Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | சாதனையாளர்
குறுக்கெழுத்துப்புதிர் | புழக்கடைப்பக்கம் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | சிரிக்க சிரிக்க
Tamil Unicode / English Search
சமயம்
வரகூர் உறியடித் திருவிழா
- அலர்மேல் ரிஷி|ஜனவரி 2004|
Share:
மூர்த்தி, தலம், தீர்த்தம் இவற்றால் ஒரு கோயில் பெருமை பெறுகிறது. இவற்றோடு அங்கு நடைபெறும் விழாவினாலும் பெருமை பெறுகிறது என்று சொல்லலாம். இறைவனைப் பற்றிக் கொள்வதற்கான மார்க்கங்கள் நான்கு. அவை யோகம், ஞானம், கர்மம், பக்தி என்பன. அவற்றுள் எல்லோராலும் எளிதாகப் பின்பற்றக்கூடியது பக்திமார்க்கம். அதற்குத் துணையாக அமைந்தவைதாம் கோயில் திருவிழாக்கள். அந்த வகையில் திருவிழாவினால் பெருமைபெற்ற ஊர் வரகூர். இங்கு நடைபெறும் உறியடி உற்சவம் மிகவும் பிரசித்தமானது. இந்திய நாட்டின் எந்தக் கோயிலிலும் இது போன்ற உறியடி உற்சவத்தைக் காணமுடியாது என்ற அளவிற்குத் தனிச்சிறப்புடையதாகும்.

வரகூர் தஞ்சாவூரிலிருந்து 15 கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஒரு சிறிய கிராமம். வரகூரிலுள்ள மக்கள் இங்குள்ள வெங்கடேசப் பெருமாளைத்தான் தங்கள் குல தெய்வமாகக் கொண்டுள்ளனர். முடிகொடுத்தல், காது குத்துதல் போன்ற வேண்டுதல்கள் எல்லாமே இந்தக் கோயில் தெய்வத்திற்குத்தான் என்று இன்றும் வழக்கத்தில் கொண்டுள்ளனர்.

வேலை கிடைத்து வெளியூர் அல்லது வெளிநாடு செல்லும் இவ்வூர் இளைஞர்கள் தங்கள் முதல் மாதச் சம்பளத்தை இக்கோயிலுக்கு அனுப்பி வைக்கும் வழக்கம் இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக் கின்றது. 2002வது வருடம் ஆகஸ்டு மாதம் வரகூர் இளைஞர் ஒருவர் அமெரிக்காவில் வேலைக்குச் சேர்ந்து தன் முதல் மாத சம்பளம் 2.30 லட்ச ரூபாயை இக்கோயில் உறியடி உத்சவத்திற்கு 'நன்கொடை நிரந்தர வைப்பு நிதி'யாக அனுப்பி வைத்திருக்கின்றார். இதுபற்றிக் குறிப்பிட்ட காஞ்சிப் பெரியவர் "ஒவ்வொருவரும் அவரவர் ஊரின் கோயிலுக்குத் தங்கள் ஒரு மாத ஊதியத்தைத் தருவதற்கு முன்வந்தால் வறுமையில் வாடும் பல கோயில்கள் புது வாழ்வு பெறும்; வளமும் சேரும்" என்று வரகூர் மக்களைப் பாராட்டினாராம். இவ்வூர் மக்களின் சொந்தச் செலவிலேயே 20 லட்ச ரூபாயில் 1990ல் இக்கோயில் கும்பாபிஷேகமும் சிறப்பாக நடந்தேறியிருக்கிறது.

உறியடி உற்சவம்

ஆண்டு தோறும் ஆவணியில் வரும் பௌர்ணமிக்கு அடுத்த நாள் அதாவது காயத்திரி ஜபத்தன்று தொடங்கிப் பத்து நாட்கள் இவ்விழா நடைபெறும். உறியடி நாளன்று காலையில் வெண்ணெய் நிரப்பிய தங்கக் குடத்தை அணைத்தபடியே வெள்ளிப் பல்லக்கில் நவநீத கிருஷ்ணனாக இக்கோயில் உத்சவமூர்த்தி வீதி உலா வருவார். (நவநீதம் என்றால் வெண்ணை.) பின்னால் சதுர்வேத பாராயணமும், பாகவதர்களின் நாமசங்கீர்த்தனமும் தொடரும். அன்று இரவு பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் உறியடி கிருஷ்ணர் அலங்காரத்துடன் புறப்படுவார். அன்று அவருடைய புஷ்பாலங்காரம் மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும். தலையில் முண்டாசும், நெற்றியில் நாமமும், உடம்பில் போர்வை போர்த்திக் கொண்டு காலில் சலங்கையுமாய் ஒரு கூட்டம் இடையர்கள் போல வேடமணிந்து பின்தொடரும். அடுத்து பாகவதர்கள் நாராயண தீர்த்தரின் கிருஷ்ண லீலா தரங்கிணிப் பாடல்களைப் பாடிக்கொண்டு வருவார்கள். இடையர் வேடம் அணிந்தவர்கள் உறியடி மரத்தை வந்தடைவார்கள்.

கோயில் வாயிலின் முன்புறத்தில் நீளமான மூன்று மூங்கில் மரங்களை ஒன்றாக இணைத்து ஆழமாகத் தோண்டப்பட்ட ஒரு குழியில் நடுவார்கள். அதன் நுனியில் ஒரு கோபுர வடிவில் மூடி அமைத்து அலங்கரித்து மரத்தின் நடுவே 10அடி உயரத்தில் குறுக்கே ஒரு மூங்கிலைக் கட்டித் தொங்க விடுவார்கள். அதன் ஒரு முனையில் மிருதங்கம் போன்ற அமைப்பில் உறிகட்டி அதில் கண்ணனுக்கு விருப்பமான முறுக்கு, சீடை, தட்டை போன்ற தின்பண்டங்களை மண்பாண்டத்தில் வைத்துத் தொங்க விடுவார்கள். மற்றொரு நுனியில் நீண்ட கயிற்றைக் கட்டி வைத்திருப்பார்கள். போட்டியில் கலந்து கொள்ளும் இளைஞர் கள் ஏறி உறியை எட்டிப் பிடிக்க முயலுகையில் ஊர்மக்கள் இந்தக் கயிற்றை அப்படியும் இப்படியும் ஏற்றி இறக்கி ஆட்டங் காட்டுவார்கள். கையால் எட்டிப் பிடிக்க முடியாமல் இளைஞர்கள் தடி கொண்டு அடிப்பார்கள். அதற்கும் இடையூறு செய்வதுபோல் ஊர் மக்கள் இவர்கள்மீது தண்ணீரைப் பீய்ச்சும் குழலால் முகத்தில் தண்ணீரை அடித்துப் பார்வையை மறைப்பார்கள். முடிவில் யாராவது ஒருவர் இதில் வெற்றி பெறுவார். பின் கைப்பற்றிய தின்பண்டங்களை அங்குள்ள பலரோடும் பங்கிட்டு உண்டு மகிழ்வர்.
வழுக்குமரம் ஏறுதல்

உயரமான ஒரு தேக்கு மரத்தைச் சில நாட்கள் தண்ணீரிலே போட்டு ஊற வைப்பார்கள். பின் இதில் புளியங் கொட்டைகளினால் தயாரிக்கப்பட்ட ஒரு விதமான பசையைப் பூசி, காயப் போடு வார்கள். உறியடி தினத்தில் இம்மரத்தின் மீது கடுகெண்ணெய் மற்றும் விளக் கெண்ணெய் தடவி, உறியடி மரத்திற்குத் தெற்கில் நடுவார்கள். உறியடி முடிந்தவுடன் எல்லோரும் இங்கு கூடிவிடுவார்கள். ஒருவர் மேல் ஒருவராகத் தோள்மீதேறி 10 அல்லது 12 அடி உயரம் வரை ஏறிவிடுவார்கள். பின்னர் வேட்டிகளை இம்மரத்தில் சுற்றிக் கட்டி அதன் மீது காலை வைத்து ஏற முயற்சிப்பார்கள். வேட்டியும் எண்ணெயில் தோய்ந்து வழுக்கும். ஊர் மக்கள் இரண்டு மூன்று குழுக்களாகப் பிரிந்து வழுக்குமர உச்சியை அடைய முயற்சிப்பார்கள். எண்ணெய் வழுக்குவது போதாதென்று சுற்றியிருப்பவர்களும் இவர்கள்மீது தண்ணீர் அடித்து ஆரவாரம் செய்வார்கள். அப்படி இப்படி என்று 25 அடி உயரம் ஏறி ஒரு வழியாக யாராவது ஒருவர் உச்சியை அடைந்துவிடுவார். மேலே கட்டி வைத் துள்ள பண முடிப்பையும் தின்பண்டங்களையும் கைப்பற்றி வெற்றியுடன் இறங்குவார். தின்பண்டங்களை நாலா புறமும் வீசி எல்லோருக்கும் கொடுப்பது வழக்கம். இதற்குள் பொழுதும் விடிந்து விடும்.

விடியலில் நித்திய வழிபாடுகள் முடிந்து அலங்காரம் ஆராதனை முடிந்து உஞ்சவிருத்தி, அதன்பின் முத்துக் குத்தல், உலக்கை ஆடுதல் போன்ற சம்பிரதாயங் களுடன் ருக்மிணி கல்யாணம் நடைபெறும். அதற்கு மறுநாள் மாலையில் உற்சவ மூர்த்தியுடன் ஆஞ்சநேயரையும் அமர்த்தி வீதி உலா வரச்செய்து பஜனை கோஷ்டி நாம சங்கீர்த்தனம் பாடிவர உறியடி உற்சவம் நிறைவுறும்.

வரகூரில் 1868ல் பிறந்து 1935வரை வாழ்ந்த ஸ்ரீ நாராயணகவி என்பவர் 'கிருஷ்ண சிக்யோத்ஸவம்' என்ற பெயரில் வட மொழியில் ஒரு காவியம் பாடியுள்ளார். சிக்யோத்ஸவம் என்றால் உறியடி உற்சவம் என்று பொருள். சுமதி, சுகுணன் என்ற இரண்டு கின்னரர்கள் பூலோகத்திற்கு வந்து வரகூரை அடைந்து உறியடி உற்சவத்தைக் கண்டு மகிழ்ந்து, தமக்கிடையே உரையாடும் விதமாக இவ்விழா இந்நூலில் வருணிக்கப்படுகின்றது. இடையர் வேடமணிவது, உறியடி ஏறுவது, வழுக்குமரம் சறுக்குவது போன்றவையெல்லாம் வெறும் கேளிக்கையல்ல. கிருஷ்ணனின் அவதார லீலைகள். இதில் அமைந்துள்ள செய்திகள் தத்து வார்த்தமானவைகள். உறியடி நமது ஆசைகள்; வழுக்குமரச் சறுக்கல்கள் நமக்கு வாழ்க்கையில் ஏற்படும் சறுக்கல்கள் தண்ணீர் அடித்து சறுக்க வைப்பது வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் சோதனைகள். இவையெல்லாம் நம்முடைய அஞ் ஞானங்கள். வைராக்கியத்தோடு முடிவில் உச்சியை அடைவதென்பதுதான் நாம் பெறும் ஞானம் அல்லது இறையனுபவம்.

உறியடி, அதற்கு மறுநாள் ருக்குமணி கல்யாணம், அதற்கடுத்த நாள் அனுமத் ஜயந்தி என்ற ஒரு விழா அமைப்பு முறையை உருவாக்கிய பெருமை வரகூரில் வாழ்ந்து அங்கேயே முக்தியடைந்த நாராயண தீர்த்தரையே (இவரைப் பற்றிய விவரம் அறிய தென்றல், டிசம்பர் 2003 இதழ் பார்க்க) சாரும். அவரது கிருஷ்ணலீலா தரங்கிணியில் இவ்விழா பத்ததி (கொண்டாடும் முறை) தெளிவாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது.

வரகூர் உறியடிவிழா அழகினை நேரில் கண்டு மட்டுமே களிக்க முடியும். வார்த்தைகளில் அடக்கமுடியாது.

டாக்டர் அலர்மேலு ரிஷி
Share: 




© Copyright 2020 Tamilonline