தனது ஆசைகளுக்கு உச்சவரம்பு விதித்துக்கொண்டு, அதனால் சேமிக்கப்படும் தொகையைக் கொடுப்பதே மிகச்சிறந்த நன்கொடை என்பதும் அவரது கருத்தாக இருக்கிறது. இப்படிச் செய்யும்போது சேவையைப் பெறுபவரைவிட, சேவை செய்பவர் அதிக நலனைப் பெறுமுடியும் என்கிறார் சாயி பிரசாத்.

"இன்றிருக்கும் சோதனையான சூழ்நிலையில் மனிதர்கள் ஒருவரையொருவர் கௌரவத்தோடு நடத்துவதும், நம்மைவிட வசதி வாய்ப்புக் குறைந்தவர்களை தினமும் எண்ணிப் பார்ப்பது மிகவும் அவசியம்" என்று கூறி சாயி பிரசாத் தனது அனுபவப் பகிர்வை முடித்தபோது, தம்மால் இயன்ற வகையில் மனிதகுலத்துக்குச் செய்யவேண்டும் என்ற உணர்வும், தாம் இருக்கும் நல்ல நிலை குறித்த நன்றி உணர்வும் ஒவ்வொருவருக்குள்ளும் பொங்கி எழுந்தது.

இந்த அன்பும் பரிவும் நிறைந்த, மனதைத் தொடும் இத்தகைய பல அனுபவங்களை iTunes, SoundCloud, PlayerFM ('Chronicles of Love' என்று தேடவும்) கேட்டு மகிழலாம். www.SaiAashraya.org/blog என்ற வலைப்பக்கத்திலும் கிடைக்கும்.

நவம்பர் மாத இறுதியிலிருந்து சாயி பிரசாத் அமெரிக்கச் சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். நீங்கள் அவரைப் பேச அழைக்க விரும்பினால் தொடர்புகொள்க-

அமெரிக்காவில்
வெங்கட்ராமன்: 408.505.6488
தினேஷ்: 832.703.8579

இந்தியாவில்
தொலைபேசி: 1.800.120.2724 (India)
மின்னஞ்சல்: contact.saiaashraya@gmail.com

தகவல் உதவி: ரதிப்ரியா சுவாமிநாதன்
தமிழில்: மதுரபாரதி
Share: 




© Copyright 2020 Tamilonline