Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | சிறப்புப் பார்வை
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | அஞ்சலி | சமயம் | முன்னோடி | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
பெரியமாடு
இவர்களை நினைக்க!
- ஈழம் பாஸ்கர்|செப்டம்பர் 2017||(1 Comment)
Share:
"கொக்கரக்கோ!" கூவிவிட்டுக் கூரையில் இருந்த கோழி கீழே குதித்து, காலையுணவு தேடிக் குப்பையைக் கிளற, நானிருக்கிறேன் என்று ஆண்டவனின் ஆலயமணி ஒலிக்க, அன்றைய காலைப்பொழுது மெதுவாக விடிகிறது.

'டொக், டொக்' திண்ணையில் பாட்டி பாக்குரலில் பாக்கிடிக்கும் சத்தம். மறுபுறத்தில் படுத்து உறங்கிக் கொண்டிருக்கும் தாத்தாவின் அடிவயித்திலிருந்து இருமும் ஓசை. பாவம் தாத்தா. இருமி இருமியே வாழ்க்கையின் கடைசிக்காலம் போய்க்கொண்டிருக்கிறது. முதுமை படர்ந்த முகமும் கூனல் விழுந்த முதுகும், தள்ளாடும் நடையும், இடக்கை, வலக்கை தவிர மேலதிகமாக பொக்கை, வழுக்கை என நான்கு கைகளையும் தாங்கிக்கொண்டு வாழ்க்கையில் எவ்வளவோ துன்பங்களையும் கஷ்டங்களையும் கடந்து, கடைசிக்காலத்தை இருமிக்கொண்டு கழிக்கிறார். ரத்தக்கொதிப்பு, சர்க்கரை வியாதி, ஆஸ்துமா, முதுகுவலி, மூட்டுவலி, போன்ற வியாதிகளும் தாத்தாவின் உடலில் வாசம் செய்கின்றன. பிள்ளைகள் இருந்தும், வசதிகள் இருந்தும் அவருடைய நோயை அவர்தானே தாங்கவேண்டும்.

"அப்பாக்கு இருமலும் விடாமல் இருக்குது, அடிக்கடி காய்ச்சலும் வருகிது" எனது அப்பா, அம்மாவுடன் மெதுவாகப் பேசுவது காதில் கேட்கிறது.

"ஓமப்பா, வர வர அவருக்கு கஷ்டமாகத்தான் இருக்கிது, சொன்னாலும் கேட்கமாட்டாராம். உதிலை இருக்கச் சொன்னால் கேட்கிறேல்லை, வெய்யிலுக்கை திரிகிறது, பேந்து வந்து படுத்துக்கொண்டு உயிர்போற மாதிரி இருமுறது" என்கிறாள் அம்மா.

"என்னப்பா செய்யிறது இரண்டு சகோதரங்கள் வெளிநாட்டிலை தங்கடை பாடு, இஞ்சை இருக்கிற இரண்டும் குடும்பம் குட்டி எண்டு இருக்கினம். வயதுபோன இரண்டையும் என்னட்டை விட்டுட்டினம், எங்களுக்கும் கஷ்டம்தானே" அப்பாவின் குரலில் கவலையுடன் சேர்ந்து ஒரு சோகம் தெரிகிறது.

"பின்னை என்ன, நாங்கள் ஒரு இளிச்ச வாயல் எண்டு நினைச்சு எங்களிட்டை இரண்டு பேரையும் தள்ளி விட்டுக்கிடக்கு" அம்மாவின் குரலில் சற்றுக் கோபம் தெரிகிறது. சற்று மௌனம்.

"இன்சரப்பா, உங்கடை அப்பாக்கு அடிக்கடி இருமல் அது இது எண்டு மாதம் மாதம் ஏதாவது வந்துகொண்டிருக்குது. அடிக்கடி காய்ச்சல் ஒரு பக்கம், வயித்தாலையும் போகுது, நடக்கவும் சிரமம்படுகிறார், இனி பாடா வாரியாய் படுத்துவிடுவர் போலக் கிடக்கிது. மெய்யப்பா, பேசாமல் கொண்டுபோய் ஒரு வயோதிபர் இல்லத்திலை சேர்த்து விடுவமே?" அம்மா மெல்லிய குரலில் ஆரம்பிக்கிறா.

"என்னப்பா சொல்லுறாய்? பெத்த தகப்பனை கொண்டுபோய் அங்கை தள்ளச் சொல்லுறாய்" அப்பாவின் குரல் தயக்கத்துடன் வெளிப்படுகிறது.

"உங்கடை அப்பாவைக் கொண்டுபோய் அங்கு தள்ளச் சொல்லேல்லை, அங்கை வயது போனதுகளை கவனமாய் பார்க்கினமாம். நேரத்துக்கு நேரம் சாப்பாடு குடுப்பினமாம், சுகமில்லாமல் வந்தால் டொக்டர் வந்து பாப்பினமாம், கோயில் குளத்துக்கு கூட்டிக்கொண்டு போவினமாம்" சமாதானமாக அதே சமயம் சாதூர்யமாக அம்மாவின் பதில் வருகிறது.

"ஓமோம், நானும் கேள்விப்பட்டனான் தான். அங்கை இருக்கிறதுகள் படுகிற துன்பத்தை உமக்குத் தெரியுமே? தனிமையிலை இருந்து தவிக்கிறதும், பிள்ளைகளை நினைச்சு துடிக்கிறதும், ஒருசில பராமரிக்கிறவங்கள் செய்யிற அட்டூழியங்களும் அநியாயங்களும் தெரியுமே? தவிச்ச வாய்க்கு தண்ணியும், பசிக்கிற நேரத்திலை சாப்பாடும் கிடைக்காமல் அதுகள் மௌனமாக தனிமையில் இருந்து கண்ணீர் வடிக்கிறது ஆருக்குத் தெரியும்? ஏதோ துலைஞ்சுது சனியன்கள் என்று கொண்டுபோய் வயோதிபர் விடுதியில் விடுறதும் அதுகளை கொலை செய்யிறதும் ஒண்டுதான்" அப்பாவின் குரலில் வேதனை கலந்த வெறுமை தெரிகிறது.

"அப்ப, நான் உதுகளை வைச்சுக்கொண்டு கஸ்டப்படுகிறதே. ஒரு கோயில், குளம், சினிமா பார்க்கப் போக முடிவதில்லை. நாடகம் பார்க்க ரி.வி. போட்டால் 'சத்தத்தைக் குறை, சத்தத்தைக் குறை' எண்டு முறைப்பாடு, தாமரை வீட்டுக்காரரை பாருங்கோ. தகப்பனைக் கொண்டு போய் விட்டிட்டு சந்தோசமாக இருக்கினம். சொல்லுறதைக் கேளுங்கோ. பேசாமல் கொண்டு போய் விட்டிட்டு அடிக்கடி போய் பாருங்கோவன். ஆர் வேண்டாமென்றது?" அம்மாவின் சமாளிக்கும் சாதூர்யமான வார்த்தைகள் ஓரளவு பயனளிப்பது போல இருந்தன.

"அவரைக் கொண்டுபோய் அங்கை விடுறதை நினைக்கவே தலையைச் சுத்துது. எப்படி எங்களை வளர்த்தவர். எங்களுக்கு ஒரு தலையிடி சுகயீனம் எண்டால் அதுகள் இரண்டும் எப்படித் துடிச்சுப் போயிருக்குங்கள் தெரியுமே? அது மட்டுமே, என்னைப் படிக்க வைக்க அப்பா பட்டபாடு சொல்ல முடியாது" அப்பாவின் குரல் ஓங்கி மடிகிறது.

"ஊரிலை உலகத்திலை யாரும் செய்யாததையே உங்கடை அப்பா செய்தவர், பிள்ளையைப் பெத்தவை செய்யவேண்டிய கடமைதானே" இப்ப அம்மாவின் குரல் ஓங்கி ஒலிக்கிறது.

"உமக்கு நினைவிருக்குதோ தெரியேல்லை, அப்ப யாழ்ப்பாணத்திலை கலவரம் மூண்ட நேரம், இடம்பெயர்ந்து வன்னிக்குப் போகும்போது, நீர் நிறைமாதக் கர்ப்பிணி. கூட்டத்தோடு கூட்டமாக உம்மை மாட்டு வண்டியிலை வைச்சுக் கொண்டு போகேக்கை கூட்டத்திலை நான் இடம்மாறி எங்கேயோ போய்விட்டேன். நாவற் குழிப் பாலத்தடியிலை சரியான மழையும் காத்தும் அடிக்க, இழுத்துக்கொண்டு போன மாடு விழுந்து படுத்துவிட்டுது, ஆனால் உவர், என்னைப் பெத்த மனுசன், உம்மை பாலத்திலையிருந்து மூண்டு கிலோமீட்டர் தூரம் மாடுமாதிரி இழுத்துக் கொண்டு எப்பிடியோ வன்னிக்கு கொண்டுபோய் சேர்த்தவர் எண்டு நீர்தானே சொன்னனீர், மறந்து போனீரே..."

"... பிறகு நாங்கள் முல்லைத்தீவிலை இருக்கேக்கை ஒருநாள் ஆமிக்காரங்கள் செல்லடிச்சுக் கொண்டிருக்க, நாலு பக்கமும் குண்டுபட்டு அப்பாவி மக்கள் ஓட, குண்டுபட்டுச் சாக, எங்கடை மகன் பதுங்கு குழியை விட்டு எழுந்து ஓட, அப்பா ஓடிப்போய் அவனை இழுத்து நிலத்திலை, அவனை மூடிக்கொண்டு படுத்திருக்க அடிச்ச செல்லொன்று அவரின்ரை காதை தேய்த்துக்கொண்டு போக, அருந்தப்பு. பாவம் அவருக்கு அண்டையிலை இருந்து காது கேட்கிறதில்லை. யோசிச்சுப் பாரும். அப்படிப்பட்டவரை எப்படியாப்பா கொண்டுபோய் அநாதை மாதிரி அங்கை விடுறது..."

"... ராணுவக்காரங்கள் உம்மைக் கொண்டுபோக முயற்சிக்க நான் தடுக்க, என்னைப் பிடித்து சப்பாத்துக் காலாலை வயித்திலை உதைத்து, துவக்காலை அடித்து மண்டை உடைந்து இரத்தம் பெருக, அந்த ராணுவக்காரனின் காலிலை விழுந்து அவர் மன்றாடிக், கதறி அழுதது இன்னும் கண்ணுக்குள்ளை நிற்குது." இப்போது அம்மாவிடம் மன்றாடுவது போல அப்பாவின் குரல் மெல்ல மெல்லத் தடுமாறி தழுதழுத்து வெளியே சிந்தியது.
"நீங்கள் என்னவென்றாலும் சொல்லுங்கோ, எனக்கு அவரை வீட்டிலை வைச்சு பராமரிக்கிறதெண்டால் சரியான சிரமம். எங்களுக்கு எண்டு ஒரு வாழ்க்கை இருக்குதப்பா. உங்களுக்கு விளங்காது. உங்களுக்கும் வயதாகிது. இனி அவரை தூக்கிப் பறிக்கிறதெண்டால் மிகவும் கஷ்டம்" அம்மாவின் இயலாமை சொற்களாகச் சிதறியது.

"இப்ப என்ன சொல்லுறீர், அப்பாவையும் அம்மாவையும் பிரிக்கச் சொல்லுறீரே, பாவங்களப்பா! ஒருத்தர் இல்லாட்டா மற்றது தவிச்சுப் போகுங்களப்பா. அறுபது வருடப் பந்தத்தை பிச்சு எறியச் சொல்லுறீரே, பரம்பரை பரம்பரையாக கடைசிக் காலத்திலை தாய் தகப்பனை பிள்ளைகள் வைத்துப் பராமரிப்பதுதானே ஊர் உலகத்திலை வழக்கம்" அப்பா மரபினை எறிகணையாக பாவிக்கிறார்.

ஆனால் எறிகணையாக அப்பா பாவித்த அந்த மரபெல்லாம் எப்படியோ மரத்துப்போன அம்மா மனதில் பட்டு தூள்தூளாகச் சிதறுகிறது.

"இரண்டையும் கொண்டுபோய் விட்டிட்டு வருவம். ஒண்டாய் இருந்திட்டுப் போகட்டுமன், இப்ப நான் சொல்லுறதை நீங்கள் கேட்கப் போகிறீங்களோ இல்லையோ?" அம்மாவின் குரல் வீட்டுச் சுவரில் பட்டு எதிரொலிக்கிறது.

"மெல்லமாப் பேசும்.அதுகளின்ரை காதிலை விழப்போகுது, கேட்டுதென்றால் துடிதுடிச்சுப் போகுங்கள்' அப்பா கெஞ்சுகிறார்.

"கேட்கட்டுமன், கடைசிக் காலத்திலை இருந்து கழுத்தறுக்குதுங்கள். இப்ப கொண்டுபோய் விடப்போறீங்களோ இல்லையோ? அதுதான் இப்ப என்ரை கேள்வி" அம்மாவின் ஆணித்தரமான கேள்வியைத் தொடர்ந்து கதவடிக்கும் சத்தம். அப்பா அடித்துச் சாத்திவிட்டுப் போகிறார். அம்மாவில் இருக்கிற கோபத்தை அடிக்கடி கதவிலைதான் காட்டுவார்.

"வயது போனவர்களை வீட்டில் வைத்திருப்பதா? வயோதிபர் இல்லத்தில் சேர்ப்பதா?" பட்டிமன்றம் தொடர்ந்தும் எனது காதில் ஒலிக்கிறது. சற்று அமைதி நிலவுகிறது. அடிவயிற்றில் இருந்து பீறிட்டு வரும் இருமலோடு, "நாங்கள் அண்டைக்கே சிங்களவன் குண்டுபட்டு செத்துப் போயிருக்கலாம்" என்று தாத்தா ஏக்கத்தோடும், ஏமாற்றத்தோடும், பரிதாபமாகக் கூறுவது என் காதில் புகுந்தது.

"இப்படிக் கிடந்து சீரழியாமல் ஆயிரக்கணக்கான சனங்களோடை முள்ளிவாய்க்காலில் பகைவனுடைய கையாலை மண்டையைப் போட்டிருக்கலாம். இந்த பாசப்பிடிப்போடு அணு அணுவாக உயிரை விட வேண்டியதில்லை, இல்லையே" பாட்டியிடம் தாத்தா பதிலை எதிர்பார்க்கிறார். ஆனால் பாட்டியின் பாக்கிடிக்கும் சத்தம் கேட்கவில்லை.

பாவம் இந்தத் தாத்தாக் கிழவன்! பழுத்துப்போன நேரத்தில் உளுத்துப்போன பாசங்கள்! உதிர்ந்து போகும் வேளையில் சரிந்து போகும் பந்தங்கள்!

என்னால் என்ன செய்யமுடியும். வீட்டோரமாகச் சுருண்டு படுத்திருக்கும் நான் ஒரு சொறிநாய் தானே. என்னால் "சொறி" கூடக் கூறமுடியாது. குலைக்கலாம். .நல்லவேளை நான் நாயாகப் பிறந்துவிட்டேன். தப்பினேன். இல்லாவிட்டால் எனக்கும் அதே கதிதான். எங்களுக்கு ஒருவேளை சோறு போட்டாலே நாங்கள் நன்றியுடன் வாலாட்டுவோம், சில மனிதர்களைப் பெற்று வளர்த்து பெரியவர்களாக்கி விட, நன்றியை மறந்து வாலைக் காட்டுகிறார்கள்.

பாவம் மனிதர்கள்! வயதுபோன நேரத்தில் யாரும் வேண்டாதவர்களாகப் போய் விடுகிறார்கள். என்னைப்போல ஒரு நாயாகப் பிறந்தாலும் பரவாயில்லை போலத் தெரிகிறது. எத்தனை பிறவி எடுத்து நாயாகப் பிறந்தாலும் மனிதனாகப் பிறக்கக்கூடாது. இவர்களை நினைக்க நாயான எனக்கே பயமாய் இருக்கிறது!

ஈழம் பாஸ்கர்,
விஸ்கான்சின்
More

பெரியமாடு
Share: 




© Copyright 2020 Tamilonline