|
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: வனவாசத் தொடக்கம் |
|
- ஹரி கிருஷ்ணன்|ஏப்ரல் 2019| |
|
|
|
|
பாண்டவர்களுடைய வனவாச காலத்தில் அவர்கள் பற்பல வனங்களுக்கு மாறிமாறிச் சென்று தங்களுடைய பன்னிரண்டாண்டுக் காலத்தையும் கழித்தார்கள். யாருக்கும் தெரியாமல் மறைந்து வாழவேண்டிய அக்ஞாதவாச காலமாகிய ஓராண்டை விராட நகரத்திலே கழித்தார்கள். வனவாசத்தை காம்யக வனம் என்ற காட்டில் தொடங்கினார்கள். கண்ணன் அவர்களை வந்து சந்தித்தது இங்கேதான். கண்ணன் வந்துசென்ற சிலகாலத்தில் துவைத வனம் என்ற காட்டுக்கு இடம் மாறிச் சென்றார்கள். பிறகு, வியாசர் வந்து, "நீங்கள் இங்கே இருக்க வேண்டாம்" என்று அறிவுறுத்தியதும் மீண்டும் காம்யக வனத்துக்குத் திரும்பினார்கள். இவர்கள் ‘இங்கே வசித்தார்கள்', 'அங்கே பெயர்ந்தார்கள்' என்று சொல்லும்போதெல்லாம் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இவர்களுடைய வனவாசத்துக்கும் ராமனுடைய வனவாசத்துக்கும் ஒரு பெரிய வித்தியாசம் உண்டு. ராமனுடைய வனவாசத்தில் ராமன் பலவிதமான கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்தான். அது 'தாய் உரை கொண்டு, தாதை' உத்தரவிட்டதாக ராமன் மேற்கொண்ட வனவாசம். இது சூதில் ஆட்சியை இழந்த அரசர்களான பாண்டவர்கள் மேற்கொண்ட வனவாசம். ராமாயண வனவாசத்தில், வனவாசம் இருந்தவர்கள் ராமன், இலக்குவன், சீதை ஆகிய மூன்றுபேர் மட்டுமே. அவர்கள் தங்களுடைய ஆயுதங்களையும் தேவைப்பட்ட உபகரணங்களையும் சுமந்தபடியாகக் காடுகளெங்கும் திரிந்தனர்.
பாண்டவர்களுடைய வனவாசம் அப்படிப்பட்டதன்று. அவர்கள் தேரில் ஏறிக்கொண்டு வேட்டைக்குச் சென்றதெல்லாம் பாரதத்தில் விவரிக்கப்படுகிறது. குறிப்பாகச் சொல்லப்போனால், தனியாக இருந்த திரெளபதியிடத்திலே வம்பு செயத ஜயத்ரதன் அவளைத் தன்னுடைய தேரில் தூக்கிக்கொண்டு போக, வேட்டைக்குப் போயிருந்த பாண்டவர்கள் அவனைத் துரத்திக்கொண்டு தங்களுடைய தேர்களைச் செலுத்தியபடி வருவதும்; ஜயத்ரதனோடு போரிடுவதும்; அவனைச் சிறைப்பிடிப்பதும் என ஒரு நீண்ட வருணனை வனவாச காலத்தின் பிற்பகுதியில் வருகிறது. எனவே இவர்கள் ஆயுதங்களை ஏந்தியபடி ராமனைப்போல நடந்து திரியவில்லை; தேர்களில் சென்றார்கள் என்பது ஒன்று. இவர்கள் போகும் இடமெல்லாம் அறிஞர்களும் அந்தணர்களும் இவர்களைப் பின்தொடர்ந்தபடி இருந்தார்கள். இப்படிப் பின்தொடர்ந்தவர்களில் நாட்டு மக்களில் சிலரும் அடக்கம் என்பது இன்னொன்று. இத்தனை பேருக்கும் உணவு தயாரிப்பதற்காகத்தான் சூரியன் திரெளபதியிடத்திலே அட்சய பாத்திரத்தைக் கொடுத்து, "ஒவ்வொரு நாளும் நீ உண்ணும் வரையில் இதிலிருந்து உணவு பெருகிக்கொண்டே இருக்கும்" என்று சொல்லியிருந்தான். திரெளபதி உண்ணும் வரையில் அந்தப் பாத்திரத்திலிருந்து உணவு பெருகும் என்பதனால்தான் துரியோதனன் ஒருமுறை துர்வாசரை, "திரெளபதி உண்டதன் பிறகு நீங்கள் அவர்களுடைய ஆசிரமத்துக்கு உணவுண்ணச் செல்லவேண்டும்" என்று கேட்டுக்கொண்டு அவரை அனுப்பி வைத்தான். இவற்றையெல்லாம் பிறகு பார்ப்போம். இங்கே கவனத்தில் கொள்ளவேண்டியது என்னவென்றால், பாண்டவர்கள் எங்கே சென்றாலும் ஒரு பெருங்கூட்டம் அவர்களைத் தொடர்ந்தபடி செல்லும். பாண்டவர்கள் அக்ஞாத வாசத்தை மேற்கொண்ட சமயத்தில் இவர்களையெல்லாம் திருப்பியனுப்புவதையும், இவர்கள் திரும்பிச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வதையும் பாரதம் விரிவாகச் சொல்கிறது.
இதை ஒருமுறை, "என்னைப்போல துரதிர்ஷ்டசாலியைப் பார்த்திருக்கிறீர்களா" என்று கேட்கும்போது, "உன்னைவிட மோசமான நிலையில் இருந்த மன்னனை அறிவேன்" என்று சொல்லித்தான் ப்ருஹதஸ்வர் என்ற முனிவர் தருமபுத்திரனுக்கு நளோபாக்கியானம் சொல்லத் தொடங்குகிறார். "நீயாவது இத்தனை பேர் சூழ வாழ்கிறாய். நளனுக்கு யாருமே இல்லை. காட்டில் மனைவியையும் பிரிந்தான்; வேறொரு அரசனிடத்திலே தேரோட்டியாகப் பணிபுரிந்தான்" என்றெல்லாம் சொல்லி, நளசரித்திரத்தைச் சொல்லத் தொடங்குகிறார். (நளவெண்பாவின்படி நளசரித்திரத்தை தருமனுக்குச் சொன்னவர் வியாசர். ஆனால் வியாச பாரதத்தின்படி இதனைச் சொன்னவர் ப்ருஹதஸ்வர்.)
துவைத வனத்தில் அவர்களை வியாசர் சந்திக்கும்போதுதான் 'போரில் வெற்றி பெறுவதற்காக பாசுபதம் முதலான ஆயுதங்களை அர்ஜுனன் அடைவதற்கான 'ப்ரதிஸ்ம்ருதி' என்ற வித்தையை உனக்கு நான் உபதேசிக்கிறேன். நீ அர்ஜுனனுக்கு உபதேசித்து அவனை ஆயுதங்களை அடைவதன் பொருட்டாக கைலாயத்துக்கு அனுப்புவாய்' என்று தர்மபுத்திரனிடத்தில் சொல்லி, அவனுக்கு இந்த ப்ரதிஸ்ம்ருதி வித்தையை உபதேசித்துவிட்டுச் செல்கிறார். அவர் சொன்னதன் பேரில் பாண்டவர்கள் மீண்டும் காம்யக வனத்துக்குத் திரும்பி அங்கே வசிக்கத் தொடங்குகிறார்கள். வியாசர் சொன்னதன் பேரில் அர்ஜுனன் பாசுபதாஸ்திரத்தை சிவபெருமானிடமிருந்து பெற்றாலும், அர்ஜுனன் கடைசி வரையில் பயன்படுத்தாத ஆயுதம் ஒன்று உண்டென்றால் அது இந்த பாசுபதம். அர்ஜுனன் சிவபெருமானிடமிருந்து பாசுபதம் பெற்றது இங்கே வனபர்வத்தில் ஒருமுறை வருகிறது; யுத்தம் தொடங்கி, பதினான்காம் நாள் போரில் ஜயத்ரதனை மடிப்பதற்கு முன்னதாக, யுத்தம் தொடங்கிய பதின்மூன்றாம் நாளிரவில் மீண்டும் ஒருமுறை கண்ணனுடைய துணையுடன் கைலாயம் சென்று பாசுபதம் பெற்றதாக இன்னொரு முறையும் சொல்லப்படுகிறது. இந்த ஆயுதத்தைப் பெற்றதாக இரண்டுமுறை சொல்லப்பட்டாலும், அர்ஜுனன் ஜயத்ரதனைக் கொல்வதற்காக இந்த அஸ்திரத்தைப் பயன்படுத்தவில்லை. வேறொரு அம்பினால்தான் கொல்கிறான். இந்தப் பாசுபதாஸ்திரத்தை இலக்குவன், இந்திரஜித்தோடு நடத்திய போர்களில் பிரமாத்திரப் படலத்தில் பயன்டுத்துகிறான். |
|
பின்னர் நிகும்பலை யாகப்படலத்தில் இலக்குவன் பேரில் இந்திரஜித் இதே பாசுபதத்தை எய்ய, அது பேரழிவை உண்டாக்க, இலக்குவன் தன்னுடைய பாசுபதாஸ்திரத்தை எய்து இந்திரஜித் எய்த பாசுபதாஸ்திரத்தைத் தணிக்கிறான். வில்லிலே பூட்டி எய்வது அம்பு என்றால், அதே வில்லிலே பூட்டி மந்திரங்களை உச்சரித்து எய்வது அஸ்திரம். அம்புகளிலேயே பலவகையான அம்புகள் உண்டு. யுத்தகாலத்தில் குறிப்பிட்ட பயன்பாடுகள் அல்லாமல் வேறு சமயங்களில் பயன்படுத்தக்கூடாது என்று விலக்கப்பட்ட (மாட்டுக் கொம்பு போன்ற) எய்வதற்கான துணைப் பொருட்களும் உண்டு. இவறைக் குறித்தெல்லாம் போர் நிகழும் காலகட்டத்தில் பார்ப்போம்.
இந்த காம்யக வனத்தில் தங்கியிருக்கின்ற காலத்தில்தான் அர்ஜுனன் கைலைக்குச் செல்கிறான்; அதைத் தொடர்ந்து நிவாத கவசர்களையும் காலகேயர்களையும் அழிப்பதில் இந்திரனுக்குத் துணைபுரிவதற்காக இந்திர லோகத்துக்குச் செல்கிறான். அங்கேதான் 'பேடியாகக் கடவாய்' என்ற ஊர்வசியின் சாபத்தைப் பெறுகிறான். இந்தச் சாபம்தான் பாண்டவர்கள் விராட நகரில் அக்ஞாத வாசம் மேற்கொண்ட காலத்தில் பிருஹன்னளை என்ற பெயரோடு அர்ஜுனன் உத்தர குமாரிக்கு நடனம் சொல்லிக் கொடுக்கும்போது உதவுகிறது. இந்திரலோகத்தில் இருந்த காலத்தில் அர்ஜுனன் தங்களுடைய பழைய நண்பனான சித்திரசேனனிடத்தில் நடனம் கற்றுக் கொள்கிறான். (ஏகசக்கரபுரத்திலிருந்து, பாஞ்சாலியைத் திருமணம் செய்துகொள்வதற்காக அவளுடைய சுயம்வரத்துக்குச் செல்லும்போது, பாண்டவர்கள் மாலை வேளையில் கங்கையைக் கடக்கிறார்கள். அங்கே நீராடிக் கொண்டிருந்த சித்திரசேனன் என்ற கந்தர்வன் அவர்களைத் தடுக்க, அர்ஜுனன் அவனை வெல்கிறான். அர்ஜுனனுடைய தேரில் பூட்டப்படுவதற்காக நூறு வெள்ளைக் குதிரைகளைக் கொடுத்தவன் இந்த சித்திரசேனன்தான். வெள்ளைக் குதிரைகளையே எப்போதும் பயன்படுத்தியவன் என்பதால் அர்ஜுனனுக்கு ஸ்வேதவாஹனன் என்ற பெயரும் உண்டு. இந்திரலோகத்தில் இவனிடத்தில் கற்ற நடனத்தைதான் அர்ஜுனன் விராடனுடைய மகளான உத்தரகுமாரிக்குக் கற்பிக்கிறான். அர்ஜுனன் தவிர்த்த மற்ற நான்கு பாண்டவர்களும் காம்யக வனத்தில் தங்கியிருந்த காலகட்டத்தில்தான் நளோபாக்கியானம், சத்தியவான் சாவித்ரி சரிதம், ராமோபாக்கியானம், கந்தபுராணம் போன்ற சரிதங்களை மார்க்கண்டேயரைப் போன்ற பெரியவர்களிடத்தில் கேட்டறிகிறார்கள். இதற்குச் சமகாலத்தில் அர்ஜுனன் இந்திரலோகத்தில் வசிக்கிறான். இவ்வாறு எத்தனை காலம் அவன் இந்திரலோகத்தில் வாழ்ந்தான் என்பதற்கான கணக்கையும் பாரதம் பின்வருமாறு சொல்கிறது:
"அவ்விதம் காம்யகவனத்தில் வஸிக்கின்றவர்களும், அர்ஜுனன் இல்லாதவர்களும் (அவனைப் பார்க்க) ஆசையுள்ளவர்களும் அத்தியயனம் செய்கின்றவர்களும் ஜபிக்கின்றவர்களும் ஹோமம் செய்கின்றவர்களுமான அவர்களுக்கு (பாண்டவர்களுக்கு) ஐந்து ஆண்டுகள் கழிந்தன." (வனபர்வம், இந்திரலோகாவிகமன பர்வம், அத். 47, பக். 181) மற்ற நான்கு பாண்டவர்களும் அர்ஜுனன் இல்லாமல் ஐந்தாண்டுகளைக் கழித்தார்கள் என்பதால், அர்ஜுனன் தேவலோகத்தில் கழித்தது ஐந்தாண்டுகள் என்பது தெளிவாகிறது.
இப்படி இவர்கள் காம்யக வனத்தில் வசித்துக்கொண்டிருந்த ஆரம்ப நாட்களில் தருமபுத்திரரிடத்தில், "உங்களுக்குக் கோபமே வருவதில்லை. எல்லாச் சமயங்களிலும் கோபத்தை விலக்கியிருப்பதும் நல்லதில்லை" என்று திரெளபதி சொல்லி, தான் சிறுவயதில் தன் தந்தையான பாஞ்சாலன் அரண்மணையில் இருந்த காலத்தில் அந்தணர் ஒருவர், "எப்போதும் கோபம் கொள்ளாமல் இருத்தலும் நல்லதில்லை" என்று சொல்லி, கோபத்தின் அவசியத்தைப் பற்றித் தங்களுக்குச் சொன்னதை எடுத்துச் சொல்லி, "நாட்டுக்கு உடனே திரும்பிப் போரை மேற்கொள்வதே சரியானது" என்று பேசுகிறாள். அர்ஜுனன் இந்தச் சமயத்தில் இன்னமும் இவர்களோடுதான் இருக்கிறான்; பாசுபதம் பெறுவதற்காகக் கைலைக்குக் கிளம்பியிருக்கவில்லை. திரெளபதி சொல்வது அனைத்தையும் கேட்ட தருமபுத்திரர், "நாம் ஏன் பொறுமையைக் கைக்கொள்ளவேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்" என்பதைத் தெளிவாக எடுத்து விளக்குகிறார். வனவாச காலத்தில் இப்படி தருமபுத்திரரைப் பல சமயங்களில் திரெளபதியும் பீமனும் வற்புறுத்துவதைப் பல இடங்களில் பார்க்கலாம். அதுவும் பீமனுடைய மொழிகளில் நிந்தை அதிகமாக இருக்கும், "இரையெடுத்த மலைப்பாம்பைப் போல அசைவற்று இருக்கிறீர்" என்பது உட்படப் பீமன் தருமபுத்திரரை நிந்தித்த இடங்கள் அநேகம். தருமபுத்திரர் இந்த இருவர் சொல்வதையும் முழுவதும் கேட்டுக்கொண்டு, ஒவ்வொரு சமயத்திலும் பொறுமையின் மேன்மையையும் அவசியத்தையும் வலியுறுத்திக்கொண்டே இருப்பார்.
பாஞ்சாலியும் பீமசேனனும் இப்படி அடிக்கடி வலியுறுத்தியதாலும், பீமன் தருமரை நிந்தித்ததாலும் அவர்களுக்குத் தருமபுத்திரரிடத்திலே அபிமானம் இல்லை என்பதில்லை. பாஞ்சாலியைப் பொருத்த வரையிலே அது மனைவியின் உரிமைகளில் ஒன்று என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. வால்மீகி ராமாயணத்திலும் சீதை, ராமனிடத்தில் இப்படிக் கடிந்து பேசியதும், அறிவுரை கூறியதுமான இரண்டு இடங்கள் உண்டு. இப்படிப்பட்ட இடங்கள் ஒரு மனைவிக்கு உள்ள உரிமையைக் காட்டுகின்றன. இப்படிப் பல இடங்கள் இருந்தாலும் இவர்கள் பேசிய விதத்தையும் தருமபுத்திரர் ஒரு கணவனுக்கு உள்ள கடமையின்படியும்; ஒரு மூத்தவனுக்கு உள்ள நியதியின்படியும் இவர்கள் இருவரிடத்திலும் பேசிய விதத்தை இந்த இடத்தை ஒரு மாதிரியாக வைத்து நாம் பேசவேண்டியிருக்கிறது. பேசுவோம்.
(தொடரும்)
ஹரி கிருஷ்ணன் |
|
|
|
|
|
|
|