|
ஓவியர் முனீஸ்வரன் |
|
- அரவிந்த்|செப்டம்பர் 2017| |
|
|
|
|
கைகூப்பித் தொழ வைக்கும் விநாயகர், மங்களகரமான துர்கை, வில்லேந்திய ராமர், படுத்திருக்கும் பசுமாடு என விதவிதமான படங்கள். இவை ஓவியமா? புகைப்படமா? என்று நாம் வியந்து நிற்கும்போது, "எல்லாமே ஓவியம்தான் சார்" என்று சொல்லிப் புன்னகைக்கிறார் முனீஸ்வரன். சொந்த ஊர் மதுரை திருமங்கலம். சிறுவயதிலேயே இவருக்கு ஓவியம் தீட்டுவதில் காதல். பள்ளிக்காலத்தில் பரிசுகளும் பாராட்டும் கிடைத்தாலும் எலக்ட்ரீசியனாக வாழ்வைத் தொடங்கினார். அந்த வேலைக் காலத்திலும் டெஸ்டரைப் பிடித்த நேரத்தைவிடப் படம் வரையப் பென்சிலைப் பிடித்த நேரம்தான் அதிகமாம். ஆனாலும் இந்த முன்னாள் எலக்ட்ரீசியனின் ஓவியங்களில் தெறிக்கும் மின்சாரம், பார்த்தோரைச் சிலிர்க்க வைக்கிறது. பின்னர் கும்பகோணம் கலைக்கல்லூரியில் பயின்று தேர்ந்தார். முனீஸ்வரன். தனது கலைப் பயணத்தைத் தென்றல் வாசகர்களோடு விவரிக்கிறார்.
*****
முதல் பாராட்டு "எனது ஊர், கோயில்கள் நிரம்பிய ஊர். சிறுவயதிலேயே ஓவிய ஆர்வம் என்னைப் பிடித்துக்கொண்டது. அம்மாவின் கோலங்கள், கோவில் பிரகாரத்தில் காணும் படங்கள் என்று, நான் கண்ட காட்சிகள், இடங்கள், பொருட்கள் என்னை வசீகரித்தன. நான் பார்த்தவற்றைப் படமாக வரைய ஆரம்பித்தேன். மூன்றாம் வகுப்பு படிக்கும்போது பாரதியை, ஜாமெட்ரி பாக்ஸில் இருந்த நடராஜரை அப்படியே வரைந்திருந்தேன். அதைப் பார்த்த என் ஹிந்தி டீச்சர், "ஆஹா, தத்ரூபமாக இருக்கே!" என்று சொல்லிப் பாராட்டினார்.
"அதுதான் முதல் பாராட்டு, ஊக்குவிப்பு. ஓவியப் போட்டிகளில் பங்கேற்பது, பரிசு வெல்வது என்றுதான் வளர்ந்தேன். பத்தாவது படிக்கும்போது என் டிராயிங் டீச்சர் என்னை மிகவும் ஊக்குவித்தார். குடும்பத்தார் பாராட்டினார்கள். என்றாலும் நான் இதையே பின்னர் தொழிலாகக் கொள்வதை யாரும் விரும்பவில்லை" என்னும்போது ஒரு புன்னகை தன்னையறியாமல் மலர்கிறது.
ஐ.டி.ஐ.யில் எலக்ட்ரீசியன் கோர்ஸ் படித்தார். அதிலும் முதல் வகுப்பு. அதன்பின் சில கம்பெனிகளில் மின்பணியாளராக வேலை பார்த்தார். ஆனால், உள்ளே இருந்த ஓவியன் உசுப்பிக்கொண்டே இருந்தான். அங்கே இவர் டெஸ்டர் பிடித்ததைவிடப் பென்சில் பிடித்ததுதான் அதிகமாம். மேனேஜரை வரைவது, சகதொழிலாளியை வரைவது என்று இருக்க, இவரது திறமையைக் கண்ட நண்பர்கள், உறவினர்கள் இவரை ஓவியக்கல்லூரியில் சேர்ந்து படிக்க வலியுறுத்தினர். "மிகமிகத் தாமதமாகத்தான் ஓவியக் கல்லூரியில் சேர்ந்தேன்" என்கிறார்.
கல்லூரி அனுபவங்கள் "ஓவியக் கல்லூரி எனக்குப் புதிய வாசல்களைத் திறந்து விட்டது. ஒவ்வொரு ஆசிரியரிடமும் ஒவ்வொன்றைக் கற்றேன். அதில் சேர்வதற்கு முன்னாலும் நான் படம் வரைந்து கொண்டிருந்தேன் என்றாலும், சேர்ந்த பின்னர்தான் ஓவியத்தின் அடிப்படை என்ன, அதை எப்படி வெளிப்படுத்தலாம் என்பவற்றையும், ரசனை சார்ந்த ஓவிய நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டேன். கல்லூரியில் சேருவதற்கு முன்னால் ஓவியம் கற்றால் விளம்பரப் படங்கள், தலைவர்களின் படங்களை வரையலாம்; மற்றபடி பெரிய பயன் ஒன்றும் இருக்காது என்றுதான் நினைத்தேன். ஆனால், கல்லூரி அந்த எண்ணத்தை தலைகீழாகப் புரட்டிப் போட்டது.
"கல்லூரியில் சேருவதற்கு முன்னால் நான் வரைந்த மிகப்பெரிய ஓவியமே ஏ4 சைஸில் வரைந்ததுதான். கலர் பென்சில், ஸ்கெட்ச் பென், போஸ்டல் கலர் இதிலெல்லாம் வரைந்திருக்கிறேன். ஆனால் கல்லூரிக்கு வந்த பிறகுதான் விதவிதமான ஓவிய முறைகளை, வரையும் நுட்பங்களைக் கற்றுக்கொண்டேன்.
"கல்லூரியில் நான் வரைந்த முதல் ஓவியத்திற்கே முதல் பரிசு கிடைத்தது. மட்டுமல்லாமல் தேசிய அளவில் கேம்லின் ஆர்ட் ஃபவுண்டேஷன் நடத்திய போட்டியிலும் அது சிறந்த ஓவியமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. அடுத்து வரைந்த ஓவியம் கல்லூரி ஓவியப் போட்டியில் முதல் பரிசு பெற்றது. முதலாமாண்டு படிக்கும் நான் முதலிடத்திற்கு வர, மூன்றாமாண்டு மாணவர் இரண்டாமிடம் பெற்றார். இவ்வாறு கல்லூரியில் என் திறமை குன்றிலிட்ட விளக்கானது. கல்லூரி நடத்திய ஓவியக் கண்காட்சிகளிலும் பங்கேற்றேன்."
ஓவியர் ரவிவர்மா ரவிவர்மாவைப் பற்றிப் பேசும்போது நெகிழ்கிறார். "கல்லூரியில் சுற்றுலாவாகக் கேரளத்துக்குக் கூட்டிப் போனார்கள். அங்கே கண்ட ரவிவர்மாவின் ஓவியங்கள் என்னுள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. சிறுவயதில் ரவிவர்மாவின் ஓவியம் என்று அறியாமலேயே கேலண்டரைப் பார்த்து வரைந்திருக்கிறேன். அங்கே சென்ற பிறகுதான் அவையெல்லாம் அவர் வரைந்தவை என்பது தெரியவந்தது. அவர்மீது எனக்கு மிகப்பெரிய பிரமிப்பு ஏற்பட்டது. என்னைப் பொறுத்தவரை சிறுவயதில் நான் ஆர்ட்டிஸ்ட் என்றால் கோயில்களில் படம் வரைபவர் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். பின்னர்தான் எனக்கு ஓவிய உலகம் புரிந்தது. ரவிவர்மாவைத்தான் நான் என்னுடைய முன்னோடியாகக் கருதுகிறேன். அவர் ஓவியங்களைப் பார்த்த பின்னர்தான் இன்னமும் தத்ரூபமாக வரையவேண்டும், வடிவமைப்பில் இன்னமும் கவனம் செலுத்தவேண்டும் என்பதெல்லாம் தெரியவந்தன.
"அவரது ஓவியங்களைக் கண்ட பிரமிப்பும் பாதிப்பும் அகலாமல் நான் வீட்டிற்கு வந்து வரைந்ததுதான் துர்காதேவி ஓவியம். அதைத் தலை வண்ணத்தில் வரைந்தேன். மிகப்பெரிய வரவேற்பு! ஓவியத்தைப் பார்த்த அத்தனை பேரும் பாராட்டினார்கள். சமீபத்தில் மலேசியாவில் நடந்த ஓவியக் கண்காட்சியில் அது நல்ல விலைக்கு விற்பனையானது."
தத்ரூப ஓவியங்கள் தத்ரூப ஓவியங்களின் மீது உங்கள் கவனம் குவியக் காரணம் என்ன என்று அறிய ஆசைப்படுகிறோம். "தத்ரூப ஓவியங்களை மக்கள் எப்போதும் விரும்பி ரசிப்பார்கள். அப்ஸ்ட்ராக்ட், சமகால ஓவியம், நவீனம் எல்லாம் வரைய நிறையப் பேர் இருக்கிறார்கள். அதனால் ரியலிஸ்டிக் ஓவியங்கள்மீது நான் கவனம் செலுத்தினேன். சிறுவயது முதலே நிறைய ஆலயங்களுக்குச் செல்பவன் என்பதால் தெய்வ உருவச் சிலைகளை வரைய எனக்கு மிகவும் பிடிக்கும். நாம் பார்க்கிற விஷயத்தை, நாம் புரிந்துகொண்டதை, நாம் புரிந்துகொண்டது போலவே மற்றவர்களும் புரிந்துகொள்ளும் வகையில் அதற்கான விவரணைகளுடன் வரைவதுதான் தத்ரூப ஓவியம். உதாரணமாக ஒரு பெண்ணைப் பார்த்தால், நமக்குப் பிடித்த முறையில் அவ்வுருவத்தை மனதில் நிறுத்துவோம். ஆனால், ஒரு ஓவியனின் பார்வை அந்தப் பெண்ணின் முகம் மட்டுமல்ல; நகப்பூச்சு, உடுத்தியிருக்கும் புடவை, அதன் மடிப்பு, பாதங்கள் என்று விரியும். அதனை மனதில் நினைத்து, உருவகித்து ஓவியத்தைத் தீட்டுகிறான். அதில் அவன் கொடுக்கும் சிறுசிறு தகவல்களின் கூர்மைதான் பார்வையாளர்களை ரசிக்கவும் வியக்கவும் வைக்கிறது.
உதாரணமாக எனது துர்கை ஓவியத்தைப் பலரும் ரசித்துப் பாராட்டினார்கள். ஆனால், அந்தச் சிலை, ஓவியத்தில் உள்ளதுபோலத் தோற்றமளிக்காது. இருட்டு, வெளிச்சம், வண்ணங்களின் குழைவு, புடவை மடிப்பு, வண்ணக் கலவையின் விகிதம் எனப் பலவற்றால் அந்த ஓவியத்தை மேம்படுத்தினேன். (பார்க்க: சிலையும் சித்திரமும்) இதில்தான் ஒரு ஓவியனின் திறமை, கற்பனை வளம் இருக்கிறது. பார்வையாளனின் ரசனையை மேம்படுத்துவது முக்கியம். ஓர் ஓவியத்திற்கு அந்த தத்ரூப உணர்வை ஓவியன் கொண்டு வரும்போது அவன் ரசிகனின் மனதைக் கவர்கிறான். அந்த ஓவியம் வரவேற்பைப் பெறுகிறது." அவர் சொல்லுவதிலுள்ள உண்மையை உணர்ந்து நாம் தலையசைக்கிறோம். |
|
|
ஓவியர்கள் தனக்குப் பிடித்த ஓவியர்களைப் பற்றிக் கூறுகிறார்: ரவிவர்மா என்னை மிகவும் கவர்ந்தவர். சில்பியை எனக்கு மிகவும் பிடிக்கும். அதுபோல ஓவியர் சந்தான கிருஷ்ணன், ராஜ்குமார் ஸ்தபதி போன்றவர்கள் என் மனதை அள்ளியவர்கள்.
ஓவியங்களை எங்கிருந்து தொடங்குகிறீர்கள்? புகைப்படம் எடுத்தா, கோட்டுப்படம் வரைந்துகொண்டா, அல்லது முழுக்க முழுக்கக் கற்பனையிலா என்ற நமது கேள்வியைச் சிறு புன்னகையுடன் எதிர்கொள்கிறார்.
"சிலவற்றைப் புகைப்படமாக எடுத்து அதன் அடிப்படையில் வரைவதுண்டு. முடியாத இடங்களில் சிலவற்றை ஸ்கெட்ச் செய்துகொள்வதும் உண்டு. சில சமயங்களில் ஒரிஜினல் கருப்பொருள் முன்னிலையில் இருந்து, அதை வரைவதும் உண்டு. எப்படி இருந்தாலும் கற்பனையும் அதில் முக்கியம். நிஜத்தில் எது, எப்படி இருந்தாலும் ஓவியத்தில் அதைக் காட்டவேண்டுமா, வேண்டாமா, எதைத் தரவேண்டும், எதைத் தரக்கூடாது, எதைத் தந்தால் அது எந்தவிதமான எண்ணத்தைப் பார்வையாளருக்குள் தட்டி எழுப்பும் என்பதையெல்லாம் தீர்மானித்து வரைகிறேன்." என்கிறார்.
எண்ணமும் வண்ணமும் "அடர் வண்ணங்களுக்கும், கான்ட்ராஸ்ட் நிறங்களுக்கும் நீங்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகத் தெரிகிறது. காரணம்?" என்று நாம் கேட்டோம். அதற்கு, "ஆமாம். உண்மைதான். நிஜத்தில் உள்ள வண்ணங்கள் என் ஓவியங்களில் சற்றே அதிகமாகத்தான் இருக்கும். நான் பார்க்கும் நிறங்களை எனது ஓவியங்களில் அப்படியே கொண்டு வருவதில்லை. அந்த ஓவியத்திற்கு என்ன தேவையோ அதையே கொண்டுவருகிறேன். என்ன தேவை என்பதை நான் தீர்மானிக்கிறேன். உதாரணமாக நான் வரைந்த ஒரு பெண்ணின் முகத்தை ஆரஞ்சு வண்ணமாகக் காட்டியிருப்பேன். ஆனால், எந்தப் பெண்ணின் முகமும் நிஜத்தில் அந்த வண்ணத்தில் இருக்காது. ஆக, ஒரு வண்ணம் நம்மை என்ன செய்கிறது என்பதைப் பொறுத்து அதைத் தீர்மானிக்கிறேன்.
"இருள் துக்கத்தைக் காட்டும். இரவில் அச்சத்தைத் தருவது இருளே. ஆனால், புதிதாக மணமான தம்பதிகளுக்கு அதுவே குதூகலத்தைத் தருகிறது இல்லையா? அது மாதிரிதான் வண்ணங்களைத் தேர்ந்தெடுப்பதும். அது ஒவ்வொரு சமயத்தில், ஒவ்வொருவருக்கு ஒவ்வோர் அனுபவத்தைத் தரும் சாத்தியம் இருக்கிறது. இயற்கையின் வண்ணத்தை 'இது இப்படித்தான்' என்று நாம் தீர்மானம் செய்யமுடியாது.
"ஒரு பெயிண்டிங் செய்யும்போது அந்தக் கருப்பொருளின் ரியாலிடி வண்ணம் இது என்பதைப் புரிந்து கொள்கிறேன். பின்னர் இதே வண்ணத்தைக் கொடுக்க வேண்டுமா, இந்த வண்ணம் பார்வையாளருக்கு எந்தமாதிரி உணர்வைத் தரும் என்பதயெல்லாம் தீர்மானித்தே நான் வண்ணங்களைக் கையாள்கிறேன். அனுபவம் சார்ந்து கற்பனை சேர்த்து மெருகேற்றித் தீட்டுகிறேன். இருட்டும் வெளிச்சமும் எங்கே, எந்த விகிதத்தில் இருக்க வேண்டும் என்பதை அனுமானித்து வரைகிறேன். பார்ப்பவர்களுக்கு அந்த உணர்வுகளை அதன்மூலம் பிரதிபலிக்க வைக்கிறேன். எனது ஓவியங்களில் இருக்கும் எந்த வண்ணமுமே நிஜவண்ணம் மாதிரிக் கிடையாது. அதை நிஜம்மாதிரி நான் காட்டியிருக்கிறேன். உதாரணமாக துர்கை சிலையை எடுத்துக்கொண்டால் அந்த ஆடையின் பச்சைநிறம், பின்னால் உள்ள இருட்டு எல்லாம் நிஜத்தில் கிடையாது. ஆனால், நான் அதனை அங்கே கொண்டு வந்திருக்கிறேன்.
முனீஸ்வரன் பேசப்பேச "எண்ணமெல்லாம் வண்ணமம்மா; எண்ணங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா" என்ற 'அவதாரம்' படப்பாடல் நமக்கு நினைவுக்கு வருகிறது.
"நான் ஒரு நல்ல நிலைக்கு வந்தபிறகு ஓவிய ஆர்வமுள்ள, திறமையுள்ள மாணவர்களுக்கு, ஓவியம் கற்க வாய்ப்பில்லாதவர்களுக்கு ஓவியம் கற்றுத்தரும் பள்ளி ஒன்றை உருவாக்கி அவர்களுக்குச் சொல்லித்தர வேண்டும், அவர்களையும் என்னைப் போல ஓவியராக்க வெண்டும் என்ற ஆர்வம் உள்ளது" என்கிறார் முனீஸ்வரன்.
நல்ல எண்ணங்கள் நிச்சயம் வடிவம் பெறும்; ஓவியமாக மட்டுமல்ல, வாழ்க்கையிலும்தான் என்று எண்ணியபடி, அவரது முயற்சிகளுக்கு வாழ்த்துக் கூறி விடைபெறுகிறோம்.
உரையாடல்: அரவிந்த்
*****
வண்ணங்களின் முகவரி ஓவியப் பின்னணி ஏதுமில்லாத சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர் முனீஸ்வரன். மூன்றாம் வகுப்பு படிக்கும்போது பள்ளியில் இவர் வரைந்த பாரதி ஓவியத்தைக் கண்ட ஹிந்திப் பாட ஆசிரியர் மிகவும் பாராட்டிப் பேனா ஒன்றைப் பரிசளித்தார். அதனை எட்டாம் வகுப்புவரை பாதுகாத்து வைத்திருந்தார் முனீஸ்வரன். வீடு மாறும்போது அது காணாமல் போய்விட்டதாம்.
டிரை பேஸ்டல், அக்ரிலிக், ஆயில் ஆன் கேன்வாஸ் போன்றவை இவருக்குப் பிடித்தமான ஊடகங்கள். பத்திரிகை ஓவியங்கள், விளம்பர ஓவியங்கள், திரைத்துறை சார்ந்த பணிகளிலும் பங்குகொள்ள ஆர்வமாக இருக்கிறார். மலேசியாவில் நடந்த ஓவியக் கண்காட்சியில் இவரது ஓவியங்களுக்கு நல்ல வரவேற்பு. Welkin canvas என்ற மலேசிய நிறுவனம் இவரது ஓவியங்களை உலகச் சந்தையில் விற்பனை செய்துவருகிறது. முகநூல் மூலமும் ஆர்வலர் அணுகுகின்றனர். ஒவ்வொன்றாகச் செய்து தருகிறார். கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு தற்போது முழுநேர ஓவியராகக் களமிறங்கி இருக்கிறார். துர்க்கையைப் போலவே இன்னமும் பல தெய்வத் திருவுருவங்களை வரைவதில் ஈடுபட்டிருக்கிறார்.
இவரது முகநூல் பக்கம்: fb/munees.waran.5836
***** |
|
|
|
|
|
|
|
|