|
|
|
கலை, இலக்கியம், சினிமா என்று வகைவகையான புத்தகங்கள் சூழ அமர்ந்திருக்கிறார் அந்த இளைஞர். கி.ரா. 95 விழாவுக்காகப் புதுச்சேரி சென்றுவிட்டு அன்று அதிகாலைதான் திரும்பியிருந்தார் "டிஸ்கவரி புக் பேலஸ்" புத்தக விற்பனை நிறுவனத்தின் உரிமையாளர் மு. வேடியப்பன். எழுத்தாளர், பதிப்பாளர், புத்தக விற்பனையாளர், திரை இயக்குநர் என்று உற்சாகமாக இயங்கிக் கொண்டிருக்கும் வேடியப்பன் நம்முடன் உரையாடுகிறார்:
புத்தகங்களும் நானும் எனது ஊர் தர்மபுரி அருகே கயிலாயபுரம். விவசாயக் குடும்பம். ஆறு மாதம் வயலில் வேலை, மீதி ஆறு மாதம் சும்மா இருப்பார்கள். சிறு வயதிலேயே எனக்குப் புத்தக ஆர்வம் வந்துவிட்டது. போக்குவரத்து ஊழியராக இருந்த அண்ணன் ஒருவர் மார்க்சிஸ்ட், செம்மலர் போன்ற இதழ்களை எனக்குக் கொண்டுவந்து தருவார். அப்போது எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அது படிப்பார்வத்தைத் தூண்டிவிட்டது. தேடித் தேடி வாசித்தேன். அந்த ஆர்வமே கல்லூரியில் தமிழ் இலக்கியம் படிக்கக் காரணமானது. வாசிப்பார்வம் எழுத்தாகப் பரிணமித்தது. கவிதை, சிறுகதை எழுத ஆரம்பித்தேன். ஊரின் பெயரை என் பெயர்முன் இணைத்துக் கொண்டு 'கயிலை மு. வேடியப்பன்' என்ற பெயரில் ஆரம்பத்தில் எழுதினேன். தேசபக்தன் என்ற புனைபெயரிலும் எழுதியிருக்கிறேன். என்னுடைய பேராசிரியர் ஒருமுறை, "வேடியப்பன் என்பது அற்புதமான பெயர். அதில் ஒரு கலாசாரம், பண்பாட்டின் வேர், வரலாறு இருக்கிறது. அதை விட்டுவிட்டு புனைபெயரில் எழுதுவதில் உடன்பாடில்லை" என்று சொன்னார். அவர்தான் என் வழிகாட்டி. அவர் சொன்னதன் உண்மை எனக்குப் புரிந்தது. அதுமுதல் புனைபெயரில் எழுதுவதை விட்டுவிட்டு சொந்தப் பெயரிலேயே எழுத ஆரம்பித்தேன்.
செம்மலரில் வந்த பூமணியின் சிறுகதை ஒன்று மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு சிறுகதையில் எப்படி ஒரு பெரிய வாழ்வையே உள்ளடக்கிச் சொல்ல முடியும், ஒரு கிராமத்தைப் படம் பிடித்துக் காட்ட முடியும் என்றெல்லாம் வியந்தேன். அடுத்து கி.ரா.வைப் படிக்கும்போதும் இதே ஆச்சரியம். இந்த அளவுக்கு இந்தக் கதைகள் நம்மை ஈர்க்க என்ன காரணம் என்று யோசித்தேன். அவற்றில் இருக்கும் உண்மைதான், உயிரோட்டம்தான் காரணம் என்பது புரிந்தது. அந்த ஈர்ப்பில் நானும் தொடர்ந்து கதைகள் எழுத ஆரம்பித்தேன். நான் எழுதியதை நண்பர்களிடம் காட்டியபோது அவர்களுக்கும் அது பிடித்திருந்தது. தாமரை, கல்கி, புதியபார்வை போன்ற இதழ்களில் சிறுகதைகள் வெளியாகின. அவற்றில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து 2007ல் 'முணுமுணுப்பு' என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டேன். இதுதான் புத்தகங்களுடனான எனது பயணத்தின் ஆரம்பம் என்று சொல்லிப் புன்னகைக்கிறார்.
சினிமா.. சினிமா... சினிமாவில் திரைப்பட உதவி இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார் வேடியப்பன். "எழுத்தின் அடுத்த களமாகச் சினிமா இருந்தது. சினிமாத் துறையில் சேர்ந்து சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வலுப்பட்டது. திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து D.F.T. பயிலும் எண்ணத்தில் சென்னைக்கு வந்தேன். வெறும் பன்னிரண்டு இடங்கள்தாம் அதில். இப்போது மாதிரி அப்போது நிறைய இன்ஸ்டிட்யூட்களும் கிடையாது. பின்னர் லிங்குசாமியிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்தேன். அதன் பிறகு பிரவீண்காந்தி அவர்களிடமும் பணியாற்றினேன். இப்படி திரைத்துறை என்னை முழுக்க ஈர்த்துக்கொண்டது" என்கிறார்.
டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்புத் துறைக்கு வந்தது பற்றிக் கேட்கிறோம். "ஆரம்ப காலத்தில் திருவல்லிக்கேணியில் வசித்தபோது, பிளாட்ஃபாரத்தில் ரஷ்ய முற்போக்கு இலக்கியம் உட்பட நிறையப் புத்தகங்களை வாங்கிப் படிப்பேன். சினிமாவில் சேர்ந்து வடபழனிக்கு வந்தபின் வாசிக்கப் புத்தகங்களே கிடைக்கவில்லை. அதுவும் சினிமாத் துறை சார்ந்த புத்தகங்கள் கிடைக்கவில்லை. ஏதாவது புத்தகம் வாங்க வேண்டுமானால் தி. நகருக்குத்தான் போகவேண்டும். இங்கேயே சினிமாத் துறை மட்டுமல்லாமல் எல்லாத் துறை நூல்களும் கிடைத்தால் எப்படி இருக்கும் என்று யோசித்தேன். படம் எடுப்பவர்கள் தமிழில் வரும் நல்ல புத்தகங்களைப் படித்துவிட்டு எடுத்தால் இன்னமும் சிறப்பாக இருக்குமே என்று தோன்றியது. அந்த எண்ணத்தில் 2009ல் ஆரம்பித்ததுதான் 'டிஸ்கவரி புக் பேலஸ்'. என்னிடம் இருந்த சேமிப்பைக் கொண்டு எனது தம்பி சஞ்சய்காந்தியின் பொறுப்பில் இதை கே.கே.நகரில் ஆரம்பித்தேன். இதை ஒரு நல்ல புத்தக நிலையமாக வளர்த்தெடுத்துவிட்டு மீண்டும் சினிமாவில் இறங்கலாம் என்பது எனது எண்ணமாக இருந்தது. ஆனால், இது என்னை அப்படி இருக்க விடவில்லை. புத்தகங்கள், அது சார்ந்த விமர்சனக் கூட்டங்கள், கருத்தரங்கம், பயிலரங்கம், பயிற்சிப் பட்டறை, குறும்படம் என விரிந்து எனது நேரத்தை முழுமையாக எடுத்துக்கொண்டு விட்டது. சினிமாவுக்கு நேரம் ஒதுக்கமுடியாத அளவுக்கு நான் இதில் பிசியாகி விட்டேன்.
இதன் தொடர்ச்சியாக இதில் ஆர்வம் உள்ளவர்களை ஒருங்கிணைத்து குறும்பட விழா, ஊட்டி ஃபிலிம் ஃபெஸ்டிவல் போன்றவை நடந்துகொண்டிருக்கிறன" எனப் புத்தகம் தன்னைத் தடம் புரட்டியதை விளக்குகிறார் வேடியப்பன்.
வேடியப்பன் ஒருங்கிணைப்பாளராக இருந்து நடத்தும் 'ஊட்டி திரைப்பட விழா'வுக்காக இடையிடையே ஃபோன் வந்தபடி இருக்கிறது. கூடவே புத்தகம் தொடர்பான விசாரிப்புகள். பணிவாக பதிலளித்துக் கொண்டே உரையாடலைத் தொடர்கிறார்.
----
"புத்தகம் சார்ந்த பணிகள் என் நேரத்தை முழுக்க எடுத்துக் கொண்டாலும் சினிமா ஆர்வம் குறையவில்லை. எனது நோக்கம் சினிமாதான். இதைவிடச் சிறப்பாக சினிமாவில் செய்யமுடியும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. ஏக்நாத் எழுதிய 'கெடைகாடு' என்ற நாவலை நாங்கள் பதிப்பித்திருந்தோம். அது என்னை மிகவும் கவர்ந்தது. எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அந்த நாவலைப் பாராட்டி விரிவாக விமர்சனம் எழுதியிருந்தார். நல்ல திரைப்படம் எடுக்கவேண்டும் என்ற முயற்சியில் இருந்த எனக்கு இந்த நாவலைப் படமாக்கினால் என்ன என்ற எண்ணம் தோன்றியது."
"உச்சிமாகாளி என்று படத்திற்குப் பெயர் சூட்டி, திரைக்கதையும் எழுதினேன். டிஸ்கவரி புக் பேலஸ் ஆரம்பித்த பிறகு எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். முகநூல், வாட்ஸப் என்று பல விதங்களிலும் அவர்கள் நட்பில் இருக்கின்றனர். அவர்கள் மூலம் கிளவுட் ஃபண்டிங் முறையில் நிதிதிரட்டி ஏன் இந்தத் திரைப்படத்தைத் தயாரிக்கக்கூடாது என்ற எண்ணம் தோன்றியது. நண்பர்கள் மூலம் நிதி திரட்டினேன். சில சூழல்களால் அது நடக்கவில்லை. ஆகவே அந்த முயற்சியை அப்படியே நிறுத்திவிட்டு வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டேன். தேவையான நிதி கிடைத்த பிறகு படத்தை ஆரம்பிக்கலாம் என்பது என் எண்ணம்."
சினிமாத் துறை சார்பாகத் தான் கொண்டு வந்திருக்கும் சில நூல்களை நம்மிடம் காண்பிக்கிறார். வழவழ தாளில் முழு வண்ணப் பக்கங்களில் நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்டுள்ளன. "நல்ல சினிமா ஆர்வம் உள்ளவர்களிடம் இவற்றையெல்லாம் கொண்டு சேர்க்க ஆசை" என்கிறார்.
வாசகர்களும் புத்தக விற்பனையும் நல்ல புத்தகங்களை வாசகர் கவனத்துக்குக் கொண்டு செல்லும் முயற்சியில் எழுத்தாளர்கள், படைப்பாளிகளை வைத்து விமர்சனக் கூட்டம், பயிலரங்கு, கருத்தரங்கு எல்லாம் நடத்தி வருகிறார் வேடியப்பன். "நோக்கம் சரியாக இருந்தால் அது மக்களிடம் சென்று சேர்ந்துவிடும் என்பதற்கு இம்முயற்சிகள் உதாரணம். எனது முதல் கூட்டத்திற்கு தமிழச்சி தங்கபாண்டியன் வந்திருந்தார். இங்கேயே நாற்காலிகளைப் போட்டு நிகழ்ச்சிகளை நடத்தினோம். அவர் நிகழ்ச்சி முடிந்த போது சொன்னார். 'நல்ல முயற்சி இது. ஆனால் ஷோரூமின் வெக்கைதான் தாங்க முடியவில்லை. ஏ.சி. எல்லாம் போட்டு இன்னும் நன்றாகச் செய்யுங்கள்' என்று வாழ்த்திச் சென்றார். அது ஊக்கம் தந்தது. ஏ.சி. ஷோரூம் ஆக மாற்றினேன். பார்வையாளர்கள் நிறைய வரவே இடம் போதவில்லை. அதனால் அலுவலகத்தின் ஒரு பகுதியைத் தடுத்து அரங்கமாக்கினேன். எஸ்.ரா. உள்ளிட்ட பல எழுத்தாளர்கள் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டு உற்சாகப்படுத்தினர். எஸ்.ரா.வின் துணையுடன் கதைகள் பேசுவோம், சிறுகதை முகாம், நாவல் முகாம், கவிதை முகாம், மொழிபெயர்ப்பு முகாம் என்று பலவற்றை நடத்தினோம். வெளியூரில் இயற்கைக் சூழலில் ஓரிரு நாள் தங்கிச் சிறுகதை, நாவல்கள் பற்றி விவாதிப்பது என்று முன்னெடுத்தோம். நுற்றுக்கும் மேற்பட்ட வாசகர்கள் அந்நிகழ்வுகளில் கலந்து பயன் பெற்றிருக்கின்றனர். |
|
|
சோர்வில்லாமல் உற்சாகமாகச் செயல்பட இவை உதவுகின்றன. வாசகர்களுக்கும் பயனுள்ளதாக அமைகின்றன. நானும் நிறையக் கற்றுக் கொள்கிறேன்" என்று சொல்லி முடிக்கிறார்.
"எந்த மாதிரியான புத்தகங்கள் உங்களிடம் அதிகம் விற்பனையாகின்றன?" என்று கேட்கும் நாம் பதில் தெரியும் என்று நினைக்கிறோம். ஆனால் வேடியப்பன் சொல்வது மாறுபட்டு இருக்கிறது. "சமையல், ஜோதிடம், ஆன்மீகம் என்று பல பிரிவுகளில் புத்தகம் இருந்தாலும் இலக்கியம் சார்ந்த புத்தகங்களே அதிகம் விற்பனையாகின்றன. குறிப்பாக நாவல்கள். எஸ்.ரா., ஜெயமோகன், சாருநிவேதிதா, பெருமாள் முருகன் போன்றோர் நூல்கள் அதிகம் விற்கின்றன. இளம் எழுத்தாளர்கள் பலரின் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கின்றது. சினிமா சார்ந்த சில நூல்களை நாங்கள் வெளியிட்டோம். அவையும் நல்ல வரவேற்புப் பெற்றன. மொழிபெயர்ப்பு நூல்களும் ஓடுகின்றன."
ஆன்லைன் புத்தக விற்பனை பற்றிக் கூறும்போது, "ஆன்லைனில் வாங்குபவர்கள் நல்ல வாசகர்கள்தான். அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா என்று நாடுகளிலிருந்தும் வாங்குகிறார்கள். பிரச்சனை எதில் என்றால் சில பதிப்பகங்கள் புத்தக வெளியீட்டு விழாவுக்காகச் சில பிரதிகளை அச்சிடுவார்கள். அதுபற்றிய குறிப்புகள் இணையத்திலும், பத்திரிகைகளிலும் வரும். நாங்களும் அதை நம்பி விளம்பரத்தை ஆன்லைனில் போடுவோம். ஆர்டர் வரும். பதிப்பகத்திடம் கேட்டால் "இனிமேத்தாங்க அச்சடிச்சு வரணும்" என்பார்கள். வாசகர்கள் இதைப் புரிந்துகொள்ள மாட்டார்கள். "நேற்று வெளியிட்ட புத்தகம் எப்படி இன்றைக்கு இல்லாமல் போகும்? ஏன் நீங்கள் ஆன்லைனில் போட்டீர்கள்?" என்றெல்லாம் கேட்பார்கள்.
மற்றபடி, ஐந்து மணிக்கு ஆர்டர் வந்தால்கூட, புத்தகத்தை உடனே பேக் செய்து கொரியரில் அனுப்பி விடுவோம். பணம் வர ஒருவாரம் ஆகும். ஆனால் அதற்காகத் தாமதிக்க மாட்டோம். மறுநாள் காலை அவர்களுக்குக் கிடைத்துவிடும். இந்த உடனடி சேவை எங்களுக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்துள்ளது."
குறும்படம் சார்ந்த முயற்சிகளைப் பற்றிச் சொல்லுங்கள் என்றதும் உற்சாகமாகிறார்.
"சினிமா, இலக்கியம், குறும்படம் எல்லாமே ஒன்றை ஒன்று சார்ந்ததுதான். புதிய புதிய கனவுகளுடன் நிறைய இளைஞர்கள் சினிமா உலகிற்கு வருகின்றனர். அவர்களது ஆர்வங்கள் வித்தியாசமாக இருக்கின்றன. அவர்களுக்கும் எனக்கும் பெரிய வயது வித்தியாசம் இல்லாததால் தலைமுறை இடைவெளி ஏதுமின்றி உரையாடுகிறார்கள். இதுவே புகழ்பெற்ற எழுத்தாளர்கள், சினிமா இயக்குநர்களுடன் உரையாடல் என்றால் தயக்கமும், இடைவெளியும் இருக்கிறது. 2009ல் நாங்கள் புக் ஷாப் ஆரம்பித்தோம். 2012ல் அதனை மாற்றியமைத்து, ஒரு பகுதியைத் தியேட்டர் ஆக்கினோம். படம் திரையிடுவது, கூட்டம் நடத்துவது எல்லாம் அங்கேதான். அங்கே புரொஜொக்டர் உள்ளது. குறும்படம் என்பது மற்றொரு படைப்பு வெளி, அவ்வளவுதான்" என்கிறார்.
"உங்கள் முதல் சிறுகதைத் தொகுப்பிற்குப் பின் ஏன் தொகுப்புகள் வெளியிடவில்லை?" என்கிறோம். "ஆரம்பத்தில் சினிமாச்சூழல் என்னை எழுத விடவில்லை. இப்பொழுது டிஸ்கவரி பதிப்பகம், நூல் விற்பனை, வெளியீடு, கூட்டங்கள் என்று எப்போதும் புத்தகம் சார்ந்த பணிகளிலேயே ஈடுபட்டிருப்பதால் எழுத நேரம் கிட்டுவதில்லை. ஆனால், எழுதுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன என்பது மட்டும் உண்மை. அதற்கான சமயம் வரும் என்று காத்துக்கொண்டிருக்கிறேன். என் முதல் சிறுகதைத் தொகுப்பை இவ்வாண்டு புத்தகக்காட்சியில் மறுபதிப்பாகக் கொண்டுவர இருக்கிறேன். அதில் இருக்கும் 'சின்னவனும் பெரியவனும்' என்ற ஒரு சிறுகதையை தெகிடி பட இயக்குநர் ரமேஷ், 'பருதி-மாறன்' என்ற தலைப்பில் கலைஞர் டி.வி.யின் 'நாளைய இயக்குநர்' பகுதியில் குறும்படமாக எடுத்திருந்தார். சீசன் இரண்டில் சிறந்த குறும்படம் பகுதியில் முதல் பரிசைப் பெற்றது. பிறகுதான் ரமேஷ் 'தெகிடி' படத்தை இயக்கினார்.
புத்தகங்களும் விருதுகளும் டிஸ்கவரி புக் பேலஸ் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டிருக்கிறது. அவற்றில் முக்கியமானது சி.சு. செல்லப்பாவின் சுதந்திர தாகம். சாகித்ய அகாதமி விருது பெற்ற இந்நூல் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மறுபதிப்புக் கண்டுள்ளது. அதுபோல க.நா.சு., லா.ச. ராமாமிர்தம், ப. சிங்காரம், தஞ்சை பிரகாஷ், பிரபஞ்சன், வெளி. ரங்கராஜன், இந்திரன், வேல. ராமமூர்த்தி என புகழ்பெற்ற பலரின் படைப்புகளை வெளியிட்டிருக்கிறோம். திரைத்துறை சார்ந்த இயக்குநர் கே. பாக்யராஜ், லிங்குசாமி, ஏ. வெங்கடேஷ், வசந்தபாலன், ஒளிப்பதிவாளர் சி.ஜெ. ராஜ்குமார் போன்றோரது படைப்புகளையும் வெளியிட்டுள்ளோம். இதில் சுகந்தி சுப்பிரமணியனின் தொகுப்பு முக்கியமானது. 'குற்றப்பரம்பரை' மிகச்சிறந்த வரவேற்பைப் பெற்ற படைப்பு. சிறுகதை நூற்றாண்டையொட்டி வெளியான 'நூறு சிறந்த சிறுகதைகள்' நல்ல வரவேற்பைப் பெற்றது.
டிஸ்கவரி இவ்வாண்டு புத்தகக் காட்சிக்காக நூறு புத்தகங்களை வெளியிடும் திட்டத்தில் இருக்கிறது. அதுபற்றி வேடியப்பன், "ஆமாம், அதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. குறுகிய காலமே உள்ளது. திட்டமிட்டபடி எல்லாம் நடந்தால் எப்படியும் அறுபது புத்தகங்களையாவது இந்த ஆண்டுக்குள் கொண்டு வந்துவிட முடியும் என்று நினைக்கிறோம்" என்கிறார்.
மின்னூல்களுக்கு என்றே தனியாக ஓர் இணையதளத்தை ஆரம்பித்திருக்கிறார். பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. விரைவில் தொடங்குமாம். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது, திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, ஜெயந்தன் விருது, ஈரோடு தமிழன்பன் விருது, சிறந்த பதிப்பாளருக்கான 'தமிழ்நூல் விற்பனை மேம்பாட்டுக்கழகம்' வழங்கிய விருது, கவிஞர் கார்முகில் அறக்கட்டளை விருது எனப் பல விருதுகளை இவரது பதிப்பகமும், அதன் வெளியீடுகளும் பெற்றுள்ளன. டிஸ்கவரி கடையில் ஒரு லட்சத்திற்கும் மேல் புத்தகங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
"உண்மையைச் சொல்லுங்கள், புத்தகக் கடையால் உங்களுக்கு லாபம் வருகிறதா, எவ்வளவு?" என்று கேட்டால் சிந்திக்கிறார். "மிகைப்படுத்தாமல் சொல்கிறேன். நேற்றைய வரவு பத்து ரூபாய் என்றால் இன்றைக்கு 20 ரூபாய். நேற்றைய செலவு 20 ரூபாய் என்றால் இன்றைய செலவும் 20 ரூபாய். நாங்கள் ஆரம்பித்த காலத்தோடு ஒப்பிட்டால் நிறையவே வளர்ந்திருக்கிறோம். ஆனால் செலவுகள் இன்னமும் கட்டுக்குள் வரவில்லை. அதனால் லாபம் எதுவும் பார்க்க முடியவில்லை. பணச்சுழற்சி நடந்து கொண்டிருக்கிறது. அவ்வளவுதான். இன்றைக்கு இதுவே பெரிதாக இருக்கிறது. ஏனென்றால் எங்களை முன்மாதிரியாகக் கொண்டு அடுத்து சுமார் ஆறுபேர் இம்மாதிரி புக் ஷாப் வைத்தார்கள்; ஐந்தை மூடிவிட்டார்கள். இதுதான் இன்றைய யதார்த்தம். அதே வாசகர்கள்தான் அங்கேயும் போகிறார்கள். புதிய வாசகர்கள் உருவாகவில்லை. வாசகர்களை உற்பத்தி செய்யவும் முடியாது. இன்றைக்கு புத்தகக் காட்சிகள் மாவட்டம் தோறும் நடக்கின்றன. ஆனால் அங்கே புதிய வாசகர்கள் வரவில்லை."
"ஈரோடு போன்ற சில இடங்களில் நடக்கும் புத்தகக் காட்சிகளில் பள்ளி மாணவர்களுக்கு வாசிக்க ஊக்கமளிக்கப்படுகிறது. புதிய வாசகர்கள் வந்தால்தான் பதிப்புலகத்திற்கு நல்ல எதிர்காலம் இருக்கும். எட்டுக் கோடி, பத்துக் கோடி மக்கள் இருக்கும் தமிழ்நாட்டில் ஒரு எழுத்தாளரின் 1000 புத்தகப் பிரதிகள்கூட விற்பனையாவதில்லை! வாசகர்களை உருவாக்க ஓர் இயக்கம் உருவாக வேண்டியிருக்கிறது. அரசாங்கத்திற்கும் இதில் அக்கறை இல்லை. படித்தவர்கள் அதிகமாவது அரசுக்கு நல்லதில்லை என்ற எண்ணம் காரணமோ என்பது தெரியவில்லை" என்கிறார் வேடியப்பன் சற்றே கிண்டலாக. அது வெறும் கிண்டல் அல்ல என்பது நமக்குப் புரிகிறது.
"நான் படித்த புத்தகங்கள் என்னை மாற்றின, வடிவமைத்தன. அந்தப் புத்தகங்கள் அன்று எனக்குக் கிடைத்திராவிட்டால் இன்றைய சிந்தனைகளுக்கு வாய்ப்புக் கிடைத்திருக்குமா என்பது தெரியவில்லை. இன்றைய எனது செயல்பாடுகளுக்கு ஊக்கம் அன்றைய இளம்பருவத்தின் வாசிப்புதான். இதில் முக்கியமாகச் சொல்ல வேண்டியது என் குடும்பம். அவர்களும் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர், இருக்கின்றனர். அவர்களுக்கு நான் சினிமாவில் பெரிய ஆளாக வேண்டும் என்பதுதான் ஆசை. மற்றக் குடும்பங்களில் சினிமா என்றால் வேண்டாம் என்பார்கள். ஆனால் என் குடும்பத்தில் அப்படியல்ல. எனது திரையுலக முயற்சிகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன" என்று சொல்லி விடை கொடுக்கிறார் வேடியப்பன்.
சந்திப்பு: அரவிந்த் சுவாமிநாதன் படங்கள்: டிஸ்கவரி புக் பேலஸ்
*****
பதிப்புலகின் சவால்கள் இன்றைக்கு பதிப்பாளராக இருப்பதே சவால்தான். நாங்கள் விற்பனையாளரும்கூட. வாசகர்கள் குறைந்துவிட்டார்கள். அந்த ஆர்வம் சினிமா, ஃபேஸ்புக், வாட்ஸப், இணையம் எல்லாவற்றிலும் சிதறிக் கிடக்கிறது. இன்றைக்குச் சினிமா அதிகமாகி விட்டது. ஆனால் பார்ப்பவர்கள் குறைந்துவிட்டார்கள். அதுபோல எழுத்தாளர்கள் அதிகமாகி விட்டார்கள். வாசகப் பரப்பு குறைந்துவிட்டது. நீங்கள் ஃபேஸ்புக்கில் தொடர்ந்து ஒரு வருடம் எழுதினால் அதனைப் புத்தகமாகக் கொண்டு வந்து விடலாம். அப்படி நிறையப் புத்தகங்கள் வருகின்றன. வாசகர்கள் புத்தகங்களைத் தேடித்தேடிப் படித்த காலம் போய்விட்டது. வாசகர்களைத் தேடிப் பிடித்துப் படிக்கவைக்க வேண்டிய காலம் இது!
புத்தகங்கள் பற்றி எஸ்.ரா. சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது. "தமிழில் கவிதை எழுதுவது என்பது மந்திரம் எழுதுவது மாதிரி. சரியாக எழுதவில்லை என்றால் அந்த சூல் உங்களை பாதிக்கும்" என்று ஒருமுறை சொன்னார். சமூகத்தைப் பாதிக்கக்கூடிய தவறான சிந்தனைகளுடன், நோக்கங்களுடன் அல்லது பாப்புலாரிட்டிக்காக மட்டும் எழுதுவது மிகத் தவறானது. அது இன்றைக்கு மலிந்து கிடக்கிறதோ என்று தோன்றுகிறது. ஒரு நல்ல வாசகன் எது நல்ல புத்தகம் என்று பிரித்துப் பார்க்க வேண்டிய சூழல் இருக்கிறது. நல்ல புத்தகங்களைப் பற்றிய விமர்சனங்களும் வெகுவாகக் குறைந்துவிட்டன. 15, 20 வருடங்களுக்கு முன்னால் தமிழில் பதிப்பகங்கள் என்று பார்த்தால் ஒரு 30, 40 தான் இருக்கும். இன்றைக்கு இருநூற்றுக்கும் மேற்பட்டவை இருக்கின்றன. வாசக எண்ணிக்கையும் பல மடங்கு அதிகமாகி இருக்கவேண்டும். ஆகவில்லை. இன்றைக்கு அச்சிடுவது எளிது. ஆனால் விற்பனையாளர், வாசகரிடம் கொண்டு சேர்ப்பதுதான் கடினம். இவைதான் இன்றைய சவால்கள்.
-மு.வேடியப்பன்
*****
அயல்சினிமா இளைஞர்கள் உலக சினிமாவைப் பார்ப்பது இன்றைக்கு மிக எளிது. இணையம் அதனைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது. குறுந்தகடுகள் சந்தையில் கிடைக்கின்றன. ஆனால் அப்படிப் பார்ப்பவர்கள் அப்படங்களைச் சரியாகப் புரிந்து கொள்கிறார்களா என்றால் இல்லை. நல்ல சினிமாவை, உலக சினிமாவைப் பற்றிய சரியான புரிதலை, தெளிவை, வழிகாட்டுதலை ஆர்வமுள்ள வாசகனுக்கு எளிய கட்டுரைகள் மூலம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் 'அயல்சினிமா' இதழைக் கொண்டு வந்திருக்கிறேன். வரவேற்பு இருக்கிறது. ஆனால், புத்தகத்தின் விலை ஐம்பது ரூபாய் என்றால் அதைக் கொண்டு சேர்க்கும் செலவு அதற்குச் சமமாக இருக்கிறது. வெகுஜன இதழ்களைப் போல முகவர்கள் மூலம் நாங்கள் விற்கமுடியாது. இது சிற்றிதழ். இதன் வாசக வட்டம் மிகக் குறுகியது. தூத்துக்குடியிலும், மார்த்தாண்டத்திலும் உள்ள ஒரு வாசகனிடம் நாம்தான் தேடிச் சென்று சேர்ப்பிக்க வேண்டியிருக்கிறது. இதுகூட ஒரு சவால்தான். -மு.வேடியப்பன்
*****
பிரபஞ்சன் 55 பிரபஞ்சன்தான் என்னுடைய முதல் நூலை வெளியிட்டார். அவர் மிக நல்ல மனிதர், பண்பாளர். அவருக்குச் சில பிரச்சனைகள் இருப்பது தெரியவந்தது. அவருக்கு உதவ வேண்டும் என்று தோன்றியது. எஸ்.ரா.வுடன் பேசும்போது இம்மாதிரி முயற்சியைப் பிரபஞ்சன் தடுத்து விட்டதாகச் சொன்னார்.
எஸ்.ரா., பவா.செல்லதுரை போன்றவர்கள் இந்த முறை துணை நின்றதால், நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டோம். செலவு போக அவர் கையில் கணிசமான தொகை கொடுக்க முடிந்தது. சமூகத்துக்காக 55 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறந்த பங்களிப்புத் தந்த ஒரு எழுத்தாளருக்கு சமூகம் காட்டும் பதில் மரியாதை இது. பிரபஞ்சன் வாழ்க்கையையே எழுத்துக்காக அர்ப்பணித்தவர். அதைத் தவிர அவருக்கு வேறொன்றும் தெரியாது.
இப்படிப் பல எழுத்தாளர்கள் இருக்கிறார்களே, அவர்களுக்கும் உதவலாமே என்பது கேள்வியானால் அப்படிக் கேள்வி கேட்பவர்கள் நிதி திரட்டி உதவலாமே என்பதுதான் எனது பதில். நானும் ஒத்துழைப்பேன். இது ஒரு முன்மாதிரிதான். உண்மையாகவே கஷ்டப்படும், சமூக உயர்வுக்காகத் அர்ப்பணித்த எழுத்தாளர்களுக்கு உதவ வாசகர்கள் முன்வர வேண்டும். அதுதான் என் ஆசை.
- மு.வேடியப்பன் |
|
|
|
|
|
|
|
|