Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | சாதனையாளர்
குறுக்கெழுத்துப்புதிர் | புழக்கடைப்பக்கம் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | ஜோக்ஸ்
Tamil Unicode / English Search
நேர்காணல்
டாக்டர் சியாமளா ஹாரிஸ்
"இசைத்தொழில் வளர்ந்தது, இசை வளர்ந்ததா?" - டி.என். சேஷகோபாலன்
- கேடிஸ்ரீ|பிப்ரவரி 2004|
Share:
Click Here Enlargeமதுரையில் இருந்து சங்கம் வளர்த்த முத்தமிழில் இசைத் தமிழும் ஒன்று. அதனால்தானோ என்னவோ மாமேதை மதுரை புஷ்பவனம் ஐயர், சங்கீதகலாநிதி மதுரை மணிஐயர், சங்கீத காலசாகரம் மதுரை டி.என். சேஷகோபாலன் என்று பல இசைக் கலைஞர்களையும் அளித்துள்ளது மதுரை. முற்றிலும் தமிழ்ப் பாடல்களாலேயே கச்சேரிகள் தந்திருப்பவரும், தமிழிசைச் சங்கத்தின் 'இசைப் பேரறிஞர்' பட்டத்தைப் பெற்ற வருமான சேஷகோபாலன் அவர்க ளோடு உரையாடியதில்...

மேதைகளுக்கெல்லாம் மேதை!

எனக்கு சங்கீதத்தில் ஆர்வம் ஏற்பட என் அம்மாதான் காரணம். அம்மா முறையாக சங்கீதம் கற்றுக் கொள்ளவில்லை. கேள்வி ஞானம்தான். கேள்வி ஞானம் என்றால் கொஞ்சநஞ்சமல்ல. எல்லோரும் ரொம்ப உசத்தியாகப் பாராட்டுகிற கேள்வி ஞானம். அவரது இசை ஞானமே எனக்குள் இசையின் மேல் ஓர் ஆர்வம் ஏற்பட வைத்தது. அந்த வகையில் எனக்கு முதல் குரு என் அம்மாதான்.

பின்பு மதுரகலாநவீன இராமநாதபுரம் C.S. சங்கரசிவம் அவர்களிடம் முறையாகச் சங்கீதம் கற்றுக்கொள்ளத் தொடங்கினேன். சங்கரசிவம் அவர்கள் டாக்டர் ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதர் அவர்களின் சிஷ்யர். எனது குரு இராமநாதபுரம் சங்கரசிவம் மகாமேதை. மேதைகளுக் கெல்லாம் மேதை.

இசையும் படிப்பும்

என் குருவிடம் குருகுலவாச முறையில் சங்கீதம் கற்றுக்கொண்டேன். தினமும் காலை 6 மணி முதல் 9 மணிவரை தொடர்ந்து சங்கீதம். பிறகு கல்லூரிக்குச் சென்றுவிடுவேன். மாலை கல்லூரியிலிருந்து வந்தவுடன் 6 மணிமுதல் இரவு 10 மணிவரை தொடர்ந்து மீண்டும் சங்கீதப் பாடம்.

எனக்குக் கணிதத்தில் அதிக ஈடுபாடு இருந்தாலும் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆசையினால் பியூசியில் உயிரியல் பிரிவை எடுத்துப் படித்தேன். இதற்கிடையில் எனக்கு சங்கீதத்தில் அதிக ஈடுபாடு ஏற்பட்டது. மருத்துவப் படிப்பைவிட இசை முக்கியம் என்று ஆனது. மற்றவை எல்லாம் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டன. சங்கீதத்திற்கு நிறைய நேரம் ஒதுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எனக்கு பிஎஸ்சி தாவரவியலில் இடம் ஒதுக்கித் தந்தார் கல்லூரி முதல்வர்.
எங்கள் கல்லூரியில் பல ஆசிரியர்களுக்குச் சங்கீதத்தில் ஈடுபாடு இருந்தது. அவர்கள் நான் கச்சேரிகளுக்குச் செல்வதற்கு அனுமதி அளித்தனர். சில நேரங்களில் எனக்காகச் செயல்முறை வகுப்புகளைத் தனியாக நடத்தியிருக்கிறார்கள். எனவே, எனக்குச் சங்கீதத்தின் நடுவே படிப்பதற்கு அதிகக் கஷ்டம் தெரியவில்லை.

பட்டப்படிப்பை முடித்தேன். பின்பு இசையின் மேல் உள்ள ஆர்வத்தால் மதுரைப் பல்கலைக் கழகத்தில் இசையில் பட்டம் பெற்றேன். இசை முழுநேரப் பணியானது. முதன் முதலாக நான் படிப்பை முடித்தவுடன் டிவிஎஸ் நிறுவனத்தில் விற்பனைப் பிரிவில் பணியில் சேர்ந்தேன். அங்கு சிறிது காலம் பணியாற்றியதும் கனரா வங்கியில் வேலை கிடைத்தது. என்னால் அந்த வேலையைத் தொடர முடியவில்லை. அந்தச் சமயத்தில்தான் என் இசைக்காக மத்திய அரசின் உதவித்தொகை கிடைத்தது.

இந்த உதவித்தொகை கிடைத்ததை நான் மிகப்பெரிய கெளரவமாகக் கருதினேன். இதன் மூலம் கடவுள் நான் முழுநேரமும் இசையில் ஈடுபடவேண்டுமென விரும்பியதாக நினைத்தேன். இதன் பின் மதுரை இசைக் கல்லூரியில் தொடர்ந்து 6 வருடம் பேராசிரியராகப் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. சில காலம் சென்னைப் பல்கலைக்கழகத்தில் கெளரவ இசையாசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பும் கிட்டியது. அந்தப் பணியில் தொடர்ந்து ஈடுபடுவது கடினமாக இருந்தது. அந்தப் பணியை 1976ல் விட்டுவிட்டு இசையை முழுநேரப் பணியாக்கிக் கொண்டேன். இசையே என் மூச்சு.

முதல் இசை நிகழ்ச்சி

1955ஆம் ஆண்டு 'பக்தி ரஞ்சனி' என்கிற தலைப்பில் என் ஏழாவது வயதில் ஐயப்பன் அவதார ஸ்தலமாகிய குளத்துப்புழையில் முதல் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று என் இசை நிகழ்ச்சியைக் கேட்ட அனைவரும் என்னைப் பாராட்டிப் பேசினர். அன்று முதல் தொடர்ந்து பல கச்சேரிகளை அளித்திருக்கிறேன்.

கச்சேரியும் கருத்தரங்கும்

இசைத்துறையில் பல பயிற்சி வகுப்புகளையும், கருத்தரங்குகளையும் இந்தியா வின் பல முக்கிய நகரங்களிலும், வெளிநாடுகளிலும் நடத்தியுள்ளேன். குறிப்பாக தில்லி, பெங்களூர், மைசூர் போன்ற இடங்களில் இசையைப் பற்றிய பல கருத்தரங்குகள், விவாதங்கள் நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டு விவாதித்துள்ளேன். ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர், ஊத்துக்காடு வெங்கடகவி மற்றும் அம்புஜம் கிருஷ்ணா போன்ற இசைக்கலைஞர்கள் இயற்றிய அரிய பாடல்களைப் பற்றிய விளக்க வுரைகள் மற்றும் ராகம், தானம், பல்லவி, லய வின்யாசம், ராக ஆலாபனை முறைகள் பற்றி அந்தக் கருத்தரங்குகளில் எடுத்துரைத்துள்ளேன்.

14 மணிநேரக் கச்சேரி!

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 2001ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி மாலை 6 மணியிலிருந்து மறுநாள் காலை 8 மணிவரை தொடர்ந்து 14 மணிநேரம் இடைவிடாமல் கச்சேரி செய்தேன். என்னுடன் மொத்தம் 40 பக்கவாத்தியக் கலைஞர்களுடன் தொடர்ந்த அந்தக் கச்சேரி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்வாமிகள் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று எனக்கு 'திவ்ய பிரபந்த சங்கீதச் சக்கரவர்த்தி' என்ற பட்டத்தை அளித்து கெளரவப்படுத்தினார்கள்.

வீணையும், ஸ்வரராகப் பிரதர்சினியும்...

குரலிசை மட்டுமல்லாமல் வீணை வாசிக்கவும் கற்றுக்கொண்டேன். என் வீணைக் கச்சேரி அகில இந்திய வானொலி நிலையத்திலும், தொலைக்காட்சிகளிலும் ஒளிப்பரப்பட்டு வந்திருக்கின்றன. சபைகளிலும், வானொலி நிலையத்தில் 'ஏ' கிரேட் கலைஞராகவும் கிட்டத்தட்ட 20 வருடங்களாக வீணைக் கச்சேரி செய்து வருகிறேன். வீணை மட்டுமல்லாமல் ஹார்மோனியம் வாசிப்பதிலும் எனக்குத் திறமை உண்டு.

7 வயது முதலே ஹார்மோனியம் வாசித்து வருகிறேன். தற்போது 'ஸ்வரராகப் பிரதர்சினி' என்ற பெயரில் கீபோர்டில் கர்நாடக இசை வாசித்து வருகிறேன். பெங்களூரில் லஹரி ரிக்கார்டிங் நிறுவனம் ஸ்வரராக பிரதர்சினி என்ற பெயரிலேயே என் கர்நாடகக் கீபோர்டு இசையைக் குறுந்தகடாக வெளியிட்டிருக்கிறது.

ஒலித்தொகுப்புக்கள்

இதுவரை நான் பாடிய 50, 60 ஆல்பங் களைப் பல நிறுவனங்கள் வெளியிட்டிருக்கின்றன. இதைத் தவிர வீணை, கீபோர்ட் இசைத் தொகுப்புக்களும் வெளியாகியிருக்கின்றன.

முக்கியமாக சுப்பிரமணிய பாரதியின் 'காக்கைச் சிறகினிலே', 'Golden Tenor of South India', 'தி மாஸ்டர் ஆ·ப் ஸ்வராஸ்', 'கிளாசிகல் மெலடிஸ்', 'ஆல் டைம் கிளாசிக்ஸ்', 'ராமநாம பிரபாவம்', 'கிருஷ்ணநாம வைபவம்', 'மதுரை சங்கீத பாரதி', 'பக்தி ரஞ்சனி' என்று பல இசைத் தொகுப்புக்கள் வெளியாயின.

சென்னையில் தொடர்ந்து 1992 முதல் 1999 வரை சங்கீத சீசனில் நான் பாடிய கச்சேரிகளைத் தொகுத்து ஏ.வி.எம் மற்றும் எச்.எம்.வி. வெளியிட்டது. தில்லானாக்கள் பல கர்நாடக மற்றும் இந்துஸ்தானி ராகங்களிலும் இயற்றியுள்ளேன்.

வெளிநாட்டு நிகழ்ச்சிகள்

1981முதல் பல வெளிநாடுகளுக்குச் சென்று வருகிறேன். அமெரிக்காவிற்குக் கிட்டத்தட்ட 15, 16 முறை சென்று இருக்கிறேன். அதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்ன வென்றால் 1984ல் ஆஸ்திரேலியாவின் 'அடிலைட் பன்னாட்டு இசைவிழா'வுக்கு (Adelaide and Perth International festivals) இந்திய அரசு முதன் முதலாக என்னை அனுப்பி வைத்தது.

அரசு சார்பாக அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது பெருமை மட்டுமல்ல, கெளரவ மானதும்கூட. அதுவரை வாய்ப்பாட்டுக் கார்கள் யாரும் சென்றதில்லை. இசைக் கருவி வாசிப்பவர் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.

ஆஸ்திரேலியக் கண்டத்தில் சென்று குரலிசை வழங்கிய முதல் இந்தியக் கலைஞர் என்று நிகழ்ச்சிகளில் விளம்பரமும், அறிவிப்பும் செய்யப்பட்டது. இது பெருமையான விஷயம். ரஷ்யாவில் நடந்த இந்திய விழாவில் பங்கேற்பதற்கும் இந்திய அரசு என்னை அனுப்பியது.

கிட்டத்தட்ட 40 இடங்களில் கச்சேரி செய்திருக்கிறேன். அங்கெல்லாம் என்னுடைய ராகம், தானம், பல்லவியை மக்கள் பெரிதும் விரும்பிக் கேட்டனர். கர்நாடக சங்கீதம் அடிப்படையில் அழுத்தமானது. இந்தச் சங்கீதத்தின் கிரீடமே ராகம், தானம், பல்லவி நிரவல்தான்.

வெளிநாடுகளில் நம் மொழி தெரியாதவர் களை, நம் இசையைப் புதிதாகக் கேட்பவர்களை ராகம், தானம், பல்லவி கவர்ந்து இருக்கிறது என்றால் இதை நமக்கு வழங்கியுள்ள பெரியவர்களின் தீர்க்க தரிசனத்திற்கும், மேதாவிலாசத்திற்கும் இதைவிடச் சான்று ஒன்றும் தேவையில்லை. இதிலிருந்து நான் தெரிந்து கொண்ட மற்றொரு முக்கியமான உண்மை என்னவென்றால் இசைக்கு மொழி முக்கியமல்ல என்பதுதான். தான் பெற்ற இறையுணர்ச்சியை, அனுபவத்தைக் கேட்பவர்களும் உணரச்செய்யும் ஊடகம் தான் நாத உபாசனை.

கனடாவில் உள்ள மான்ட்ரியாலில் 1997ல் Seasonscape என்ற நிகழ்ச்சி ஒன்றை அங்குள்ள Don Juan என்ற நாட்டியக் குழுவினர் நடத்தினர்.

இந்நிகழ்ச்சியின் சாராம்சம் என்ன வென்றால் 5 பருவ காலங்களை அதாவது கோடை, குளிர், மழை போன்றவற்றை நடனத்தின் மூலம் வெளிப்படுத்த வேண்டும். அதற்கான காலம் 25 நிமிடம். மொழியைப் பயன்படுத்தாமல் வெறும் இசை மற்றும் நடனம் மூலம் செய்யவேண்டும். இதற்காக என்னை அழைத்திருந்தார்கள். பரத நாட்டியம், கதக், ஒடிசி, மேற்கத்திய நடனம் என்று எல்லாக் கலைஞர்களுக்கும் ஏற்ப நம் கர்நாடக பாணியில் இசை தயாரித்து அதற்கேற்ப அவர்களை நடனம் ஆட வைத்து 'எக்ஸ்லன்ஸ்' விருது பெற்றேன்.

சுதந்திரம் அடைந்த 50வது ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில் 'என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்' என்று 3 மணிநேரம் பள்ளி குழந்தைகளை வைத்து இசை, நடன நிகழ்ச்சியை நடத்துவதற்கு விஸ்வகலா பரிஷத் ஏற்பாடு செய்திருந்தது. அவ்வமயம் 'கானகலாபாரதி' என்ற விருதையும் அளித்தார்கள்.

வாரியாருக்கு வாசித்தேன்

கம்பராமாயணச் செய்யுள்களைக் கீர்த்தனைகளாக 'பல்லவி, அனுபல்லவி, சரணம்' என அமைத்து (கிட்டத்தட்ட 300 கீர்த்தனைகள்) இசையும் அமைத்திருக் கிறேன். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் கம்பராமாயண இசைக்கச்சேரிகள் பல செய்திருக்கிறேன். கம்பராமயணத்தில் இசை அனுபவம் என்பதைப் பற்றி விளக்க நிகழ்ச்சிகளும் அளித்திருக்கிறேன். சங்கம் அமைத்த மதுரையில் என்னுடைய இளமைக்காலம் அமைந்ததால் தமிழ் இலக்கியங்களின் சிகரமாகிய கம்ப ராமாயணம் படிக்கும் சந்தர்ப்பம் அமைந்தது. நிறையக் கம்பன் விழாக்களைக் கண்டு ரசிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. புத்தகங்கள் படிக்கும் ஆர்வத்தை இது தூண்டியது. தவிர, நிறையப் பிரவசனங்கள், ஹரிகதைகள், உபன்யாசங்கள் கேட்கச் சந்தர்ப்பம் அமைந்தது.

என்னுடைய ஆறு வயதிலிந்து பதினாறு வயது வரை காலம்சென்ற புதுக்கோட்டை கோபாலகிருஷ்ண ஸ்வாமிகள் அவருடைய நாமசங்கீர்த்தன பத்ததிகளில் அவருடன் ஈடுபடும் பாக்கியம் பெற்றதால் அதுவே என்னுடைய இசைக்கும் அஸ்திவாரமாக அமைந்திருக்கிறது.

காலம்சென்ற கிருபானந்த வாரியார் சுவாமிகள் நிகழ்ச்சிகளுக்கு என்னுடைய 8 வயதில் ஹார்மோனியம், பக்கவாத்தியம் வாசித்திருக்கிறேன்.

ஹரிகதை அனுபவம்

என் குருவின் குருபூஜையன்று என் குருநாதரின் அருள் ஆணை மற்றும் மதுரை ரசிகர்களின் விருப்பம் கருதி குருபிதாமகர் ஆகிய (குருவின் குரு) 'காயக்க சிகாமணி' டாக்டர் ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதர் அவர்களின் வாழ்க்கைச் சரித்திரத்தை கருப்பொருளாக்கி 'காயக்க சிகாமணி சரித்திரம்' என்ற தலைப்பில் ஹரிகதை செய்தேன். அடுத்து ஒரு மாத காலத்திற்குள் இரண்டு இடங்களில் (நாரதகானசபா மற்றும் இசைவிழாவில்) அதே சரித்திரத்தை வெவ்வேறு அணுகுமுறையில் செய்தேன். மூன்று நிகழ்ச்சிகளும் ஒரே கருப்பொருளைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் தனி அனுபவம், புதுப் பரிமாணம் கிடைத்து.

தொடர்ந்து பல இடங்களில் 9 நாட்கள் ராமாயணம் ஹரிகதை செய்வதற்கு அழைப்புகள் வந்திருக்கின்றன. ஹரி கதையில் நிறைய சாதுர்யம், சங்கீதம், விமர்சனம், விவரணம் கலந்து பெரிய விருந்தாக ரசிகர்களுக்கு அளிப்பதற்கு நல்ல வாய்ப்புகள் இருக்கின்றன.

நம்மிடையே இன்று ஹரிகதா செய்பவர்கள் மிகவும் சிலர்தான். அவர்களும் 65 வயதைத் தாண்டியவர்களாகத்தான் இருக்கிறார்கள். இந்தக் கலையில் நான் பிரவேசம் செய்தது ஆர்வத்தைத் தூண்டிவிட்டு இன்னும் நிறையக் கலைஞர்கள் வந்தால் ஹரிகதை புத்துயிர் பெறும்.

இப்போது ஹரிகதை செய்வதற்கு அழைப்பு வரும் நிலையைப் பார்த்தால் இது என்னுடைய வாய்ப்பாட்டைத் தள்ளி விடுமோ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது.

குருகிருபா அறக்கட்டளை

இசைக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு அடிக்கடி ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. ஆகவே 'குருகிருபா டிரஸ்ட்' என்ற அமைப்பை உருவாக்கினேன். இன்றைய இளம் தலைமுறையினருக்கு இசையின் முழுப் பரிமாணத்தையும் பயிற்றுவிப்பதே இந்த அமைப்பின் நோக்கம். திறமையான இளம் கலைஞர்களுக்கு அந்தக் கால குருகுல முறையில் இசையை அறிந்து கொள்ளச் செய்வது, அவர்களுக்கு இசையின் மேல் பக்தியையும், ஈடுபாட்டையும் அதிகப் படுத்துவது போன்றவை இந்த டிரஸ்ட் மூலம் பயிற்றப்படுகின்றன.

இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவிலும் கர்நாடக இசையை எடுத்துச் சென்று இன்றைய இளம் கலைஞர்களுக்கு அறிமுகப் படுத்துவதும் ஒரு நோக்கம் ஆகும்.

எங்கள் குருகுலத்தில் இசை கற்று இன்று உயர்ந்த கலைஞராக பலர் விளங்கு கின்றனர். குரலிசையில் மதுரை R. சுந்தர், நெய்வேலி சந்தானகோபாலன், எஸ். கஸ்தூரி ரங்கன், மதுரை டி.என்.எஸ். கிருஷ்ணா, கே. விஜயராகவன், காயத்ரி கிரிஷ், சின்மயா சகோதரிகள், மற்றும் வீணையிசையில் பிரபாவதி கணேசன், தாரா மோகன், ஜெயஸ்ரீ மகேஷ் என்று பல பிரபல கலைஞர்கள் குருகிருபாவின் மூலம் இசை கற்றவர்கள்.

எங்கள் டிரஸ்ட் மூலம் நாங்கள் டாக்டர் ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரின் ஜெயந்தி மற்றும் நினைவு நாட்களையும், குரு சங்கரசிவம் அவர்களின் பிறந்த நாளையும் இசைபற்றிய கருத்தரங்கங்கள், போட்டிகள், கச்சேரிகள் இவற்றோடு சிறப்பாக நடத்தி வருகிறோம்.

அதுமட்டுமல்லாமல் மூத்த இசைக் கலைஞர்கள், விமர்சகர்கள், வாக்கேயக்காரர்கள் என்று பலரை வரவழைத்து பாராட்டுக்களும் பணமுடிப்புகளும் வழங்கிக் கவுரவிக்கிறோம்.

இந்த வகையில் மன்னார்குடி பார்த்த சாரதி ஐய்யங்கார், கே.எஸ். மாதவன், டாக்டர் டி.கே. மூர்த்தி, வேலூர் ராமபத்ரன், கமலா மூர்த்தி, நெல்லை கிருஷ்ணமூர்த்தி, குருவாயூர் துரை, பெங்களூர் ராமாச்சார் என்று பல கலைஞர்கள் பாராட்டுப் பெற்றதைச் சொல்லலாம். பாடகர்கள் மட்டுமல்ல, பக்கவாத்தியக் கலைஞர்களும் இதில் அடங்குவார்கள்.

இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகிற அத்தனைக் கலைஞர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் இலவசமாக உணவு வழங்குகிறோம். மேலும் பரிசு பெற்ற கலைஞர்களுக்கு இசைக்கருவிகளும், இசைநூல்களும் பரிசாக அளிக்கிறோம்.

அன்றைய மூத்த இசைக் கலைஞர்களின் இசையைப் பதிவு செய்து இளம் கலைஞர்களுக்கும், இசை பயிலும் மாணவர்களுக்கும் கொடுக்கிறோம். இப்படி எங்கள் குருகிருபா அறக்கட்டளை பலவிதங்களில் சேவை செய்கிறது.
பட்டங்களும் பரிசுகளும்

கானபூபதி , திருப்புகழ்மணி, சங்கீத சூடாமணி, கலாரத்னம், சங்கீத சுதாகரா, கலைமாமணி, நாதக்கனல், நாதகலாநிதி, இசைச்செல்வம், இசை நற்கலைஞர், கானகலாநிதி என்று கிட்டத்தட்ட 50 பட்டங்கள் எனக்கு அளிக்கப்படுள்ளன. சமீபத்தில் பெங்களூரில் பழனி சுப்பிரமணிய பிள்ளை விருது 'லயகலாநிபுணா' என்கிற பட்டத்தைப் பெற்றேன். சென்ற ஆகஸ்ட் மாதம் 'லலிதகலா வேதிக' விருது பெற்றேன். இந்த டிசம்பர் 6ம் தேதி 'சங்கீதகலாரத்னம்' என்ற பட்டத்தை ஸ்ரீ ராகம் பைன் ஆர்ட்ஸ் எனக்கு அளித்தது. டிசம்பர் 13ம் தேதி 'சங்கீத கலாநிபுணா' என்கிற பட்டத்தை மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் வழங்கியது.

பிதாமகர் செம்மங்குடி

செம்மங்குடிக்கு முன்னால் மகாமகா பெரியவர்கள் எல்லாம் இருந்திருக்கிறார்கள். சுப்பராம பாகவதர், டைகர்வாள், வேதாந்த பாகவதர், நயினார் பிள்ளை, வீணை தனம்மாள் என்று பெரியவர்கள் இருந் திருக்கிறார்கள். அவர்களுக்குப் பிறகு அரியக்குடி, முசிறி. அதற்குப் பிறகு செம்மங்குடி வருகிறார். அந்தப் பெரிய மகாவித்வான்கள் கூட்டத்தில் இன்று நம்மிடையே வாழ்ந்தவர் செம்மங்குடி ஒருவர்தான். ஆகவே பிதாமகர் என்று அவரைப் போற்றுகிறோம்.

செம்மங்குடி அவர்கள் உழைப்பால் உயர்ந்தவர்கள். அழுத்தமான சங்கீத ஞானம்தான் அவருடைய பலம். அதுதான் அவரின் வெற்றிக்குக் காரணம். இன்று எல்லா இசைக் கலைஞர்களுக்கும் அவர்தான் முன்னுதாரணம். செம்மங்குடி அவர்கள் சுவாதித்திருநாள் கீர்த்தனை களை எல்லாம் நிறைய வெளிக்கொணர்ந்து பாடி மக்களைக் கேட்க வைத்திருக்கிறார். நிறைய சிஷ்யர்களை உருவாக்கியிருக்கிறார். நல்ல சங்கீதத்தை ஓரளவு ஞானம் உள்ளவர்கள்கூட எளிதாகப் பாடலாம் என்று கொண்டு வந்திருக்கிறார். இந்த வகையில் அவர் இசை உலகிற்குச் செய்தது மகத்தான சேவை.

தமிழ்ப்பாட்டு

நிறைய பேர் நாங்கள் தமிழ்பாட்டுக்களை அதிகம் பாடுவதில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்ப்பாட்டைக் கச்சேரிகளில் எங்களைவிட நிறைய பாடியவர்கள் யாரும் இருக்க முடியாது. உதாரணமாக அருணாச்சலக் கவிராயர், கோபாலகிருஷ்ண பாரதி, முத்துத் தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை, திருவாரூர் ராமசாமிபிள்ளை ஆகியோர் பாடல்கள், தேவாரம், திருவாசகம், திருவருட்பா, நாலாயிர திவ்யப் பிரபந்தம், கம்பராமாயணம், திருப்புகழ் என்று நாங்கள் பல தமிழ் இசை கீர்த்தனைகளை என்றும் இன்றும் பாடிக்கொண்டுதான் இருக் கிறோம். ஆகையால் நாங்கள் தமிழிசை பாடவில்லை என்று சொல்வதை நான் திட்டவட்டமாக மறுக்கிறேன். நாங்கள் சுத்தமான தமிழிசைப் பாடல்களைப் பாடுகிறோம் என்பதுதான் உண்மை.

தமிழிசைக்காக நான் ஆற்றிய தொண்டிற் காகத்தான் என்னுடைய 50வது வயதில் எனக்கு 'இசைப்பேரறிஞர்' பட்டத்தைத் தமிழிசைச் சங்கத்தார் அளித்தனர். தமிழிசைக்கு நான் தொண்டாற்றியதால்தான் எனக்கு இந்த கெளரவத்தை அளித்தார்கள் என்று நம்புகிறேன்.

தமிழிசைச் சங்கத்தில் வருடாவருடம் ஜனவரி முதல் தேதி முதல் நிகழ்ச்சி என்னுடையதாக 10 வருடமாக நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் தமிழ்ப் பாடல்களை வைத்துதான் கச்சேரி செய்கிறேன். கம்பராமயணம், திருப்புகழ் தவிர பாரதியாரின் தெய்வீகப் பாடல்கள், தேசபக்திப் பாடல்கள், திருவாசகம், தாயுமானவர் பாடல்கள், வள்ளலார், நாலாயிர திவ்யப் பிரபந்தம் என்று இவர்களின் பாடல்களை வைத்துக் கொண்டு தனித்தனிக் கச்சேரிகள் செய்திருக்கிறேன். ராகம், தானம், பல்லவி உள்பட செய்து கொண்டு வருகிறேன். கண்ணதாசன் பாடல்களை மட்டுமே வைத்துக் கச்சேரி செய்கிறேன். இந்த வருடம் வள்ளலாரின் திருவருட்பாவை வைத்துக் கச்சேரி செய்கிறேன்.

பக்தி ரஞ்சனி

நம்முடைய பக்தியும் இசையும் பாலும் தேனும் போல. ஒன்றிலிருந்து ஒன்றை என்றும் பிரிக்க முடியாது. ஆகவே பக்திரஞ்சனி என்ற பெயரில் அஷ்டபதி, கிருஷ்ணலீலா தரங்கிணி, பிரபந்தம், தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருவருட்பா, மீரா, கபீர், சூர்தாசர், நாமதேவர், துக்காரம், புரந்தரதாசரின் பஜனைகள், சங்கீத மூர்த்திகளின் கீர்த்தனைகள், பத்ராச்சல ராமதாசர், அருணாச்சலக் கவிராயரின் ராமநாடகக் கீர்த்தனைகள், ஊத்துக்காடு வெங்கட சுப்பையரின் கீர்த்தனைகள், ஸ்லோகங்கள், விருத்தங்கள் மற்றும் நாமாவளிகள் இவற்றைக் கொண்டு பக்திரஞ்சனி என்கிற இசைநிகழ்ச்சிகளை அளித்து வருகிறேன்.

ராகம், தானம், பல்லவி மட்டும் 3 மணிநேரம் தனிக் கச்சேரி செய்துகொண்டு வருகிறேன். ஒற்றை ராகத்தை வைத்தே முழுக்கச்சேரி செய்கிறேன்.

சங்கீதம் வளர்கிறது

இன்று சங்கீதம் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது. பத்தாயிரம் பேர் பாட்டுக் கற்றுக்கொள்ள முன் வருவதால் சங்கீதம் வளர்ந்தது என்று சொல்ல மாட்டேன். இந்த பத்தாயிரம் பேரில் எத்தனை பேர் தொடர்ந்து சங்கீதத்தின் முழு அளவில் வருவார்கள் என்பது தெரியாது. நாங்கள் வந்த நேரத்தில் சங்கீதத்தை முழுநேரமும் எடுத்துக் கொள்ளலாமா வேண்டாமா என்கிற கேள்வி இருந்தது. இப்போது அதெல்லாம் இல்லை. நிறைய இளைஞர்கள் சங்கீதத்தை எடுத்துக் கொள்கிறார்கள். அவர்களை ஆதரிக்க நிறையப் புரவலர் முன் வருகிறார்கள். இதையெல்லாம் பார்க்கும் போது சங்கீதம் வளர்ந்து இருக்கிறது என்றே சொல்லாம். சங்கீதத் தொழிலுக்கு ஆதரவும் இருக்கிறது.

தொழில் வளர்ந்த அளவுக்கு சங்கீதம் வளர்ந்ததா? காலம்தான் சொல்ல வேண்டும்.

*****


வெள்ளித்திரைப் பிரவேசம்

சினிமாவில் நான் நடித்தது எதிர்பாராமல் நடந்த ஒரு நிகழ்ச்சி. இன்று சினிமா ஒரு சக்திவாய்ந்த ஊடகம். 'இதில் நடித்தால் சங்கீதத்திற்குப் பரிச்சயமில்லாத ரசிகர்களுக்கும் அறிமுகம் ஆவோம். மற்றும் இதன் மூலம் இசையை நன்கு பொதுமக்கள் மத்தியில் அறிய வைக்க முடியும்' என்று நினைத்துப் படத்தில் பாடி, நடிக்க ஒப்புக்கொண்டேன்.

'தோடி ராகம்' என்ற அந்தப் படம் சங்கீதம் சம்பந்தமானது என்பதும் அதற்கு முக்கியக் காரணம். அதற்குப் பிறகு எந்தப் படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. மனோகரின் 'நரகாசூரன்' என்கிற தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் மகாவிஷ்ணு பாத்திரத்தை ஏற்று நடித்தேன். இந்தத் தொடர் தொடர்ந்து 20 வாரங்களுக்கு ஒளிப்பரப்பானது.

*****


"கிரேட்! டிவைன்!"

மான்ட்ரியாலில் கச்சேரி. அங்கே ராக ஆலாபனை பற்றிச் செயல்விளக்கம் செய்தேன். முடிந்ததும் ஒரு பெரிய கனடா நாட்டுக் கம்போசர், அங்கு பெரும் புகழ் பெற்றவர், என்னைச் சேர்த்துக் கட்டிக் கொண்டு "என் உணர்வுகளை அடக்க முடியவில்லை" என்று கூறிக் கண்ணீர் விட்டது மட்டுமல்லாமல் "உங்கள் சங்கீதம் என்னை எங்கேயோ கொண்டு சென்றுவிட்டது" என்றார். அவருடைய உணர்ச்சிபூர்வமான பாராட்டு என்னைச் சிலிர்க்க வைத்தது.

"கிரேட்! டிவைன்!" என்று திருப்பித் திருப்பிச் சொல்லிக் கண்ணீர் விட்டார். இப்படி ரசிகர்களிடமிருந்து வரும் பாராட்டு வார்த்தைகள்தான் மிகப்பெரிய தெம்பைக் கொடுக்கிறது. உழைத்த உழைப்புக்கு உண்மையான பலன் அப்போதுதான் கிடைக்கிறது. ஒருவரது மனதை இசையின் மூலம் தொடுதல் என்பது கலைஞனின் சங்கீத சாதனைக்குக் கிடைத்த வெற்றியாகும்.

*****


நேர்காணல்: கேடிஸ்ரீ
தொகுப்பு: மதுரபாரதி
படங்கள்: சு.அசோகன்
More

டாக்டர் சியாமளா ஹாரிஸ்
Share: 




© Copyright 2020 Tamilonline