|
|
பள்ளிகொண்ட கோலத்தில் சிவ பெருமானைக் காண்பதற்குத் தமிழ் நாட்டிலிருந்து ஆந்திரமாநில எல்லையின் ஆரம்பத்தில், சென்னைக்கும் திருப்பதிக்கும் இடையில் 50கி.மீ. தூரத்தில் சித்தூர் மாவட்டத்தில் இருக்கும் சுருட்டப் பள்ளி பற்றி சென்ற இதழில் படித்தது நினைவிருக்கிறதா? இங்கிருக்கும் பள்ளி கொண்டீஸ்வரர் கோவிலின் மற்றைய சிறப்புகளைப் பற்றி மேலே படியுங்கள்.
ஆலய அமைப்பின் தனித்துவம்
சிவபெருமான் தம்மை வழிபட்ட வால் மீகிக்கு லிங்க வடிவில் காட்சி கொடுத்து சுருட்டப்பள்ளியில் வால்மீகீஸ் வரர் என்ற பெயரில் கோயில் கொண்டுள்ளார். இக்கோயிலுக்கு வெளியே தெற்கு நோக்கிய வாசலில் தான் பள்ளி கொண்டீஸ்வரர் ஆலயம் அமைந்திருக் கிறது. உள்ளே இரண்டரை அடி உயரத்தில் அமைந்த மேடையில் அம்பிகையின் மடியில் தலைவைத்து சுமார் பதினாறு அடி நீளத்தில் படுத்த வண்ணம் காட்சி அளிக்கின்றார் பள்ளிகொண்டீஸ்வரர். தன் கமலம் ஒத்த பாதத்தின் குளிர்ச்சி ஈஸ்வரனின் மேனி யைத் தீண்டுவதுபோல நெருக்கமாக அமர்ந்திருக்கும் அன்னை சர்வமங்களாம் பிகையின் அழகிய தோற்றம் காண்பவர்க்குக் கண்கொள்ளாக் காட்சியாகும். இந்த மூலவருக்குச் சாம்பிராணியும் தைலக்காப்பும் மட்டுமே உண்டு. திருமுழுக்காட்டு எதுவும் கிடையாது.
எல்லாக் கோயிலிலும் பைரவமூர்த்தி அவரது சுவான வாகனத்தின் மேலேயே (நாய் வாகனம்) காணப்படுவது வழக்கம். ஆனால், இங்கு மற்ற தெய்வங்களுக்கு எதிரே அவற்றிற்குரிய வாகனங்கள் அமைந்திருப்பது போலவே பைரவருக்கும் அவருக்கு எதிரே வாகனம் தனியாகச் செதுக்கப் பட்டிருப்பது ஒரு புதுமையாகும். வழக்கமாகச் சிவன் சந்நிதியில் வழங்கப்படும் விபூதிப் பிரசாதம் இங்கு வழங்கப்படுவதில்லை. அலையாழி அறிதுயில் அரங்கன் சந்நிதியில் வழங்கப் படுவது போன்றே சடாரி சாதித்து, துளசி தீர்த்தம் அளிக்கின்றனர்.
பிரதோஷ வழிபாட்டு மகிமை
சைவ ஆலயங்களில் நந்தியை வணங்கிப் பின்னரே பெருமானை வழிபடும் வழக்கம் இருந்து வருகிறது. இதற்குக் காரணம் சிவபெருமான் உமையம்மை இருவருடைய அன்புக்கும் பிரியத்துக்கும் பாத்திரமான நந்திதேவரின் தலை மீது கை வைத்து அவருக்கு அழியாத தேகத்தையும், தீட்சையும் தந்து நந்திதேவர் என்ற நாமத்தையும் சூட்டினார் சிவபெருமான்.
நந்தி தேவர் கருவம்
ஆலகால விஷத்தை உண்ட சிவபெரு மானின் மிடறு நீலமானபோது பாற்கடலி லிருந்து வெளிவந்த அந்த விஷத்தைத் தன் கையில் வாங்கி இறைவனிடம் கொடுத்த நந்திதேவரின் கையை அந்த விஷம் பாதிக்கவில்லை. இதன் காரணமாக நந்தி தேவருக்கு எல்லோரையும்போல் கருவம் தோன்றிவிட்டது. இதைக்கண்டு சினங் கொண்ட சிவபெருமான் நந்தியின் சித்தம் கலங்கிப்போகுமாறு செய்து விடுகின்றார். சித்தங் கலங்கிய நந்திதேவர் சிரிக்க ஆரம்பிக்க, அது கண்டு வருந்திய உமையம்மை தன் குழந்தை போல் பாவித்து அரிசியில் வெல்லம் சேர்த்து நந்திக்கு ஊட்டியதுடன் அருகம்புல் மாலையும் கழுத்தில் சூட்டினாள். ஈசனின் அருளால் நந்திதேவரும் நலம் பெற்றார். கருவப் படுவோர்க்கு இது ஒரு பாடமாக அமைய இன்றும் பிரதோஷ நாட்களில் நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை அணிவித்து காப்பரிசி நிவேதனம் நடைபெறுகிறது. |
|
பள்ளிகொண்டீஸ்வரரின் ஆலயத்தில் பிரதோஷ வழிபாட்டுச் சிறப்பு
சிவபெருமான் நஞ்சுண்ட மயக்கத்தில் சுருண்டு படுத்திருந்தபோது அவர் இருக்கும் இடம் தெரிந்து சந்திரன், சூரியன், தும்புரு, நாரதர், பிரம்மா, விஷ்ணு உள்ளிட்ட தேவலோகமே திரண்டு வந்துவிட்டது. மயக்கம் தீர்ந்தபின் தரிசிக்கலாம் என்று கூறி, நந்திதேவர் அவர்களைத் தடுத்து நிறுத்தி விடுகின்றார். பின்னர் மயக்கம் தீர்ந்து இறைவன் அவர்கள் அனைவருக்கும் காட்சி தந்த தினம் 'மஹா பிரதோஷ நாள்' - அதாவது சனிக்கிழமை கிருஷ்ணபக்ஷ திரயோதசி நாள். இறைவனைக் கண்டு களித்த தேவர்களின் உருவங்களும் இந்த சந்நிதியில் பள்ளிகொண்டீஸ்வரருக்குப் பின்னால் செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இக்காரணம் பற்றியே இத்தலத்தில் பிரதோஷ வழிபாடு மிகவும் முக்கியம் வாய்ந்ததாகக் கூறப்படுகின்றது. பிரதோஷ விழா ஆரம்பமானதற்குக் காரணமாக அமைந்த தலம் இத்தலம் என்ற பெருமையும் பெற்றது.
காஞ்சிப் பெரியவர் இத்தலத்தில் 15 நாட்கள் தங்கியிருந்து பள்ளி கொண்டீஸ்வரரின் மீது கவிதை ஒன்றைப் பாடி வணங்கியிருக்கின்றார். அத்துடன் இந்துக்களில் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது சுருட்டப் பள்ளிக்கு வந்து இங்கு நடைபெறும் பிரதோஷ வழிபாட்டில் பங்கு கொள்ளவேண்டும் என்றும், ஒருமுறை செய்யும் பிரதோஷ வழிபாடு அசுவமேத யாகம் செய்த பலனை அளிக்கக் கூடிய சிறப்புடையது என்றும் கூறி இத்தலத்திற்குப் பெருமை சேர்த்திருக்கின்றார் காஞ்சி மாமுனிகள்.
கோயிலின் பழமை
இக்கோயில் கல்வெட்டு ஒன்றில் காணப்படும் செய்தி "திம்மராஜன் என்பவன் கி.பி.1833-ஆம் ஆண்டில் இக்கோயிலுக்குக் குடமுழுக்குச் செய்வித்தான்" என்பதாகும். இதன்படி பார்க்கும்போது இக்கோயில் அதற்கும் முன்பே கட்டப்பட்டிருக்க வேண்டும். ஆக ஏறத்தாழ 200 ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கோயில் அமைதி யைத்தேடி வந்து சயனித்திருக்கும் இறை வனுக்கு எழுப்பப் பட்ட திருக்கோயில். நாமும் இந்த அழகான சூழலின் அமைதியையும் ஆண்டவன் தரிசனத்தையும் அனுபவிக்க ஒருமுறை சென்று வரலாமே!
முனைவர் அலர்மேல்ரிஷி |
|
|
|
|
|
|
|