Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | சிறப்புப் பார்வை
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | விலங்கு உலகம் | கவிதைப் பந்தல் | ஹரிமொழி | சாதனையாளர் | சிறுகதை | சமயம் | வாசகர்கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
பொருள் புதிது...
அப்பாவுக்கு அல்சைமர்
- ராகவேந்திர பிரசாத்|ஏப்ரல் 2019|
Share:
ப்ரின்ஸ்டன், நியூ ஜெர்சி, அதிகாலை நாலு பதினாறு மணி.

"ஹலோ! டேய் ஸ்ரீகாந்தா! நான் பேசறது கேட்குதா?" இந்தியாவிலிருந்து சித்தப்பா சக்ரபாணி.

"சொல்லுங்க சித்தப்பா! என்ன விஷயம்? இப்படி ராத்திரி நாலு மணிக்கு கால் பண்ணிருக்கீங்க?"

"டேய். முக்கியமான விஷயம். உங்க அப்பாவுக்கு அல்சைமர் டா!"

அதிகாலை நான்கு மணிக்கு தூக்கக் கலக்கத்தில் ஸ்ரீகாந்துக்கு ஒன்றும் புரியவில்லை. "சித்தப்பா! மறுபடியும் சொல்லுங்க!"

"உங்க அப்பாவுக்கு அல்சைமர். செலெக்டிவ் அம்னீஷியா. கொஞ்சம் முத்திப்போயி அல்சைமர் ஸ்டேஜ் 2 ன்னு டாக்டர் சொல்றாரு."

"ஒரு அஞ்சு நிமிஷத்துல ஃபோன் பண்றேன் சித்தப்பா!" தொடர்பைத் துண்டித்தான் ஸ்ரீகாந்த். சித்தப்பா கூறிய செய்தி மனதில் பேரிடியாய் விழுந்தது. அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அப்பாவைப் பார்த்து கிட்டத்தட்டப் பதின்மூன்று ஆண்டுகள் ஆகியிருக்கும். காரணம், அவன் செய்துகொண்ட திருமணம்,

பதின்மூன்று ஆண்டுகள் முன்னால்... அப்போதுதான் அவன் அமெரிக்கா வந்து ஐந்து வருடங்கள் ஆகியிருந்தது. நியூ ஜெர்சியில், பிரின்ஸ்டன் யுனிவர்சிட்டியில், எம்.எஸ். படிக்க வந்தவன், அங்கேயே வேலை கிடைத்துவிட, மெதுவாகக் குடிபெயர ஆரம்பித்தான். அவன் வீட்டுக்குத் தொலைபேசியில் அழைத்தபோது...

"ஸ்ரீகாந்தா! டிசம்பர்ல கிறிஸ்துமஸ் லீவுக்கு இந்தியா வர்றியோல்லியோ, அப்பவே உன் கல்யாணத்தை முடிச்சுடலாம்னு உத்தேசம்டா. உனக்கு சம்மதம்தானே?"

"அப்பா என்ன சொல்றீங்க! எனக்கு இப்போ கல்யாணத்துல இஷ்டம் இல்லை. நான் இன்னும் நிறைய சம்பாதிக்கணும்."

"ஸ்ரீகாந்தா! பொண்ணு யாரு தெரியுமா? என் அக்காவோட ரெண்டாவது பொண்ணு லலிதா. சின்ன வயசுலேர்ந்து உன்மேல ஆசையை வளர்த்து வெச்சுண்டிருக்கா. மாட்டேன்னு சொல்லாதேடா!"

"அப்பா! அது வந்து..."

"என்னடா வந்து போயின்னு? உனக்கு சம்மதம்தானே?"

"அப்பா! நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுங்க. எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்!"

"மொதல்ல நீ இங்க வா. பாக்கி விஷயத்தை அப்புறம் கவனிச்சுக்கலாம்!"

ஸ்ரீகாந்துக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அமெரிக்கப் பெண் ஒருத்தியை ஏற்கனவே திருமணம் செய்துகொண்டுவிட்டான். வீட்டில் யாருக்கும் தெரியாது. அலுவலகத்தில் சிலருக்கும், அவனுடைய கல்லூரி நண்பர்கள் சிலருக்கும் மட்டுமே தெரிந்திருந்தது.

பிரிட்ஜவாட்டர் பெருமாள் கோவிலில் ஒரு நல்ல நாள் பார்த்துத் தாலி கட்டிவிட்டு, அருகிலிருந்த சர்ச்சில் மோதிரம் மாற்றிக்கொண்டான். உடனடியாக இந்தியாவுக்குக் கிளம்பினான். இரண்டு மூன்று முறை அவன் அப்பாவைக் கூப்பிட்டான். அப்பா தொலைபேசியை எடுக்கவில்லை. மனைவி ஜெனிஃபரையும் அழைத்துக்கொண்டு சென்றான். சென்னையில் இறங்கிவிட்டு, ஓரிரு நாள் கழித்துச் சொந்த ஊரான திருவையாறுக்குச் சென்றனர்.

அப்பா அப்போது சபித்து விட்டார். "போடா. உயிரோட இருக்கறவரைக்கும் நான் உன்னைப் பார்க்கமாட்டேன். எங்கயாவது போ. அமெரிக்கா, அர்ஜென்டைனா, அண்டார்ட்டிகா எங்க வேணா போ. ஆனா உனக்கு புள்ள பொறந்ததுக்கப்புறம், பையன் தாத்தாவைப் பார்க்கணும்னு சொல்லிட்டு, இங்கே வந்த, அப்பறம் உங்கப்பாவைக் கடைசியா பார்க்கிற நாள் அதுதான்!"

சில நிமிடங்கள் அவன் மௌனமாய் இருந்தான். அப்பா ஸ்ரீகாந்திடம் மனம்விட்டுப் பேசி, சுமார் பதின்மூன்று ஆண்டுகள் ஆகின்றன. ஸ்ரீகாந்த் எத்தனையோ முறை ஃபோன் செய்தும் அவர் பேசவில்லை. சித்தப்பாதான் இருவருக்கும் இடையில் பாலமாக இருந்தார். இப்போது அவர்தான் ஃபோன் செய்து அப்பாவுக்கு அல்சைமர் இருப்பதைச் சொன்னார். ஸ்ரீகாந்த் மறுபடியும் ஃபோன் செய்தான்.

"அப்பா, இன்னமும் எனக்குக் கொடுத்த சாபத்தை மறக்கலியோ?"

"வாழ்க்கைல நடந்த முக்கியமான விஷயங்கள் ஞாபகம் இருக்கு. அவரோட கல்யாணம், நீ பொறந்தது, உனக்குப் பூணூல் கல்யாணம், உனக்குக் கொடுத்த சாபம். மத்தபடி, இன்னைக்குக் காலம்பற என்ன சாப்டேள்னு கேட்டா, ரொம்ப யோசிச்சுட்டு தெரியலையேங்கிறார். டாக்டரும் இன்னும் சில மாசம்தான் தாக்குப் பிடிப்பார்னுட்டார். இனிமே எல்லாமே அந்த பெருமாள் கையிலேதான்."

"எனக்கு இப்போ அப்பாவைப் பார்க்கணும். ஆனா எப்போ அவர் எனக்குக் கொடுத்த சாபம் மறக்கலைன்னு சொன்னேளோ, பார்க்க பயமாவும் இருக்கு."

"பயப்படாதே. நான் மெதுவா அப்பாகிட்ட எடுத்து சொல்றேன். நீ வந்து பாரு. நீயும் வந்து ரொம்ப வருஷம் ஆயிடிச்சில்ல?"

"சரி சித்தப்பா! சாயந்தரம் திரும்ப ஃபோன் பண்றேன்!"

சுமார் ஒரு மணி நேரம் கழித்து ஸ்ரீகாந்த் கூப்பிட்டான். "சித்தப்பா, இன்னொரு விஷயம். சொல்ல மறந்துட்டேன். சிவராம்னு என் சிநேகிதன், தஞ்சாவூர்ல ஒரு ரிஸர்ச்சுக்காக வர்றான். அவன் மூணுமாசம் தஞ்சாவூர்ல இருக்கணும்னு சொன்னான். நான்தான் சொன்னேன், எங்க வீட்லயே தங்கிக்கோன்னு. அவனும் வெஜிடேரியன்தான். திருவையாறுலேர்ந்து தஞ்சாவூர் அரைமணி நேரம்தானே? போயிட்டு வரலாம். மூணு மாசத்துக்கு ஹோட்டல்ல தங்கினா ரொம்பச் செலவு ஆகும். அதனால, அப்பாகிட்ட பேசி, ஒரு மூணு மாசத்துக்கு அங்கேயே தங்கச் சொல்லுங்க. அவன் எனக்கு நிறைய உதவி செஞ்சிருக்கான். அவனோட ரிசர்ச் ஒர்க் எல்லாம் நைட் டைம்லதான் இருக்கும். அப்பாவுக்கும் துணையா இருக்கும். நீங்களும் காசி, ராமேஸ்வரம், கேதர்நாத், பத்ரிநாத் எல்லாம் ரொம்ப வருஷமா போகணும்னு சொல்லிட்டிருந்தீங்க, இப்போ போயிட்டு வாங்கோ! அப்பாவுக்கும் ஒரு மாறுதலா இருக்கும்."

"நீ சொல்றதும் சரிதான். உங்கப்பாகிட்ட பேசிட்டு சொல்றேன்."

ஓரிரு தினங்களில் அப்பாவிடம் பேசி, சிவராம் திருவையாறு வீட்டில் தங்கச் சம்மதம் என்று சொல்லிவிட்டார்.

*****
திருவையாறு. சின்ன வயசில் சிவராமுக்கு அந்த ஊர் கொஞ்சம் பரிச்சயமானதாக இருந்தாலும், இப்போது பல மாற்றங்கள். புதிய பஸ் ஸ்டாண்ட், வாகன நெரிசல், புதிய கடைவீதி இவற்றில் பழைய அடையாளங்கள் மறைந்துவிட்டன. கொஞ்சம் கஷ்டப்பட்டு தான், ஸ்ரீகாந்த்தின் வீட்டைக் கண்டுபிடித்தான் சிவராம்.

பழைய வீடு. கட்டி ஐம்பது அறுபது வருடங்கள் இருக்கும். திண்ணை இருந்தது. முற்றம் இருந்தது. மனிதர்கள் மட்டும் குறைவாக இருந்தனர்.

"சார்" சிவராம் அழைத்தான்.

"யாரு?" உள்ளேயிருந்து ஒரு பெரியவர் எட்டிப் பார்த்தார். வயது எண்பதைத் தொட்டிருக்கும். இரண்டு வாரங்களாக மழிக்காத வெள்ளை தாடி. தலையில் எண்ணிவிடக் கூடிய தலைமுடி. எதையோ யோசித்துக்கொண்டிருந்தார். இன்னும் வீட்டிற்குள் பழைய சாதனங்கள் இருந்தன. தொண்ணுறுகளில் இருந்த தொலைக்காட்சி, ஈஸிச்சேர், அழுக்குப் படிந்த புத்தகங்கள், ஒரு மர ஸ்டூல்...

"நான்... நான்… சிவராம்! உங்க மகனின் நண்பன்."

"……"

திரும்பத் திரும்பக் கூறியும் பதில் இல்லை. அவனை அறியாமல் அவன் கண்கள் ஈரமாகின. அவன் இன்னும் வீட்டு வாசலிலேயே இருந்தான். யாரோ பின்னாலிருந்து நடந்து வரும் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தான். கொஞ்சம் ஒல்லியான இளம்முதியவர் ஒருவர் வந்தார்.

"தம்பி,. யாரு நீங்க? உங்களை எங்கயோ பார்த்திருக்கேனே?" அவர் சிவராமைப் பார்த்துக் கேட்டார். சிவராம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

"ஓ நீங்கதானா அது? வாங்க வாங்க. இவருதான் ஸ்ரீகாந்தோட அப்பா சத்யநாராயணன். என் பேரு சக்ரபாணி, ஸ்ரீகாந்தோட சித்தப்பா. உள்ள வாங்க."

சற்றுத் தயங்கி சிவராம் உள்ளே போனான்.

"ஸ்ரீகாந்த் எல்லாமே சொன்னான். நீங்க மூணு மாசம் இங்கதான் இருப்பீங்கன்னு. அந்த ரூம்ல தங்கிக்கோங்க. காலைல சாயந்திரம் ரெண்டு வேளை சாப்பாடு வந்துடும், காபியோட சேர்த்து. பக்கத்துத் தெரு சாரதா மாமி சமையல் செஞ்சு கொண்டுவந்துடுவாங்க. இந்த வீட்டை உங்க சொந்தவீடு மாதிரி நினையுங்க. அப்புறம் முக்கியமான விஷயம், நான் என் மனைவியை அழைச்சுண்டு ஒரு பதினஞ்சு நாள் ராமேஸ்வரம், காசி, கயா எல்லாம் போறேன். வந்துட்டு, ஒரு வாரம் ரெஸ்ட். அப்புறம் ஹரித்வார், ரிஷிகேஷ், கேதார்நாத், பத்ரிநாத்னு ஒரு மாசம் டூர். அப்புறம் ஒரு பத்து நாள் ரெஸ்ட். அப்புறம் உடுப்பி, தர்மஸ்தலா, குக்கேன்னு மங்களூர் பக்கம் பத்து நாள் டூர். ஸ்ரீகாந்த் விவரமா சொல்லிருப்பானே?"

"சொன்னான் அங்கிள். நான் அமெரிக்கா போன புதுசுல அவன் எனக்கு நிறைய உதவியிருக்கான். 2008ல எனக்கு வேலை போச்சு. அப்பவும் அவன்தான் பக்கபலமா இருந்தான். அந்த நன்றிக்கடன். எப்படியாவது செஞ்சு தீர்க்கணும்னு நினைச்சேன். அவனால இந்தியா வரமுடியாதுன்னு சொன்னான். எனக்கு மூணு மாசம் ஒரு ரிசர்ச்சுக்காக இந்தியா வர்ற வாய்ப்பு கிடைச்சுது. அப்படியே அப்பாகூட கொஞ்ச நாள் இருந்துட்டுப் போலாம்னு வந்தேன்."

"அப்பா?"

"அது... ஸ்ரீகாந்தோட அப்பா!"

"சரி சிவராம். நான் கிளம்பறேன். அப்பாவைப் பத்திரமா பார்த்துகோங்க! நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்குல்ல?"

"தினமும் காலைலயும் ராத்திரியும் மாத்திரை கொடுக்கணும். மாசம் ஒரு நாள் தஞ்சாவூர்ல மெடிக்கல் செக்கப். மத்தபடி உங்க அண்ணாவை, என் அப்பா மாதிரி பார்த்துக்கறேன்!"

சக்ரபாணி, சத்யநாராயணனைப் பார்த்து "அண்ணா! இவா உங்க புள்ளயோட ஃப்ரெண்ட், பேரு சிவராம். அமெரிக்காலருந்து வந்திருக்கான். உங்ககூடதான் மூணு மாசம். இருக்கப்போறான்."

"ஒ...." அவரிடமிருந்து வேறு பதில் எதுவும் வரவில்லை. சித்தப்பா கிளம்பிவிட்டார்.

*****


"என் பையனைத் தெரியுமோ? அவன் அமெரிக்காலயே ஃபேமஸான ஏதோ ஒரு யுனிவர்சிட்டிலதான் படிச்சான்" சத்யநாராயணன் பேசினார்.

"ப்ரின்ஸ்டன் யுனிவர்சிட்டி அங்கிள்!"

"ஆ... நீயும் அங்கதான் படிச்சியா?"

"ஆமாம். உங்க.... உங்க மகனோட நெருங்கின நண்பன்," சிவராம் கண்களில் நீர் துளித்தது.

"என் பையன், பிளஸ் டூல இந்த தஞ்சாவூர் டிஸ்ட்ரிக்ட்லயே முதலாவதா வந்தான்" தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் பரிசுபெறும் புகைப்படம், பழைய தினமலரில் வந்தது. எடுத்து வைத்திருந்தார். அதைச் சிவராமிடம் காண்பித்தார். "இது அவனுக்குக் காது குத்தும்போது எடுத்தது." சத்யநாராயணன் நீண்டநாள் கழித்து மனதாரப் பேசினார். அன்று மட்டும் அரை மணி நேரம் பேசியிருப்பார். கடந்த ஒரு வாரத்தில் பேசிய நேரம் அதைவிடக் குறைவு.

அடுத்த சில நாட்கள் வேகமாக நகர்ந்தன. சிவராம் அவரைக் கூட்டிக்கொண்டு அருகிலிருந்த கோவில்களுக்கெல்லாம் போனான். அவரிடம் பேசுவது அதிகமானது. சத்யநாராயணன் மெல்லப் புத்தகங்கள், படிக்க ஆரம்பித்தார். அவ்வப்போது சக்ரபாணி செல்பேசியில் அழைத்து விசாரித்தார். சத்யநாராயணன் நலமாக இருப்பதாகவும், தஞ்சாவூருக்குப் பரிசோதனைக்குப் போய் வருவதாகவும் சிவராம் கூறினான்.

மூன்று மாதங்கள் ஓடிப்போயின. சக்ரபாணி வீட்டுக்கு வந்தார். வீடு கொஞ்சம் மாறியிருந்ததைக் கவனிக்கவில்லை.

"அண்ணா. எப்படி இருக்கே?"

"வாடா! காசி, ராமேஸ்வரம் எல்லாம் எப்படி இருந்தது?"

"எப்படி அண்ணா ஞாபகம் வெச்சிருக்க?"

"சிவராம் எழுதி குடுத்துட்டு போனான். படிச்சுண்டே இருந்தேனா, அதான் ஞாபகம் இருந்தது" அவர் கையில் ஒரு காகிதம் இருந்தது.

"ஆமாம். சிவராம் எங்க? "

"இன்னைக்குக் கார்த்தால ஃப்ளட்ல அமெரிக்கா போய்ட்டான்." மறுபடியும் காகிதத்தைப் பார்த்துச் சொன்னார்.

"ஊருக்குப் போய்ட்டானா? என்ன சொல்றேள் அண்ணா?"

அப்போதுதான் வீடு கொஞ்சம் மாறியிருப்பதை உணர்ந்தார். நெடுநாளைக்குப் பிறகு வீடு சுத்தம் செய்யப்பட்டிருந்தது. புத்தக அலமாரியில் அழுக்கு இல்லை. ஃப்யூஸ் போன டீயூப் லைட் மாற்றப்பட்டிருந்தது. பல சின்னச் சின்ன மாறுதல்கள். மிக முக்கியமாக, அண்ணா புத்தகம் ஒன்றை அருகில் வைத்திருந்தார். பாதி படித்திருப்பார் போலும். டெமென்ஷியா வந்த பிறகு படிப்பதை நிறுத்திவிட்ட அவர், இப்போது மாறியிருந்தார். நேராகச் சிவராம் தங்கியிருந்த அறைக்குப் போனார் சக்ரபாணி.
.
அங்கே அவன் வந்து தங்கிய சுவடு எதுவும் இல்லை. அலமாரியில் காகிதங்கள் இருந்தன. ஜெராக்ஸ் காகிதங்கள். அவற்றைத் தற்செயலாகப் பார்த்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே ஸ்ரீகாந்தின் பாஸ்போர்ட் நகல். அது எப்படி சிவராமிடம் வந்தது? அங்கே ஸ்ரீகாந்தின் போட்டோவை பார்த்தார். அது வேறு யாருமல்ல, சிவராம்!

மறுநாள் அமெரிக்காவிலிருந்து ஸ்ரீகாந்த் அழைத்தான். "டேய்! ஸ்ரீகாந்தா! எப்படிடா இருக்க? இங்க வந்துட்டுப் போனது நீயா?"

"ஆமாம் சித்தப்பா! எப்படியாவது அப்பாகூட கொஞ்சநாள் இருக்கணும்னு தோணித்து. ஆனா அப்பாதான் சாபத்தை மறக்கலையே. அதனால ஃப்ரெண்ட் வர்றதா சொல்லிட்டு நானே வந்தேன்."

"அப்போ அந்த மூணுமாச ரிசர்ச்?"

"நான் அங்கே வர ஒரு காரணம் வேணுமில்லயா? கம்பெனில மூணு மாசம் லீவு போட்டேன். ரிசர்ச்சுன்னு பொய் சொல்லி அங்கே வந்து, அப்பாவை நன்னா கவனிச்சுண்டேன். அவருக்குப் பிடிச்ச கோவிலுக்கெல்லாம் கூட்டிண்டு போனேன். கொஞ்சம் கொஞ்சமா அவரு மூடு மாறித்து. பழைய விஷயமெல்லாம் ஞாபகத்துக்கு வந்துது. அதுக்கு மேல ஆபீஸ்ல சமாளிக்க முடியலை, அதான் வந்துட்டேன்."

"என்கிட்டே கூட நீ இதைச் சொல்லலையேடா?"

"இல்லை சித்தப்பா. அப்பாவுக்கு எதுவும் ஆகிடக் கூடாதுங்கற ஒரே நோக்கத்துலதான் உங்ககிட்ட இருந்து மறைச்சேன். எனக்கு இப்போ சந்தோஷமா இருக்கு சித்தப்பா! எங்கே அப்பாகூட பேசமுடியாதோன்னு நெனச்சேன். ஆனா, இந்த மூணு மாசம், என் வாழ்க்கைல மறக்கமுடியாத நாட்கள் சித்தப்பா."

"சரிடா. நீதான் சிவராம்னு அவர்கிட்ட சொல்லிட்டியா?"

"இல்ல சித்தப்பா. நான் எவ்வளவோ முயற்சி பண்ணியும், என்னால முடியலை. பயம். எங்க அப்பாக்கு ஏதாவது ஆயிடுமோன்னு பயம்! நீங்களும் சொல்லாதீங்க சித்தப்பா."

"சரிடா நானும் சொல்லலை" என்றபடி திரும்பினார். அப்படியே வாயடைத்துப் போனார். நான்கடி தூரத்தில் சத்யநாராயணன்!

"சக்ரபாணி. நீ பேசினதெல்லாம், நான் கேட்டுகிட்டுதான் இருந்தேன். ஃபோனை என்கிட்டே கொடு." சக்ரபாணி பயந்துகொண்டே ஃபோனைக் கொடுத்தார்.

""ஸ்ரீகாந்தா!" சத்தியநாராயணன் குரல் கொஞ்சம் தடுமாறியது.

"அப்பா!!" ஸ்ரீகாந்தின் குரலும் தடுமாறியது.

"எப்படி.... இருக்க?"

"நல்லா இருக்கேன் பா. இன்னைக்குக் கார்த்தாலேதான் இங்க வந்தேன்."

"உனக்கு எத்தனை பசங்க?"

"ஒரே பையன் அப்பா!"

"சரி. எனக்காக நீ இங்க ரொம்ப நாள் தங்கியிருந்து பார்த்துகிட்டே. இன்னும் ஒரே ஒரு உதவி செய்வியா?"

"சொல்லுங்கப்பா..."

"உன் பொண்டாட்டி புள்ளயக் கூட்டிட்டு வாப்பா! நான் என் பேரனைப் பார்க்கணும்!"

மறுமுனையில் அமெரிக்காவிலிருந்து ஒரு சின்ன விசும்பல் சத்தம் கேட்டது.

ராகவேந்திர பிரசாத்,
டொராண்டோ, கனடா
More

பொருள் புதிது...
Share: 




© Copyright 2020 Tamilonline