|
மகாபாரதம் சில பயணக் குறிப்புகள்: அத்தானும் அம்மான் சேயும் |
|
- ஹரி கிருஷ்ணன்|மார்ச் 2019| |
|
|
|
|
நாம் சென்றமுறை சந்தித்தபோது இரண்டு விஷயங்களைக் குறிப்பிட்டிருந்தோம். "நான் யாரைப் பார்த்தும் சிரிப்பதில்லை" என்று பாஞ்சாலி சொல்வது ஒன்று. அடுத்ததாக, பாஞ்சாலி கண்ணனைப் பார்த்துச் சொல்வதில், "கேசவரே! ஸம்பந்தம், கௌரவம், சிநேகம், பிரபுத்தன்மை ஆகிய நான்கு காரணங்களால் எப்பொழுதும் உம்மால் ரக்ஷிக்கப்படத் தகுந்தவளாகிறேன் என்று கூறினாள்" என்ற இடத்தில் ஸம்பந்தம் என்பது, 'அத்தை மகனுடைய மனைவி என்பதால் ஏற்படும் உறவுமுறை' என்று கூறியிருந்தோம். குந்தி கண்ணனுக்கு எப்படி அத்தையாகிறாள் என்பதைக் குறித்துச் சொல்வதாகச் சொல்லியிருந்தோம். அவற்றை இப்போது பார்ப்போம்.
முதலில், 'நான் அடுத்தவர்களைப் பார்த்துச் சிரிப்பதில்லை' என்று பாஞ்சாலி சொல்வது ஒரு முக்கியமான குறிப்பு. ஏனெனில் 'திரெளபதி என்னைப் பார்த்துச் சிரித்தாள்' என்று தான் பரிகசிக்கப்பட்டதற்குப் பரிகாரமாகத்தான் துரியோதனன் சூதாட்டத்துக்கு முகாந்திரம் தேடினான். அவன் குறிப்பிடும் அந்த இடத்தில்கூட வியாச மூலத்தில் பாஞ்சாலி இவனைப் பார்த்துச் சிரித்ததாக எந்தக் குறிப்பும் இல்லை என்பதை இதற்கு முன்னமேயே 'சிரிக்காத சிரிப்பு' என்ற தலைப்பில் விளக்கமாகச் சொல்லியிருந்தோம். திரெளபதியின் சிரிப்பே பாரத யுத்தத்துக்கு மூலமாக இருந்தது என்று பரவலாகச் சொல்லப்பட்டு வரும் புனைந்துரைக்கு வியாச மூலத்தில் எந்த அடிப்படையும் இல்லை என்பதனால் இந்த விஷயத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லவேண்டியிருக்கிறது.
நாம் இப்போது பேசப்போவது வனபர்வத்தின் இறுதிப் பகுதியை நெருங்கும் இடத்தை. அதாவது பாண்டவர்களுக்கு நளோபாக்கியானம், சத்தியவான் சாவித்திரி கதை, ராமோபாக்கியானம் எல்லாம் சொல்லப்பட்டு அதன்பிறகு கந்தபுராணமும் சொல்லப்பட்டு, அந்தப் புராணம் முடிவடைந்ததன் அடுத்த அத்தியாயத்தில் இடம்பெறும் உரையாடல் இது. காட்டில் இருக்கும் பாஞ்சாலியைப் பார்க்க வந்திருக்கும் சத்தியபாமாவுக்கும் பாஞ்சாலிக்கும் நடக்கும் உரையாடல். இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் கலகலப்பும் ஒருவரையொருவர் சீண்டலுமாக நடைபெறும் இந்த உரையாடலில், சத்தியபாமா, "அது எப்படி ஐந்து கணவர்களும் உன்னிடத்தில் எப்போதும் வசப்பட்டிருக்கிறார்கள்? இது எப்படிச் சாத்தியமாயிற்று? கண்ணன் அதுபோல என்னிடத்தில் வசப்பட்டிருக்குமாறு இதை எனக்கும் சொல்லிக் கொடு" என்று கேட்பதாக வரும் இடம் இது. இதைக் கிஸாரி மோகன் கங்கூலி பின்வருமாறு மொழிபெயர்க்கிறார். And the slender-waisted Satyabhama, the favourite wife of Krishna and the daughter of Satrajit, then asked Draupadi in private, saying, 'By what behaviour is it, O daughter of Drupada, that thou art able to rule the sons of Pandu--those heroes endued with strength and beauty and like unto the Lokapalas themselves? Beautiful lady, how is it that they are so obedient to thee and are never angry with thee? Without doubt the sons of Pandu, O thou of lovely features, are ever submissive to thee and watchful to do thy bidding! Tell me, O lady, the reason of this. Is it practice of vows, or asceticism, or incantation or drug at the time of the bath (in season) or the efficacy of science, or the influence of youthful appearance, or the recitation of particular formulae, or Homa, or collyrium and other medicaments? Tell me now, O princess of Panchala, of that blessed and auspicious thing by which, O Krishna, Krishna may ever be obedient to me." O Krishna, Krishna may ever be என்பதிலுள்ள முதல் கிருஷ்ணா என்பது பாஞ்சாலியையும் இரண்டாவதாக வரும் கிருஷ்ணா என்பது கண்ணனையும் குறிக்கும். ஆங்கில மொழிபெயர்ப்பில் collyrium and other medicaments என்று இருப்பதற்கு, "மை முதலிய மருந்துகளா" என்பது பொருள் என்று தமிழ் மொழிபெயர்ப்பின் மூலம் தெரிய வருகிறது. 'மை வைத்தல், மருந்தின் மூலம் வசப்படுத்துதல் என்பதெல்லாம் கெட்ட நடத்தையுள்ள பெண்களுடைய வழக்கம்' என்று மறுக்கின்ற பாஞ்சாலி, பாண்டவர்கள் ஐவரும் தன்னிடத்தில் எப்போதும் வசப்பட்டிருப்பதற்கான காரணங்களைச் சொல்லிக் கொண்டுவருகிறாள்.
மிக நீண்ட இந்த விளக்கத்தின் இடையில்தான் நாம் பேசுகின்ற இந்த விஷயம் இடம்பெறுகிறது. பாஞ்சாலி சொல்கிறாள்: "பரிஹாசமில்லாத சிரிப்பையும், அடிக்கடி தலைவாசலில் இருப்பதையும், வீட்டைச் சேர்ந்த பூந்தோட்டங்களில் நெடுங்காலம் இருப்பதையும் விலக்குகிறேன். அளவுமீறின பேச்சையும், மகிழ்ச்சியில்லாமையையும், அன்னிய மனிதர்களுடைய செயல்களைப் பற்றி கதைகளையும் அதிகச் சிரிப்பையும் அதிக கோபத்தையும், கோபத்துக்கான காரணத்தையும் விலக்குகிறேன்" என்பன அவற்றில் சில. (வனபர்வம், த்ரெளபதீ ஸத்யபாமா ஸம்வாத பர்வம், அத். 234, பக். 889.) |
|
தமிழ் மொழிபெயர்ப்புதான் என்றாலும் 'பரிஹாசமில்லாத சிரிப்பு' என்பதன் intended meaning ஆங்கில மொழிபெயர்ப்புகளில் வெளிப்படுகின்றன. இதை "I do not laugh unless there is a joke. I do not tarry for a long time at the gate. I do not spend a long time in the toilet or in the garden. I do not laugh loudly or complain, or give cause for anger" என்று பண்டார்கர் ஓரியண்டல் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் பதிப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பாளரான பிபேக் தேப்ராய் மொழிமாற்றியிருக்கிறார். நகைச்சுவைக்காக அல்லாமல் பிறவற்றுக்காகச் சிரிப்பதில்லை என்று பொருள் கொள்ளலாம். "I always refrain from laughing loudly and indulging in high passion, and from everything that may give offence." என்ற கிஸாரி மோகன் கங்கூலியின் மொழிபெயர்ப்பில் இந்தப் பொருள் மேலும் தெளிவாகிறது. 'அடுத்தவர்களைப் புண்படுத்தும் விதத்தில் நான் ஒருபோதும் சிரிப்பதில்லை' என்ற பொருள்தான் intended meaning என்பது தெளிவாகப் புலப்படுகிறது. இவள்தான் மயன் சபையில் தடுமாறிக்கொண்டிருந்த துரியோதனனைப் பார்த்துச் சிரித்தாள் என்று வியாச மூலத்தில் துரியோதனனும் 'குருடனுடைய மகனும் குருடன்தானோ' என்று சொன்னதாக தொலைக்காட்சித் தொடர்களிலும் திரிக்கிறார்கள். வியாச மூலத்தில் துரியோதனன் அவ்வாறு சொல்கிறானே தவிர, மயன்சபை வருணனையில் பீமன், அர்ஜுனன், வேலைக்காரர்கள் முதலியோர் சிரித்த விவரம் இருக்கிறதே தவிர திரெளபதி சிரித்ததற்கான குறிப்பு இல்லை என்பதையும் 'சிரிக்காத சிரிப்பு' என்ற மேற்சொன்ன தவணையில் பார்த்தோம்.
இனி, குந்தி எப்படி கண்ணனுக்கு அத்தை முறையாகிறாள் என்பதைப் பார்ப்போம். இது ஆதி பர்வத்தின் சம்பவ பர்வத்தில் இடம்பெறுகிறது. "வஸுதேவரின் பிதாவான சூரனென்னும் யாதவஸ்ரேஷ்டன் ஒருவன் இருந்தான். பராக்கிரமசாலியான அந்தச் சூரன், பிள்ளை இல்லாமலிருந்த தன் அத்தையின் புத்ரனுடைய புத்ரனாகிய குந்திபோஜனென்பவனுக்குத் தன் ஸந்ததியில் முதன்மையானதைக் கொடுப்பதாகப் பிரதிக்ஞை செய்தவனாதலால் அந்தக் குந்திபோஜனை வ்ருத்தி செய்வதற்காக அவளை அவனுக்குப் பெண்ணாகக் கொடுத்தான்." (ஆதி பர்வம், ஸம்பவ பர்வம், அத். 68, பக். 284)
அதாவது, சூரன் என்ற யாதவ குலத்து மன்னன் ஒருவன் இருந்தான். அவனுடைய அத்தையின் பேரனான (ஆங்கில மொழிபெயர்ப்புகளின்படி அத்தையின் பிள்ளையான) குந்திபோஜனும் இந்தச் சூரனும் உறவினர் மட்டுமல்லாமல் நல்ல நண்பர்களும்கூட. இன்னொரு யாதவ அரசனான குந்திபோஜனுக்குப் பிள்ளையில்லாததால், தனக்குப் பிறக்கும் முதல் மகவை குந்திபோஜனுக்கு தத்துக் கொடுப்பதாக சூரன் உறுதி சொல்லியிருந்தான். சூரனுக்கு முதலில் பிறந்தவள் ப்ருதை (Prita) என்னும் மகள். இவளை குந்திபோஜனுக்கு தத்துக் கொடுத்ததும் அவளுடைய பெயர், குந்தியானது. இவள் குந்தியானதற்குப் பிறகும்கூட அந்தப் பழைய பெயர் தொடரத்தான் செய்தது. எனவேதான் ப்ருதையின் மகன் என்ற பொருள்பட வந்த 'பார்த்தன்' என்னும் தாய்வழிப் பெயருக்கு (matronym) தர்மன், பீமன், அர்ஜுனன் ஆகிய மூவரும் உரியவர்களாகிறார்கள். இதுபோலவே, குந்தியின் மகன் என்ற பொருள்படும் தாய்வழிப் பெயரான 'கௌந்தேயன்' என்ற பெயரும் இந்த மூவருக்கும் உரிய பெயரே. இருந்தாலும், ரகுவம்சத்தில் பிறந்த காரணத்தால், தசரதனுக்கும், சகோதரர்கள் நால்வருக்கும் உரியதான 'ராகவன்' என்ற பெயர் எப்படி ராமனுக்கு நிலைத்துவிட்டதோ அதுபோலவே இந்த இருபெயர்களும் அர்ஜுனனுக்கு நிலைத்துவிட்டன.
குந்திபோஜனுக்கு ப்ருதையைத் தத்துக்கொடுத்த சூரனுக்கு அதன்பிறகு பிறந்தவர்தான் வசுதேவர். இவருடைய பிள்ளைதான் வாசுதேவனான கண்ணன். எனவேதான் குந்தி, கண்ணனுக்கு அத்தை முறையாகிறாள். கண்ணனுக்கு அர்ஜுனன் அத்தான்; அர்ஜுனனுக்குக் கண்ணன் அம்மான் சேய். இனி வனபர்வத்தின் சில முக்கியமான நிகழ்வுகளைப் பார்ப்போம்.
(தொடரும்)
ஹரி கிருஷ்ணன் |
|
|
|
|
|
|
|
|