சங்கரன் கோவில் சீதாநவமி
|
|
|
|
|
தென்றல் 2009 டிசம்பர் இதழில் எனது பண்டரிபுரம் கட்டுரையைப் படித்து விட்டு திரு. சந்திரமோகன் (மார்கன்ஹில்), "பண்டரிபுரம் விடோபா விக்ரஹத்தின் மீது சிவலிங்கம் தென்படுகிறது என திரு கிருபானந்த வாரியார் 'வட இந்திய யாத்திரை' எனும் புத்தகத்தில் எழுதியிருக்கிறார். அது பற்றிய விவரம் யாருக்கேனும் தெரியுமா?" எனக் கேட்டிருந்தார். அதற்குச் சென்னையிலிருந்து திரு. மீனாட்சி சுந்தரம் எனும் அன்பர் தெரிவித்துள்ள தகவல்.
பண்டரிபுரம் பாண்டுரங்கன் கோவிலில் விட்டோபா உருவத்தில் மான், மழு, நாகாபரணங்களுடன் சிவன் உருவம் பொதிந்துள்ளது. அதை கோவிலின் அபிஷேக சமயத்தில் திருமுருக கிருபானந்த வாரியார், ஸ்ரீ கிருஷ்ண ப்ரேமி சுவாமிகள், ஸ்ரீ ஜய கிருஷ்ண பாகவதர் போன்றோர்களுக்கு கோவில் நிர்வாகத்தினர் காட்டியுள்ளனர்.
அதற்கு ஆதாரமாக நரஹரி என்னும் மராட்டிய ஞானியின் கதை ‘ஸ்ரீமத் பாண்டுரங்க விஜயம்' எனும் நூலில் உள்ளது:
| நான் பண்டரிநாதனை நேரில் பார்த்ததில்லை. அவரது இடுப்பு அளவை எடுத்து வந்து தந்தால் பொன் அரைஞாண் செய்து தருகிறேன் என்றார். | |
பண்டரிபுரத்தில் நரஹரி என்னும் பெயருடைய பொற்கொல்லர் வசித்து வந்தார். அவர் சிறந்த சிவ பக்தர். சிவபெருமானைத் தவிர வேறு எந்தக் கடவுளின் வடிவையும் கனவிலும் காண்பதற்கு வெறுத்து வந்தார். ஒருநாள் கூட அவர் பண்டரி நாதனை வணங்கியதில்லை. கோவில் இருக்கும் இடத்தைக் கூடத் திரும்பிப் பார்த்ததில்லை. வைராக்யம் கொண்ட வீர சைவராக விளங்கினார்.
அதே பொற்கொல்லரின் வீட்டுக்கு அருகில் பெருந்தன வணிகர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்குத் திருமணமாகிப் பல ஆண்டுகள் ஆகியும் புத்திர பாக்கியம் இல்லை. அதனால் பாண்டுரங்கனை தரிசித்து "என் குலம் விளங்க புத்திரன் பிறக்க அருள் செய்ய வேண்டும். அப்படித் திருவருள் செய்தால் உனக்குப் பொன் அரைஞாண் செய்து காணிக்கை செலுத்துகிறேன்" என வேண்டிக் கொண்டார். அவர் மனைவி ஆண் குழந்தையைப் பெற்றாள். மிக்க மகிழ்ச்சியுடன் கோவிலுக்குச் சென்று காணிக்கை செலுத்த எண்ணி அரைஞாண் செய்யப் பொற்கொல்லர் யாரும் இருக்கிறார்களா எனக் கோயிலில் விசாரித்தார். எல்லோரும் நரஹரி நகை செய்வதில் திறமை உடையவர் எனச் சிபாரிசு செய்தனர்.
வணிகர் நரஹரியின் வீட்டுக்குச் சென்று அவரை வணங்கி, ஐயா, நான் பண்டரிநாதனுக்குப் பொன் அரைஞாண் காணிக்கை செலுத்த விரும்புகிறேன். தாங்கள் தான் சிறப்பாகச் செய்து தர வேண்டும் என வேண்டினார். அதற்கு நரஹரி, எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. நான் பண்டரிநாதனை நேரில் பார்த்ததில்லை. அவரது இடுப்பு அளவை எடுத்து வந்து தந்தால் பொன் அரைஞாண் செய்து தருகிறேன் என்றார்.
வர்த்தகர் கோவிலுக்குச் சென்று பாண்டுரங்கனின் இடுப்பை அளந்து வந்து, தேவையான பொன்னும் மணியும் தந்தான். நகை செய்து முடித்தபின் கோவிலுக்குச் சென்று பாண்டுரங்கனுக்கு அணிவித்தபோது அது விரற்கடை அளவு குறைந்திருந்தது. அதைத் திரும்ப நீட்டித் தருமாறு நரஹரியிடம் சென்று கூறினார். அவரும் சரிசெய்து தந்தார். மீண்டும் கோவிலுக்குச் சென்று அணிவித்தால் இரண்டு விரற்கடை அதிகமாயிருந்தது. மீண்டும் நரஹரியிடம் கொண்டு வந்தார் வணிகர்.
நான்கைந்து முறை குறைத்தும் நீட்டியும் செய்த நரஹரிக்கு அலுப்பு ஏற்பட்டது. வர்த்தகருக்கோ மன வருத்தம். அவர் நரஹரியிடம் வந்து "ஐயா, எத்தனை முறை சரிப்படுத்தினாலும் அரைஞாண் பகவானுக்குப் பொருந்தவில்லை. நீங்களே நேரில் வந்து அளவெடுத்து என் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்" என வேண்டினார். |
|
| இறைவனுக்குப் பெயர்களும் உருவங்களும் அனந்தம். எனது அறியாமையினால் விஷ்ணு நாம ரூபங்களை வெறுத்து வந்தேன் எனக் கூறி பகவானை வணங்கினார். | |
நரஹரி கோபத்தை அடக்கிக்கொண்டு வர்த்தகரின் வேண்டுகோளுக்கு ஒப்புக் கொண்டார். ஆனால் ஒரு நிபந்தனை: தன் இரு கண்களையும் துணியால் கட்டிக் கொண்டுதான் பண்டரிநாதன் அருகே செல்வார். வணிகர் அழைத்துச் சென்றார். பாண்டுரங்க பக்தர்கள் நரஹரியின் பக்தி வைராக்யத்தைக் கேலி செய்தனர்.
நரஹரி சன்னதிக்குச் சென்று பண்டரிநாதன் விக்ரஹத்தைத் தொட்டுப் பார்த்தார். அப்போது மான், மழு, நான்கு திருக்கரங்கள், காளகண்டம், முக்கண், பஞ்சமுகம், பிறைகொண்ட ஜடாமுடி, நாகம், பூணூல், புலித்தோல், திரிசூலம், உடுக்கை ஆகியவை புலப்பட்டன. நரஹரி மிக வியப்படைந்து இந்தப் பண்டரிநாதனை விஷ்ணு என நினைத்தேனே, இப்போது சிவபெருமானின் திவ்ய உறுப்புக்கள் அல்லவா தென்படுகின்றன எனத் துணியை அவிழ்த்து பகவானைப் பார்த்தார். அங்கு தாம் முன்பு கேள்விப்பட்டிருந்தது போலவே வைரமுடியும், குண்டலங்களும், ஸ்ரீவத்ஸ கௌஸ்துபத்துடன், வைஜயந்தி, துளசி மாலை, பீதாம்பரம், இடுப்பில் ஊன்றிய இரு கைகள், உபய திருவடிகள் எனச் செங்கல்லின் மேல் நின்ற திருக்கோலத்தில் கிருஷ்ணன் நிற்பதைக் கண்டார். "எனக்கேன் இந்த மயக்கம்" என மீண்டும் துணியால் கண்களைக் கட்டிக் கொண்டு தடவிப் பார்த்தால் மீண்டும் சிவச் சின்னங்களே புலப்பட்டன.
அப்போது நரஹரிக்கு ஞானோதயம் உண்டாயிற்று. இறைவனுக்குப் பெயர்களும் உருவங்களும் அனந்தம். எனது அறியாமையினால் விஷ்ணு நாம ரூபங்களை வெறுத்து வந்தேன் எனக் கூறி பகவானை வணங்கினார். பின் வர்த்தகருக்கு அழகிய அரைஞாண் செய்து சிவ, விஷ்ணு நாமங்களால் பகவானைத் துதித்தார். பாண்டுரங்கனுக்கு அரைஞாண் மிகப் பொருத்தமாக அமைந்தது. வர்த்தகரும் மனம் மகிழ்ந்தார்.
அன்றுமுதல் நரஹரியும் சிவன் - விஷ்ணு பேதமின்றி வாழ்ந்து வந்தார். தன் பக்தனுக்கு சிவனும் விஷ்ணுவும் ஒன்றே என உணர்த்தியது பாண்டுரங்கனின் திருவிளையாடலில் ஒன்றாகும்.
சீதா துரைராஜ், சான்ஹோஸே, கலிபோர்னியா |
|
|
More
சங்கரன் கோவில் சீதாநவமி
|
|
|
|
|
|
|