Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சமயம் | எனக்கு பிடிச்சது | கவிதை பந்தல் | சிரிக்க, சிந்திக்க
Tamil Unicode / English Search
சமயம்
சிவராத்திரி
- பி. பஞ்சாபகேசன்|பிப்ரவரி 2010||(2 Comments)
Share:
Click Here Enlarge
ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Saraswathi Thiyagarajan



பூங்கோயில் என சைவகளால் அழைக்கப்படும் திருவாரூர் தியாகராஜர் திருக்கோயில் அமையவும், திருவாரூர் என அத்தலத்திற்குப் பெயர் வரவும் காரணம் சிவராத்திரிதான். சுயநல நோக்கோடு ஓர் குரங்கு செய்த காரியம், சிவராத்திரியின் மகிமையை அனைவரும் அறியவும், அந்தக் குரங்கே சக்கரவர்த்தியாகி சோழநாட்டை ஆளவும் வைத்தது. அந்தப் புராணக் கதையைப் பார்ப்போமா?

ஒரு குரங்கு ஒருநாள் காலையில் இரைதேடிக் கிளம்பிற்று. சாப்பிட ஒன்றும் கிடைக்காத நிலையில் அதை ஓர் புலி துரத்த ஆரம்பித்தது. பசியை, தாகத்தை மறந்த குரங்கு, உயிர் பிழைக்க வேண்டி ஒரு மரத்தின் மேல் ஏறி அமர்ந்துகொண்டது. துரத்தி வந்த புலிக்கும் அதன் இரையை விட மனமில்லை. எப்படியும் குரங்கு கீழே வந்துதானே தீர வேண்டும், பார்க்கலாம் என எண்ணி மரத்தடியில் படுத்து விட்டது.

நேரம் ஆக, ஆக குரங்குக்குப் பசி ஏறியது. இருட்டவும் ஆரம்பித்தது. பசி, களைப்பு, பயம் தூக்கம் ஆகியவை குரங்கை வாட்டின. எங்கே கீழே விழுந்தால் புலிக்கு இரையாவோமோ என்று அஞ்சி, தூக்கத்தை வெல்ல ஓர் உபாயமாக, மரத்தின் இலைகளை ஒவ்வொன்றாய்ப் பறித்துக் கீழே போட்டபடி இருந்தது.

இந்திரன், பட்டத்து ராணியையும் பட்டத்து யானையையுமே முக்கியமாக நினைத்து, திருமாலிடமிருந்து பெற்ற எம்மை மறந்து விட்டான். அவனிடம் நான் இருப்பது இனி சரியில்லை.
காலை புலர்ந்தபோது, கதிரவனுடன் சிவபெருமானும் தோன்றினார் மரத்தடியில். புலியைக் காணோம். குரங்கிற்குக் காட்சி தந்த சிவன் "சிவராத்திரி அன்று விரதமிருந்து எம்மை வில்வ இலையால் பூஜை செய்தமையால் நீ அடுத்த பிறவியில் ஒரு சக்ரவர்த்தியாக ஆவாய்" என்று வரமளித்தார்.

"நானா? சிவராத்திரி விரதம் இருந்தேனா? என்னைத் துரத்திய புலியிடமிருந்து தப்பிக்க இந்த மரத்தில் தஞ்சமடைந்தேன். உறக்கத்தைத் தவிர்க்க இலைகளைப் பறித்துக் கீழே போட்டேன். இது வில்வ மரம் என்றோ, கீழே நீங்கள் (சிவன்) இருப்பீர்களென்றோ எனக்குத் தெரியாது. அவ்வளவுதான்" என்று குரங்கு அப்பாவியாகக் கூறியது.

"அறிந்தோ, அறியாமலோ அன்ன ஆகாரமின்றிக் கண் விழித்து சிவராத்திரி இரவில் எமக்கு வில்வ அர்ச்சனை செய்தமையால், மனமகிழ்ந்து இந்த வரமளித்தோம்" என சிவன் கூறினார். மகிழ்வுற்ற குரங்கு "நானாக ஒரு வரம் கேட்கலாமா?" எனக் கேட்டது. சிவனும் இசைந்தார். "நீங்கள் வரமளித்தபடி அடுத்த பிறவியில் நான் சக்கரவர்த்தியாய் ஆனாலும், தங்களை பூஜிக்கவும், எனக்கு முற்பிறவி நினைவு இருக்கும்படி குரங்கு முகமும் அமைய அருள வேண்டும்" எனக் கேட்டது. சிவனும் "அவ்வாறே ஆகுக" எனக் கூறி மறைந்தார்.

அதுபோல் அடுத்த பிறவியில் அந்தக் குரங்கு சோழநாட்டின் கரூரைத் தலைநகரமாகக் கொண்டு முசுகுந்தச் சக்கரவர்த்தி என்ற பெயர் கொண்டு ஆண்டு வந்தது. "முசு" என்றால் குரங்கு. ஒரு சமயம், தேவேந்திரனுக்கு ஒரு போரில் முசுகுந்தச் சக்கரவர்த்தி உதவ, அவன் வெற்றி பெற்றான். முசுகுந்தச் சக்கரவர்த்தியைப் பார்த்து, "எமக்கு உதவிய உமக்கு என்ன வேண்டுமோ அதைக் கொடுக்க யாம் தயார். இந்திராணி, ஐராவதமென்னும் எனது பட்டத்து யானை இவை தவிர வேறு எதை வேண்டுமானாலும் கேள்" என்று கூறினான். முசுகுந்தச் சக்கரவர்த்தி "ஒருநாள் அவகாசம் தாருங்கள்" என்று கூறி விடைபெற்றார்.

வழக்கம்போல் சிவனை வணங்கி உறங்கிய முசுகுந்தன் கனவில் சிவன் தோன்றினார். "இந்திரன், பட்டத்து ராணியையும் பட்டத்து யானையையுமே முக்கியமாக நினைத்து, திருமாலிடமிருந்து பெற்ற எம்மை மறந்து விட்டான். அவனிடம் நான் இருப்பது இனி சரியில்லை. நீதான் இனி என்னைப் பூஜிக்க வேண்டும். எனவே நீ பூஜை செய்யும் தியாகராஜர் தான் வேண்டுமெனக் கேள்" என்று அறிவுறுத்தி மறைந்தார்.
அவ்வண்ணமே, மறுநாள் "நீங்கள் பூஜிக்கும் தியாகராஜர் திருவுருவை மட்டும் தந்தால் போதும். வேறு எதுவும் வேண்டாம்" என முசுகுந்தன், இந்திரனிடம் கூறினான். தன் தவறை இந்திரன் உணர்ந்து கொண்டான். இருந்தாலும் தியாகராஜரைப் பிரிய மனமின்றி தப்பிக்க ஓர் உபாயம் செய்தான். முசுகுந்தனைப் பார்த்து தருகிறேன். ஆனால் ஓர் நிபந்தனை. நான் பூஜிக்கும் தியாகராஜர் விக்ரகங்கள் போல அச்சு அசலாக வேறு ஆறு விக்ரகங்களும் இருக்கும். அவற்றில் எது தேவையோ அந்த ஒன்றை மட்டும் நீ எடுத்துக் கொள்" எனக் கூறினான். மனம் தளராத முசுகுந்தன் "நாளை வந்து நான் எடுத்துக் கொள்கிறேன்" எனக் கூறி விடை பெற்றான்.

சிவன், ”நீ என்னை பூஜிக்கும் உரிமை இழந்தாலும் வருடத்தில் ஒரு நாள் - புரட்டாசி மாதப் பௌர்ணமி அன்று மட்டும் - பூவுலகுக்கு வந்து என்னைப் பூஜிக்கலாம்" என்று கூறி மறைந்தார்.
அன்று இரவும் சிவன், முசுகுந்தன் கனவில் தோன்றி எது திருமாலினால் தரப்பட்ட விக்ரகம் என்பதைக் கண்டுபிடிக்கச் சில குறிப்புகள் தந்தார்.

மறுநாள் சரியான விக்ரகத்தை முசுகுந்தன் கண்டறிந்து கேட்டான். வேறு வழியின்றி இந்திரன், தான் பூஜித்து வந்த தியாகராஜரையே சரணடைந்து மன்னிப்பு வேண்டினான். "உங்களை பூஜிக்காமல் எப்படி இருப்பேன்?" எனக் கதறினான். தியாகராஜரும் இந்திரன் தவறை உணர்ந்ததால் ஒரு வாய்ப்பளித்தார்.

"நீ என்னை பூஜிக்கும் உரிமை இழந்தாலும் வருடத்தில் ஒரு நாள் - புரட்டாசி மாதப் பௌர்ணமி அன்று மட்டும் - பூவுலகுக்கு வந்து என்னைப் பூஜிக்கலாம்" என்று கூறி மறைந்தார்.

இப்படிப் பெற்ற விக்ரகத்தை எங்கே வைத்துப் பூஜை செய்யலாம் எனத் தெரியாத முசுகுந்தச் சக்கரவர்த்தி, அதையும் தியாகராஜரிடமே கேட்க, அவர் மூலாதாரத் தலமாக உள்ள, பிற்காலத்தில் சைவ சமயத்தின் தலைமைப் பீடமாக விளங்கப் போகும் கமலபுரத்தில் கோயில் கட்டிப் பூஜை செய்ய அருள் செய்தார். மற்ற ஆறு விக்ரகங்களை முறையே திருமறைக்காடு, திருவாய்மூர், திருக்காராயில் (திருக்காரவாசல்), திருக்குவளை, திருநாகைக் காரோணம் (நாகப்பட்டினம்), திருநள்ளாறு ஆகிய இடங்களில் பிரதிஷ்டை செய்யவும் அருள்பாலித்தார். இவ்வாறு ஆறு தலங்களில் இருப்பதால், கமலபுரம் திரு ஆரூர் எனப் பெயர் பெற்றது. திருவாரூர் உட்பட மேற்குறிப்பிட்ட தலங்கள் அனைத்தும் சப்தவிடங்கத் தலங்கள் என அழைக்கப்படுகின்றன.

உயிர் பிழைக்க வேண்டுமென்ற சுயநலத்தோடு சிவராத்ரி அன்று அன்ன, ஆகாரமின்றி விரதம் போல் பட்டினியாயிருந்த குரங்குக்கே உயர்நிலை கிட்டியது என்றால், உண்மையான பக்தியுடன் விரதம் இருந்தால் மீண்டும் பிறவி ஏது?

(பிப்ரவரி 12 அன்று மகா சிவராத்திரி)

B. பஞ்சாபகேசன்,
டெட்ராய்ட், மிச்சிகன்
Share: 




© Copyright 2020 Tamilonline