|
|
தமிழகத்தின் மிகப் பழமையான நகரம் காஞ்சீபுரம். கிறித்து பிறப்பதற்கு முந்தையது இந்நகரம் என்பது சிலர் கருத்து. "நகரேஷ¤ காஞ்சி; புருஷேஷ¤ விஷ்ணு; புஷ்பேஷ¤ கமலம்" என்னும் வடமொழிப் பாடல் 'நகரங்களுக்குள் உயர்ந்தது காஞ்சி' எனப் புகழ்ந்து பேசுகிறது. மண், விண், நீர், நெருப்பு, காற்று என்ற வரிசையில் பிருதிவித் (பூமி) தலமாகவும் போற்றப்படுகின்றது. 108 சைவப் புண்ணிய ஆலயங்களும், 18 வைணவப் புண்ணிய ஆலயங்களும் நிறைந்து உன்னதமான §க்ஷத்திரமாகக் காஞ்சீபுரம் விளங்குகிறது.
108 வைணவப் புண்ணிய §க்ஷத்திரங் களில் ஒன்றாக வைத்து எண்ணப்படும் வேளிருக்கை என்பது காஞ்சீபுரத்தில் விளக்கொளிப்பெருமாள் கோயிலுக்குத் தென்புறத்தில், அஷ்டபுஜகரக் கோயிலி லிருந்து அரைக் கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு தலமாகும். வேள்+இருக்கை அதாவது வீற்றிருக்கும் வேள் என்பது வேளுக்கை என்று பேச்சு வழக்கில் வந்து விட்டது. 'ஆளரி' (ஆள்=நரன், மனிதன்; அரி=சிம்மம்) என்பதான நரசிம்ஹன் வீற்றிருக்கும் கோலத்தில் காட்சி தரும் வேளுக்கையை "மன்னும் மதிள்கச்சி வேளுக்கை ஆளரியை" என்று திருமங்கை ஆழ்வார் பெரிய திருமடலில் போற்றியுள்ளார்.
சிறந்தஎன் சிந்தையும் செங்கண் அரவும் நிறைந்தசீர் நீள்கச்சியுள்ளும் - உறைந்ததுவும் வேங்கடமும் வெ.:காவும் வேளுக்கைப் பாடியுமே தாம்கடவார் தண்துழா யார்.
என்று பேயாழ்வாரும் மூன்றாம் திருவந்தாதியில் பாடிப் பரவியிருக்கின்றார்.
வேளுக்கை பற்றி அறியுமுன் விளக் கொளிப் பெருமாள் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டியது மிகவும் அவசியமாகும்.
விளக்கொளிப் பெருமாள்
பிரமன் யாகம் ஒன்றைச் செய்யத் தீர்மானித்தார். ஆனால் சரஸ்வதி தேவியைத் துணைக்கு அழைக்காமலேயே காரியத்தில் முனைந்தார். இதனால் கோபங்கொண்ட சரஸ்வதி தேவி அரக்கன் ஒருவனையும் அவனுக்குத் துணையாக இன்னும் பல அரக்கர்களையும் காளியையும் அனுப்பி யாகத்தைத் தடுத்து நிறுத்த முயன்றாள். அரக்கன் தன் ஆற்றலால் உலகம் முழுவதையும் இருட்டாக்கினான். இது கண்டு திகைத்த பிரமன் திருமாலிடம் சரணடைந்து அரக்கனிடமிருந்து உலகத் தையும் காத்து யாகத்தையும் காக்க வேண்டினார். திருமாலும் அங்கே பெருத்த ஒளி உருவில் காட்சி தந்து கையில் தீபம் ஏந்தி இருட்டைப் போக்கினார். தானும் தீபப்பிரகாசர் என்றும் விளக்கொளிப் பெருமாள் என்றும் அழைக்கப்படலானார்.
பிரமனுக்குக் காட்சி தந்த திருமால் வீற்றிருக்கும் தலம் விளக்கொளிப் பெருமாள் கோயில் என்றும், குளிர்ச்சி பொருந்திய சோலையாக விளங்கிய இந்த இடத்தில் பிரமன் வேள்விச்சாலையை அமைத்ததால் இது 'திருத்தண்கா' (தண்=குளிர்ச்சி, கா=சோலை) என்றும் பெயர்பெற்றது. நரசிம்மாவதாரத்தில் திருமால் ஹிரண்ய கசிபுவை அழித்தபின் அவனுடைய மற்ற அரக்கர் கூட்டத்தையும் அழிப்பதற்காக நீண்ட தூரம் துரத்திச் சென்று வேளுக்கை வந்து சேர்ந்தார். திருத்தண்காவிற்கு அருகிலிருந்த வேளுக்கையைக் கண்டு, துரத்தப்பட்ட அரக்கர்கள் இனித் திரும்ப மாட்டார்கள் என்ற முடிவுடன் வேளுக் கையின் சூழலைக் கண்டு அதன் அழகில் மயங்கி அதனையே தன் வசிப்பிடமாக்கிக் கொண்டு அங்கேயே அமர்ந்து விட்டார்.
பேயாழ்வார் திருமலை, திருவெ·கா, திருக்கோட்டியூர், திருவரங்கம், திருவிண்ண கரம், கும்பகோணம் ஆகிய தலங்களுக் கீடான பெருமை உடைய தலமாக வேளுக்கையைப் பாராட்டிப் பாடியுள்ளார். |
|
விண்ணகரம் வெ.:கா விரிதிரைநீர் வேங்கடம் மண்ணகரம் மாமாட வேளுக்கை - மண்ணகத்த தென்குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு.
மூன்று நிலைகளையும் ஒரே பிரகாரத்தையும் கொண்டு மேற்கு நோக்கிக் காணப்படும் இக்கோயிலில் வீற்றிருக்கும் பெருமாள் அழகிய சிங்கர் என்றும் முகுந்தப் பெருமாள் என்றும் அழைக்கப்படுகின்றார். காமாஸிக நரசிம்மன் என்றொரு நாமமும் உண்டு. எனவேதான், திருத்தண்காவில் அவதரித்த ஸ்ரீ வேதாந்த தேசிகரும் 'காமாஸிக அஷ்டகம்' பாடி இத்தலத்து இறைவனுக்குப் புகழ் சேர்த்திருக்கின்றார். இவர் திருவுருவம் இக்கோயிலில் ஞானமுத்திரையுடன் தெற்கு நோக்கிய சன்னிதியில் காணப்படுகின்றது. இக்கோயிலில் தாயார் வேளுக்கைத் தாயார் என்ற பெயருடன் தனிச் சந்நிதியில் வீற்றிருக்கின்றார். இவருக்கு அமிர்தவல்லி என்றொரு பெயரும் உண்டு.
வேளுக்கை கோயிலில் ஒரு சிறப்பம்சம் உண்டு. பொதுவாகவே எல்லா வைணவத் தலங்களிலும் சக்கரத்தாழ்வார் சந்நிதியில் சக்கரத்தாழ்வார் முதுகில் நரசிம்மன் உருவம் செதுக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்தக் கோயிலில் மட்டும் அவ்வாறில்லை. மாமாட வேளுக்கை என்று போற்றப்பட்ட இத்தலம் பராமரிப்பின்றிக் காணப்படுகின்றது. சுற்றிலும் மாடமாளிகை ஏதுமின்றிக் காணப்படும் இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி சிறப்பான விழாவாகும். காஞ்சி சென்றால் காலாட்டிப் பிழைக்கலாம் என்றொரு பழமொழி உண்டு. காலாட்டுதல் தறி நெசவைக் குறிப்பதாகும். காஞ்சி சென்றால் காலார நடந்து கோயில்கள் பலவற்றிற்குச் செல்லலாம் என்று புதுப் பொருள் சொல்லலாமா!
முனைவர் அலர்மேலு ரிஷி |
|
|
|
|
|
|
|