Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | வாசகர் கடிதம் | சமயம் | சிறுகதை
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | மேலோர் வாழ்வில் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | எங்கள் வீட்டில் | அஞ்சலி | முன்னோடி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
ஹரிமொழி
மகாபாரதம் - சில பயணக்குறிப்புகள்: வாட்ஸாப் அவிழ்த்து விட்ட 'மூட்டைகள்'!
- ஹரி கிருஷ்ணன்|நவம்பர் 2018|
Share:
"அணிகொள் காவியம் ஆயிரம் கற்கினும் ஆழ்ந்திருக்கும் கவி உள்ளம் காண்கிலார்" என்பது பாரதி வாக்கு. இதற்கு, 'ஆயிரமாயிரம் காவியங்களைப் படித்தாலும்' என்றும் பொருள் கொள்ளலாம்; ஒரு காவியத்தை ஆயிரம் முறை படித்தாலும்' என்றும் பொருள் கொள்ளலாம். நீண்ட காவியங்களையும் இதிஹாசங்களையும் படிப்பதற்கு அளவுகடந்த பொறுமை தேவைப்படுகிறது. அவற்றில் உள்ள பெயர்களை மனத்தில் வாங்கிக்கொண்டு எதை யார் சொன்னார், எது எந்த சந்தர்ப்பத்தில் நடந்தது என்று கோவைப்படுத்திக் கொள்வதற்குச் சற்று பயிற்சி தேவைப்படுகிறது. அதுவும் மகாபாரதத்தைப் போன்ற இதிஹாசத்தில் ஒரே பெயரோடு பல பாத்திரங்களும், ஒரு பாத்திரத்துக்கே பல பெயர்களும் இருப்பதால், எந்த இடத்தில் யார் குறிப்பிடப்படுகிறார்கள் என்பதை உணர்வதற்குத் தனிப் பயிற்சி தேவைப்படுகிறது. உதாரணமாக, கவல்கனன் என்பது சஞ்சயனுடைய பெயர் என்றும்; வசுசேனன் என்பது கர்ணனுடைய பெயர்களில் ஒன்று என்றும்; கிருஷ்ணர் என்ற பெயரால் கண்ணனும், வியாசரும், திரெளபதியும் அறியப்படுகிறார்கள் என்றும் பலவிதமான சிக்கலான விவரங்களை மனத்தில் இருத்திக்கொண்டால்தான் எங்கே, யார் பேசுகிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பதைச் சரியாக உணர முடியும். இது ஒரு சிக்கல்தான் என்றாலும் சற்றுப் பொறுமையோடு முயன்றால் பிரிக்கமுடியாத சிக்கலில்லை.

இப்படிப்பட்ட பலவிதமான சிக்கல்கள் இருக்கின்ற காரணத்தாலேயே நம்மில் பலர் சுருக்கமான பதிப்புகளை நாடுகிறோம். இவற்றிலிருந்து கதையின் மையக்கருவை உணர்ந்துகொள்ள முடிந்தாலும் நுணுக்கமான பல விவரங்கள் அடிபட்டுப் போவதால், இதிஹாசத்தின் அடிநாதம் பிறழ்ந்துவிடுகிறது. பலவிதமான நுட்பங்களை நாம் தவறவிட நேரிடுகிறது. அண்மைக் காலம் வரையில் இத்தகைய பிறழ்ச்சிகளின் எண்ணிக்கை குறைவாகத்தான் இருந்தது. கடந்த சுமார் ஐந்தாண்டுக் காலமாக வாட்ஸாப்பும் பலவிதமான தொலைக்காட்சித் தொடர்களும் ஏற்கெனவே தெளிவற்ற சித்திரங்களாகக் கிடக்கும் இதிஹாசக் காட்சிகளை மேலும் மேலும் குழப்பியடிக்கின்றன. அதிலும் வடநாட்டில் கர்ணனை மையப்படுத்திக் காட்டப்படும் தொலைக்காட்சித் தொடர்களைப்பற்றி அறியும்போதெல்லாம், 'இப்படிக்கூடவா பொய் சொல்லமுடியும்' என்று வியக்காமல் இருக்க முடிவதில்லை. இப்படிப்பட்ட ஒரு வாட்ஸாப் கதையைத்தான் இப்போது பார்க்கப் போகிறோம்.

இந்தக் கதைப்படி, பாரதப் போர் முடிந்து வெகுகாலத்துக்குப் பின்னர் கிருஷ்ணனும் அவருடைய இளமைக் காலத்து நண்பரான உத்தவரும் சந்திக்கிறார்கள். நீண்ட உரையாடல் நடக்கிறது. இந்த உரையாடலின்போது உத்தவர் கிருஷ்ணனிடம், 'கண்ணா, நீயோ முக்காலமும் அறிந்தவன். பாண்டவர்களோ உனக்கு அணுக்கமானவர்கள். அப்படி இருக்கும்போது நீ ஏன் தர்மபுத்திரனை சூதாடாமல் தடுத்திருக்கக் கூடாது? நீமட்டும் அவ்வாறு தடுத்திருந்தால் எவ்வளவோ சிக்கல்களைத் தடுத்திருக்கலாமே. நீ அவர்கள் சூதாடியதைத்தான் தடுக்கவில்லை என்றால், அதிர்ஷ்டத்தையாவது பாண்டவர்கள் பக்கம் திருப்பிவிட்டிருந்தால், அவர்கள் வென்றிருப்பார்கள். எவ்வளவோ பெரிய அழிவைத் தவிர்த்திருக்கலாமே. போரே நிகழ்ந்திருக்காதே' என்றெல்லாம் பல கேள்விகளை எழுப்புவதாக இந்தச் செய்தி வளர்ந்துகொண்டே போகிறது. 'அவர்களை இவ்வளவு ஆபத்துகளிலிருந்து காக்காத உன்னை எப்படி 'ஆபத்பாந்தவன்' என்று சொல்லமுடியும்' என்ற கேள்வியை மையமாக வைத்து இந்த வாட்ஸாப் கதையின் உரையாடல் நிகழ்கிறது. இதற்கு பதில் சொல்லும் விதமாகக் கண்ணன் சொன்னதாக இச்செய்தி சொல்லும் விஷயத்தைக் கேட்டால் சிரிப்பதா, திகைப்பதா என்றே புரியவில்லை.

'உத்தவா, இந்த உலகத்தில் விவேகமே வெற்றி பெறுகிறது. துரியோதனனுக்கு விவேகம் அதிகம். தருமனுக்கு அது இல்லாமல் போய்விட்டது. அதனால்தான் துரியோதனன் தனக்குப் பதிலாக சகுனியை ஆடச்சொன்னான். இதைப்போல, தருமன் தனக்குப் பதிலாக என்னை ஆடச்சொல்லியிருந்தால் நான் ஆட்டத்தின் போக்கையே மாற்றியிருந்திருப்பேன். தருமன் என்னை நினைத்து ஆட அழைத்திருந்தால் நான் ஆட்டத்தில் இறங்கியிருப்பேன். நானும் சகுனியும் ஆடினால் யார் வெல்வார்கள் என்று சொல்ல வேண்டுமா என்ன? ஆனால் இதற்கு மாறாக தருமன் தன்னுடைய 'விவேகக் குறைவினால்' என்னை மறந்துவிட்டான். அதற்கும் மேலாக, 'இந்த ஆட்டம் நடக்கும்போது நீ இந்தச் சபைக்குள்ளேயே பிரவேசிக்கக்கூடாது கண்ணா' என்று என்னிடத்தில் பிரார்த்தனையும் செய்துவிட்டான். இப்படி இவன் செய்த பிரார்த்தனை என்னைக் கட்டிப் போட்டுவிட்டது. ஆகவே என்னால் அந்தச் சூதாட்டச் சபைக்குள்ளேயே நுழைய முடியவில்லை. 'இவர்கள் என்னை எப்போது அழைக்கப் போகிறார்கள்' என்று எண்ணியவாறு நான் அந்த அரங்கத்தின் வாயிலிலேயே காத்துக் கிடந்தேன். தருமனுக்குத்தான் என்னைப் பற்றிய எண்ணம் எழவில்லையென்றால், பீமனோ, அர்ச்சுனனோ, நகுல-சகதேவர்களோ யாரேனும் ஒருவராவது என்னை நினைத்திருக்கலாம். சூதிலே பணையமாக வைக்கப்பட்டு தோற்று அடிமைகளாக ஆன பிறகும் அவர்களில் ஒருவர்கூட என்னை நினைக்கவில்லை. இறுதியில் ஆடை உரியப்படும் கட்டத்தில்தான் பாஞ்சாலி என் பெயரைச் சொல்லிக் கதறினாள். ஆகவே என்னால் அவளுக்கு உதவமுடிந்தது' என்றெல்லாம் சொல்லி 'நான் சாட்சிபூதமாக மட்டுமே இருப்பேன். என்னை அழையாத வரையில் என்னால் எப்படி உதவ முடியும்' என்றெல்லாம் மிகப்பெரிய 'தத்துவ வியாக்கியானங்களோடு' இந்தக் கதை முடிவடைகிறது. உத்தவரும் ஆச்சரியப்பட்டு, கண்ணனை வியக்கிறார்.
இதற்கெல்லாம் மேலே மேற்படிச் செய்தி இன்னொரு 'மூட்டையை' அவிழ்க்கிறது. இதைக் கேட்டால் சிரிப்பதா திகைப்பதா என்றே புரியவில்லை. இந்தச் சந்தர்ப்பத்தில் கண்ணன் உத்தவரிடத்தில் சொன்ன விடை, 'உத்தவ கீதை' என்ற பெயரால் அறியப்படும் என்றுவேறு இந்த வாட்ஸாப் செய்தி சொல்கிறது. இப்படி ஒரு கீதை கிடையாது. போர் முடிந்து வெகுகாலத்துக்குப்பின் 'கண்ணா, போரின் சமயத்தில் நீ உபதேசித்த கீதையை என்னால் மனத்தில் இருத்திக்கொள்ள முடியவில்லை. ஆகவே, அதை இன்னொரு முறை உபதேசிக்குமாறு வேண்டுகிறேன்' என்று அர்ச்சுனன் கேட்பதாகவும் கண்ணன் அவனுக்கு 'நான் அன்று சொன்னதையெல்லாம் மீண்டும் சொல்ல முடியாது என்றாலும் அதன் சாரத்தைச் சொல்கிறேன், கேள்' என்று சொல்லி கீதையை மறுபடியும் உபதேசிப்பதாக வரும் அனுகீதா பர்வம்தான் 'அஸ்வமேதிக பர்வத்'தில் வருகிறதே தவிர, உத்தவ கீதை என்றெல்லாம் எதுவும் பாரதத்தில் இல்லை. அதற்கும் மேலே உத்தவரும் கிருஷ்ணனும் உரையாடும் கட்டம் ஏதும் பாரதத்தின் எந்த இடத்திலும் இடம்பெறவில்லை.

மேற்படிக் கதையில் உண்மையில்லை என்றாலும், 'இறைவன் அனைத்துக்கும் சாட்சியாக மட்டுமே இருப்பான். நம் துன்பங்களைப் போக்கிக் கொள்ளவேண்டுமானால் நாம்தான் அவனை அழைக்கவேண்டும்' என்ற மையக்கரு ஒன்று இருக்கிறது. இது உண்மையோ இல்லையோ, கேட்க நன்றாக இருக்கிறது என்பதால் நாமும் இதை உண்மை என்று நம்பிவிடுகிறோம். இதிஹாசம் சொல்கின்ற உண்மையோ இதற்கெல்லாம் அப்பாற்பட்டதாக இருக்கிறது. காவியங்களைப் பயிலும்போது அவற்றின் அடிநாதமாக விளங்கும் கருத்தியலைச் சிந்தித்து உணர்வது மிகவும் அவசியமான ஒன்று. ஒவ்வொரு காப்பியத்துக்கும், இதிஹாசத்துக்கும் அடிநாதமான கருத்தோட்டம் என்றொன்று ஓடிக்கொண்டே இருக்கும். கம்பராமாயணத்தின் மையக்கரு என்றால் 'அறம்வெல்லும் பாவம் தோற்கும்' என்பது; சிலப்பதிகாரத்தின் மையக்கரு, 'ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்' என்பது. பாரதத்தின் அடிப்படையை 'பக்தி' என்ற கட்டத்துக்கு நகர்த்துவதே இப்படிப்பட்ட கதைகளின் நோக்கமாக அமைந்திருந்தாலும், மேற்படிக் கதையில் தருமனை விவேகமில்லாதவனாகச் சித்திரித்திருப்பது அறியாமையையே காட்டுகிறது.

பாரதத்தின் அடிநாதமாக விளங்குவது 'தர்மம்' என்பதே. இதை முன்னரேகூட ஒருமுறை குறிப்பிட்டிருக்கிறோம். பாரதத்தில் இப்படி மீண்டும் மீண்டும் ஒலிக்கின்ற மஹாவாக்கியம் எதுவென்றால் . "யதோ தர்மாஸ் ததா கிருஷ்ணோ யதா கிருஷ்ணாஸ் ததோ ஜய:" (சல்லிய பர்வம், அத். 61, ஸ்லோகம் 30). 'எங்கே தர்மம் இருக்கிறதோ அங்கே கண்ணன் இருக்கிறான்; எங்கே கண்ணன் இருக்கிறானோ அங்கே வெற்றி இருக்கிறது'. இந்த மஹாவாக்கியம் பாரதத்தில் பதினோரு இடங்களில் மீண்டும் மீண்டும் சொல்லப்படுவதாக விக்கிபீடியா சொல்கிறது. அதுமட்டுமல்லாமல், இந்திய உச்சநீதி மன்றத்தின் கோட்பாட்டு நெறியாக 'எங்கே தர்மமோ அங்கே வெற்றி' என்ற வாக்கியம் இந்த ஸ்லோகத்தை உருமாற்றி அமைந்திருப்பதாகவும் தெரிகிறது.

எனவே, பாண்டவர்கள் கண்ணனிடத்திலே பக்தி நிறைந்தவர்களாக இருந்த காரணத்தால் கண்ணனுக்குப் பலவிதமான தந்திர உபாயங்களைக் கையாண்டு, ஏதோ பொய்யையும் மெய்யையும் கலந்தடித்து, பாண்டவர்களை வெற்றிபெறச் செய்யும் கட்டாயம் உண்டாகிவிட்டது என்பதுபோன்று சித்திரிப்பது மிகவும் தவறானதும் அபாயகரமானதுமான கருத்தாகும். ஒருவனிடத்திலே 'பக்தி' இருந்துவிட்டால் போதும். அவன் செய்வது எந்தமாதிரியான அநியாயம் என்றாலும் தெய்வம் அவனைக் காப்பாற்றும் என்ற போலிவாதம் பரவுவதற்கு இது துணை நிற்கும். உண்மையில் போர் நடக்கவேண்டும் என்பதே கண்ணனுடைய நோக்கம். அதற்குப் பாண்டவர்களை ஒரு கருவியாகக் கையாண்டான் என்பதே சுருக்கமான விளக்கமாக இருக்க முடியும். இப்படி மொத்தமான ஒரு பேரழிவை மனத்தில் வைத்துதான் தன்னுடைய 'நாராயண சைனியத்தை' துரியோதனன் பக்கம் நின்று போரிடும்படியாக துரியோதனனுக்குக் கொடுத்தான் என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். பாரதப் போரின் அடிநாதமே தர்மமும், 'பூபாரம் தொலைப்பதும்'தான் என்பதை நினைவில் நிறுத்தவேண்டும்.

வாட்ஸாப் நெடுஞ்செய்தி சொன்ன போலிவாதத்தைப் பார்த்தோம். அப்படியானால், பாரதக் கதைப்படி கண்ணன் அந்த 'சூதாட்ட அரங்கத்தின் வாயிலிலேயே காத்துக் கிடந்தானா?' பாண்டவர்களில் யாரும் அழைக்காத காரணத்தால்தான் அவனால் உள்ளே வரமுடியவில்லையா? பல கேள்விகள் எழுகின்றன. வாட்ஸாப் கதையில்கூட, 'கண்ணனே சொல்லும் விளக்கம் இது' என்றுதான் சொல்லப்படுகிறது. அப்படியல்லாமல் வியாச பாரதம் சொல்லும் விடையைப் பார்ப்போம்.

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்
Share: 




© Copyright 2020 Tamilonline