|
சபரி வெங்கட் |
|
- அரவிந்த், சபரி வெங்கட்|நவம்பர் 2017| |
|
|
|
|
அரங்கம் நிரம்பி வழிகிறது. மாற்றுத் திறனாளிச் சிறுவர்களுக்கு விருது வழங்கும் விழா அது. நிகழ்ச்சி முடிந்ததும் திடீரென வந்திருந்த சிறுவர்களில் ஒருவரைப் பேசச் சொல்கிறார் சிறப்பு விருந்தினர். அவனுக்கு இரண்டு கண்ணிலும் பார்வையில்லை. எந்த முன்தயாரிப்பும் இல்லாமல் அவன் பேசப்பேச அரங்கம் எழுந்து நின்று கைதட்டுகிறது. பேச்சைக் கேட்டுப் பரவசப்பட்டுப் போன அந்த விருந்தினர், "Great speech. Well done" என்று பாராட்டுகிறார். தன் பேச்சில் அந்தச் சிறுவனைப் பற்றிக் குறிப்பிட்டு, "You are my another friend" என்று சொல்லிப் பெருமைப்படுத்துகிறார். இப்படி ஒரு சிறுவனை மனமுவந்து தனது நண்பனாக அறிவித்தவர் மேனாள் ஜனாதிபதி அப்துல் கலாம். அந்தச் சிறுவன் சபரி வெங்கட்.
ஏழு மாதத்தில் பிறந்தான் இந்தச் சிறுவயதில் பல உயரங்களைத் தொட்டிருக்கிறார் சபரி வெங்கட். ஆனால், பிறந்தது முதலே போராட்டம்தான். பொள்ளாச்சியிலிருந்து 25 கி.மீ. தொலைவில், கோவை - பாலக்காடு எல்லையில் இருக்கும் சிற்றூர் வடகாடு. அங்கு விவசாயம் செய்து வந்தனர் சீனிவாஸ்-நீலவேணி தம்பதியர். திருமணம் ஆகிப் பல ஆண்டுகள் ஆகியும் குழந்தைப்பேறு வாய்க்கவில்லை. இயற்கை மருத்துவம், அலோபதி, சித்த மருத்துவம், ஆயுர்வேதம் எல்லாம் பார்த்து, பன்னிரண்டு வருடம் கழித்துப் பிறந்த குழந்தை சபரி வெங்கட். அதுவும் குறைப் பிரசவத்தில். ஆம், ஏழரை மாதத்திலேயே தாய்க்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுப் பனிக்குடம் உடைந்துவிட வேறு வழியில்லாமல் அறுவை சிகிச்சையில் பிறந்தான் சபரி.
பிறந்த குழந்தை அழவில்லை. மூச்சுப் பேச்சில்லை. டாக்டர்கள் ஐ.சி.யூ.வில் சேர்த்து வென்டிலேட்டரில் வைத்து ஆக்சிஜன் அளித்துக் குழந்தையைக் காப்பாற்றினர். சரியாகப் பதினெட்டு நாள் கழித்துத்தான் சபரி பெற்றவர்கள் கைக்கு வந்தான். ஜூனியர் டாக்டர் சொன்னார், "குழந்தைக்குப் பார்வையில் பிரச்சனை. உடனடியாக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு எடுத்துச் சொல்லுங்கள்." பதைபதைத்த பெற்றோர் உடனடியாக மதுரைக்கு ஓடினர்.
குழந்தையின் பார்வை நரம்பில் மிகப்பெரிய குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பல்வேறு கட்ட ஆலோசனைக்குப் பிறகு வலது கண்ணில் அறுவைசிகிச்சை செய்தார்கள். ஆனால், அது தோல்வி என்பது சில மாதங்களுக்குப் பின்னரே பெற்றோருக்குத் தெரியவந்தது! தந்தை சீனிவாஸ். சென்னை சங்கர நேத்ராலாயா வந்து பார்த்தார். "ஒன்றும் செய்ய வேண்டாம். இப்போது மீண்டும் ஆபரேஷன் செய்தால் ரிஸ்க்" என்று சொல்லிவிட்டனர். டாக்டர் அகர்வாலும் அதையே சொல்லவே, வருத்தத்துடன் ஊர் திரும்பினர் பின்னர் கேரள ஆயுர்வேத மருத்துவத்தில் குணமாகும் என்று ஒருவர் சொல்லி அதையும் முயன்றனர். பணம் கரைந்தது, பலன் கிடைக்கவில்லை. இனியும் இந்த குக்கிராமம் பையனின் வளர்ச்சிக்குச் சரியாகாது என்று முடிவுசெய்து விவசாய நிலத்தை 40 லட்ச ரூபாய்க்கு விற்றுவிட்டு (இன்று அதன் மதிப்பு 10 கோடிக்கும் மேல்) கோயம்புத்தூருக்குக் குடிபெயர்ந்தது குடும்பம்.
ராமகிருஷ்ண வித்யாலயம் அரவணைத்தது பின்னர் நடந்தவற்றை விவரிக்கிறார் தந்தை சீனிவாஸ். "சபரிக்கு மூன்று வயதானதும் கோவை அவிநாசிலிங்கம் ஹோம் சயன்ஸ் பள்ளியில் சிறப்பு வகுப்பில் (Special Education) படிக்க இடம் கிடைத்தது. அங்கு மாற்றுத் திறனாளிக் குழந்தைகளுக்கான கல்விப் பயிற்சியை அளித்தார்கள். இரண்டாம் வகுப்புவரை அங்கு படித்தான். அதன்பின் பெரியநாயக்கன் பாளையத்தில் இருக்கும் ராமகிருஷ்ண வித்யாலயத்தில் அனுமதி கிடைத்தது. அப்போதே அவன் பல இடங்களில் பேசத் தொடங்கியிருந்தான். விவேகானந்தரைப் பற்றி அவன் பேசிய விஷயங்கள் வித்யாலயத்தின் சுவாமிஜியை மிகவும் கவர்ந்தன. இவன் மாற்றுத்திறனாளி என்றாலும் இவனுடைய திறமையையும் ஆர்வத்தையும் பார்த்து, சாதாரணக் குழந்தைகளுடன் சேர்ந்து படிக்க வாய்ப்பளித்தார். பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஆண்டுவிழா, ரோட்டரி கிளப் விழா எனப் பலவற்றிலும் பங்கேற்க ஊக்கம் அளித்தது பள்ளி. அன்றுமுதல் இன்றுவரை அங்கேயே படித்து வருகிறான். அவனது வளர்ச்சிக்கு வித்யாலயத்திற்கும், சுவாமிஜிக்கும் அதன் ஆசிரியர்களுக்கும் முக்கியப் பங்குண்டு. இப்போது பத்தாம் வகுப்பு என்பதால் சிறப்பு வகுப்பு, டியூஷன் என்று நேரம் போய்விடுகிறது. இதனால் இசைப்பயிற்சி போன்ற விஷயங்களில் முன்போல் அவனால் கவனம் செலுத்த முடியவில்லை" என்று வருந்துகிறார்.
சபரிக்குள் இருந்த திறமையை எப்படி அடையாளம் கண்டு கொண்டீர்கள் என்று தாய் நீலவேணியிடம் கேட்டோம். "சிறுவனாக இருந்தபோதே அவனுக்கு நல்ல நினைவாற்றல். ஒருமுறை சொல்லிக் கொடுத்தால் அப்படியே பிடித்துக் கொண்டு விடுவான். அவிநாசிலிங்கம் பள்ளியில், போட்டிகளில் கலந்துகொண்டு பரிசு வாங்கினான். அதுதான் ஆரம்பம். அவனது ஆர்வத்தை அறிந்து ராமகிருஷ்ணர், விவேகானந்தர் புத்தகங்களை வாங்கி அவற்றைப் படித்துக் காண்பிப்போம். அதிலிருந்து தனக்குத் தேவையானதை எடுத்துப் பேசுவான். ஐந்து வயது முதலே மேடைகளில் பேச ஆரம்பித்து விட்டான். ஒரு போட்டியில் சுவாமி விவேகானந்தரைப் பற்றிப் பேசினான். அது பார்த்தோரை ஈர்த்துவிட்டது. அவனுக்குத்தான் அன்று முதல் பரிசு. அதுமுதல் நிறைய வாய்ப்புகள் தேடிவந்தன. இன்றைக்கு அவனாகவே ஸ்மார்ட் ஃபோன் மூலம் தேடித்தேடி நிறையப் படிக்கிறான்" என்கிறார் நீலவேணி.
அப்போது பள்ளிக்கூடம் விட்டுவந்தார் சபரி வெங்கட். அவரிடம் பேசினோம், அவர் சொல்லும் பதில்களில் குறும்பும், குழந்தைத்தனமும் கொப்பளிக்கின்றன. விவேகானந்தர் மீதான ஆர்வம்பற்றிச் சொல்லும்போது, "ஆரம்பத்தில் அம்மா சொல்வதிலிருந்து குறிப்புக்களை நான் கவனித்துக்கொண்டு மனதில் பதிய வைத்துப் பேசினேன். நாள் போகப்போக சுவாமி விவேகானந்தர் சொல்லியிருப்பது புரிய ஆரம்பித்தது. இவ்வளவு நல்ல கருத்துக்களைச் சொல்லியிருக்கிறாரே என்று ஆச்சரியம் வந்தது. அவர் கூறியிருக்கும் விஷயங்களைப் பின்பற்றினாலே போதும், நாம் வலிமையுள்ள தேசம் ஆகிவிடலாம் என்பதை உணர்ந்தேன். பலருக்கும் பயன்தரக்கூடிய, உத்வேகத்தைத் தரக்கூடிய பல விஷயங்களை அவர் சொல்லியிருக்கிறார். அவற்றை உள்வாங்கிக் கொண்டு மேடைகளில் பேச ஆரம்பித்தேன். விவேகானந்தர் என் ரோல் மாடல் ஆனார். அவரது கருத்துக்களை மேடைதோறும் விரிவாகப் பேசினேன். தற்போது பள்ளிகள், கல்லூரிகள், மக்கள் அரங்கங்கள் என்று எந்த இடத்திலும், மக்களுக்குத் தேவையான, அவர்களை மோடிவேட் செய்யக்கூடிய விஷயங்களை நான் பேசி வருகிறேன்" என்கிறார்.
சொல்லின் செல்வன் "குழந்தைகளுக்கு, கல்லூரி மாணவர்களுக்கு, பொதுமக்களுக்கு என்று அவரவருக்கு ஏற்ற மாதிரி பேசுவேன். நிறையப் பேர் காலேஜ் வந்தும் குழந்தை மாதிரி இருக்கிறார்கள். ஆகவே அவர்களுக்கேற்ற மாதிரி கொஞ்சம் கவனம் எடுத்துப் பேசுவேன்" என்கிறார் சபரி குறும்புடன். சபரிக்கு இரண்டு கண்களிலும் பார்வை இல்லை, வலதுகண்ணில் முற்றிலுமாக இல்லை. இடது கண்ணில் சமீபத்தில்கூட சோதனை செய்திருக்கிறார்கள். "இப்போதைக்கு ஒன்றும் செய்ய இயலாது. எதிர்காலத்தில் ஏதாவது புதிய தொழில்நுட்பம் வந்தால் முயற்சிக்கலாம்" என்று சொல்லிவிட்டார் மும்பையிலிருந்து வந்திருந்த சிறப்புக் கண் மருத்துவர். இடதுகண்ணில் வெளிச்சமாகத் தெரியுமாம். எழுத்துக்களோ, வண்ணங்களோ, உருவமோ எதுவும் சபரிக்குத் தெரியாது. பலர் இவரது நிலையைப் பற்றிக் கேள்விப்பட்டு கண்தானம் செய்யக்கூட முன் வந்திருக்கின்றனர். ஆனால் அதனால் பயனில்லை. சபரியின் பிரச்சனை இருப்பது பார்வை நரம்பில். அந்த விதத்தில் 99% பார்வையற்றவர் சபரி.
கோவை வழியாகச் செல்லும் ரயில் வண்டிகள், விமானங்கள் என அனைத்தின் பயணத்தடம், நேரம் உள்பட அனைத்தும் சபரிக்கு மனப்பாடம். அவற்றில் குறிப்பிட்ட நாளில் பயணம் செய்ய இடம் இருக்கிறதா இல்லையா என்று தானே பார்த்து, புக் செய்து விடுவார் என்பதைக் கேட்க ஆச்சரியமாக இருந்தது. "பார்வையுள்ள பலரே இவற்றை எல்லாம் மொபைலில் செய்யத் தடுமாறிக் கொண்டிருக்கும்போது, உங்களால் எப்படி முடிகிறது?" என்று கேட்டதற்கு, "இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை சார். போனில் 'Talk back' என்பதை 'ஆன்' செய்வதன் மூலம் எல்லாம் செய்யலாம். அது நாம் பார்க்கும் பக்கங்களை வரிவரியாகப் படித்துக் காட்டும். பல வாசிக்கும் மென்பொருள்கள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி எல்லாம் செய்வேன்" என்று தெளிவான பதில் வருகிறது. இதெல்லாம் எப்படித் தெரிந்து கொள்கிறீர்கள் என்று கேட்டால், "நிறைய வாலண்டியர்ஸ் பள்ளிக்கு வருவார்கள். அவர்களிடம் இருந்தும், பெரிய அண்ணாக்களிடமிருந்தும் கேட்டுத் தெரிந்து கொள்கிறேன்" என்கிறார் சபரி.
வானிலும் கடலிலும் சபரிக்கு சுற்றுச்சூழல், மானுடவியல், தொழில்நுட்பம் என்று பல துறைகளிலும் ஆர்வம். அவை குறித்து இணையத்தில் தேடித்தேடிப் படிக்கிறார், அதுவும் மொபைல் ஃபோனில். சில ஆண்டுகளுக்கு முன் தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்குச் சென்று பார்வையிட்டு வந்திருக்கிறார். அது எப்படி இயங்குகிறது. எப்படி மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. எப்படி விநியோகிக்கப்படுகிறது என்பதையெல்லாம் கேட்டு அறிந்து வந்திருக்கிறார். அதுபோல தேசிய விருது பெற்று டெல்லியில் இருந்து ஃப்ளைட்டில் திரும்பி வரும்போது விமானியின் அறைக்குச் சென்று விமானம் எப்படி இயங்குகிறது, எத்தனை உயரத்தில் பறக்கிறது, எவ்வளவு வேகத்தில் செல்கிறது, பொதுவாக எத்தனை மைல் உயரத்தில் பறக்கும் என்றெல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கிறார். மிகச் சமீபத்தில் துறைமுகத்திற்கும் சென்று வந்திருக்கிறார். "காரைக்காலில் இருக்கும் தனியார் துறைமுகத்தில் இருந்த கப்பலைப் பார்க்கச் சென்றிருந்தேன். அந்தத் துறைமுகத்தின் எம்.டி.யின் விருந்தினராகச் சென்றிருந்தேன். கப்பலில் ஏறும்போது மிகவும் பயமாக இருந்தது. ஏணியில் ஏறிச் செல்லவேண்டும். இரண்டு படிகளுக்கு நடுவில் இடைவெளி இருக்கும். சுற்றிலும் கடல். கப்பலுக்குள்ளே போகும்வரை அந்த பயம் இருந்தது. அப்புறம் போய்விட்டது. கப்பல் இயங்கும் விதம், கடல் பயணம், சரக்குகளை எப்படிக் கையாள்கிறார்கள் என்று பல விஷயங்களை நான் கேப்டனிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொண்டேன். கண்ட்ரோல் ரூமில் இருக்கும் வயர்லெஸ் மூலம் டக்கில் இருப்பவர்களுடன் பேசினேன். Tug என்பது கப்பலைக் கரைக்கு இழுத்துவரப் பயன்படுவது. "கன்ட்ரோல்" என்று சொல்லி ஆரம்பித்து, "ஹௌ டூ யூ டூ" என்று கேட்டு, அவர்கள் "லௌட் அண்ட் க்ளியர்" என்று பதில் சொன்னது ஒரு புது அனுபவம். டக் மூலம் 14 கி.மீ. கடலுக்கு உள்ளே பயணம் சென்றேன். அது த்ரில்லாக, ஜாலியாக இருந்தது. மறக்க முடியாத அனுபவம் என்கிறார். |
|
|
மறக்கமுடியாத அப்துல் கலாம் மறக்கமுடியாத சந்திப்பு எது என்று கேட்டால் புன்னகைக்கிறார். "கலாம் அவர்களைச் சந்தித்தது மறக்க முடியாதது. திட்டமிடாதது. விவேகானந்தரும் அவரும் எனக்கு மிகப் பெரிய இன்ஸ்பிரேஷன்." என்கிறார். தன்னை ஊக்கப்படுத்தி வருபவர்கள் என்றால் "என் பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம், சுவாமிஜி, அப்துல் கலாமின் பேரன் ஷேக் ஷெல்லி, சென்னை ராமகிருஷ்ணா மிஷன் சுவாமிஜி, பத்மநாபன் சார், சங்கர் சுப்பையா சார், தினமலர் முருகராஜ், அவிநாசிலிங்கம் பள்ளி, பாட்டி சாந்தா ஜெயராமன் என்று பலர் இருக்கின்றனர். விவேகானந்தா சேவாலயத்தைச் சேர்ந்த திரு. செந்தில்நாதன் என்மீது மிகுந்த அக்கறை கொண்டவர்.
அதுபோல Green man of India என்று போற்றப்படும் டாக்டர். அப்துல்கனி அவர்களும் என்மீது மிகவும் அக்கறை காட்டுகிறார். அவர் என் அண்ணா மாதிரி. அவர் 40 லட்சம் மரக்கன்றுகள் நட்டிருக்கிறார். நாடெங்கும் பயணித்துச் சுற்றுச்சூழல் குறித்து, பூமியின் நிலை குறித்துப் பேசிவருகிறார். கோவைக்குப் பேசச் சென்றிருந்தபோது அவரைச் சந்தித்தேன். விடுமுறையில் சென்னைக்குச் சென்று அவருடன்தான் தங்கினேன். அவர் என்னைப் பலருக்கும் அறிமுகப்படுத்தினார். லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மேடம், கமல் சார் எனப் பலரை நான் சந்திக்க அவர்தான் காரணம். முதல்வர், ஆசிரியர்கள், சக மாணவர்கள், நண்பர்கள் எல்லாருமே என்மீது அன்பும் அக்கறையும் காட்டுகிறார்கள்" என்கிறார் நெகிழ்ச்சியுடன்.
நான் சந்திக்க விரும்புவோர் "எனக்கு நிறையப் பேரைச் சந்திக்க ஆசை இருக்கிறது. பில் கேட்ஸைச் சந்திக்க ரொம்பவே ஆவலாக இருக்கிறேன். முகேஷ் அம்பானியை, ஒபாமாவைச் சந்திக்க ஆசை உண்டு. வாய்ப்புக் கிடைத்தால் ட்ரம்ப்பையும் சந்திக்க விரும்புகிறேன். எனக்கு ஒருமுறை வெளிநாட்டிற்குச் செல்ல வாய்ப்பு வந்தது. ஒரு சில சூழல்களால் போக முடியவில்லை. மீண்டும் வாய்ப்பு வந்தால் நிச்சயம் போவேன்" என்கிறார் உற்சாகம் கரைபுரள.
ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸப் எதையும் விட்டு வைக்கவில்லை சபரி. "லாகின் செய்ததும் அது, இத்தனை ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் வந்திருக்கிறது என்று சொல்லி அவர்களின் பெயரைப் படிக்கும். மெசேஜும் வாசிக்கும். சிலசமயம் யார் அனுப்பியிருகிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்கக் கஷ்டமாக இருக்கும். ஏனென்றால் வாய்ஸ் சாஃப்ட்வேர், பெயரைத் தப்பாகவும் உச்சரிக்கும். எனக்கு மானுடவியல் (Anthropology) மிகவும் பிடிக்கும். அது சம்பந்தமாக நிறையப் படிப்பேன், தேடுவேன். அதில்தான் அதிக நேரத்தைச் செலவிடுவேன். மற்ற பையன்கள் மொபைலில் கேம் விளையாடிக் கொண்டிருப்பார்கள். நான் மானுடவியல், டெக்னாலஜி சம்பந்தமாகத் தேடிப் படிப்பேன். அவ்வளவுதான்" என்கிறார் சபரி. "சக மாணவர்களுக்கு உங்கள் செய்தி என்ன?" என்றதும் "Don't lose your self confidence. Obey your parents. Respect your teachers" என்கிறார் நச்சென்று.
ஐ.ஏ.எஸ். ஆவது சபரியின் கனவு. "நிச்சயமாகப் பத்திரிகையாளராகி சமூகத்துக்கு நிறைய நன்மை செய்வேன்" என்கிறார். அவருடைய உற்சாகம் நம்மையும் தொற்றிக் கொள்கின்றன. மேதைமையும் சிறுவயதுக்கே உரிய குறும்பும் அவ்வப்போது பேச்சில் எட்டிப் பார்க்கின்றன. முயற்சிகளுக்கு வாழ்த்துக் கூறி விடைபெறுகிறோம்.
"பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி"
என்ற குறளின் பொருளைச் சபரி நமக்குப் புரியவைக்கிறார். எல்லாம் சரியாக இருந்தும் இல்லை, இல்லையென்று புலம்புவோர் நம்மில் எத்தனை பேர்!
உரையாடல்: அரவிந்த் படங்கள் உதவி: சபரி வெங்கட்
*****
மோதியின் கையால் விருது சபரி வெங்கட்டின் வாழ்க்கையில் போராட்டங்கள் மட்டுமல்ல; சுவாரஸ்யங்களும் அதிகம்தான். 2015ம் ஆண்டின் 'Best Creative Child with Disabilities' விருதுக்கு (Award by the Ministry of Social Justice and Empowerment) தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதாகத் தகவல் வருகிறது சபரிக்கு. விருதைப் பிரதமர் மோதியே தன் கையால் வழங்குவார் என்றும் அறிவிக்கப்படுகிறது. சபரிக்கு ஒரே சந்தோஷம். "பிரதமர் கையால் விருது!" என்று பூரித்துப் போகிறார். ஆனால், சென்னையில் அந்தக் காலகட்டத்தில் பெருமழை பொழிய, வெள்ள நிலைமையைப் பார்வையிடப் பிரதமர் சென்றுவிடுகிறார். நிதியமைச்சர் அருண் ஜெய்ட்லி கையால் விருது வழங்கப்படுகிறது. தேசிய விருது வாங்கிய பெருமை இருந்தாலும், பிரதமரைச் சந்திக்க முடியாத குறை சபரிக்கு. ஊர் திரும்பியதும் தனது மனக்குறையை ஒரு கடிதமாக எழுதிப் பிரதமருக்கு அனுப்புகிறார்.
சில நாட்களுக்குப் பின் சபரியின் தந்தைக்கு ஒரு ஃபோன். "பாலக்காடு செல்வதற்காக கோவை வரும் பிரதமர் உங்கள் மகனைச் சந்திக்க இருக்கிறார். காலையில் கோவை விமான நிலையத்திற்கு வந்து விடுங்கள்" என்கிறார் டெல்லியிலிருந்து பேசிய ஓர் அதிகாரி. மறுநாள் காலையில் பிரதமர் மோதி - சபரி வெங்கட் சந்திப்பு நிகழ்கிறது. பிரதமரை வரவேற்க விமானத்தருகே அனுமதிக்கப்பட்டவர்களில் அரசியல் சாராத ஒரே நபர் சபரி வெங்கட் தான்! மட்டுமல்ல, ஒரு குட்டிப்பையனைப் பிரதமர் நேரடியாக வந்து சந்தித்தது இந்திய வரலாற்றில் அதுவரை நிகழ்ந்திராத ஒன்றும்கூட. சபரி ஹிந்தியில் பேச, அது கண்டு உற்சாகமான பிரதமர் குனிந்து சபரியின் தோளில் கைபோட்டுக்கொண்டு சகஜமாகப் பேசியது கண்கொள்ளாக் காட்சி. தனக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட விருதினைப் பிரதமரின் கையில் தந்து அவர் கையால் அன்று வாங்கி மகிழ்ந்தார் சபரி. இதைப்பற்றி பிரதமர் மோதி அன்றைக்கே தனது ட்விட்டரில், "At Coimbatore airport met 12-year old Divyang boy Sabari Venkat. Was very happy to spend time with him" என்று குறிப்பிட்டிருந்தார்.
*****
முதல்வர் தந்த முத்தம் சுவாமி விவேகானந்தரின் 150வது ஆண்டுவிழா நடந்தபோது சென்னை ராமகிருஷ்ண மடம் மாணவர்களுக்கு ஒரு கட்டுரைப்போட்டியை நடத்தியது. தமிழ்நாடு முழுவதிலுமிருந்து ஏறக்குறைய பத்துலட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். சபரியும் அதில் ஒருவன். அதில் முதல் மாணவனாக சபரி தேர்ந்தெடுக்கப்பட்டான். அப்போதைய தமிழக முதல்வர் ஜெ. ஜெயலிதா அவர்கள் அந்த விருதைச் சபரிக்கு வழங்கினார். கூடவே சிறப்புப் பரிசாக ஒரு அன்பு முத்தமும் முதல்வரிடமிருந்து கிடைத்தது. ஜெயலலிதாவின் மறைவு சபரிக்கு மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. "அவரை மீண்டும் சந்திக்க ஆசைப்பட்டேன். அது முடியாமல் போனதில் எனக்கு வருத்தம்" என்கிறார் சபரி.
*****
சபரி 15 சபரிக்கு வயது பதினைந்து. அவர் தன்னைப் போன்ற மாற்றுத்திறனாளிச் சிறுவர்களுடன் மட்டுமல்ல, சாதாரண மற்றச் சிறார்களுடனும் போட்டியிட்டுப் பல பரிசுகளை வென்றிருக்கிறார். விவேகானந்தர் தோற்றத்தில் மேடையில் தோன்றி அவரது கருத்துக்களைப் பேசுவது சபரியின் வழக்கம். விவேகானந்தரின் புகழ்பெற்ற சிகாகோ பேச்சை அவர் பேசுவதற்கு வரவேற்பு மிக அதிகம்.
பிரெய்ல் முறையில் படிக்க, எழுதவும் சபரிக்குத் தெரியும். தமிழ், ஆங்கிலத்தில் சரளமாகப் பேசக் கூடியவர். ஹிந்தியும் தெரியும். சம்ஸ்கிருதத்திலும் ஆர்வம் உண்டு. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கொல்கத்தா என்று இருநூறுக்கும் மேற்பட்ட மேடைகளில் பேசியிருக்கிறார். நூற்றுக்கும் மேற்பட்ட பரிசுகளைப் பெற்றிருக்கிறார். Creative speaker, Motivational speaker, Special Guest, Chief Guest ஆகப் பல நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார்.
ஆன்மீகத்தில் ஆர்வம் உண்டு. ஆன்மீக நூல்களை வாசிப்பதில் அதிக ஆர்வம். பகவத் கீதையின் பல ஸ்லோகங்களும், ராமாயண, மகாபாரதக் கதைகளும் மனப்பாடம். சபரிக்கு மிக இனிமையான குரல், அழகாகப் பாடுவார். கீ போர்ட் வாசிக்கவும் தெரியும்.
சபரியின் வாழ்க்கை விரைவில் புத்தகமாக வெளிவர இருக்கிறது. டாக்டர் அப்துல் கனி அதற்கான பணிகளைச் செய்து கொண்டிருக்கிறார். சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த திரு. மகாதேவன் அந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார்.
*****
தொடர்பு விவரம் | | | 7708959339 தந்தை சீனிவாஸ் தொலைபேசி: 91-9942146558, 91-9965063853 |
|
|
|
|
|
|
|
|